கலை சமூகத்துக்காதத்தான்

நேர்காணல்: புனிதன்

தலித் முரசு
, செப்.2000
 
"ஓவியர் புகழேந்தி, போராட்டம் பற்றிய ஓவியங்களை வரையவில்லை. இவரது ஓவியங்களே போராடுகின்றன" என்று கவிஞர் காசிஆனந்தன் பாராட்டியதைத் தவிர, புகழேந்தி பற்றி நாம் வேறொன்றும் சொல்லத் தேவையில்லை. அண்மையில் மலேசியா, சிங்கப்பூர் சென்று ஓவியக் கண்காட்சியைச் சிறப்புற நடத்திவிட்டு வந்த ஓவியர் 'தலித் முரசு'க்கு அளித்த பேட்டி.

உங்களுடைய ஓவியக் கண்காட்சியை மலேசியாவில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில் என்னுடைய கண்காட்சி நடைபெற்றபோது பார்த்த தமிழ் ஆர்வலர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களில் இருக்கக்கூடிய தோழர்கள், 'இக்கண்காட்சி இந்தியாவைக் கடந்து உலகிலுள்ள பல்வேறு நாடுகளுக்கும் போக வேண்டும்' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மலேசியாவில் இருந்து வெளிவரும் 'செம்பருத்தி' என்ற இதழின் அழைப்பும், எழுத்தாளர் சைபீர்முகமது அவர்களின் முன்னேற்பாடும் நான் அங்கு கண்காட்சி நடத்த மிகவும் துணைபுரிந்தது. இந்த அடிப்படையில் அமைந்ததுதான் வெளிநாட்டில் நடைபெற்ற என்னுடைய முதல் ஓவியக் கண்காட்சி.

இதற்கு அங்கு வரவேற்பு எப்படி இருந்தது?

இக்கண்காட்சி மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, மலேசியாவில் இருந்து வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கண்காட்சி குறித்த விரிவான செய்தி விமர்சனங்களும், ஓவியங்களின் புகைப்படங்களும் வெளிவந்திருந்தன. இங்கு, பல இனமக்கள் வாழக்கூடிய ஒரு சூழலில், இக்கண்காட்சி மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்பது ஒரு குறிப்பிடத் தகுந்த செய்தியாக நான் கருதுகிறேன். மொத்தத்தில் இக்கண்காட்சியைப் பதினைந்தாயிரம் பேர் பார்த்திருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

அங்குள்ள தமிழர்களின் நிலை எவ்வாறு இருக்கிறது?

அங்குள்ள தமிழர்கள் பொதுவாக மேம்போக்கான பார்வை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இன்றைக்குப் பல இன மக்களோடு சேர்ந்து வாழ்கின்றபோது, நம்முடைய இன அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், இழந்துபோன அடையாளங்களை மீட்டெடுப்பதற்கும் நாம் பிற இன மக்களுடைய வளர்ச்சியைப் பார்த்து ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்காமல், நம்மையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

'கலை கலைக்காகவே' என்று சொல்லப்படுகிறது. உங்கள் பார்வை என்ன?

கலை என்பது சமூகமாற்றத்திற்கான ஒரு கருவியாக, சமூக அவலங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் போராட்ட உணர்வையும் தூண்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒரு கவிதை, சிறுகதை, இலக்கியம் போன்றவை எப்படி சமூக மாற்றத்திற்காகப் பயன்படுகிறதோ, அதேபோல ஓவியமும் இதைச் செய்ய முடியும் என்ற ஆழமான நம்பிக்கை எனக்குண்டு. எனவே, 'கலை கலைக்காக' என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. கலை சமூகத்திற்காகத்தான்.

தலித் கலை, இலக்கியம் என்ற வகையில் தலித் ஓவியமும் பரிணாமம் பெற்று வருகிறது. இதுகுறித்த தங்களின் கருத்து?

ஒரு போராட்டத்தை உணர்ந்தவன் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால், பிறப்பால் மட்டுமே தலித்தாக இருக்கிறவர்கள் தலித்திய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்களா? என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

சென்ற ஆண்டு தலித் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியில் பிறப்பால் மட்டுமே தலித்தாக இருந்த பல ஓவியர்கள், தலித்தியக் கருத்துகளை வெளிப்படுத்தவில்லை. பிறப்பால் ஒரு தலித் வரையும் எல்லா ஓவியத்தையும் நான் தலித் ஓவியமாகக் கருதவில்லை. எனக்கு அதில் உடன்பாடில்லை. சுண்டூர் சென்றிருந்தேன். அங்கே பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயர நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துக் கொண்டு, அந்த உணர்வோடு வெளியே வந்தேன். வெளியில் வந்து இதுகுறித்து ஓவியம் வரைந்தேன். இது, மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னுடைய மனதில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் என்னை செய்யத் தூண்டியது.

இந்தப் பிரச்சினைகளை ஒரு தலித்தாக இருந்து வெளிப்படுத்தும் போது இன்னும் கூடுதல் வீச்சு இருக்கும் என்பதை நான் மறுக்கவே இல்லை. ஆனால், பிறப்பால் மட்டுமே தலித்தாக இருந்து கொண்டு சிந்தனை வேறு மாதிரி இருந்தால், அதை எப்படி தலித் ஓவியமாக ஒப்புக்கொள்ள முடியும்.

காவிரிப் பிரச்சினையை முன்வைத்து, சாலையில் அமர்ந்து தாங்கள் ஓவியம் வரைந்ததாக முன்பு செய்தி வெளிவந்தது. அதைப்பற்றிச் சொல்லுங்கள்.


1991 ஆம் ஆண்டு காவிரி பற்றிய இடைக்காலத் தீர்ப்பு வந்தது. அப்போது கர்நாடகத்தில் தமிழர்களை எதிர்த்து வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் தமிழர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்தியா ஒரு தேசம் என்று சொல்லப்படுகிற நேரத்தில், தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், இங்குப் பேசப்படுகின்ற தேசியத்திற்கு முரணான விஷயமாக நான் இதைப் பார்த்தேன்.

ஒரு கலைஞன் என்ற அடிப்படையில், தஞ்சைப் பெரிய கோயில் அருகில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் அமர்ந்து பல்வேறு ஓவியக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து, இந்தப் பிரச்சினையை முன்வைத்து மிகப் பெரும் ஓவியம் ஒன்றை வரைந்தேன். 'வன்முறையை இயக்குதல்' என்று அதற்குப் பெயரிட்டிருந்தேன். நான் செய்ததிலேயே மிகப் பெரிய ஓவியம் இது.

அதேபோல, சாதி மோதல்களைத் தடுப்பதிலும் கலைஞர்களுக்குப் பங்குள்ளதல்லவா?

சாதி, மத இனக் கலவரங்களை எதிர்த்து நிறைய ஓவியம் செய்திருக்கிறேன். சாதிக்கு எதிராக நடக்கக்கூடிய அத்தனைப் போராட்டத்துக்கும் என்னுடைய குரல் ஆந்திரா முதல் தமிழ்நாடு வரை ஓவிய வடிவில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. தமிழகத்தில் சாதிக் கலவரங்களைப் பற்றிப் பேசும்போது, கீழ்வெண்மணியை ஒதுக்கிவிட்டு யாரும் பேசிவிட முடியாது. எனவே, இந்த நூற்றாண்டு ஓவியத்தில் மிகவும் முக்கியமான ஒரு பதிவாக கீழ் வெண்மணி சாதி வன்முறையை நான் பதிவு செய்திருக்கிறேன். அதேபோல, சுண்டூர் படுகொலை முதல் பத்மினி மீதான பாலியல் வன்கொடுமை வரை நான் பதிவு செய்திருக்கிறேன். எந்த வகையான ஒடுக்குமுறையாக இருந்தாலும் சரி. அதை எதிர்த்து என்னுடைய தூரிகையும் என்னுடைய குரலும் கண்டிப்பாக ஒலிக்கும்.

கற்சிற்பங்கள் முதல் இன்றைய ஓவியங்கள் வரை, பெண்ணை நிர்வாணமாக வரையக்கூடிய ஒரு தன்மை உள்ளது. இதற்கு என்ன காரணம்?

பெரும்பான்மையான கலைஞர்கள் ஆண்களாக இருந்திருக்கிறார்கள் என்பதும் இதற்கு ஒரு காரணம். இன்றைக்கு காலம் மாறிவிட்டது. பெண் ஓவியர்கள் மிக மிகக்குறைவு. மேலை நாடுகளில்
Nude study என்பது உண்டு. இதில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக பெண்கள் நிர்வாணமாக வரையப்படுகிறார்கள். என்னுடைய ஓவியங்களில் இதுபோன்று இருக்காது.

இனி வரும் கணினி யுகத்தில் ஓவியத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

கணினியில் சிலவற்றைச் செய்வதற்குக்கூட கையில் வரைந்துதான் உள்ளே கொண்டு செல்ல முடியும். கணினி சில வேலைகளை எளிமைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவுதான் கணினிகள் பெருகினாலும், கையால் வரையப்படும் ஓவியங்களுக்கான மதிப்பை ஒருபோதும் குறைத்துவிட முடியாது. அது நேரத்தைக் குறைத்திருக்கிறது என்று மட்டும் சொல்லலாம்.