நான் நியாயத்தின் பக்கத்தில் நிற்கிறேன்

நேர்காணல்: ஆ. சபேஸ்வரன்


தினக்குரல், மே 22, 2005, இலங்கை


ஈழத் தமிழ் மக்களுக்காக இந்தியத் தமிழர்களின் குரல்கள் என்றுமே ஒலிக்கும். தேவையேற்படின் அவர்களின் குரல்கள் மட்டுமல்ல, கரங்களும் உயருமெனக் கூறுகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியக் கலைஞரும், தமிழ்நாடு குடந்தை ஓவியக் கல்லூரியின் பேராசிரியருமான புகழேந்தி.

ஈழத் தமிழ் மக்களுக்கெதிரான அடக்கு முறைகளையும் யுத்தத்தின் மூலம் அவர்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் அவலங்களையும் ஈழ மக்களின் போராட்ட வரலாறுகளையும் தனது தூரிகை கொண்டு தமிழகத்தில் மட்டமின்றி இந்தியா முழுவதும் உலகமெங்கும் எடுத்தியம்பியவர் இவர்.

ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தின்பால் ஈர்ப்புக்கொண்ட இவர், அடக்கி, ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகளை வெளிக்கொணரும் வகையிலும், அடக்குமுறையாளர்களுக்கு எதிராகவும் தனது தூரிகையைப் பயன்படுத்தும் ஓர் ஓவியப் பேராசிரியராக மிளிர்கிறார்.

தமிழ்நாடு குடந்தை ஓவியக் கல்லூரியில் பட்டப்படிப்பையும், ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஓவியத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்ற இவர், தமிழகத்திலேயே ஓவியத்துறையில் முதன் முதலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்ற புகழையும் பெற்றுள்ளார்.

1987 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இளைஞர்களுக்கான தேசிய விருது, அதே ஆண்டு தமிழ்நாடு மாநில விருது, இந்தியாவின் உலக விமானப் போக்குவரத்துக் குழுமத்து விருது, தர்மபுரி மனித மேம்பாட்டு மையம் வழங்கிய சிறந்த ஓவியர் விருது போன்ற பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

சென்னை, ஐதராபாத், டெல்லி, லக்னோ, பெங்களூர், மும்பை போன்ற பல இந்திய நகரங்களில் தேசிய அளவிலான கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் முக்கிய நகரங்களில் உறங்கா நிறங்கள், சிதைந்த கூடு, திசைமுகம், புகைமூட்டம் உள்ளிட்ட எழுபதிற்கும் மேற்பட்ட இவரது தனிமனித ஓவியக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

"20 ஆம் நூற்றாண்டு ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள்" என்ற இவரது கண்காட்சி தமிழகம் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் நடத்தப் பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளது. இவற்றைவிட அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், அவுஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளிலும் இவரது கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

தற்போது இலங்கை வந்துள்ள புகழேந்தி கிளிநொச்சி உட்பட பல்வேறு இடங்களில் தனது 'புயலின் நிறங்கள்' என்ற ஈழப்போர் வரலாற்றுப் பதிவு ஓவியங்களின் கண்காட்சிகளை நடத்தி வருகிறார்.

கடந்த 18, 19, 20 ஆம் திகதிகளில் கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தில் இவரது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அங்கு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஓவியக் கலைஞர் பேராசிரியர் புகழேந்தியைச் சந்தித்து அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

அதன்போது 'தினக்குரலு'க்கு அவர் வழங்கிய விசேட செவ்வியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

உங்களது வரலாறுகளை அறிந்து கொண்டோம். உங்களுடைய கலையுலக வாழ்வு பற்றிக் கூறுங்கள்?

கடந்த 23 வருடங்களாகக் கலை வாழ்க்கை மற்றும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றேன். கலை  வாழ்வு, பொது வாழ்வு இரண்டுமே என்னோடு ஒன்றிணைந்தவை. குறிப்பாக, என்னுடைய ஆரம்பகால ஓவியங்கள் ஈழத்தமிழர்களின் இன்னல்களையும், பிரச்சினைகளையும் ஓவியங்களாக்கி தமிழகத்தில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலும் காட்சிப்படுத்தியிருக்கின்றேன். ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது பலதரப்பட்ட மக்களது அனுபவங்களையும் எனது ஓவியத்தின் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றேன்.

உங்களது ஓவியப்படைப்புகளை ஈழத்தின் பல்வேறு இடங்களில் நீங்கள் காட்சிப்படுத்தி வருகிறீர்கள். இதற்கான காரணம் என்ன?

நான் பல்வேறு ஈழப்போர் வரலாற்றுப் பதிவுகளையும் ஓவியமாக வரைந்திருக்கின்றேன். ஈழப்போரில் எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, எந்த மண் பாதிக்கப்பட்டதோ, அந்த மண்ணிலே அந்த மக்கள் மத்தியிலே ஓவியங்களாக வைத்து அவர்களிடத்தில் இந்த ஓவியங்களைக் கொண்டு செல்லவேண்டும். இந்தப் படைப்பிலே நாம் பேசுகின்ற செய்திகளை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென்பதுதான் எனது நோக்கம். அதற்காகவே இக்கண்காட்சிகளை இப்பகுதிகளிலே நடத்துகின்றேன்.

தமிழகத்திலே சிறந்த புகழ்பெற்ற பல்வேறு கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் தவிர்ந்த ஏனையோர் தமது படைப்புகளில் ஈழத்தமிழர்களின் இன்னல்களை வெளிப்படுத்துவதில் பாராமுகமாகவே இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் அவலங்களை வரலாறுகளாக வெளிப்படுத்த உங்களைத் தூண்டிய காரணிகள் எவை?

1983 ஆம் ஆண்டு நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் மாணவனாக இணைந்தேன். எனது பள்ளிப் பருவத்திலேயே மொழி உணர்வும், இன உணர்வும் அதிகமாக இருந்தது. ஒரு திராவிடப் பாரம்பரியம் மிக்க பின்னணியில் நான் பிறந்தவன். இனஉணர்வும், மொழி உணர்வும் என்னைத் தமிழக மக்களின் பிரச்சினைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவியது.

1983 ஆம் ஆண்டு நான் கல்லூரியிலே நுழைகின்றபோது 1983 ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற இனக்கலவரத்தையும் அதில் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்டதையும் எதிர்த்து மாணவர்கள் மிகப்பெரியதொரு போராட்டத்தை நடத்தி, தமிழ் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். ஆயிரக்ககக்கான தமிழ் மக்கள் இங்கே கொலை செய்யப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் தமிழகம் நோக்கி அகதிகளாக வந்த நிலையில் மாணவர் போராட்டம் மிகப்பெரிய எழுச்சியாக உருவெடுத்தது. அப்போது அந்தப் போராட்டத்தில் நானும் பங்குபெற்றேன். ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களென அந்தப் போராட்டம் பல்வேறு கோணங்களிலும் கிளை விரித்தது.

அப்போது ஓர் ஓவியனாக இந்தப் போராட்டத்திற்கும், மக்களிற்கும் என்ன செய்ய முடியுமென்று நான் சிந்தித்ததன் விளைவுதான் இந்த ஈழ மக்களுடைய உரிமைப் போராட்டத்தை ஓவியமாக வடித்து, அவர்கள் பட்ட இன்னல்களை, அனுபவித்த சித்திரவதைகளை ஓவியமாக வரைந்து மக்கள் மத்தியிலே கொண்டு செல்ல வேண்டும். அதன் மூலம் இந்தப் போராட்டத்திற்கு ஒரு ஆதரவைப் பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் இப்போராட்டம் கூடுதலான கவனத்தைப் பெறும் என்ற அடிப்படையிலேயே அத்தகைய வெளிப்பாடுகளை ஓவியங்களாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றேன். அந்த அடிப்படையில்தான் இன்று உலக அளவில் எது நடந்தாலும் மனிதத்தை ஆதரிக்கின்ற மனிதத்தைப் பேசுகின்ற குரலாக என்னுடைய ஓவியங்கள் இருந்து வருகின்றன. அடக்குமுறைகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது நிறவெறியாகவோ அல்லது ஜாதி வெறியாகவோ மத ஒடுக்குமுறையாகவோ இருந்தாலும் அத்தகைய ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் குரல் கொடுக்கின்ற அல்லது அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்ற ஓர் ஓவியனாக நான் இருக்கின்றேன். அத்தகைய பார்வையை, சிந்தனையை என்னுள் தோற்றுவித்தது ஈழ விடுதலைப் போராட்டம்.

தமிழகத்தில் பல கலைஞர்கள் புகழ்மிக்க கலைஞர்கள் இருந்தாலும் ஈழ மக்கள் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த ஒரு விழிப்புணர்வு பெரும்பாலும் அவர்களிடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுகுறித்து, தங்களின் நிலை என்ன?

முற்றுமுழுதாக அத்தகைய கலைஞர்கள் இல்லையென நாம் ஒதுக்கிவிட முடியாது. ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சித்தரிக்கின்ற வகையில் தமிழ்நாட்டில் வீர சந்தானம் எனும் ஓவியர் மிகப்பெரியளவில் பல ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியிருக்கின்றார். அதேபோல் மருது. அவர் போன்று பல ஓவியர்கள் அத்தகைய ஓவியங்களை வரைந்து தமது பங்களிப்புகளை ஆற்றி வருகின்றனர். ஆரம்ப காலகட்டங்களில் பெருமளவில் இல்லாவிட்டாலும் சில ஓவியங்களில் ஈழப்பிரச்சினை குறித்து ஓரிரண்டு ஓவியங்களைச் செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தின் பின் அப்படியான ஓவியங்களை வெளிப்படுத்தும் துணிவு அங்கு இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாம்.

இதன் மூலம் உங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் எழவில்லையா? அதுகுறித்து அச்சம் எதுவும் தங்களுக்கு இல்லையா?

படைப்பு ரீதியாகவும் இயக்க ரீதியாகவும் எமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றபோது, எந்தவிதமான அச்சமும் எனக்குக் கிடையாது. ஏனெனில், நான் நியாயத்தின் பக்கம் நின்று குரல் கொடுக்கின்றேன். ஒடுக்கப்படுகின்ற அடக்கப்படுகின்ற மக்கள் பக்கம் நின்றுதான் பேசுகின்றேன். என்றாலும் அதற்கு அச்சுறுத்தல்கள் வரும் என்று எதிர்பார்த்துதான் நான் அதைச் செய்கின்றேன். விளைவுகளை எதிர்பார்க்காமல் எந்தவொரு செயலையும் நான் செய்வதில்லை. எந்தவொரு செயலிற்கும் ஒரு எதிர்வினை உண்டு என்று நான் எதிர்பார்ப்பவன். அப்படிச் சில நேரங்களிலே எனக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததுண்டு, இருக்கிறது. ஆனால், ஒரு படைப்பாளன் அத்தகைய அச்சுறுத்தல்களைக் கண்டு அஞ்சி ஒடுங்கிவிட முடியாது. உண்மையான படைப்பாளன் துணிவுமிக்கவனாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் நான் இருக்கின்றேன். ஈழத்தில் நடக்கின்ற பிரச்சினைகளை மட்டுமல்ல, இந்தியாவிலும் உலகமெங்கிலும் நடக்கின்ற அடக்குமுறைகளை எதிர்த்தும் நான் குரல் கொடுக்கின்றேன். வீதிக்கு வந்து போராடுகின்றேன். அடக்குமுறைகள் அரசுகள் அரசு சார்ந்த அமைப்புகள், மதவெறியர்கள், ஜாதி வெறியர்கள் யார் செய்தாலும் அதை எதிர்த்து வீதிக்கு வந்து நான் குரல் கொடுக்கின்றேன்.

இந்த நிலையில் அதற்கான எதிர்வினைகளை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். எல்லோரும் பயந்து கொண்டு பேசுவதை நிறுத்திவிட்டால் இறுதியில் நியாயத்தை உரத்துச் சொல்வதற்கு யாரும் இல்லாமல் போய்விடுவார்கள்.

சில உண்மைகளை சிலவேளைகளில் உரத்துச் சொல்ல வேண்டி வரும். சிலவேளைகளில் அது தனித்த குரலாகவும் இருக்கக்கூடும். எல்லோரும் இணைந்து ஒரு செயலைச் செய்ய வேண்டுமென நினைத்தால் அந்தச் செயல் காலம் தள்ளிப்போகும். எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் அவை மேலும் என்னைச் சிந்திக்கவும் செயற்படவும் தான் தூண்டுகிறது.

ஈழத்தின் ஏனைய கலைத்துறையுடன் ஒப்பிடுகையில் ஓவியக் கலைத்துறை வீழ்ச்சியடைந்து காணப்படுவதாகக் கருதப்படுகின்றது. இத்துறையில் மாணவர்களும் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குறையும் உள்ளது. இக்குறைகளை நீக்கி இக்கலையை வளர்ப்பது குறித்துத் தங்களது ஆலோசனை என்ன?

எந்தவொரு கலையும் வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அந்தக் கலையை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். அவர்களுக்குப் பயிற்சி வழங்க ஆசிரியர்களை உருவாக்க வேண்டும். அத்தகைய சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது முதற்கடமையாக உள்ளது. அத்தகைய ஆசிரியர்களை உருவாக்கினால் நல்ல மாணவர்களை உருவாக்குகின்ற சூழல் உருவாகும். நல்ல மாணவர்கள் உருவானால் நல்ல ஓவியர்கள் வெளிவர அது துணைபுரியும். இந்தியாவில் பல்வேறு அரசு, தனியார் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு ஓவியக்கலை கற்பிக்கப்படுகின்றது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் அதை அங்கீகரிக்கின்றன. இப்படிப் பல்வேறு நிலைகளில் வளர்கின்ற இக்கலை, தேக்க நிலைகளை எட்டியிருக்கின்றது. அத்தகைய எந்த வளமும் இல்லாத இந்த நாட்டில் அக்கலை வீழ்ச்சியடைந்திருக்கின்றதென்பது தவிர்க்க முடியாததுதான். அதை மாற்றுவதற்கு ஓவியக் கலையைப் பயிற்றுவிக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நாம் தோற்றுவிக்க வேண்டும். முதற்கட்டமாகக் பயிலரங்குகளைப் பல இடங்களில் பல்வேறு தரப்பினருக்கும் நடத்தி மாணவர்களுக்கு இருக்கின்ற ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஊக்குவிக்க வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம், நல்ல சிந்தனையுள்ள திறமையான ஓவியர்களை நாம் இந்த மண்ணிலே உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. குறிப்பாக, ஈழத்தமிழர்களுடனான 25 வருட கால உறவு எனக்குண்டு. இந்த மண்ணிலே நிறைய, நல்ல சிந்தனையுள்ள இளைஞர்கள் இருப்பதை நான் பார்க்கின்றேன். வீரியம் மிக்க திறமை மிக்க இளைஞர்கள் இந்த மண்ணிலே இருக்கின்றார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டல்களும் தேவை. வழிகாட்டல்களை நாம் செய்தால் அவர்களிடமிருந்து நல்ல பயனை இந்த மண்ணில் பெறமுடியும்.

நீங்கள் ஒரு கலை இலக்கியவாதி என்ற வகையில், இருபது ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈழத்தில் கலை இலக்கியத்துறையையும் கொடிய யுத்தத்தின் பின்னரான தற்போதைய ஈழத்துக் கலை இலக்கியத்துறையையும் எவ்வாறு பிரித்து நோக்குகிறீர்கள்?

இருபது ஆண்டுகளுக்கு உட்பட்ட ஈழத்துக் கலை இலக்கியம் பற்றித்தான் அதிகம் நான் அறிந்திருக்கிறேன். அதற்குமுன் இருந்த கலை இலக்கிய வளர்ச்சி குறித்து எனக்கு அதிகம் தெரியாது. சிலவற்றை நான் படித்திருக்கின்றேன். சில கலை இலக்கியவாதிகளின் பேட்டிகளைக் கேட்டும் படித்தும் இருக்கின்றேன். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இத்தகைய இலக்கியத்தை, கவிதைகளை, நாவல்களைப் படிக்கின்றேன். அதிகமாக இதை உள்வாங்கியிருக்கின்றேன். ஒரு போராட்டக் கலை இங்கு வளர்ந்திருக்கின்றது. கறுப்பின நாவல்கள், கவிதைகள் எவ்வாறு அவர்களது போராட்டத்திற்கு வலுச் சேர்த்ததோ, பாலஸ்தீன விடுதலைப் போராட்டக் கவிதைகள் எப்படி அந்த மண்ணின் விடுதலையில் சிறு கதைகளும், எழுத்துகளும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.

இன்று உலகளவில் மிகவும் போற்றக் கூடிய படைப்புகளை ஈழத்தறிஞர்கள் எழுத்தாளர்கள்தான் படைத்திருக்கின்றார்கள். உலகளவில் இருக்கக் கூடிய போராட்ட இலக்கியங்களோடு ஈழத்து இலக்கியங்களையும் நாம் ஒப்பிட முடியும். உயர்ந்து நிற்கக் கூடிய இலக்கியமாக அவை இருக்கின்றன. அந்த வகையிலே மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை ஈழத்து இலக்கியம் எனக்குத் தந்திருக்கின்றது. போராட்டத்தில் போராட்டச் சூழலில் தான் நல்ல இலக்கியம் பிறக்க முடியும். அந்த சூழலில்தான் நல்ல கவிஞர்கள் உருவாக முடியும் என நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில் நல்ல இலக்கியவாதிகளை நல்ல போராளிக் கவிஞர்களை, கலைஞர்களை இந்த மண் பெற்றிருக்கிறது.

ஈழத்துக் கலைஞர்களையும், தமிழகத்தின் கலைஞர்களையும் நீங்கள் எவ்வாறு ஒப்பு நோக்குகிறீர்கள்?

இரண்டு பேரையும் அடிப்படையில் நான் தமிழ்க் கலைஞர்களாகவே பார்க்கிறேன். ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு ஈழத்துத் தமிழ்க் கலைஞர்கள் போல் இருக்கின்றவர்களும் உள்ளார்கள். ஈழத்தில் இருந்து கொண்டு கலைஞர்கள் என்று கூறிக்கொண்டு பத்தாம்பசலித்தனத்தைப் போதிக்கின்ற கலைஞர்களும் இருக்கிறார்கள். எந்த மண்ணில் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல. அவர்கள் எப்படிச் செயற்படுகின்றார்கள் என்பதும் முக்கியம். அந்த அடிப்படையில் எனக்கு ஈழத்துக் கலைஞர்களை எப்படி ஏற்றுக்கொள்ள மனமுண்டோ அப்படிப் புறக்கணிக்கக் கூடிய சிலரும் இருக்கிறார்கள். இதுபோன்ற மிக மோசமான கருத்தியல்புகளை விதைக்கக் கூடிய கலைஞர்களும் இருக்கிறார்கள். இரு தரப்பிலுமே நல்லதும் இருக்கிறது; கெட்டதும் இருக்கிறது. எது தமக்குச் சரியென்று பட்டதோ அதை வெளிப்படுத்துகின்ற கலைஞர்களை எப்போதுமே நான் ஆராதிப்பேன்.

ஈழப் பிரச்சினைகள் குறித்து, படைப்புகளைப் பல தமிழகக் கலைஞர்கள் வெளிப்படுத்தும் போதும் அங்குள்ள மக்களிடம் ஈழப் பிரச்சினை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை காணப்படுகிறதே?

இந்தக் கருத்தை நிச்சயமாக நான் ஏற்க முடியாதவனாக இருக்கிறேன். தமிழக மக்கள் என்றுமே ஈழப் பிரச்சினைகளிலே தெளிவாக இருக்கிறார்கள். அவர்கள் இதனைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஈழப் போராட்டம் ஒவ்வொரு முறையும் முன்னெடுக்கப்படுகின்றபோது முன்னேறிச் செல்கின்றபோது அதனைக் கொண்டாடுவதற்கு அவர்கள் எப்போதுமே தயங்கியதில்லை. மிகப்பெரியளவில் அவற்றை உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஈழத்து மக்கள் அழிக்கப்படுகின்றபோது அவர்களுக்கு அவலங்கள் நேரும்போது அதற்காக அந்த மக்கள் அழுகின்ற நிலையை நான் பார்க்கின்றேன். ஆனால், சில அரசியல் காரணங்களுக்காக சில அரசியல் கட்சிகள் அந்த மக்களை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் பின்தங்குகின்ற ஒருநிலையில்தான். அந்த மக்கள் தன் எழுச்சியாக எழுந்து குரல் கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்களே ஒழிய, வேறு எந்தக் காரணமும் இருப்பதாக நான் கருதவில்லை. தமிழக மக்கள் ஈழமக்களுடைய விடுதலையை என்றைக்குமே ஆதரிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இன்று தமிழகத்திலே சூழல், நிலைமை மாறிவருகின்றது. அரசியல் சூழல்கூட மாறியிருக்கிறது. விழிப்புணர்வு மக்களிடம் இருக்கிறது. அதை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் தான் சில நேரங்களிலேயே தடுத்து விடுகிறார்கள். அதைத்தான் தவறாக நான் கருதுகின்றேன்.

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுகளினால் ஈழ, கலை இலக்கிய உலகில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் குறித்து?

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்க் கலை இலக்கியங்களை உளகளாவிய ஒன்றாக மாற்றியிருக்கிறார்கள். அது ஈழத் தமிழர்களால் மட்டும்தான் சாத்தியப்பட்டிருக்கிறது. ஈழப்போராட்டம் என்ற ஒன்று இல்லையென்றால் தமிழ்ப் போராட்டம் ஒன்று இல்லையென்றால் தமிழ் இலக்கியம் உலகளாவிய ரீதியில் எட்டியிருக்குமா என்றுகூட நான் நினைப்பதுண்டு. ஈழப் போராட்டம் உலகளாவிய ரீதியில் தமிழ் இலக்கியத்தை எடுத்துச் சென்றுள்ளது. அதற்கு அந்த மக்கள் கொடுத்த விலை அதிகம். இன்று உலகளாவிய நிலைக்கு என்னுடைய ஓவியங்கள் சென்றடைந்திருக்கின்றன என்றால் அதற்கு ஈழப்போராட்டம்தான் முக்கிய காரணம்.

ஈழத்துக் கலை இலக்கியவாதிகளுக்கு நீங்கள் ஒரு கலைஞர் என்ற வகையிலே என்ன கூற விரும்புகிறீர்கள்?

ஒரு கலைஞன் ஒரு சமூகப்போராளி என்ற வகையில் ஒரு போராட்ட மண்ணில் இருக்கக் கூடிய கலைஞர்கள் அந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளைச் செய்யவேண்டும். அந்தப் போராட்டத்தைக் கூர்மையடையச் செய்வதற்கான ஆக்கங்களை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் அந்தப் படைப்பாளிகள் இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கும். அப்படியான படைப்பை இந்த மண்ணின் கலைஞர்களிடமும் படைப்பாளிகளிடமும் இருந்து நிறைய எதிர்பார்க்கின்றேன்.
இறுதியாக, தமிழக மக்கள் என்றும் ஈழத் தமிழர்களின் பக்கம் நிற்கின்றார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். என்றைக்கும் அந்த மக்கள் உங்களையோ உங்கள் போராட்டத்தையோ கைவிடமாட்டார்கள். நிச்சயமாக உங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு நியாயம் இருக்கிறது. அந்த நியாத்தின் பக்கம் தமிழக மக்கள் நிற்கிறார்கள். அதற்கான குரல்கள் அங்கு எழுந்து கொண்டிருக்கின்றன. குரல்கள் மட்டுமல்ல, தேவைப்பபுமானால் கரங்களும் உயரும். இதைத்தான் இந்த மக்களுக்கு உறுதியாக நான் கூறவிரும்புகிறேன்.