என்னைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொண்டதை விடத் தமிழீழத் தமிழர்கள் புரிந்து கொண்டது அதிகம்

நேர்காணல்: அ. நிசாந்


ஈழநாதம் (மட்டக்களப்பு) தமிழீழம். 27.5.2005


தமிழகம் குடந்தை ஓவியக் கல்லூரியின் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓவியர் புகழேந்தியின் "புயலின் நிறங்கள்" என்ற தலைப்பிலான ஓவியக் கண்காட்சி, கிளிநொச்சி அழகியல் கலாமன்றத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தை சித்திரிக்கும் ஓவியங்கள் உட்பட உலகளாவிய ஒடுக்குமுறைக்கு உட்படும் மக்களுக்கான குரலாக இவ்வோவியங்கள் அமைந்திருக்கின்றன. மனிதத்தை நேசிக்கும் ஒருவனின் ஆத்மா அடைந்த நெருடல்களும் அந்தரிப்புகளும் மன வெளியினூடாகப் பயணித்து பிரமிப்பூட்டும் மனதைக் கலங்க வைக்கும் உயிர்ப்புள்ள கலையாகியிருப்பதை இவ்வோவியங்கள் சான்றுபடுத்துகின்றன.

அவுஸ்திரேலியாவில் "புயலின் நிறங்கள்" எனும் கண்காட்சியை நடத்திய பின்னர் எந்த மக்களிடமிருந்து ஓவியத்திற்கான தூண்டல்களை பெற்றிருந்தாரோ அந்த மக்களுக்காக இதனை நடத்தவேண்டும் என்ற நோக்கிலும் ஈழ மாணவர்க்கு ஓவியம் தொடர்பான அனுபவங்களைப் பயிலரங்கின் ஊடாக வழங்கவேண்டும் என்ற நோக்கிலும் கிளிநொச்சியில் தற்போது தங்கியிருக்கும் புகழேந்தி அவர்களுடன் ஈழநாதம் (மட்டக்களப்பு பதிப்பு) சார்பாக நேர்காணல் ஒன்றை நடத்தினோம்.

தாங்கள் வரைந்துள்ள எமது போராட்டம் தொடர்பான உயிரோட்டமான ஓவியங்களை நாமும் எமது பத்திரிகையில் பயன்படுத்தி வருகிறோம். தங்கள் ஓவியங்கள் தொடர்பான கட்டுரைகளும் எமது பத்திரிகையில் வெளிவந்துள்ளன. இவ்வாறு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய ஓவியங்களை வரைவதற்கான தூண்டுகோலாக அமைந்த விடயமாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

நான் பாடசாலைகளில் படிக்கும் காலங்களில் நிறைய இயற்கைக் காட்சிகள், இயற்கை சார்ந்த காட்சிகள், (ஆடு, மாடு, மனிதன், மலர்கள், செடி, கொடிகள்) போன்றன. இவ்வாறு நிறைய ஓவியங்கள் வரைந்து நிறையப் பரிசில்களும் பாராட்டுக்களும் பெற்றுள்ளேன். 1983 ஆம் ஆண்டு நான் பாடசாலை வாழ்வை முடித்துக் கல்லூரி வாழ்வில் காலடி எடுத்து வைக்கிறேன். 1983 ஜூலையில் இலங்கையிலே மிகப் பெரிய இனக் கலவரம் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றனர். இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமிழகம் நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கும் காலப்பகுதியில் நான் அந்தக் கல்லூரியிலே மாணவனாக என்னை இணைத்துக் கொள்கிறேன். அப்பொழுது இக்காலப் பகுதியிலே ஈழத்தமிழ் மக்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து மிகப்பெரிய அளவிலான ஒரு மாணவர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நானும் அங்கு நடைபெற்ற போராட்டங்களிலே பங்கு கொண்டேன். ஊர்வலங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என இடைவிடாத போராட்டம். கல்லூரிகள், பாடசாலைகள் என அனைத்துக்கும் காலவரையற்ற விடுமுறைகள் விடப்பட்டிருந்தன. பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அந்தப் போராட்டங்களில் என்னையும் ஈடுபடுத்தியிருந்த நிலையில் ஓர் ஓவியனாக நான் இந்தப் போராட்டத்திற்கு என்ன செய்யப்போகின்றேன் என நான் சிந்தித்ததன் விளைவுதான். 83 காலப் படுகொலைகளை நான் ஓவியமாகச் செய்தது. அவ்வாறு செய்யப்பட்ட ஓவியங்கள் தான் பல கண்காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஓவியங்களை வரைந்து தமிழ்நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளிலும் காட்சிப்படுத்தியிருந்தேன். பலராலும் அதிகம் பேசப்பட்டதொரு ஓவியங்களாக அவை இருந்தன. அவைதான் என்னை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் விடுதலை இயக்கங்கள் பக்கமும் நின்று ஓவியத்தால் போராடத் தூண்டியது. இந்த ஈழவிடுதலைப் போராட்டமும் இத்தகைய வன்முறைகளும்தான்.

ஒரு விடுதலைப் போராட்டம் பற்றியும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் தங்களால் ஆக்கப்படுகின்ற ஓவியங்களைத் தவிர வேறு எவ்வகையான ஓவியங்களை வரைந்துள்ளீர்கள்?
இந்தியாவினுடைய சாதிப் பிரச்சினைகள் மத ரீதியான பிரச்சினைகள், மசூதி இடிக்கப்பட்ட போதும் அதற்கு முன்பும் மதரீதியான பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் மத ரீதியான பல ஓவியங்களைச் செய்தேன். பெண்களின் ஒடுக்குமுறை சம்பந்தமான ஓவியங்களை வெளிப்படுத்தியுள்ளேன். மத ரீதியாக அண்மையில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமான, உயிரிழப்புகள் சம்பந்தமான ஓவியங்களை வரைந்துள்ளேன். இவையும் அதிக அளவிலே மக்கள் மத்தியில் பேசப்பட்டுள்ளன. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை 150 அடி ஓவியமாகச் செய்து காட்சிப்படுத்தினேன்.

தந்தை பெரியாரது பன்முகத்தை 'திசைமுகம்' என்ற தலைப்பிலே 25 ஓவியங்கள் செய்தேன், உலகளவில் இன்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஓவியங்களாக அவை இருக்கின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல்வேறு சமூக சிந்தனை சார்ந்து ஒடுக்குமுறையைச் சித்திரிக்கின்ற ஒரு குரலாக என்னுடைய ஓவியங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக எனது ஓவியங்கள் குரல் கொடுக்கின்றன என்றுதான் நான் பார்க்கிறேன்.

ஈழத் தமிழ் ஓவியர்கள் பற்றியும் இங்கு வெளிப்படுத்தப்படுகின்ற ஓவியங்கள் பற்றியும் உங்கள் கருத்து என்ன?

ஈழத் தமிழ் ஓவியம் என்பது நான் அதிகமாகக் காணக்கிடைக்காத ஒன்றாக உள்ளது. நான் அறிந்தது மார்க்கு என்ற ஓர் ஓவியர். அதிகமான ஓவியங்களைப் பார்க்காவிட்டாலும் அவரது பெயர் அதிகப் பரீட்சயம் உள்ளது.

இன்னும் நிறையளவு வளர்ச்சிப்போக்கை நோக்கி நகரவேண்டிய தேவை இன்று  ஈழத்தில் இருக்கிறது. எதிர்காலச் சூழலில் நிச்சயமாக நிறைய ஓவியர்கள் இங்கிருந்து உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நிறைய வேலைத்திட்டங்களை இங்கே முன்னெடுக்க வேண்டிய வேலை எனக்கு உண்டு. இருக்கின்ற ஆற்றல்களை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறைகளைத் திட்டமிடல் இங்கே இருக்கின்றது. அதிகளவான ஓவியர்களை வளர்த்தெடுப்பதற்கு இதுபோன்ற பயிற்சிப் பட்டறைகளும் கண்காட்சிகளும் பயன்படும்.

தமிழீழத்தில் உங்களது "புயலின் நிறங்கள்" ஓவியத் தொகுப்பு கண்காட்சி நிகழ்த்தப்பட்டதன் காரணம் என்ன?

ஓவியங்களை நான் செய்கின்றபோது அந்த ஓவியங்கள் வெளியிடப்படாது அந்தப்படைப்புகள் ஓர் அறைக்குள் முடங்கிக் கிடப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதைவிட, வேறுவிதமான ஓவியங்களைப் படைத்து ஒரு மாட மாளிகையை அலங்கரிப்பதற்கான ஓவியங்களை வரைபவனும் அல்ல. நான் மக்களுடைய பிரச்சினைகளை, சமூகத்தினுடைய பிரச்சினைகளை, சமூகச் சிக்கல்களை ஓவியங்களாகப் படைக்கின்ற பொழுது, அந்தப் படைப்புகள் எந்த மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களிடமும் காட்சிக்காக வைக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து செயற்பட்டு வருபவன் நான். அந்த அடிப்படையிலேதான் தமிழ்நாட்டிலே நூற்றுக்கும் அதிகமான கண்காட்சிகளை கிராமங்கள், மாவட்டங்கள், மாநிலங்கள் தோறும் நடத்தியிருக்கிறேன். அதேபோல் உலக அளவில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகரங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. எங்கே மக்கள் கூடுகிறார்களோ, எங்கே மக்கள் நெருக்கமாக உள்ளனரோ அவ்வாறான இடங்களிலெல்லாம் நான் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளேன். தெருக்களிலும் கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்படி இதுவரையும் செயல்பட்டுக் கொண்டிருந்த நான், கடந்த 23 ஆண்டுகாலமாகப் பொது வாழ்க்கையும் கலைவாழ்க்கையுமாக இருக்கின்றேன். இப்படி, பல காட்சிகளை நடத்தியுள்ளேன்.

அதன் விளைவாக நான் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறேனோ அதனுடைய முத்தாய்ப்பாக இந்த ஈழ விடுதலைப் போராட்ட ஓவியங்கள் புயலின் நிறங்கள் என்ற பெயரில் எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ எந்த மண் பாதிக்கப்பட்டதோ அவர்களின் மண்ணில் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்பினேன்.

ஆக, என்னுடைய எண்ணங்கள் நிறைவேறியிருப்பதாக நான் கருதுகிறேன். இவ்வாறான ஓவியங்களைப் பாதிக்கப்பட்ட மக்கள் பார்க்கின்றபோது அவர்களின் மனத்தாக்கத்தின் வெளிப்பாடாக என்ன நிலையினை வெளிப்படுத்தப்போகிறார்கள் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இந்தக் கண்காட்சியினூடாக அது எனக்கு நன்கு புலப்பட்டிருக்கின்றது. ஆக மொத்தமாக இந்த மண்ணில் இம்மக்கள் மத்தியில் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படும்போது இது அவர்களுக்கு உரியது என்ற உணர்வினை இன்று தோற்றுவித்துள்ளதாகவே நான் கருதுகிறேன். இதுதான் இப்பகுதியின் காட்சிப்படுத்ததின் நோக்கமாக இருக்கிறது.

தமிழீழத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 'புயலின் நிறங்கள்' ஓவியத் தொகுதிக்கு முன்பும் பல ஓவியங்களை வரைந்து பல நாடுகளில் கண்காட்சி நடத்தியிருக்கிறீர்கள். அந்த ஓவியங்கள் தொடர்பாகவும் அவைகளின் சித்தரிப்புகள் தொடர்பாகவும் கூற முடியுமா?

84 தொடக்கம் 94 வரையான காலப்பகுதியிலே வரையப்பட்ட ஓவியங்கள்தான் 1994 இல் 'எரியும் வண்ணங்கள்' என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டன. அந்த 10 ஆண்டுகள் செய்த ஓவியங்கள் ஒரு தலைப்பின்கீழ் தொகுக்கப்பட்டன. அதிலே ஈழ போராட்டம் குறித்த ஓவியங்களும் பல இருந்தன.

உலக அளவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களான தென்னாப்பிரிக்க, பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்கள், இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கும் சாதிவெறிப் போராட்டங்கள், மத ரீதியான, சிக்கல்கள், பிரச்சினைகள், அடக்குமுறைகள், வன்முறைகள், பெண்ணியப் பிரச்சினைகள் பல்வேறு வகையான சமூகப் பிரச்சினைகள் இவைகள் எல்லாம் அவ் 'எரியும் வண்ணங்கள்' தொகுப்பில் இருந்தது. இதுதான் தமிழில் முதலில் வெளிவந்த பல வண்ணத் தொகுப்பு. அதன் பிறகுதான் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான நிகழ்வுகளை 'உறங்கா நிறங்கள்' எனும் தலைப்பில் வெளியிட்டேன். இவைகளைத்தான் ஒரு தொகுப்பாகத் தலையங்கத்தின் கீழ் வெளியிட்டேன்.

இத்தலைப்பின் கீழ் செய்யப்பட்ட ஓவியங்கள் 'உறங்கா நிறங்கள்' 20 ஆம் நூற்றாண்டில் நடந்த முக்கியமான நிகழ்வுகள். அந்த நிகழ்வுகளுக்குச் சம்பந்தமான தலைவர்கள் என, அவைகள் கலை,   கலாசாரம், அரசியல் எனப் பலதுறை சார்ந்த 20 ஆம் நூற்றாண்டு எவ்வாறான நிகழ்வுகளைக் கொண்டுள்ளது என்றும் 20 ஆம் நூற்றாண்டு என்பது மிகப்பெரிய சவால்களை வெற்றி கொண்டதாகக் கருதுகின்றேன். பல மிகப்பெரிய ஏகாதிபத்தியங்களைத் தூக்கியடித்த விடுதலை இயக்கங்கள் பலவற்றைச் சாதித்த ஒரு நூற்றாண்டாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் பதிவுகளின் முக்கியமான நோக்கம் என்னவென்றால் ஈழத்தினுடைய முக்கியமான பிரச்சினையை உலகுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் இந்த 20 ஆம் நூற்றாண்டு சம்பந்தமான ஓவியங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்.

ஆக, மொத்தமாக அந்த நூற்றாண்டில் லெனினில் தொடங்குகின்ற அந்த ஓவியத் தொகுப்பு அண்ணன் பிரபாகரன் அவர்களோடு முடிவடையும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது லெனினின் ரஸ்யப் புரட்சியுடன் தொடங்கியது என நான் கருதினேன். அதைத் தொடர்ந்து இந்திய விடுதலை, கியூப விடுதலை, பாலஸ்தீனப் போராட்டம், தென்னாப்பிரிக்க விடுதலை அந்தக் காலகட்டங்களில் நிகழ்ந்த ஒடுக்கு முறைகள், சாதி மத, அறிவியல் சம்பந்தமானவைகள். நிலவில் முதலில் கால் பதித்த ஆம்ஸ்ரோங் பற்றிய பதிவு, கணினியினுடைய மிகப்பெரிய வளர்ச்சி, அதேபோல் கலை இலக்கியங்களில் தமிழகம் இந்திய அளவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளன என்பதையும் உலக அளவில் ரவீந்திரநாத் தாகூர், பாரதி,

பாரதிதாசன், புதுமைப்பித்தன் இவ்வகையானவர்களையும் அதேபோல் கலை, அரசியல் என எல்லாத் துறைகளையும் கடந்து எவ்வாறு இந்த நூற்றாண்டு முன்னேறியுள்ளது. கடந்துள்ளது என்பதைச் செய்வதன் மூலம் இந்த நூற்றாண்டை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதாக நான் இவ்வகையான ஓவியங்களைப் பார்த்தேன். அவ்வேளையில்தான் வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரையினுடைய கண்கள் தோண்டப்பட்டன.

அதுபோன்றுதான் எந்த ஒரு உலக வரலாறுகளில் என்றும் எங்கும் எப்போதும் நிகழாத நிகழ்வுகள்தான் யாழ்வெளியேற்றம். மண்ணைத் துறந்து, உடைமைகளை, உறவுகளைத் துறந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு இடம் பெயர்கிறார்கள் என்றால், அதைவிட ஒரு நிகழ்வு உலகத்தில் எந்த மூலையிலும் என்றும் இடம் பெறாததை நான் பார்த்தேன். அந்த யாழ் வெளியேற்றம். அதேபோன்று திலீபன் அவர்களின் உண்ணாவிரதத்தினூடாக நிகழ்ந்த விளைவுகள் அவற்றையும் ஓர் ஓவியமாகச் செய்தேன்.

அதேபோன்று எலும்புக் கூடுகளாக எடுக்கப்பட்ட செம்மணிப் படுகொலைகள் சம்பந்தமான ஓர் ஓவியம், வல்வைப் படுகொலை, வியட்நாமுக்கு மைலாய், தமிழீழத்திற்கு வல்வை என்பது போன்று இந்த 20 ஆம் நூற்றாண்டில் நடந்த மைலாய், வல்வை அடங்கிய மூன்றையும் பதிவு செய்தேன். அதேபோல் இந்த மண்ணில் இடம்பெற்ற இவ்வகையான நிகழ்வுகளை ஓவியங்களாக இந்த 20 ஆம் நூற்றாண்டில் இடம் பெற்ற நிகழ்வுகளுடன் இணைத்துவைக்க நான் விரும்பினேன். அதனைப் போன்றே அந்த ஓவியங்களுக்கு உலக மக்களுடைய மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.

இறுதியாக அண்ணன் பிரபாகரன் அவர்களுடைய ஓவியத்தை வைத்தேன். அவர் ஒரு குறியீடு. எல்லோருமே நான் காட்சிப்படுத்தியதை ஆவலோடு பார்த்தனர். நாம் ஓவியத்தை வரைகின்ற போதே அதை எவ்வாறு காட்சிப்படுத்த வேண்டும் என்பதைச் சிந்திக்கிறோம். காட்சிப் படுத்துவதிலும் ஒரு குறியீடு இருக்கிறது. அதன் வழியாகவே நாம் செய்திகளையும் சொல்கின்றோம். வெறும் ஓவியத்தை வரைந்து எப்படியாவது காட்சிப்படுத்தலாம் என்பது அல்ல. ஓவியத்தை இப்படித்தான் காட்சிப்படுத்த வேண்டும் என்று நாம் நம்புகின்றோம். அந்த அடிப்படையிலே காட்சிப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

இப்படி ஓவியங்களைக் காட்சிப்படுத்தும்போது பல்வேறு வகையான சிந்தனைகளை உள்ளடக்க வேண்டும். அவ்வாறான பலதரப்பட்ட சிந்தனையின் விளைவுதான் லெனினில் ஆரம்பமாகின்ற அந்த ஓவியங்கள். அண்ணன் பிரபாகரனுடன் அந்த ஓவியக் கண்காட்சியின் தொகுப்பு முடியும்.

அப்படி அந்தத் தொகுப்பு முடிவடைந்தது ஏன் எனப் பல்வேறு நபர்கள் ஒரு வியப்பையும் நம்பிக்கையையும் தெரிவித்தார்கள். நான் என்ன நினைத்து அண்ணனுடைய (பிரபாகரன்) ஓவியத்தை இறுதியாக வைத்தேனோ அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு எதிர்வினையாற்றினார்கள்.

20 ஆம் நூற்றாண்டு முடிகின்றபோதும் அண்ணனுடன்தான் 21 ஆம் நூற்றாண்டு தொடங்குவதும் அண்ணனுடன்தான் என்ற குறியீடாகத்தான் அந்த ஓவியத்தை இறுதியில் வைத்தேன். ஏனென்றால் ஒரு புரட்சியைச் செயலிலே காட்டிக் கொண்டிருக்கின்ற ஒருவர், ஒரு தலைவராக அவர் இருக்கிறார். அதனாலேயே 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வைத்தும் 21 ஆம் நூற்றாண்டின் இந்த யுகத்தை எழுதக் கூடியவராக அண்ணன் உள்ளார் என்பதனாலேயே 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அவரை வைத்தேன்.

அதனையடுத்துப் பல லட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த குஜராத் பூகம்பம் பற்றிய ஓவியங்களை 150 அடி நீளமாகச் செய்து காட்சிப்படுத்தினேன். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய ஓவியம். அதேபோன்று பெரியாருடைய ஓவியத்தையும் பன்முகத்துடன் வைத்தேன். பெரியாரது புரட்சிகள் இல்லாமல் இருந்து இருந்தால் இன்றும் தமிழகத்தில் மலம் அள்ளுபவன் மலம் அள்ளிக் கொண்டேயும் எருது ஓட்டுபவன் எருது ஓட்டிக்கொண்டேயும் கழுத்து அறுபட்டு அடிமைகளாகவே மக்கள் இருப்பர் என்று நான் கருதுகிறேன். இன்று இளைய சமுதாயம் பெரியாரை மறந்து வருகிறது என்று தெரிகிறது. அதனாலேயே அவரது சிந்தனைகளையும் பன்முகத் தோற்றத்தையும் நான் வரைந்தேன்.

தற்போது, புகை மூட்டம் என்ற தலைப்பிலே ஒரு கண்காட்சி இந்தியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலேதான் குஜராத்தில் மதத்தின் பேரால் இடம் பெற்ற வன்முறையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. அந்த நிகழ்வுகளைச் சித்திரிக்க 9 ஓவியங்கள் செய்துள்ளேன். கணினி யுகம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதனே மனிதனுடைய மலத்தைச் சாப்பிடவைக்கின்ற கேவலமான நிலை இன்றும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இவை சம்பந்தமான ஓவியங்களும் அதேபோல் இந்திய, தமிழகத்திலே பல அடக்கு முறைச்சட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற அவ்வகையான சட்டங்களையும் அதன் பிற்பாடு ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட ரவுலட் சட்டம் அதனையும் மெருகூட்டி இந்தியர்களால் கொண்டுவரப்பட்டது மிசா சட்டம். இதனையும் தோற்கடிக்கக் கூடிய அடக்குமுறைச் சட்டமாக தடாச்சட்டம் இருந்தது. அதனையும் மீறும் வகையில் பொடாச்சட்டம்.

இந்தப் பரிணாம வளர்ச்சி வகையை நான் நான்கு ஓவியங்களில் காட்டியுள்ளேன். அதேபோல் அமெரிக்கா, ஈராக்கில் நடத்திக் கொண்டிருக்கின்ற கோரமுகத்தையும் அந்தத் தொகுப்பிலே மூன்று ஓவியங்களாகப் படைத்துள்ளேன். தமிழக விவசாயிகள் படுகின்ற துன்பங்களையெல்லாம் அந்த ஓவியத்தில் தீட்டியுள்ளேன். அதன் பிறகு நம்பிக்கை தரக்கூடிய ஒரு சில ஓவியங்களாகப் புகை மூட்டம் தொகுதியில் 27 ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளேன். இந்தக் கண்காட்சி இன்றும் தமிழகத்தில் 30 இடங்களில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் பல இடங்களில் நடத்துவதற்குத் தேவை உள்ளதாகவும் பல்வேறு இயக்கங்கள், மக்கள் விரும்புகின்றனர். அதுமட்டுமன்றி, ஓவியங்கள் இவ்வளவு மேலாக மக்களால் விரும்பிப் பார்க்கப்படுவது மக்களின் நிலைமைகளைச் சிந்திப்பதால் தான் என நான் நம்புகின்றேன்.

உங்களது தமிழீழப் பயணம் எத்தகைய தாக்கத்தை தங்களுள் ஏற்படுத்தியுள்ளது?

தமிழீழ மக்களுடன் எனக்கு இன்று நேற்று அல்ல உறவு. எனக்கு 20 வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட உறவு. என் மீது அவர்களும் அவர்கள் மீது நானும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் பயணத்தினால் மட்டும்தான் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறேன் என்று நான் நினைக்கவில்லை. நான் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் என்னுடைய சிந்தனைகள், செயற்பாடுகள் எல்லாம் இந்தத் தமிழீழத்தை நோக்கியதாகவே அமையும்.

எனக்கு இந்தப் படைப்பாக்கம் ஈழவிடுதலைக்கும் தமிழ்த் தேசியத்திற்குமே பயன்பட வேண்டும் என்று நான் நம்புகின்ற அதேவேளை, உலக மனித சமுதாயத்துக்கும் இந்தப் படைப்பாற்றல் பயன்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அவ்வாறான எனது விருப்பத்தினை, இந்த ஈழ விடுதலையே பெருமளவு சாத்தியப்படுத்தியுள்ளது. ஆக, என்னுடைய இந்தப் படைப்புகள் கடந்த 20 ஆண்டு காலமான ஈழ மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் தமிழீழ மக்களும் என்னைச்  சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொண்டதை விடத் தமிழீழத் தமிழர்கள் புரிந்து கொண்டது அதிகம். இதைப் பல்வேறு இதழ்கள் வெளிப்படுத்தியுள்ளன. எனது இந்தத் தமிழீழத் தாயகப் பயணம் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் தமிழீழ மக்கள் மத்தியிலும் பெரிய நெருக்கத்தையும் தொடர்பையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.