தமிழீழப் போராட்டம் தான் என் சமூகப் பார்வைக்கு வித்திட்டன

நேர்காணல்: இ. சசிக்குமார்


ஈழநாதம், 21.05.2005

 

தமிழீழ மக்கள் வடித்த கண்ணீரை, சிங்கள இனவெறியர்களின் குண்டுகளால் வீழ்த்தப்பட்ட தமிழன் உடலை இந்த மண்ணில் வெடித்த நெருப்பை ஓவியங்களாய்த்தந்த பெருமைக்குரியவர் தமிழக ஓவியர் புகழேந்தியவர்கள்.

அவர் தனது ஓவியங்களைத் தமிழீழ மண்ணில் அண்மைக்காலமாகக் காட்சிப்படுத்தி வருகிறார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்பால் நீங்கள் ஈடுபாடு கொள்வதற்குத் தூண்டுதலாக அமைந்த காரணி என்ன?

1983 ஆம் ஆண்டு எனது பள்ளிப் பருவத்தை முடித்துக்கொண்டு ஓவியக் கல்லூரி மாணவனாக ஆகஸ்ட் மாதம் இணைகின்ற சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறையான யூலை இனக்கலவரம் நிகழ்ந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். பெண்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள். பல இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகத் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அந்த வேலையில்தான் நான் கல்லூரியில் இணைகின்றேன். அந்தக் காலப்பகுதியில் தான் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் எல்லோரும் இணைந்து தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் நடைபெற்றன.

அந்தச் சூழல்தான் என்னை இந்தப் போராட்டத்தின்பால் ஈடுபடத் தூண்டியது. நானும் அந்தப் போராட்டங்களில் இணைந்துவிட்டேன். ஏற்கெனவே எனக்குத் தமிழ் அறிவும், மொழி உணர்வும் அதிகமாக உண்டு. ஏனென்றால் நான் திராவிட இயக்கப் பாரம்பரியத்தையுடைய குடும்பத்தில் பிறந்தவன். அந்த அடிப்படையில் என்னுள் மொழி இன உணர்வுகள் இருந்ததால் என்னால் அந்தப் போராட்டத்தில் இணைய முடிந்தது. ஓர் ஓவிய மாணவனாக அந்தப் போராட்டத்திற்கு என்னுடைய பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று நான் யோசித்தேன். நான் ஒரு சராசரியான, நல்ல பணம் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டக் கூடிய ஒரு எதிர்பார்ப்போடுதான் கல்லூரிக்குள் நுழைந்தேன். ஓவியப் பிரிவில் பல பிரிவுகள் இருந்தன. நான் விளம்பரப் பிரிவைத் தேர்ந்தெடுத்துதான் அங்கு சென்றேன். ஆனால் அந்தக் காலத்திலேயே இவ்வாறு போராட்டங்கள் நடைபெற்றதால் அப்போராட்டத்தில் நானும் இணந்த போதுதான் நான் ஒரு வண்ண ஓவியனாக மாறி இந்தப் போராட்டம் சார்ந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் ஓவியங்களூடாகவும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது.

பல்வேறு ஓவியங்கள் 1983 படுகொலையைப் பற்றி 1984, 1985 காலகட்டங்களில் நிறைய ஓவியங்களைச் செய்தேன். நிறையப் போராளிக்குழுக்கள் தமிழகத்திலேயே இருந்த காலகட்டமது. பத்திரிகைச் செய்திகள், ஒளிப்படக் காட்சிகள், புகைப்படங்கள் என்று பல்வேறு வகையிலும் அறிந்த சம்பவங்களை ஓவியங்களாக வடித்து மக்கள் மத்தியில் விளக்கினோம். இவ்வாறுதான் இந்த ஈழவிடுதலைப் போராட்டத்தைப் பற்றிய ஓவியங்களைச் செய்ய வேண்டுமென்ற உணர்வு எனக்கு வந்தது.

ஆரம்பத்தில் இந்த ஓவியங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு வெளிப்படுத்தினீர்கள்?

முதலில் தமிழகத்தில் தான் காட்சிக்கு வைத்தோம். ஏனெனில் அப்போது தமிழகத்தில் இந்தப் பிரச்சினையைப் பல்வேறு அரசியல் கட்சிகள் பேசின. பேசாத அரசியல் கட்சிகளே கிடையாது. பேசாத அமைப்புகளும் கிடையாது. அந்தளவுக்கு அந்த அமைப்புகள் இயங்கின. கட்சிகள் இயங்கின. அந்தக் காலகட்டத்தில் தான் நானும் பல ஓவியங்களைப் படைத்து என்னுடைய பங்கிற்குக் கண்காட்சியாகத் தென்னிந்திய அளவில் இந்த ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறேன். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினையைப் பேசுவதற்குத் தயங்கிய பொழுதும் இதிலிருந்து பின்வாங்கிய பொழுதும் நான் இன்னும் பல்வேறு ஓவியங்களைச் செய்து மக்கள் மத்தியில் கண்காட்சியாக நடத்தி அவர்கள் மத்தியிலே இந்தப் பிரச்சினையை மேலும் கொண்டு சென்றேன். இவ்வாறுதான் எனது செயற்பாடு விரிவுபட்டது.

தமிழகத்தில் கிராமரீதியாகவா நகரரீதியாகவா இக்கண்காட்சிகளை நடத்தினீர்கள்?

அனைத்துப் பகுதிகளிலும் அதாவது கிராமம், சிறு நகரங்கள், மாவட்டத் தலைநகரங்கள் பெரும் நகரங்கள் என்று பல்வேறு இடங்களிலுமே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் உங்களது இவ்வாறான ஓவியங்கள், மக்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின?

இந்தப் பிரச்சினையை அந்த மக்கள் தெரிந்து கொள்வதற்கான ஒருவாய்ப்பாக இந்த ஓவியங்கள் இருந்தன. குறிப்பாக, பெண்களுடைய மார்பகங்கள் அறுக்கப்பட்டு சிங்களக் காடையார்களால் காட்சிப்படுத்தப்பட்ட அந்த நிலையை நான் ஓவியமாகச் செய்தபொழுது அதைப் பார்த்த பெண்கள் பலரும் அழுதார்கள். மிகப்பெரிய அளவில் இந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொள்வதற்கு இங்கு நடக்கின்ற கொடுமைகளை, படுகொலைகளை அந்த மக்கள் புரிந்து கொள்வதற்கான ஓர் ஊடகமாக இந்த ஓவியங்கள் இருந்தன. பல்வேறு தரப்பு மக்களும் இந்த ஓவியத்தைப் புரிந்து கொண்டார்கள். பெரியவர்கள், குழந்தைகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற அனைத்துத் தரப்பினருமே இந்தப் பிரச்சினைகளை ஓவியத்தினூடாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

நீங்கள் ஈழத்தமிழர்களின் போராட்ட ஓவியங்களோடு வேறு எவ்வகையான ஓவியங்களை உருவாக்கியுள்ளீர்கள்?

நிறைய ஓவியங்களை உருவாக்கியுள்ளேன். ஆனால் ஈழ விடுதலைப் போராட்ட ஓவியங்கள் தான் எனது சமூகப்பார்வைக்கு வித்திட்டன. அதன் பிறகு உலகம் முழுவதும் நடக்கின்ற அடக்குமுறைகளை எதிர்த்து விடுதலைக்காகப் போராடுகின்ற இயக்கங்களுக்கு ஆதரவாக அந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற அதாவது ஓவியங்களினூடாகவும் குரல் கொடுக்கின்ற நிறைய ஓவியங்களை உருவாக்கியது ஈழவிடுதலைப் போராட்டத்தால்தான். அதுதான் உண்மை. அதன்பிறகு தமிழகத்தில் இருக்கின்ற சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து ஓவியங்களைச் செய்யமுனைந்தேன். அதனை எதிர்த்துப் போராடவும் தூண்டப்பட்டேன். அதேபோல் மதத்தின் பேரால் நடக்கின்ற கொடுமைகளை, அடக்குமுறைகளை, கொலைகளை மக்கள் மத்தியிலே அம்பலப்படுத்துவதற்கு எனது ஓவியங்கள் இன்று பணி செய்கின்றன. அதேபோல் அங்கு இருக்கின்ற வர்க்க வேறுபாடுகளை, பெண்ணிய வெளிப்பாடுகளை, பெண்களுக்கெதிராக நடக்கக் கூடிய வன்முறைகளை, அரச வன்முறைகளாகவிருந்தாலும் சரி, தனி நபர்கள் செய்கின்ற வன்முறைகளாக இருந்தாலும் சரி, அதனையும் வெளிப்படுத்தும் வகையில் என்னுடைய ஓவியங்கள் வெளிவந்தன. அதேபோல் உலக ரீதியில் நடைபெறுகின்ற விடுதலைப் போராட்டங்களை, குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து யசீர் அராபத்தினுடைய பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து, குர்திஸ்தான் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இவ்வாறு பல்வேறு இடங்களிலும் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற மக்களினுடைய விடிவிற்காகவென்று எனது ஓவியங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் மக்களின் ஒடுக்குமுறைகளுக்கெதிராகக் குரல் கொடுக்கின்ற ஒருவனாகவும் நான் இன்று உள்ளேன்.

ஓவியங்கள் படைப்பதற்காகப் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அப்போராட்டங்களிலிருந்து ஈழ விடுதலைப் போர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

பல்வேறு வகையான போராட்டங்கள் தென்னாப்பிரிக்க சிறுபான்மை வெள்ளையின ஆட்சியாளருக்கெதிரான கறுப்பின மக்களின் போராட்டம், பாலஸ்தீனப் போராட்டம், கியூபா போராட்டம், இவை எல்லமே அந்தந்த மக்களின் உரிமைகளுக்காகவே நடத்தியிருக்கின்றார்கள்.
அதேபோல் தான் ஈழத்திலும். தமிழ் மக்கள் தமது மண்ணினுடைய மீட்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே எல்லாவகையான போராட்டங்களும் ஒத்த சிந்தனையோடுதான் நடபெறுகின்றன. எனவே விடுதலைப் போராட்டம் என்ற வீதியில் இவையனைத்தும் ஒன்றுதான். ஆனால் வேறு சிலர் ஏனைய போராட்டங்களோடு ஈழ விடுதலைப் போரை வேறுபடுத்திப் பார்க்கின்றார்கள். எனக்கு அதில் வேறுபாடு தெரியவில்லை.

நீங்கள் இந்த விடுதலைப் போராட்டங்கள் நடைபெறாத இடங்களில் இவ்வோவியங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அங்கு இவ்வோவியங்களைப் பற்றி எவ்வாறான கருத்துகள் வெளிவருகின்றன?

பெரும்பாலும் தமிழர்கள் அல்லாதவர்கள் இந்த ஓவியங்களைப் பார்க்கின்றபொழுது ஓவிய நுட்பத்தையும் ஓவியத்தினுடைய கருத்தையும் உள்வாங்கிக் கொள்கிறார்கள். பெரிய அளவில் அந்த மக்கள் இந்தப் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டுள்ளார்கள். அது இந்த ஓவியத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பாக மலேசியாவில் இந்த ஓவியங்களை மக்கள் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தியபோது, பல்லின மக்கள் அக்கண்காட்சியைப் பார்த்தார்கள். பார்த்து இப்படியும் கொடுமைகள் சித்திரவதைகள் தமிழ் மக்களுக்கு நடந்ததா? என்று அவர்கள் வியந்தார்கள். அப்படி பல்வேறு நிலைகளிலும் இந்த ஓவியங்கள் சென்றடைந்திருக்கின்றன. அதேபோல் இன்று இளம் தலைமுறையினராக இருக்கும் தமிழர்கள் பலரும் புலம் பெயர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்சினைகளின் ஆழம் தெரியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுக்கு இது ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாக இருந்து, வரலாற்றைப் புரிந்து கொள்ள உதவியது. 1983 இல் நடைபெற்ற பல்வேறு படுகொலைகளைப் பற்றி அவர்கள் படித்திருக்கிறார்கள். நூல்களும் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால் ஓவியமாக அவர்களிடம் இல்லை. இது ஓர் ஊடகமாக இருந்து அவர்களுக்கு அதைப் புரிய வைக்கிறது. அதேபோல் ஒவ்வொரு நிகழ்வும் யாழ் புலம் பெயர்வு, திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நிகழ்வு, செம்மணிப் படுகொலைகள் இப்படிப் பல்வேறு ஓவியங்களும் அரர்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது. கடந்தகாலச் சம்பவங்களை உணரவைப்பதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதாக அமைகிறது.

ஈழத் தமிழர்களின் போராட்டங்களைச் சித்திரிக்கின்ற ஓவியங்களை இந்தியாவில் காட்சிப்படுத்துகின்றபோது அரசியல் ரீதியிலான எதிர்ப்புக்களைச் சந்தித்திருக்கிறீர்களா?

பொதுவாக எல்லா விடயங்களுக்கும் எதிர்ப்புகளும் இருக்கும். ஆதரவுகளும் இருக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஒரு காலத்திலே தமிழகத்தில் அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவும் இருந்தது. சில காலகட்டங்களுக்குப் பிறகு அரசியலுக்காக எதிர்த்தார்கள். அதை ஒட்டித்தான் இந்த ஓவியங்களையும் எம்மையும் எதிர்க்கக் கூடிய நிலைகள் உருவாகின்றன. எதிர்ப்பதனால் நாம் துவண்டு விடப்போவதில்லை.

இவ்வோவியங்களை ஈழத்திலே காட்சிப்படுத்த இவ்வளவு காலமும் தடங்கல்கள் ஏதும் இருந்தனவா?

பொதுவாக ஓவியங்கள் எந்த மக்களைப் பற்றிப் பேசுகிறதோ அந்த இடத்திலே அவ்வோவியங்களைக் காட்சிப்புடத்த வேண்டும் என்று நான் கருதுவதுண்டு. அதுதான் என்னுடைய நோக்கமாகவும் இருந்தது. அதேபோல் யார் அந்த மக்களை அடக்குகிறார்களோ அவர்கள் பக்கமும் இந்த ஓவியங்களைக் கொண்டு செல்ல வேண்டுமென்று கருதுகின்றவன். அப்படித்தான் இந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அப்படி, பல்வேறு ஓவியக் காட்சிகளை அந்த மக்களிடத்திலே நான் நடத்தியிருக்கின்றேன். அதற்குப் பல்வேறு இலக்கிய, சமூகமுற்போக்கு அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் என்னோடு உடனிருந்து உதவிகளையும் ஆதரவையும் இன்றைக்கும் வழங்கி வருகின்றன.

தமிழக அளவிலும் சரி, உலக அளவிலும் சரி அவ்வாறான அமைப்புகள்தான் இக்கண்காட்சியை நடத்த உதவிவருகின்றன. அப்படி ஈழத்திலே நடத்துவதற்கான ஒரு சூழல் இதுவரை இருக்க வில்லை. பல்வேறு வகையான போராட்ட காலத்தில் போர்முனையில் இந்தக் கண்காட்சியை நடத்துவது இதுவரைக்கும் சாத்தியப்படவில்லை. இப்பொழுது அதற்கான சூழல் உருவாகி இந்த இடத்தில் அக்கண்காட்சி நடைபெறுகிறதென்றால் என்னுடைய நோக்கம் நிறைவேறுவதாகவே நான் கருதுகின்றேன். எனக்கு ஒரு படைப்புரீதியான திருப்தியும் ஏற்படுகின்றது.

அடக்குமுறையாளர்களின் பகுதிகளுக்குள் இக்கண்காட்சியை நடத்துவது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா?

நடத்துவதற்கு எனக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் அதை நடத்த ஒரு அமைப்பு தேவை. எந்த ஒரு செயலையும் ஒரு தனிமனிதனால் செய்யமுடியாது. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. நான் எந்த ஓர் அமைப்பிலும் அங்கம் வகிக்காவிடினும் நான் அமைப்பு சார்ந்து, மக்கள் சார்ந்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். எனது ஓவியங்களை உலகிற்குக் கொண்டு செல்லக் கூடிய வகையில் இன்று பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. ஒரு மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகின்ற ஒரு படைப்புக்கு பல்வேறு தரப்பினரதும் ஆதரவும் இருந்தால்தான் அதை நாம் கொண்டு செல்ல முடியும். மாறாக ஒரு கலை, கலைக்காகவே என்ற கோட்பாடுள்ள எந்தப் படைப்பிற்கும் பிரச்சினைகள் இருப்பது கிடையாது. ஆகவே இந்த ஓவியக் கண்காட்சியை, சிங்களவர்கள் வாழ்கின்ற பகுதியிலும் நடத்த வேண்டும் என்ற ஒரு விருப்பம் எனக்கு இருக்கிறது. அதை நடத்துவதற்கான ஒரு அமைப்புதான் தேவைப்படுகிறது.

இங்கு சம்பவம் நடந்த மண்ணில் இவ் ஓவியங்களைப் பார்வையிட வருகின்ற பார்வையாளர்கள் எவ்வாறான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்?

வயதானவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். ஏனென்றால் 1984க்கு முன்பிருந்து அவர்கள் அனுபவித்தவர்கள். அதனால் அழுது பதற்ற நிலையை அடைகிறார்கள். நடுவயதைச் சேர்ந்தவர்கள் இவற்றைப் பார்த்துவிட்டு அழுத்தமுடையவர்களாகத் தோற்றமளிக்கிறார்கள். இளம் தலைமுறையினர் அவர்கள் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தவைகளை எல்லாம் இவ்வாறு காட்சிப்படுத்தப்படுகின்றனபோது ஒரு வரலாற்றைப் புரிந்து கொண்டவர்களாக உள்ளார்கள். இவ்வாறு அனைத்துத் தரப்பினருக்கும் இவை பயனுடையதாகவே இருக்கின்றது. ஒரு சிலர் இன்னும் பல்வேறு நிகழ்வுகள் எங்கள் மண்ணில் நடைபெற்றிருக்கின்றன. அவற்றையும் ஓவியமாக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் கோரிக்கைகளையும் விடுக்கிறார்கள். உண்மைதான். நான் தமிழகத்தில் இருந்து தமிழீழத்தைப் பார்க்கிறவன். தமிழீழத்தில் இருந்து தமிழகத்தைப் பார்ப்பது என்பது வேறு. தமிழகத்தில் இருந்து தமிழீழத்தைப் பார்ப்பது என்பது வேறு. இரண்டுக்குமான வேறுபாட்டை நான் உணர்கிறேன். தமிழீழத்திற்கு வந்த பிறகு தான் நான் அறியாத பல நிகழ்வுகளைக் கேட்கக் கூடியதாகவும் பார்க்கக் கூடியதாகவும் இருக்கிறது. இந்த அனுபவங்கள் என்னுடைய படைப்பிற்கு மேலும் துணை செய்யும் என நான் உணர்கிறேன்.

நீங்கள் தமிழீழத்தில் போர் நடந்த பகுதிகளையும் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளீர்கள். இவற்றை ஓவியங்களாக்கும் எண்ணம் உண்டா?

நிச்சயமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கின்றது. பொதுவாக, நான் ஒரு படைப்பை உருவாக்குவதற்கு முன்னால் அங்கு சென்று பார்வையிடுகின்ற வழக்கம் எனக்குண்டு. குறிப்பாக, இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சுந்தூர் எனும் பகுதியில் அந்த ஊரில் தலித்து மக்களை மேல் சாதிக்காரர்கள் வெட்டிக் கொன்றார்கள். நான் அங்கு உடனடியாகச் சென்று பார்வையிட்டேன். அந்த சம்பவத்தைப் பார்த்துவிட்டு வந்து அதை ஓவியமாக்கி மக்கள் மத்தியில் காட்சிப்படுத்தினேன். அதேபோல் ஆந்திராவின் 'சலக்குறுத்தி' என்ற இடத்திலே பிற்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை உயர் சாதிக்காரர்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி அந்தப் பெண்ணை நடுவீதியில் நிர்வாணமாக அழைத்து வந்து கொடுமை செய்தார்கள். இதை ஊரே வேடிக்கைப் பார்த்தார்கள். காவல்துறை வேடிக்கைப் பார்த்தது. எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். யாரும் கேட்பதற்கு ஆளில்லாத நிலையில் அந்தப் பெண் கூனிக் குறுகியவாறு மக்கள் மத்தியிலேயே ஒரு சந்தைப் பகுதியில் நீண்டநேரம் நிற்க வைக்கப்பட்டாள். இதனையும் நான் நேரடியாகச் சென்று அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசி அந்த உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு வந்து ஓவியமாக வெளிப்படுத்தினேன். அந்த ஓவியமே தமிழக மக்கள் மத்தியில் ஒரு செய்தியாகச் சென்றடைந்தது.

இப்படி ஒவ்வொரு இடத்திலும் சென்று பார்த்து ஓவியமாக்க வேண்டுமென்ற உந்துதல் எனக்கிருந்தது. ஆனால் இதற்குமுன் என்னால் ஈழத்திற்கு வரக்கூடிய சூழல் கிடைக்கவில்லை. இப்போது இப்படியொரு சூழல் எனக்குக் கிடைத்திருக்கின்ற நிலையிலே பல்வேறு இடங்களைச் சென்று பார்த்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களோடு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. அப்படி ஒரு நிலையில் பல்வேறு உணர்வுகளை இன்று நான் உள்வாங்கிக் கொண்டு வருகின்றேன். இவற்றை எல்லாம் ஓவியங்களாகப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கேற்பட்டிருக்கின்றது. நிச்சயமாக இதனூடாகவும் பல்வேறு படைப்புகளை வெளிக்கொண்டு வருவேன்.

ஈழவிடுதலைப் போரைப் பற்றி நீங்கள் இந்தியாவில் இருக்கும் போதிருந்ததைவிட இங்கு வந்து பார்த்தபின் எவ்வாறான உணர்வைப் பெற்றுள்ளீர்கள்?
போராட்டத்தைப் பற்றிய எண்ணம் எனக்கு இங்கு வந்த பின்பும் சரி, அங்கிருக்கும் போதும் சரி ஒரே உணர்வுதான் உள்ளது. எனக்கு இருவேறு உணர்வுகள் எப்போதும் இருந்ததில்லை. தமிழகத்தில் என்ன உணர்வோடு இருந்தேனோ அதே உணர்வோடுதான் இங்கும் இருக்கிறேன்.

 

. . . . . * . . . . .