ஓவியர் புகழேந்தியின் படைப்புலகும் தூரிகையின் மொழியும்

நேர்காணல்: தி. தவபாலன்


புலிகளின் குரல், தமிழீழம், மே 2005


எரிமலை, பிரான்ஸ், ஜூலை 2005


ஓவியர் புகழேந்தி தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டை கிராமத்தில் பிறந்தார். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் மாணவனாக இணைந்து அவர் ஓவியம் பயின்றார். அந்தக் காலத்திலேயே அதாவது 1983 ஆம் ஆண்டளவிலேயே இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிரான இனக்கலவரம் வெடித்துக் கிளம்பியது. அந்தச் சம்பவம் ஓவியரின் மனதை ஆழமாகத் துயர்கொள்ள வைத்தது. ஆவணி மாதம் அளவில் ஓவியக் கல்லூரியில் இணைந்திருந்த அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டார். பெரிய அளவில் எழுச்சியுடன் நடைபெற்ற அப்போராட்டத்தில் அவரும் துடிப்புடன் கலந்து கொண்டு உழைத்தார். தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அக்காலத்தில் நிகழ்ந்த போராட்டம் அது. நீண்ட நெடிய போராட்டமாக விளங்கியது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் அப்போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டதற்குப் பிறகு நிகழ்ந்த நீண்ட நெடிய ஒரு போராட்டமாக அது விளங்கியது.

அப்போது ஓவியத்தின் ஊடாகவும் இப்போராட்டத்திற்கு உதவ முடியும் என அவரது மனதில் எண்ணிக் கொண்டதாகக் கூறுகிறார். அவர் முதலில் கல்லூரியில் இணையும்போது, விளம்பரக் கலையில் இணைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுவே வருமானத்தை ஈட்டித்தரும் எனவும் பலர் கூறி இருந்ததையும் அவர் கருத்தில் கொண்டிருந்தாலும் பின்னர் அத்தகைய கருத்து நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு புதிய ஓவியப் படைப்புலகம் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல பரிசில்களையும், விருதுகளையும் வென்று மிகவும் குறிப்பிடத்தக்க ஓவியராக உயர்ந்துள்ளார். இன்று வரை அவரது ஓவியப் படைப்புலகமானது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இவர் அண்மையில் தாயகத்திற்குப் பயணம் செய்து ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தினார்.

இந்த ஓவியப் பயணத்தின் மூலம் அவர் பல பயிற்சிப் பட்டறைகளையும் நிகழ்த்தினார். இச்சந்தர்ப்பத்தின் போது எரிமலை சஞ்சிக்கைக்காக, புலிகளின் குரல் பிரதம செய்தியாளர் தவபாலன் ஓவியர் அவர்களை நேர்கண்டார்.

ஓவியம் மீதான ஈடுபாடு தங்களுக்குள் எவ்வாறு எழுந்தது?
தமிழீழ விடுதலைப்போராட்டம் என்னைச் சிந்திக்கத் தூண்டியது. ஒரு படைப்பாளனாக இருந்து இந்தப் போராட்டத்திற்கு உதவவேண்டும் என என்னை உந்தித்தள்ளியது. அப்பொழுது நிறைய புகைப்படங்கள், செய்திகள் நாள்தோறும் என்னை வந்து அடையும். அவற்றையெல்லாம் கேட்கின்ற பொழுதும் படிக்கின்ற பொழுதும் புகைப்படங்ளையெல்லாம் பார்க்கின்ற பொழுதும் அதை நான் உங்வாங்கிக் கொண்டு அப்படுகொலைகளையெல்லாம் கலவரங்களையெல்லாம் வைத்து நிறைய ஓவியங்களை வரைந்தேன். அப்போது தமிழகத்தில் நடைபெற்ற ஊர்வலங்களையெல்லாம் பார்க்கும் போராளிகளுக்கு இவ்ஓவியங்களைக் காண்பிப்பேன். அப்போது அவர்கள் அவ்ஓவியங்களையெல்லாம் பார்த்து ஈர்த்து மேலும் சில வீடியோக்களை எனக்குத் தந்தார்கள். நீண்ட நாட்கள் அந்த வீடியோ படங்களைப் போட்டுப் பார்த்து மேலும் என்னை அந்த உணர்வுகளோடு ஒன்றிணைந்து உள்வாங்கிக் கொண்டு மேலும் மேலும் என்னுடைய படைப்பினை அந்தத் திசையை நோக்கிச் செலுத்தினேன். அந்த நேரத்திலேயே என்னுடைய படிப்பு சம்பந்தமாகவும் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். விளம்பரக் கலைப்பிரிவில் சேர்ந்து ஒரு விளம்பர நிறுவனத்திலே ஓவியனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே இருந்த நான், ஒரு படைப்பாளனாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அத்தோடு வண்ணக் கலைப்பிரிவில் சேர்ந்து நான் படிக்கவேண்டும் என்று கல்லூரியில் சேர்ந்த 2, 3 மாதங்களிலேயே முடிவு செய்துவிட்டேன். இப்படி எனது முடிவுகள் மாறுவதற்கும் மிகவும் துணை நின்றது. அந்த அடிப்படையில் தான் நான் ஓர் ஓவியனாக ஒரு படைப்பாளனாக இன்று உலகத்தின் முன் படைப்புகள் ஆக்கிக்கொண்டு ஒரு சமூகப் பொறுப்புள்ள சமூகப்படைப்பாளனாக இருக்கின்றேன் என்கின்ற அடிப்படையிலேயே இன்று உலகில் எது நடந்தாலும் அவற்றை எதிர்த்துக் குரல் கொடுக்கின்றனவனாக எனது படைப்புகள் என்னை ஆக்கி இருக்கின்றது. இதற்கு இந்த ஈழப்போராட்டம் முக்கிய காரணம்.

இப்பொழுது நீங்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உங்களது படைப்புகளைக் கொண்டு வருகின்றபோது ஒரு சிக்கல் ஏற்படும். அதாவது நீங்கள் தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தமிழுணர்வுத்தளத்தினுடாகத்தான் செயற்படக்கூடிய நிலைமை இருக்கின்றது. இந்தவகையிலே தமிழ் உணர்வாளர்கள் முற்று முழுதாக கலையின் நவீனத்துவத்தை உள்வாங்கியவர்களாகவும் இல்லை. அதிலும் ஒரு மரபுத்திடம் அவர்களிடம் வந்துவிட்டது. இந்தச் சூழலில் நீங்கள் ஓவியத்தில் மரபுகளை உடைத்துத் தேடியிருக்கிறீர்கள். இதற்கு எவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே வரவேற்பு இருந்திருக்கும். இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம். ஒரு சவால்?

குறிப்பாக நான் திராவிட சிந்தனை உள்ள ஒருவன்தான். திராவிட இயக்கம்தான் என்னை வளர்த்தது. திராவிட இயக்கம் ஒன்று இல்லை என்றால் இன்றைக்குத் தமிழ்ச் சிந்தனையே இருந்திருக்காது. அவ்வடிப்படையிலேயே நானும் ஒரு திராவிட சிந்தனையுள்ளவன். நீங்கள் சொல்வதைப்போல திராவிட சிந்தனை உள்ளவர்களுக்கு ஒத்த மரபு சார்ந்ததிலேயே அதிகமான ஈடுபாடும், நவீனம் சார்ந்ததில் ஒரு புரிதலும் அதைப்பற்றி ஒரு அக்கறை இல்லாத நிலை இருந்தது உண்மை. ஆனால், இப்போதைய காலகட்டத்தில் நிலைமையில் மாற்றம் இருக்கிறது. அதனால் நான் இந்த நவீனம் சேர்ந்து இயங்கிய காலத்தில் பல்வேறு வகையான இந்தப் புரிதல் சிக்கல்களை எதிர்கொண்டேன். தமிழீழ சிந்தனை கொண்டவர்கள் குறிப்பாக இந்த நவீனம் சார்ந்து ஒரு அண்மித்த தன்மை கொண்டிருந்ததை நான் அப்பொழுது உணர்ந்தேன். ஆனால் அவர்களிலும் பலர் குறிப்பாக இலக்கியத்தில் நிற்பவர்கள். இன்றைய நவீனம் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். நிறைய புதுக்கவிதைகளையும் எழுதக் கூடியவர்களாக திராவிட இயக்கத்தில் இருந்தார்கள். நிறைய மாற்றத்தை, புதுக்கவிதை தோற்றுவித்திருந்தது. புதிய மாற்றத்தைத் தொடக்கி வைத்துவிட்டார்கள். அப்படி ஒரு தொடக்கம் ஓர் அறிமுகம் இருந்த காரணத்தினால் எனக்கு சற்று ஓவியத்திலே எளிதாக இருந்தது எனலாம். அப்படி ஓவியங்களை நான் செய்து காட்சிக்கு வைக்கின்ற பொழுது என்னுடைய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் என்னுடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள். என்னுடைய வடிவத்திலே சற்று மாற்றம் தேவை என்று கருதியதால் நான் அவர்களுடன் விவாதித்துக் கலந்துரையாடி எனது கருத்துக்களை வலியுறுத்தினேன். வெறும் மரபு என்று மட்டும் இருந்துவிட்டு அதுவே ஒரு தன்மையாக மாறிவிட்டது என நான் திராவிட இயக்கக் கருத்தாளர்களிடம் கவிஞர்களிடம் எழுத்தாளர்களிடம் சொன்னேன். புதிய மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீன சிந்தனைகளை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் புதிய புதிய வடிவங்களைக் கையாள்வதற்கு வாய்ப்புக் கிட்டும் என நான் அவர்களிடம் வாதாடினேன்.

பிறகு காலம் செல்லச் செல்ல நான் அதில் வெற்றி பெற்றேன். அவர்கள் மட்டும் அல்ல. பொதுவாக நவீன ஓவியங்கள் என்ற அடிப்படையிலேயே மிகவும் ஒரு அந்நியத்தன்மை தமிழகச் சூழலில் இருந்தது. மக்களுடன் ஒட்டாமல் அந்நியப்பட்டு இருந்ததிலேயே நான் இவ் ஓவியங்களைச் செய்து கண்காட்சிகளுக்கு அனுப்புகின்ற சூழல் பலரும் அதைப்பார்த்துவிட்டு அதற்கு வைக்கின்ற விமர்சனங்கள் பாராட்டுக்கள் இப்படி நிறைய வந்தது. இப்படி ஓவியங்களுக்குத் தேசிய விருது, மாநில விருது எனப் பல விருதுகள் கிடைத்த சந்தர்ப்பங்களில் பல்வேறு இதழ்கள் அவ் ஓவியங்களைப் பிரசுரித்தன. கட்டுரைகள் எழுதின. (அந்தக் காலகட்டம் 1987) அந்த 87 இல் ஒரு நவீன ஓவியம் மக்கள் மத்தியில் பரவலாக வெளிவந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் பல்வேறு தரப்பும் அவ் ஓவியத்தைப் பார்த்துவிட்டு அவ் ஓவியத்தில் இருக்கின்ற ஆழம், கருத்து இவைகளையெல்லாம் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அதன்பிறகு எனக்கு எளிதாக இருந்தது. அது ஒரு சாதகமான சூழலாக மாறியது. அதன் பிறகு ஈழப் போராட்ட ஓவியங்களை மேலும் வரையத் தொடங்கினேன். மாநில விருது, தேசிய விருது, வாங்கிய ஓவியங்கள்கூட, ஈழம் சம்மந்தப்பட்ட ஓவியங்கள்தான். அப்போது அவ் ஓவியங்களிற்குப் 'பாதிக்கப்பட்டவன்' எனத் தலைப்பிட்டேன். அதன்பிறகு பல்வேறு ஓவியங்களை நான் செய்தேன். அவ் ஓவியத்தில் இருக்கக்கூடிய உள்ளடக்கம் வெகுவாக மக்களை ஈர்த்தது. கண்காட்சிகளாக வைக்கின்றபொழுது நிறைய மக்கள் அதைப்பார்த்துவிட்டு எளிதாகப் புரிந்து கொள்கின்ற நிலையை எட்டினர்.

அப்பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன். மக்களிடம் செல்லுகின்ற பொழுது நிச்சயமாக ஒரு வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என நான் கருதினேன். இவ் ஆதரவுகளின் பின் பல்வேறு பத்திரிகைகள் அதைப்பற்றி எழுதின. இவ்வாறு நான் அதை மக்கள் மத்தியில் நவீனமயப்படுத்தும் பொழுது மிகப் பெரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் மக்கள் மத்தியில் வைக்கும்பொழுது ஒரு குழப்பமான சூழல் உருவானது. ஏனென்றால் ஒரு அந்நியத்தனமான மொழயாக இவ் ஓவியத்தைக் கருதினார்கள். ஆனால் நின்று நிதானித்துப் பார்த்து அவ்வோவியங்களை உள்வாங்கிக் கொண்டார்கள். அதற்கான பயிற்சியை அவர்கள் பெற்றார்கள். அதன்பிறகு அவ்வோவியத்திற்குக் கிடைத்த வரவேற்பு என்பது அதிகம்.

உங்களுடைய ஓவியங்களில் மரபு சார்ந்த ஓவியங்கள் அல்லது ஓவியத்தின் வர்ணங்களுக்குக் குறிப்பிடப்படுகின்ற மனநிலை அல்லது அதற்கான சூத்திரங்களிற்கு அப்பால் நீங்கள் முறியடித்து இவ் ஓவியங்களை வரைகிறீர்களா?

மரபு, நவீனம், என்னைப் பொறுத்தவரையில் நான் இவ்விரண்டிலுமே, மரபில் இருந்துதான் நவீனத்தைக் கையாளுகிறேன். எனக்கு மரபு எதிரி அல்ல. மரபுதான் எமக்கு சொல்லித் தருகிறது. மரபை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால்தான் நவீனத்தைப்பற்றி வெளிப்படுத்த முடியும். மரபு என்பது நமக்கான மிகப்பெரிய அடிப்படை என நான் கருதுகிறேன்.

ஐந்து ஆண்டு நான் படித்த படிப்பும் அவ் அடிப்படையில்தான். அது இலக்கியமாக இருந்தாலும் ஓவியமாக இருந்தாலும் சரி, நவீனம் என்று உடனடியாக முறைத்து விடுவதாக நான் கருதவில்லை. அப்படி ஒன்று இருக்கவும் முடியாது. சில பேர் கூறுகிறார்கள் நவீன கவிதை எழுதுவது எப்படி என்று சொலலித்தரமுடியும் என்று. அதேபோல் நவீனம் ஓவியம் வரைவது எப்படி என்று சொல்லித்தர முடியும் எனவும் நான் கருதவில்லை. மரபை நாம் அறிந்து கொண்டு புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொண்டு அதனால் கிடைக்கின்ற அனுபவத்திலே நாம் புதிய ஒன்றைப் படைக்கலாம். அப்படித்தான் நான் நவீனத்தைப் படைக்கிறேன். எடுத்த உடனேயே ஒரு படைப்பாளன் நவீன ஓவியத்தைப் படைக்க முடியும் என நான் கருதவில்லை. அப்படி என்றால் ஒரு குழந்தை மிகப் பெரிய நவீன ஓவியத்தை வரைகிறது எனக் கூறலாம். இம் மரபு சார்ந்த அடிப்படை மிகப்பெரியதொரு ஆழத்தைத் தருகிறது. அதுதான் இவ் ஓவியத்தில் வெற்றி பெற்றிருப்பதாகக் கருதுகிறேன். மனித உருவங்களைப் படைக்கின்றபொழுது உடற்கூறுகளைப் படைக்கின்றபொழுது அவ்வுடற்கூறுகள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் மாற்றங்கள் செய்து, நவீனத்துவமாக்கி வெளிப்படுத்துகிறேன். நிறங்களை எந்தக் கருத்தைச் சொல்ல வருகிறோமோ அந்தக் கருத்துக்கு ஏற்பக் கையாள்கிறேன். அங்கே எனக்கு மரபு குறுக்கிடவில்லை. மரபையும் கையாளவில்லை. ஓவியங்களைச் செய்யும்போது மரபு சார்ந்த நிறங்களைக் கையாள்கிறேன். நவீன ஓவியங்களைச் செய்யும்போது எந்தக் கருத்தை எடுத்தேனோ, அதற்குத் தேவையான நிறங்களை நான் கையாள்கிறேன்.

ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தை மையமாக வைத்து நீங்கள் வரைந்த ஓவியங்களில் இரண்டு முக்கியமான ஓவியங்கள் இருப்பதாகக் கருதுகிறேன். ஒன்று போராளி அடுத்து தியாகதீபம். திலீபனுடைய வீரச்சாவு ஓவியம். இதில் தியாக திலீபனுடைய ஓவியம் மிகச் சிறந்ததாக அந்த உணர்வை வெளிப்படுத்துவதாக அமைகிறது. உண்மையில் ஒரு புகைப்படத்தில் கூட அந்த உணர்வை நாங்கள் பார்த்ததில்லை. அதனை எவ்வாறு உள்வாங்கி வெளிப்படுத்தினீர்கள்?
அதாவது ஒரு புகைப்படத்திற்கும் ஓவியத்திற்கும் வேறுபாடு என்னவென்றால் இருக்கின்ற உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது புகைப்படம். எப்படித்தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும் இல்லாத ஒன்றைப் புகைப்படத்திலே கொண்டுவரமுடியாது. அது ஒளிநிழல் சார்ந்து கூட்டமைவு சார்ந்த எப்படி எடுத்தாலும் ஒரு அளவோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் ஒரு ஓவியம் என்பது. அதற்கு இருக்கும் தளம் என்பது, இன்னொரு வகையான விரிந்து பரந்து செல்கின்ற ஒரு தளமாக இருக்கின்றது. அங்கேதான் ஒரு படைப்பாளனாக நான் பல்வேறு விடயங்களை உள்வாங்கிக் கொள்கிறேன். அதை அப்படியே என்ன சொல்ல வருகின்றோமோ அதற்குத் தகுந்த மாதிரி வெளிப்படுத்துகிறேன். அப்படித்தான். நான் திலீபனுடைய உண்ணாவிரத நிகழ்வையும், பன்னிரண்டு நாள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து இறந்ததையும் ஒவ்வொரு நாளும் தமிழகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதாவது கண்ணால் அல்ல. ஒவ்வொரு நாளும் செய்திகளில் வரும் நிகழ்வுகள் எம்மை உறங்கவிடாது செய்து கொண்டிருந்தன. ஒவ்வொரு நாளும் இந்நிகழ்வு மிகப்பெரிய வேதனையைத் தந்தது. யாராவது தலையிட்டு அவ்வுண்ணாவிரதத்தைத் தடுத்து நிறுத்துவார்களா என நான் ஏங்கி இருக்கிறேன். இவரது கோரிக்கைகளை நிறைவேற்றி அவ்வுண்ணாவிரதத்தைத் தடுத்து நிறுத்துவார்கள் என நான் ஒவ்வொரு நாளும் நினைதுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் 12 ஆவது நாள் மிகப்பெரிய சோகம் நிகழ்ந்தது. அவர் உயர் நீத்தார். நீண்ட நாட்களாக என் மனதை அழுத்திக் கொண்டிருந்த நிகழ்வு அந்த நிகழ்வு. உடனடியாக அவ் ஓவியத்தை நான் செய்யவில்லை. பல்வேறு ஓவியங்களை நான் படைத்தேன். பல்வேறு வகையான நிகழ்வுகளை இடையிடையே நான் படைத்தேன். திலீபன் உண்ணாவிரதமிருந்ததை நான் செய்யவில்லை. எனக்கு அவ்வளவு வலி இருந்தும் நான் உடனடியாக அதை வரையவில்லை. இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டு இருக்கையிலே நான் இந்த இருபதாம் நூற்றாண்டை, ஓவியத்திலே மீள் பார்வை பார்க்க வேண்டும் என்று எண்ணி, ஓவியத்திலே வரலாற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணி, அந்தத் திலீபனுடைய ஓவியத்தையும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையிலே திலீபன் ஓவியத்தையும் நான் படைத்தேன். படைத்தேன் என்றால் என் மனதில் நீண்ட நாட்கள் குமுறிக் கொண்டிருந்த உணர்வு ஒன்று வெளிப்பட்டது.

பல்வேறு ஓவியங்கள் இன்றைக்கு வரையப்படாத ஓவியங்கள் என்னிலே அழுத்திக் கொண்டிருக்கின்றது. அப்படித்தான் 87இல் இருந்து அதாவது திலீபன் உண்ணாவிரதம் இருந்த ஆண்டிலிருந்து இவ்வுணர்வு என்னை அழுத்தி அழுத்தி ஒவ்வொரு நிகழ்வுகளைச் செய்யும் போதும் அதைப்பற்றி தரவுகளை நான் எடுப்பேன். ஆனால் திலீபன் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி நான் எந்தத் தகவல்களும் எடுக்கவில்லை. காரணம் இவ்ஈழப்போராட்டத்தைப் பற்றி எந்தச் செய்தியும் எனக்கு அத்துப்படி. நான் எல்லா வகையான தகவல்களையும் மனதிலே வைத் திருப்பேன். அது ஆண்டுகளாக இருந்தாலும் சரி, நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் மனதிலே அழுத்தி வைத்திருக்கும் நிலைதான் இன்னும் இருக்கிறது. அப்படி அந்தச் சிக்கலிலே எனக்கு நீண்டதொரு அனுபவம் இருப்பதினால் இந்த ஓவியத்தை எந்த ஒரு தகவல்களையும் எடுக்காமல் அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அந்தக் கித்தானுக்கு எதிரே அமர்ந்துகொண்டு வழக்கமாக நான் ஓர் ஓவியத்தைப் படைக்கின்றபோது நான் அதற்குத் தேவையான முன்தயாரிப்பு ஓவியங்கள் என்று பல்வேறு ஓவியங்களை வரைவது வழக்கம். ஒரு இருபது அல்லது முப்பது முன் தயாரிப்பு ஓவியங்களை வரைவேன். ஆனால் திலீபன் ஓவியத்திற்கு அப்படியும் நான் வரையவில்லை. நேரடியாகக் கித்தானோடு என்னுடைய தூரிகை உறவு கொண்டது. அப்போதுதான் நான் அந்த ஓவியத்தை முடித்து என்னுடைய ஆழ்மனதில் இருந்தவைகளையெல்லாம் ஒவ்வொரு துளியும் அந்த உயிர் பிரிகின்ற அந்தத் தருணத்தைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்தேன். அந்தக் கடைசி நிமிடத்தில் அதாவது அந்த உயிர் பிரிந்தபோது என்னவலியை இங்கு நேரடியாகப் பார்த்த மக்கள் பெற்றோர்களோ அந்த உணர்வை அவ்ஓவியத்திலே கொண்டுவர வேண்டும் என நான் நினைத்தேன். அதற்கு முன் நான் திலீபன் ஓவியத்தை மிகவும் எளிமையான ஒரு படைப்பாக ஆனால் அது எந்தச் சிக்கல்களும் இல்லாத ஒரு எளிமையாக வெளிப்படுத்தப்பட்ட, அந்த உயிர் பிரிந்த நிலையிலும் அதில் ஓர் உணர்வு வெளிப்படுத்தக்கூடிய ஓர் ஓவியமாக இருந்தது. இன்று அனைத்துத் தரப்பு மக்களாலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஓவியமாகவும் இருக்கின்றது.

அடுத்தது ஒரு போராளியினுடைய ஓவியம். வழமையான போராளிகளினுடைய ஓவியங்களிலே இருக்கின்ற குறியீடுகள், சீருடைகள், இராணுவச்சப்பாத்துகள், துப்பாக்கிகள் இவை எவையுமே இல்லாமல் ஒரு மனிதன் இறந்திருக்கின்றதையும் அவனுடைய உடையில் மிகக் குறைந்தளவு உடை இருக்கின்றன. பக்கத்தில் இரண்டு செருப்புகள் இருக்கின்றன. இதனை எவ்வாறு போராளி என்று குறிப்பிடுகின்றீர்கள்?
அதாவது போராளி என்பதற்கான ஒரு பொதுக்குறியீடு அந்த ஓவியம். ஒரு போராளி என்பவனுக்குச் சீருடை அவசியம் என்று நான் கருதவில்லை. ஒரு போராளி என்பவனுக்குத் துப்பாக்கி தேவை என்று நான் கருதவில்லை. சீருடை இல்லாமலும் துப்பாக்கி இல்லாமலும் ஒருவன் நிச்சயமாகப் போராளியாய் இருந்திருக்கலாம். என நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில்தான் அவ் ஓவியத்தை அப்படிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரையிலே பொதுவாக ஓவியங்களிலே உடல்மொழியும் பேசும், என்னுடைய ஓவியங்களிலே அதிகமாக நிறங்கள் எப்படிப் பேசுகிறதோ வடிவங்கள் எப்படிப் பேசுகிறதோ அதேபோல் உடல் மொழியும் பேசும். அவ் உடல் மொழிக்கும் பல்வேறு தன்மைகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் இன்றைக்கு என் ஓவியங்களிலே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் அந்தப் போராளி இறந்துவிட்டால் இன்னொரு போராளி அப்பயணத்தைத் தொடர்வான். இதுதான் ஒரு போராட்டத்தினுடைய உண்மைத்தன்மையாக இருக்கிறது.

அந்த அடிப்படையில்தான் அந்தச் செருப்பை, அந்த மிதியடிகளை, ஒரு தொடரும் பயணத்தின் குறியீடாக அச்செருப்பை அங்கு வைத்தேன். அப்பொழுது அந்தக் காலத்தில் இவ் ஓவியங்களைக் கண்காட்சி வைக்கின்ற நிலையிலே பார்வையாளர்களிடையே மிகப் பெரியதொரு வரவேற்பைப் பெற்றதாக அமைகிறது. அகில இந்திய அளவிலே பேசப்பட்ட ஓவியம் அது. அப்போது பல்வேறு இதழ்களும் அவ்ஓவியத்தை அவ்ஓவியம் வெளிப்படுத்துகின்ற பொருளை, செய்திகளை, கூறுகளை ஆராய்ந்து இருக்கின்றன. பல்வேறு தரப்புப் பத்திரிகைகளும் அவ்வோவியத்தை வெளியிட்டு இருக்கின்றன. அப்படித்தான் கரு இருப்பதாக நான் நினைக்கிறேன். இன்றைக்கு இந்த மண்ணிலே நின்று கொண்டு இவ்வோவியத்தைப் பார்ப்பதற்கும் போராட்டம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இவ் ஓவியத்தைப் பார்ப்பதற்கும் எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக அவ்வோவியத்தை நிறைய பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது சாதாரணமாக தமிழகத்திலும் சரி, எங்களுடைய இடத்திலும் சரி, புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி, உங்களுடைய ஓவியங்களை அதாவது நவீன ஓவியங்கள் தொடர்பான பரீட்சயம் இல்லாதவர்கள் கூட விரும்பிப் பார்ப்பதற்கான அடிப்படைக்கூறாக என்ன இருக்கின்றது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
நிச்சயமாக நான் பயன்படுத்துகின்ற உடற்கூறு மொழி என்றுதான் நான் கருதுகிறேன். நான் நவீனத்துவ வெளிப்பாடுகளை செய்யத்தொடங்கிய உடனேயே உருவம் சார்ந்துதான் பேசவேண்டும் என முடிவு செய்து கொண்டேன். உருவம் சார்ந்துதான் பேசவேண்டும் என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அதாவது நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நானும் விவசாய நிலங்களிலே வேலை செய்திருக்கிறேன். விவசாயிகளோடு தொழிலாளிகளோடு தொழிலாளியாக நின்று வயல்களிலே வேலை செய்திருக்கின்றேன். அவர்களோடு இருக்கின்ற அந்த நேரத்திலே அவர்களுடைய அந்த உடற்கூறு, உடற்கட்டுகள் என்னை மிகவும் வசீகரித்தது. அவைகளை நான் உள்வாங்கிக் கொண்டேன். ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு வழக்கமாக எல்லோரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குப் பிறகுதான் நவீன ஓவியத்தைத் தொடங்குவார்கள். ஆனால் நான் நவீன ஓவியங்களைச் செய்து கொண்டிருந்தேன். உள்ளது உள்ளபடியே இருக்கின்ற அந்த மாதிரிகளைப் பார்த்து வரைந்து கொண்டிருந்த அந்த நிலையிலேயே நவீன ஓவியத்தையும் படைக்கத் தொடங்கிவிட்டேன். அதற்குக் காரணம் மிக முக்கியமானதாக இருந்தது. நான் கல்லூரியில் மரபு சார்ந்தும் கல்லூரியில் பெறுகின்ற அறிவை வைத்தும் வெளியில் அதிகமாகப் பெறுகின்ற அனுபவங்களும் நான் செய்கின்ற ஓவியங்களும் என்னை நவீன சிந்தனை நோக்கி நகர்த்தியது. அந்த வேளையிலே நான் என்னுடைய விவசாய நிலங்களில் வேலை செய்கின்ற அந்த மனிதர்களைப் பார்த்து நிறைய வரைய ஆரம்பித்தேன். அப்படி வரைய ஆரம்பித்த நிலையிலே ஒரு படைப்பாக்கத்தைப் படைக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது அந்த உடற்கட்டுகள் அவ்வோவியத்தில் மண்சார்ந்த ஒன்றாக இருந்தது. உலக அளவில் இவ்வோவியம் காட்சிப் படுத்தப்படுகின்றபோது, பல்வேறு தரப்பு மக்களும் அதைப்பார்த்துவிட்டு விவசாயம் சார்ந்த தன்மை இருப்பதாக உணர்கிறார்கள். அந்தளவிற்கு அவ்வுடற்கூறுகள் பேசுகிறது.

பலரும் அதை உள்வாங்கிக் கொள்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் அவ்வோவியங்களை நான் படைக்கின்றபொழுது இந்தத் தன்மையோடுதான் தொடங்கினேன். பிறகுதான், அது மண்சார்ந்த விடயம் என நான் நினைத்தேன். அவற்றை வளர்த்துக் கொண்டேன். அதேபோல் நிறங்களைப் பயன்படுத்தும்போது, பழுப்பு நிற வர்ணங்களை நான் பயன்படுத்துகின்றேன். அதுவும் நம்முடைய நிறம். அந்நிய நிறம் அல்ல பார்வையாளர்களும் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். பததிரிகைகளிலே வருகின்ற கட்டுரைகளில் கூட அதைப்பற்றி எழுதி இருக்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் இவ்வோவியங்களை நான் படைக்கின்ற பொழுது இதில் கவனமாக இருப்பேன். இந்த உடற்கட்டு நிறங்கள் போன்றவற்றிலே கவனம் செலுத்துவேன். அதிக கவனம் செலுத்தி அது நவீன ஓவியமாக இருந்தாலும் சரி, அல்லது வெளிப்படையாக இருந்தாலும் சரி, நம்முடைய தமிழ் அடையாளத்தோடு அந்த ஓவியம் இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து விரும்புகிறேன்.

உங்களுடைய ஓவியங்களில் அல்லது உங்களுடைய இரசனையில் யாருடைய பாதிப்பாவது இருக்கின்றதா?
எனக்கு இந்த நவீன ஓவியத்தைச் செய்யத் தொடங்கிய காலத்திலே எனக்கு யாருடைய பாதிப்பும் இல்லை. பாதிப்பு என்று சொன்னால் என்னுடைய மக்கள்தான் என்னுடைய நிலத்திலே வேலை செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளிதான் எனக்குப் பாதிப்பு. ஏனென்றால் அதுதான் எனக்கு மிகப்பெரிய உள் உணர்வைத் தோற்றுவித்தது. அவர்களிடம் அந்த உடற்கூறுகளைப் பெற்று அதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது. அவர்களையேதான் சில நேரங்களில் மாதிரிகளாக வைத்து நான் ஓவியங்களாக வரைந்து அதை அப்படியே என் ஓவியங்களிலே பயன்படுத்தி இருக்கிறேன். அதன் பிறகுதான் நான் பிக்காசோவை அதிகமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இந்த உருவச் சிதைப்பு என்பதைச் சில ஓவியங்களில் என்னை அறியாமலே பயன்படுத்தி வந்துள்ளேன் என்பது தெரிந்தது. என் ஓவியங்களில் பிக்காசோவின் வெளிப்பாடுகள் இருப்பதாகச் சொன்னதின் அடிப்படையில் நான் நிறைய ஓவியங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அந்தப் பிக்காசோவினுடைய தன்மைகள் எனக்கு அவருடைய ஓவியங்களைப் பார்க்காத நிலையிலேயே அத்தன்மையோடு செய்திருக்கிறேன் என்று எனக்குப் புரிந்தது. பிறகு அவரது ஓவியங்களைப் பார்த்த பிறகு முறையாக இன்னும் சில செழுமைகளைச் செய்வதற்கு எனக்கு அது பயன்பட்டது.

ஓவியம் தொடர்பாக, தமிழ் சார்ந்த ஓவியம் தொடர்பாக இளைய தலைமுறையினருக்கு ஈழத் தமிழர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
ஓவியம் நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புடையது. இலக்கியம் எப்படி நம்மோடு நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புடையதோ போராட்டத்தோடு தொடர்புடையதோ அதேபோல் ஓவியமும் தொடர்புடையதாகக் கருத வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒருகவிதை ஒரு சிறுகதை அல்லது நாவல் ஒரு மொழியைக் கற்று அறிந்த பிறகுதான் வெளிப்படும். ஆனால் ஓவியம் என்பது குழந்தையாக இருக்கும்போதே வெளிப்படும் ஒரு வடிவம். குழந்தை பேசுகின்ற மொழியே இவ்வோவிய மொழிதான்.

அது வெளிப்படுத்துகின்ற மொழி சுதந்திரமாக எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படுத்துகின்ற ஒன்றாக, ஓவியம்தான் இருக்கின்றது. காலப்போக்கில் வளர்ந்த வெவ்வேறு துறைக்குப் போகின்றபோது அதை மறந்து விடுகிறார்கள். அல்லது அதைத் தடுத்து விடுகிறார்கள். ஆனால் ஒரு குழந்தைக்கு முதல் மொழியாக ஓவியம் இருக்கிறது. தமிழ் என்றல்ல; அனைத்து இனமொழி மக்களுக்கும் அப்படித்தான். ஆக வாழ்க்கையினுடைய தொடக்க காலத்திலேயே இவ்வோவியம் எமக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. அப்படி இருக்கின்ற அந்த ஓவியத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்த ஓவியம் சார்ந்து நிறையச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நிறையப் படைப்பாளர்களை உருவாக்கக்கூடிய ஒரு மண்ணாக ஈழம் இருக்கிறது. முறையான ஒரு பயிற்சியும் முறையான வழிகாட்டுதலும் இம்மண்ணிற்கு வழங்கப்பட்டால் நிறையப் படைப்பாளர்களை உருவாக்க முடியும் என நான் நம்புகிறேன். அந்த ஒரு தன்மையை நான் உணர முடிகிறது. இந்த மண்ணிலே வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை என்ற ஏக்கம் இந்த மாணவர்களிடம் இருக்கிறது. மக்களிடம் இருக்கிறது. இவ்வோவியங்களை அவர்கள் பார்த்தபின்பு எங்களிலே யாருமே இல்லையே என்கிற ஓர் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நிச்சயமாக இதைவிட வலிமையாக வெளிப்படுத்தக் கூடியவர்கள் இம்மண்ணிலேதான் தோன்றமுடியும். காரணம் மிகப்பெரிய வலியைச் சுமப்பவர்கள் இம்மண்ணிலேதான் இருக்கிறார்கள். ஆக, அந்த ஒரு வழிகாட்டுதலைக் கொடுப்பதற்கு நாம் இன்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.

ஓவியம் உட்பட, படைப்பாளிகளின் படைப்புகளிற்கான அங்கீகாரம் என்பது ஒரு முக்கியச் சிக்கலாக இருக்கிறது. அங்கீகாரம் இல்லாமல் போகின்றபோது படைப்பாளி சோர்ந்து போகின்ற அதாவது அடுத்தகட்ட படைப்பை நோக்கி நகர்வது என்பது சிக்கலான விடயமாக இருக்கின்றது. இந்த வகையில் அங்கீகாரம் என்பது எந்த வகையில் உங்களை அழுத்திச் செல்ல உதவியது, நீங்கள் அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?
அங்கீகாரம் என்பதை நாம் இரண்டு வகையாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது புரிந்து கொள்ளலாம். என்னுடைய ஆரம்ப காலத்திலே (எனது 19 ஆவது வயதிலே) எனக்குத் தேசிய விருது கிடைத்தது. அதோடு தமிழ்நாடு மாநில விருதும் கிடைத்தது. அதே ஆண்டில் தேசிய அளவில் இன்னொரு விருதும் எனக்குக் கிடைத்தது. அதைப் பெரிய அங்கீகாரமாக நான் நினைத்தேன். அடுத்த சில நாட்களிலேயே அந்த ஓவியங்கள் செய்தித்தாள்களில் இந்திய அளவில் பிரசுரமாயின. அதைப்பற்றிக் கட்டுரைகள் வெளிவந்தன. அதைப்பற்றிக் கடிதங்கள் நூற்றுக்கணக்கில் எனக்கு வந்தன.

நான் விருதிற்காகப் பெற்றத் தொகையை விட அந்தக் கடிதங்களை அதிகமாக மதித்தேன். அந்தக் கடிதங்களை எழுதியவர்கள் சாதாரண நிலையில் இருக்கக்கூடிய மனிதர்கள் முதல் மாணவர்கள் பெண்கள் முதல் தொழிலதிபர்களாக இருக்கக் கூடியவர்கள் வரை, அக்கடிதங்களை எழுதினார்கள். உண்மையிலேயே நான் விருது கிடைத்த பொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட இவ்வோவியத்தைப் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் பார்த்த பிறகு கிடைத்த ஒரு பாராட்டு அல்லது வரவேற்பு என்பதை இட்டுத்தான் நான் பன்மடங்கு மகிழ்ந்தேன். ஏனென்றால் சரியாக அந்த ஓவியத்தை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். விருது கிடைத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு ஈழத்து நிகழ்வுகளை வைத்துப் படைத்த ஓவியத்தைக் காட்சிப் போட்டிக்காக அனுப்பினேன். அனுப்பிய பிறகு முதல் ஆண்டில் எந்த இடத்தில் எனக்கு மாநில விருது வழங்கினார்களோ அதே இடத்தில் அவ்வோவியத்தைப் புறக்கணித்தார்கள். காரணம் அந்த நடுவர் குழுவில் இருந்த மூன்று பேரில் இருவர் இந்தச் சிந்தனைக்கு எதிரானவர்கள். ஒருவர் இந்தச் சிந்தனையை ஏற்றுக்கொள்பவர். அவர் இவ்வோவியத்திற்கும் இந்த ஆண்டு விருது தரலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இது மிகவும் ஆக்ரோசமாக இருக்கிறது என்று தடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு சென்ற ஆண்டு விருது பெற்ற ஓவியர் இவர்; இவருடைய ஓவியத்தைப் புறக்கணிக்க முடியாது. இவ்வோவியத்தைக் காட்சிக்காவது, வைக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டனர். ஏனென்றால் அவ்வோவியத்தைக் காட்சிப்படுத்தினால் விருது பெற்ற ஓவியத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படும் என்ற பயம் என்று நான் பல வருடங்கள் கழித்து அந்த நடுவராக இருந்தவர் மூலம் அறிந்து கொண்டேன்.

இதனுடைய சிந்தனைகளை, சில செய்திகளை அடுத்த ஆண்டு நான் நுகர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. நூற்றிற்கு மேற்பட்ட தனிநபர் கண்காட்சிகளை நடத்தி இருக்கிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் இக்கண்காட்சிகளைப் பார்த்திருக்கின்றார்கள். மிகப்பெரிய அளவிலே மக்கள் இவ்வோவியங்களைப் பார்த்தார்கள். தமது கருத்துக்களைப் பதிவாகியுள்ளனர். மக்கள் அவ்வோவியங்களைப் புரிந்து கொள்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறார்கள் என்கின்றபொழுது இன்றைக்கு நான் ஒரு தெளிந்த முடிவிற்கு வந்துள்ளேன். இன்றைக்கு அல்ல பல வருடங்களுக்கு முன்பே நான் அந்த முடிவிற்கு வந்துவிட்டேன். அதாவது 1990 ஆம் ஆண்டே நான் அந்த முடிவிற்கு வந்துவிட்டேன். மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து பலரும் கூடுகின்ற அந்த இடங்களிலே காட்சிப்படுத்துகின்றோம். அப்படிக் காட்சிப்படுத்துகின்ற பொழுது மக்களிடத்திலே இருந்து அங்கீகாரம் கிடைக்கின்றது.