ஓவியர் புகழேந்தியுடன் ஓர் உரையாடல்

யமுனா ராசேந்திரன்


ஐ.பி.சி. வானொலி, லண்டன், ஆக.2002

யமுனா: வணக்கம் புகழேந்தி!

புகழ்:
வணக்கம் யமுனா அவர்களே!

யமுனா:
இந்த நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் தொடர்ந்து ஓவியத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற ஒரு கலைஞர். தமிழகத்திலே அறியப்பட்ட ஓவியர்களான ஆதிமூலம், வீரசந்தானம், ட்ராஸ்கி மருது போன்ற அதிகம் தெரியவரப்பெற்ற ஓவியர்களுள் ஒருவராக இருக்கிறீர்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நீங்கள் அடுத்த தலைமுறையைச் சார்ந்த ஓவியராகவும் இருக்கிறீர்கள். உங்களுடைய ஓவியங்களில் முக்கியத்துவம் என்று நான் காண்பது அதனுடைய சமூகப் பரிமாணம். பெரும்பாலும் ஓவியர்கள், எங்களுடைய மரபு சார்ந்த ஓவியங்கள், அரண்மனைக்குள் இருக்கிற இன்னும், Elite உயர்குடி ஓவியர்களுடைய ஓவியங்கள், மாளிகைகளின் சுவர்களை அலங்காரப்படுத்த என்று இருக்கின்ற பொழுது உங்களுடைய ஓவியங்கள் அநேகமாக மக்களிடம் சென்று சேருகின்றன.

உங்களுடைய ஓவியப் பாணியும் சரி, உங்களுடைய நடவடிக்கைகளும் சரி அந்த வகையில்தான் அமைந்திருக் கின்றன. இதுவரையிலும் நீங்கள், நானறிந்தவகையில் நான்கு விதமான ஓவியத் தொகுதிகளை நான்கு விதமான கருப்பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குத் தகுந்த மாதிரி ஓவியங்களைத் தீட்டியிருக்கிறீர்கள். அந்த ஓவியங்களைக் கண்காட்சிகளாகவும் வைத்திருக்கிறீர் கள். அப்படிக் கால வரிசைப்படி நாங்கள் எடுத்துக் கொண்டால் முதலாவதாக தாமரைச் செல்விப் பதிப்பகம் பதிப்பித்த 'எரியும் வண்ணங்கள்' என்று நான் சொல்லலாம். அதற்கு அடுத்ததாக இப்போது வந்திருக்கிற 'உறங்கா நிறங்கள்', 'திசை முகம்' என்பது. ஆனால் 'திசைமுகம்' என்பது காலவரிசைப்படி நான்காவதாக வருகிறது. உறங்கா நிறங்கள் என்பது இரண்டாவதாக வருகிறது. தமிழ் முழக்கம் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 'சிதைந்த கூடு' என்ற குஜராத் பூகம்பத்தை முன்வைத்து நீங்கள் தீட்டிய ஓவியங்கள் வருகிறது. அதற்கு அப்பால் இறுதியாக இப்போது நீங்கள் மிகச் சமீபத்திலே செய்திருக்கிற தந்தை பெரியார் அவர்களுடைய பன்முகம் emotion-ஐ வெளிப்படுத்துகிற மாதிரியான அந்தத் 'திசைமுகம்' வந்திருக்கிறது.

ஆகவே நாங்கள் இந்தக் கால வரிசைப்படி இந்த ஓவியத் தொகுதிகள் ஒவ்வொன்றும் எந்தச் சமூகச் சூழலில் எந்த உந்துதலில் உங்களுக்குத் தோன்றின? அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் எந்த ஓவியப்பாணியை நீங்கள் கடைப்பிடித்தீர்கள்? என்கிற மாதிரி இந்த உரையாடலை நாங்கள் அமைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 'எரியும் வண்ணங்கள்' ஓவியங்கள் குறிப்பாக ஈழத்தமிழர்களுடைய அவலங்களை முன்வைத்துச் செய்த ஓவியங்கள். அநேகமாக உங்களுடைய சமகாலத்தில், அல்லது அதற்குக் கொஞ்சம் முன்னதாக 'முகில்களின் மீது நெருப்பு' என்ற வீரசந்தானத்தினுடைய தொகுப்பும் கூட வெளிவந்தது. இந்த இரண்டு தொகுப்புகளுக்கும் நிறைய இணக்கங்கள் இருக்கிறது. ஆனால் பாணிகள் என்ற அளவில் நிறைய வித்தியாசம் இருப்பதையும் என்னால் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. ஆகவே இந்த 'எரியும் வண்ணங்கள்' தொகுப்பு எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் எந்த உந்துதலில் உங்களுக்கு வந்தது. இரண்டாவதாக அதில் நீங்கள் கைகொண்ட பாணி என்பது ஒரு வகையில் உருவச் சிதைப்புப் பாணி, பிக்காசோவினுடைய குவர்னிக்கா ஓவியத்தில் பாவிக்கப்படுகிற அந்தச் சிதைப்புப் பாணியை நீங்கள் கையாண்டிருந்தீர் கள். இந்த ஓவியப் பாணியில் தென் அமெரிக்க ஓவியப் பாணியினுடைய பாதிப்பும், சீன ஓவியப் பாணியினுடைய பாதிப்பும் இருப்பதை நாங்கள் அந்த உருவச் சிதைப்பு என்ற அளவில் பார்க்க முடியும். ஆகவே, இந்த வகையில் எந்தப் பின்னணியில் எந்த உத்வேகத்தில் தோன்றியது. பிறகு  ஏன் அந்தக் குறிப்பிட்ட ஓவியப் பாணியை நீங்கள் இந்த விசயத்தைச் சித்திரிக்கத் தேர்ந்தெடுத்தீர் கள்.

புகழ்:
'எரியும் வண்ணங்கள்' என்ற தொகுப்பு 1984லிருந்து 1994 வரை செய்யப்பட்ட ஓவியங்களின் தொகுப்பு. இதிலிருக்கின்ற ஓவியங்கள் அந்தப் பத்தாண்டுகளில் வெவ்வேறு காலங்களில் செய்யப்பட்டவை. பல்வேறு இடங்களில் கண்காட்சியாக வைத்து, 94இல் நூலாகத் தொகுக்கப்பட்டது 'எரியும் வண்ணங்கள்' என்ற தலைப்பில். இதற்குத் தலைப்பு வைத்து ஓவியங்கள் செய்யவில்லை. இதில் முக்கியமான விசயம் என்னன்னா நூலாக வரும்போது தான் தலைப்பு 'எரியும் வண்ணங்கள்' என்று சூ¢¢டினோம்.

யமுனா:
தலைப்பு யார் சூட்டினார்கள்?

புகழ்:
கவிஞர் பழநிபாரதிதான் இதற்குத் தலைப்பு வைத்தது 'எரியும் வண்ணங்கள்' என்று. அதற்கு முன்பு புகழேந்தியின் ஓவியங்கள் என்றுதான் பல்வேறு இடங்களில் கண்காட்சியாக வைக்கப்பட்டது.

ஏற்கெனவே பல்வேறு பேட்டிகளில் நிறையவே பேசியிருக்கிறேன். குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு இயற்கைக் காட்சிகளும், கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் அங்கிருக்கக் கூடிய மரங்கள், செடிகள், கொடிகள் போன்ற இயற்கை சார்ந்த விசயங்கள் என்னை ரொம்ப ரொம்ப பாதிச்சிருக்கு. அதைத்தான் நான் ஓவியமாகச் செய்திருக்கிறேன். பள்ளி நாட்களில் அதுதான் எனக்கு ரொம்பத் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1983 ஆம் ஆண்டு நான் கல்லூரியில் என்னை மாணவனாக ஆக்கிக்கொள்கிறேன். அந்த நேரத்தில் ஈழத்தில் மிகப்பெரிய இனக்கலவரம் நடைபெற்று அகதிகளாக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் தமிழகம் நோக்கி வருகிறார்கள். பல்வேறு போராளிக்குழுக்கள் அங்கு வந்து இயங்குகிற சூழல் இருந்தது. அதற்கு முன்பே வெலிக்கடை சிறையிலிருந்து குட்டிமணி, தங்கத்துரை கண்கள் பிடுங்கப்பட்டு சிதைக்கப்பட்ட நிகழ்வுகள் பல்வேறு வகைக் கொலைகள் போன்ற செய்திகளைப் பத்திரிகை வாயிலாக அறிந்து அந்த நேரத்தில் ஒரு தமிழின உணர்வுள்ள ஒருவனாகத்தான் நான் பார்த்தேன். ஆனால் 83இல் நான் கல்லூரியில் இணையும்போது ஓர் ஓவியனாக, கலைஞனாக, சிந்தனையாளனாக, இந்த நிகழ்வுகளையெல்லாம் படைப்புகளாக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இந்த ஓவியத்தை ஒரு வலிமைமிக்க ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்கிற எண்ணமும், ஏற்பட்டது. அதனுடைய ஆற்றலும், ஆழமும் அப்போது எனக்குத் தெரியாது.

யமுனா:
இந்தத் தொகுப்பில் என்னென்ன ஓவியங்கள் இடம்பெற்றன.

புகழ்:
ஈழத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒட்டுமொத்தச் சிதைவுகள், கொலைகள், அந்தக் காலகட்டங்களில் உலகளவில் நடந்த மனிதகுலத்திற்கு எதிரான செயல்கள் அனைத்தையுமே எதிர்க்க ஆரம்பித்தேன். தமிழக அளவில் இந்திய அளவில் நடைபெற்ற மதரீதியான சாதிரீதியான ஒடுக்குமுறைகள் வன்முறைகள், கொலைகள், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அனைத்துமே இருக்கிறது.

யமுனா:
சரிங்க, ஒரு அனுபவத்தை எதிர்கொண்டீர்கள். அன்று நடக்கிற, தமிழனாக இருக்கிறேன் என்ற அளவில் என்னுடைய சக மனிதர்களுடைய பேரழிவைப் பற்றி நினைத்தீர்கள். அநேகமாக இந்தப் பேரழிவு என்பது மானுடம் தழுவிய ஒரு பேரழிவுதான். இந்த பேரழிவு சம்பந்தமான இதே உணர்வுகளோடு வேறு வேறு காலகட்டங்களில் வேறு வேறு ஓவியங்கள் சித்திரித்திருக்கிறார்கள். கோயா சித்திரித்து இருக்கிறார். அதேமாதிரி பிக்காசோ சித்திரித்திருக்கிறார். அப்போ உங்களுடைய பாணி என்பது இந்த மரபுகளிலிருந்து ஏதேனும் எடுக்கப்பட்டதா?

புகழ்:
முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் நான் இவ்வோயியங்களைச் செய்யத் துவங்குகிற காலக்கட்டத்தில் கோயாவை எனக்குத் தெரியாது. பிக்காசோவை எனக்குத் தெரியாது. அந்தக் காலக்கட்டத்தில் நான் வரலாறும் படிக்கவில்லை. எனக்கு எளிதாக வெளிப்படுத்தக்கூடிய பாணின்னு ஒன்று தெரிந்தது. Figurative உருவங்களை அடிப்படையாக வைத்துச் செய்வது. அதை உள்ளதை உள்ளபடியே காட்டாம கொஞ்சம் உணர்வு ரீதியாகக் காட்டவேண்டும் அப்படிங்கிற ஓர் உந்துதல் மட்டும் எனக்குக் கிடைத்தது.

யமுனா:
ஆனால் அதில் ஒரு 'ரிதம்' ஒன்று இருக்குந்தானே. அதில் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. என்னன்னா உங்களுடைய ஓவியங்கள் பெரும்பாலும் வேறுவேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்கள். ஆனால் அதில் எல்லாவற்றிலுமே ஓவியத்தை 'ஸ்பிலிட்' பண்ணி இருக்கிறீர்கள். அவயங்களை ஸ்பிலிட் பண்ணியது மாதிரி அந்த ஃபிரேமையே ஸ்பிலிட் பண்ணியிருக்கிறீர்கள். அப்ப என்னன்னு கான்சியஸ்சாக பிரக்ஞை பூர்வமாக அந்த ஓவியபாணியைக் கடைபிடித்தீர்கள்.

புகழ்:
அதாவது, என்னுடைய ஓவியங்களைப் பார்த்த பிறகு சிலர் பிக்காசோ ஓவியங்கள் போல் இருக்கிறது. பிக்காசோவிடமிருந்து influence ஆகியிருக்கிறீர்கள் என்று சொல்லும் போதுதான் பிக்காசோ ஓவியங்களை அதிகமாகப் பார்க்க ஆரம்பித்தேன். பிக்காசோ உருவச் சிதைப்பு என்பதை உருவத்தில் மட்டும்தான் செய்தார். ஆனால் நான் என்ன செய்தேன் என்றால் ஒட்டுமொத்த காம்போசிசனையே சிதைத்து நமக்கு இருக்கிற இடத்தை சப்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரி ஸ்பிலிட் பண்ணி எந்த ஒரு சிதைவோடு கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு ஆழமும், அழுத்தமும் கிடைக்கும் என்று நினைத்தேன். அதனாலதான் அந்த ஓவியங்கள் இருக்கக்கூடிய சப்ஜக்ட் அழுத்தத்தைப் பெற்றது. ஆழதைப் பெற்றது. அதனால்தான் அதை நான் கடைபிடித்தேன்.

யமுனா:
உங்களுடைய அடுத்த காலகட்டம் வருவோம். 'உறங்கா நிறங்கள்' தொகுதியினுடைய காலகட்டம். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி எரியும் வண்ணங்கள் செய்தபோது, தலைப்பை அல்லது ஒரு கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டு அதற்காகச் செய்யவில்லை என்று சொன்னீர்கள். ஆனால் உறங்கா நிறங்களைப் பார்க்கும்போது மிக முக்கியமாக ஒரு 'டைம் பீரியட்' எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். குறிப்பாக ஒரு நூற்றாண்டு என்ற விசயத்தை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற இன்னொன்று. அந்த நூற்றாண்டிலே நடந்த மிகமுக்கியமான வரலாற்று நிகழ்வுகள். அது துயரங்களானாலும் சரி, மக்களுடைய எழுச்சியானாலும் சரி. இதை இணைத்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல. தனிநபர் ஆளுமைகள், புரட்சிகரத் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களையும்கூட இணைத்திருக்கிறீர்கள். அந்த வகையில் பார்க்கும்போது, இது வந்து ரொம்பத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட கருத்தாகத்தின் அடிப்படையிலே செய்யப்பட்ட, 'டைம் பிரேம்' எடுத்துச் செய்யப்பட்ட ஓர் ஓவியத் தொகுதியாக இருக்கிறது. இந்த ஓவியத் தொகுதியை வந்து நீங்கள் எந்தக் கால அளவுகோளில் செய்தீர்கள். இதில் பொதுவான அம்சங்கள் ஏதேனும் இருக்கவேண்டும் என்று நினைத்தீர்களா, உதாரணமாக நிறம் சம்பந்தமான விசயங்கள், ஏனென்றால் பழைய தொகுதியைப் பார்த்தோமென்றால், நீங்கள் சொன்னது மாதிரி முழு  பிரேமையும் சிதைக்கக் கூடிய ஒரு தன்மை ஒன்று எல்லா ஓவியங்களிலும் பார்க்கமுடியும். அதுமாதிரி இதுல கான்சப்ட் எடுத்துக்கிட்டீங்க. டைம் பீரியட் எடுத்துக்கிட்டீங்க. இதை இப்படித்தான் செய்யவேண்டும் என்று கான்சப்சுவலா வேலை செய்யத் தொடங்குறீங்க.

புகழ்:
என்னன்னா, எரியும் வண்ணங்களுக்குப் பிறகு எனக்கு இரண்டு மூன்றாண்டுகள் ஓர் இடைவெளி விழந்தது. அது எனக்கு ஒரு டிரான்சிஸன் பீரியட் என்று சொல்லலாம். அதாவது மாற்றம் குறித்த ஒரு காலகட்டமாக இருந்தது. நான் அதிகமாக ஓவியங்கள் பற்றி, நாம் போறபோக்கு, பற்றி அதிகமாகச் சிந்தித்திருக்கிறேன். அந்தக் காலகட்டங்களில் சிலபேர் வந்து இந்த மாதிரிப் போக்குகள் சரியான ஒன்றாக இருக்காது என்கிற விமர்சனங்கள் எல்லாம் வந்தது. ஆனா என்னை எந்த வகையிலும் பாதிக்கல. ஆனால் நான் அதிகமாக யோசித்தேன். நாம் சரியான வழியில போகிறோமா என்பது பற்றிப்  பார்க்கும்போது நிறைய ஓவியங்களை உலக அளவில் பார்க்க ஆரம்பிக்கிறேன். பல்வேறு ஓவியர்களுடைய ஓவியங்கள், வரலாறுகள் எல்லாம் படிக்க ஆரம்பிக்கிறேன். அப்போது, நாம் செல்கிற பாதையும், கொண்டிருக்கிற கொள்கையும் என்னுடைய ஓவிய வெளிப்பாடும் சரியான திசை நோக்கி போறதாக ஒரு நம்பிக்கைக்கு வருகிறேன். இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அந்த நேரத்தில்தான் இருபதாம் நூற்றாண்டு முடிந்து இருபத்தோறாம் நூற்றாண்டுக்குப் போற காலகட்டத்தில் ஒரு கலைஞனின் பார்வையில் உலகத்தை நம் கொள்கை வழி நின்று, சரியாகக் காட்ட வேண்டும் என்று நினைத்தேன்.

இதுபற்றி நான் யோசிக்கும் பொழுதுதான், ஆரம்பத்திலிருந்து நடந்த பல்வேறு வகையான மாற்றங்கள், ஏற்றங்கள், கலை இலக்கியத் துறையாலும் சரி, அறிவியல்துறை, எல்லாத்துறை களிலும் இந்த உலகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுல மிக முக்கியமாக என்னன்னா மானுட விடுதலை என்பதை முக்கியமாக எடுத்துக்கிட்டேன். பல்வேறு நிலைகளிலும் பார்த்து எதை எதைச் செய்வது என்பதைத் தெரிவு செய்து ஒரு ஃபிரேமுக்குள்ள வச்சிக்கிட்டோம். எரியும் வண்ணங்களில் அப்படி நான் வச்சிக்கலை. உறங்கா நிறங்களில் அப்படி ஒன்று வருகிறது. குறுகிய காலகட்டம், ஒரு ஆறு ஏழு மாதங்களுக்குள் நான் முடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. ஏன்னா கண்காட்சியை நாங்க சனவரியில் வைக்கலாம் என்று திட்டமிட்டோம். கடைசியில் காலம் போதாததால் பிப்ரவரியில் வைத்தோம். இப்படிப் பல்வேறு நிலைகளில் அந்த ஓவியங்களைச் செய்ய வேண்டிவந்தது.

யமுனா:
இந்தத் திட்டமிடல் எவ்வாறு நிகழ்ந்தது உங்களுக்கு. ஏன்னா, இந்த ஓவியத் தொகுதியை நாம் பார்த்தோம்னா அதுல பல வரலாற்றுத் தலைவர்கள் பலபேரைச் சித்திரிக்கிறீர்கள், ஐன்ஸ்டீன் உள்பட, நெல்சன் மண்டேலா உட்பட, சேகுவேரா உட்படச் சித்திரிக்கிறீங்க. அதேமாதிரி வரலாற்றுச் சம்பவம், வியட்நாம் மைலாய்யுடைய கோரத்தைச் சித்தரிக்கிறீர்கள், வெண்மணியில் நடந்த அந்த 44 மக்கள் எரித்துக் கொல்லப்பட்ட கொடுமையைச் சித்தரிக்கிறீங்க. செம்மணி அப்ப பார்க்கும் போது அதுல வந்து, ஒன்று வரலாற்றுச் சம்பவங்கள் சித்தரிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட பாய்ச்சலை முன்னிறுத்திய ஐன்ஸ்டீன் சித்தரிக்கப்படுகிறார். தாகூர் சித்தரிக்கப்படுகிறார். ஆம்ஸ்ட்ராங் வருகிறார். இப்படி மூன்று ஸ்டிரீம்மாக அந்த ஓவியத் தொகுதி இருக்கிறது. அப்ப இதை கான்சப்சுவலாக முன்பே திட்டமிட்டீர்களா?

புகழ்:
ஆரம்பத்திலேயே, அமர்ந்து இதைப்பற்றி யோசித்தேன். நண்பர்களோடு விவாதித்தேன். நான் ஒரு படைப்பாளனாக நான் பார்க்கிற விசயங்கள் என்னன்னா, ஒட்டுமொத்த மானுட விடுதலைக் கான விசயமாக நான் பார்த்தேன். அப்போ இருபதாம் நூற்றாண்டைப் பற்றி எடுக்கும் போது, புரட்சிகள், புரட்சிக்கு வித்திட்ட நாயகர்கள், வரலாற்று நிகழ்வுகள், அதாவது ஈழத்தில் குட்டிமணி தங்கதுரை கண்கள்  சிதைக்கப்பட்டது. யாழ்நூலக எரிப்பு, யாழ் வெளியேற்றம். செம்மணிப் படுகொலை, மைலாய், சோமாலியா, இப்படிப் பல்வேறு நிலைகளிலும் நிகழ்வுகளைத் தெரிவு செய்துகொண்டு பிறகு அதை எந்தமாதிரியான  பிரேமில் வைக்கிறது. அதாவது கூட்டமைவு என்று சொல்லக்கூடிய கம்போசிசன் இருக்கல்ல. அதைப்பற்றியான ஒரு கருத்து ஏற்கெனவே இருந்தது. ஒவ்வொரு ஓவியத்திலேயும் ஒருவகையான, உதாரணத்திற்கு லெனின் ஓவியத்தை எடுத்துக் கொள்ளுங்களேன், லெனின் உருவ ஓவியம் இருக்கும். அதை ஒட்டியே அந்தக் காலத்தில் நடந்த புரட்சியினுடைய காட்சிகள் கொலாஜ் முறையில் வைத்திருப்பேன். சில நேரங்களில் ஓவியத்திற்குப் பின்னணியாக இருக்கக் கூடிய நிறங்களிலேயே அப்ஸ்ட்ராக்ட்டாக அந்தச் செய்தியை சொல்லியிருப்பேன். அது போர்ட்ரெய்ட் என்ற அளவோடு நிற்காமல் அதைமீறிய அந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி அந்த ஓவியத்தை நான் கொண்டுவந்தேன். அப்படி ஒரு நாலு அய்ந்து ஓவியங்கள் இருக்கிறது.

யமுனா:
நீங்க சொல்கிறபோதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. நான் பெர்லினுக்குப் போனபோது பெர்லின்ல காரல்மார்க்ஸ் சதுக்கம் இன்னும் இருக்கிறது. அந்தக் காரல் மார்க்ஸ் சதுக்கத்தில் மிகப்பெரிய நினைவுச் சின்னம் வைத்திருக்கிறாங்க. ஒரு கருங்கல்லில். அதுல நீங்க சொல்வது மாதிரி, லுமும்பா அதிலிருக்கிறார், சேகுவேரா அதில் இருக்கிறார். மூன்றாம் உலக நாடுகளில் நடந்த போராட்டங்கள் அதில் இருக்கிறது. அந்தப் போராட்டங்களில் கூட Figure - ரோட சேர்ந்து அந்த நிகழ்வுகள் இருக்குந்தானே, மக்கள் கலந்து கொண்ட பெரும் நிகழ்வுகள் அதெல்லாம் அதில் பொறித்து வைத்திருக்கிறார்கள். நீங்கள் சொன்னமாதிரி ஒரேசமயத்தில் அந்த வரலாற்று நாயகர்கள், பக்கத்திலேயே அந்த மக்கள் எழுச்சி போன்றவை சித்திரிக்கப்பட்டிருக்கிறது. உங்களுடைய ஓவியங்களிலேயும் நீங்கள் சொன்ன மாதிரி லெனினைப் பற்றிப் பார்க்கும்போது லெனின் காலத்தில் நிகழ்ந்தவைகளை கொலாஜ் செய்திருக்கிறீர்கள். அதேமாதிரி மாவோ.

புகழ்:
அதுபோல சேகுவேரா பிடல் காஸ்ட்ரோ ஓவியத்தைப் பார்த்தீங்கன்னா அவர்களுக்குக் குறியீடாகப் புரட்சி, புரட்சிக்குக் குறியீடாக இருக்கக் கூடிய துப்பாக்கி, அதைநான் காபோசிசன்ல வைத்திருப்பேன். எரியும் வண்ணங்களில் இருக்கக்கூடிய உருவச் சிதைப்பு, கூடுதலாக அந்தக் காம்போசிசன்னையே சிதைக்கும். இதுலேயும் அதேபாணியிலான ஒரு இடைவெளி பிரிக்கிறது இருக்கும். ஆனால் அந்தச் சிதைப்பு இருக்காது. பல நிலைகளிலும் எரியும் வண்ணங்களை விட உறங்கா நிறங்களில் வண்ணங்களைக் கையாண்ட விதத்தில் தேர்ச்சிப் பெற்றிருப்பதாகப் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

யமுனா:
என்னைப் பொறுத்தவரை தேர்ச்சி சார்ந்த விசயமாக நான் பார்க்கவில்லை. என்னென்றால் நீங்கள் எந்தப் பொருளை எடுத்துக் கொண்டீர்களோ அதற்குத் தகுந்தாற் போல் செய்திருக்கிறீர்கள்.

புகழ்:
நாம் பார்க்கிற பார்வை வேறு, அவர்கள் அந்த நிலையில் பார்ப்பது கிடையாது. நாம் பார்ப்பது என்னன்னா எடுத்துக் கொண்ட சப்ஜெக்டுக்குத் தகுந்தாற்போல் நிறங்களைக் கையாள்வது.

யமுனா:
ஏன்னா ஒரு கலைஞன் எல்லா சமயங்களிலும் திட்டமிட வேண்டிய அவசியம் இல்லை.

புகழ்:
கண்டிப்பாகத் தேவையில்லை.

யமுனா:
சாத்தியமும் இல்லை. உருவத்துக்குத் தகுந்த மாதிரி, எடுத்துக்கொண்ட பிரச்சினை களுக்குத் தகுந்தமாதிரிதான் நிறங்களும் இருக்கும். நீங்கள் உருவச்சிதைப்பு செய்கிறீர்கள் என்றால், ஒரு பேரழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிற, மனித அவயங்களை வெட்டி வீசுகிற இடத்தில் நீங்கள் பர்செப்சன் ஆக்க இயலாது. முழு கேன்வாசையும் நீங்கள் சிதைத்திருக்கிறீர்கள் என்றாலே மனித வாழ்வினுடைய சிதைவு மாதிரிதான். கேன்வாஸ் என்பது என்ன? அது ஒரு வெளிதானே. இது அப்படி அல்ல. ஒரு டைம் பீரியட் எடுத்துச் செய்கிறீர்கள். ஒரு கான்செப்ட்டோடு செய்கிறீர்கள்.

புகழ்:
உறங்கா நிறங்களில் அதற்கு மோட்டிஃவ் ஆக சில விசயங்களைப் பார்த்தோம். அதற்குத் தொடர்புடைய பல்வேறு குறியீடுகளைச் செய்திருப்பேன். நிறங்களில் குறியீடு இருக்கும், கார்க்கி ஓவியத்தை எடுத்துக்கொண்டால் கார்க்கி போர்ட்ரெய்ட் இருக்கும். அதற்கு அருகில் பேனாவோ துப்பாக்கி ஆகிற சர்ரியலிசதன்மையோடு குறியீடாக இருக்கும். குறியீடு சார்ந்து, நிறங்கள் சார்ந்து, மனித உருவங்கள் அந்த ஓவியங்கள் பன்முகத்தன்மையோடு இயங்குகிறது.

யமுனா:
அடுத்து மூன்றாவது ஓவியத் தொகுதி, மிகமிக நீளமான ஓவியம் என்று நினைக்கிறேன். பிரம்மாண்டமான ஓவியங்களை வரைந்திருக்கிறீர்கள். பிக்காசோவினுடைய குவர்னிக்கா மிகப் பிரம்மாண்டமான ஓவியம். நீங்கள் செய்திருப்பது மிக நீளமான ஓவியம். அந்த ஓவியத்தைப் பாதுகாப்பதற்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். மற்றொன்று அதை எப்படி வேறு வேறு இடங்களில் காண்பிக்க வேண்டும் என்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலை யோசிக்கவில்லையா?

புகழ்:
நானும் யோசித்தேன். என்னுடைய தற்போதைய ஓவியங்களைப் பார்த்தாலே புரியும். வேறுவேறு இடங்களுக்கு எடுத்துப் போவதில் உள்ள சிக்கல்களை எல்லாம் உணர்ந்துதான் ஓவியங்களைச் செய்ய வேண்டியுள்ளது. முன்பு, 8க்கு 10 அடி, 4க்கு 4 அடிகளில் ஓவியங்களைச் செய்த  கொண்டிருந்தேன். அதை இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்வதில் உள்ள நடை முறைச் சிக்கல் நிறைய இருக்கிறது. கண்காட்சி நடத்தும் நண்பர்கள் அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

யமுனா:
இந்த ஓவியம் நீள அகலம் எவ்வளவு?

புகழ்:
ஆறு அடி உயரம். 150 அடி நீளம்.

யமுனா:
எதில் வரைந்தீர்கள்.

புகழ்:
நீளமான தாள். 50 அடியில் இருக்கிறது.

யமுனா:
அந்தத் தாள் டேமேஜ் ஆகாதா

புகழ்:
அதான். ஓவியம் செய்வதைவிட அதைப் பாதுகாப்பது அதிகச் செலவாகிறது. அதைக் காட்சிப்படுத்துவதில் மிகச் சிரமம் எடுத்தது.

யமுனா:
அதை ஏன் துணியில் நீங்கள் செய்திருக்கக்கூடாது.

புகழ்: துணியில் இன்னும் நிறைய செலவாகும். துணியை கேன்வாசாத் தயார் செய்யவேண்டும். சட்டம் அடிக்க வேண்டும். இப்படி அதிலும் பல சிக்கல்கள். ஆனால் அதைச் செய்து முடித்தபிறகு கேன்வாசில் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. அதற்கு நாளும் எடுக்கும். உடனடியாக அந்நிகழ்வைப் படைப்பாக்கி வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

2001 சனவரி 26 அன்று அந்நிகழ்வு நடந்தது. என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு அது. அதனால் உடனடியாகப் பல்வேறு முன்தயாரிப்பு ஓவியங்களைச் செய்தேன். அனைத்துத் தொலைக்காட்சி நிகழ்வுகள், பத்திரிகைகள், பார்த்து, படித்து, வேதனையடைந்து உள்வாங்கினேன்.

யமுனா:
குறிப்பாகச் சொல்லுங்கள். நீங்கள் குஜராத் பூகம்பத்தைப் பார்க்கிறீர்கள், பூகம்பத்தில சிதைவுகள்தான், எப்படி கன்சிவ் செய்தீர்கள். நீங்கள் பார்த்ததை அப்படியே வரைந்து விடுவதில்லை. அதை உள்வாங்கி, அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் இந்தப் பூகம்பம். அதனுடைய சிதைவுகளில் என்னன்ன அம்சங்களை உள்வாங்கி வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்கள்.

புகழ்:
எப்படி கன்சிவ் பண்ணீர்கள் என்று கேட்டீர்கள். முதலில் அந்நிகழ்வு நடக்கும்போது உடனடியாக அதிகமாகச் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. எந்த நேரத்தில் நடக்கிறது என்பது தெரியாது. சிலர் குளித்துக் கொண்டிருந்திருப்பார்கள். சிலர் தூங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். இப்படிப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் நேரத்தில் இக்கோர நிகழ்வு நடைபெறுகிறது. அந்தச் சிதைவுகளில் அமுங்கி இறந்தவர்கள் அதிகம்.

யமுனா:
நீங்கள் நீளமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குக் காரணம் இப்படி இருக்கலாமோ? அதாவது வீடு என்ற 'வெளி'தான் ரொம்பப் பர்சனலான வெளி. மனிதர்கள் வாழ்வதற்கு ரொம்பப் பாதுகாப்பான இடம் வீடு. இங்கே வீடு என்ற வெளி அழிந்து போகிறது. ஆனால் இந்த அனுபவங்கள் எல்லாருக்கும் பொதுவானதாகிறது. இங்கே 'வெளி' என்பது வீடு என்ற வெளி அல்ல. அழிவு என்ற வெளியை. அழிவு எந்த அளவிற்கு விரிவாக நிகழ்கிறதோ அந்த அளவிற்கு அந்த வெளி ஆக அந்த அழிவு எல்லாவற்றையும் நினைக்கக்கூடியதாக இருக்கிறது.

புகழ்:
அதனாலதான். அந்த ஓவியத்தில் பின்புலமாக அந்த அழிவுகள் பொதுத்தன்மையோடு வந்து கொண்டிருக்கும். அந்த ஓவியத்தில்  நான்கு பகுதிகள் இருப்பதைக் காணமுடியும். ஒன்று, முதலில் சிக்கி உயிரிழப்பது, இரண்டு மீண்டு தப்பித்து ஓடுவது, உயிர் தப்பித்தால் போதும் என்று நிர்வாணமாகக் கூட ஓடுவது. மூன்றாவது பகுதி நிமிர்வு, அந்தச் சிதைவுகளிலிருந்து அழிவிலிருந்து மீண்டு வந்தவர்கள். அடுத்த கட்டத்தை எதிர்கொள்ளத் தயாராவது, நான்காவது பகுதி நீண்ட உதவிக் கரங்கள். எல்லாவற்றையும் விட உயிர்ப்பு. சிதைவுகளிலிருந்து துளிர்விடும் செடியை ஒரு சிறுவன் நிர்வாணமாக நின்று பார்த்து நம்பிக்கை விதைக்கின்ற குறியீடாக வைத்திருப்பேன். எது நடந்தாலும் மனித இனம் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த நம்பிக்கையை விதைக்க வேண்டிய அவசியம் ஒரு படைப்பாளனாக நமக்கு இருக்கிறது. இப்படித்தான் நான் கன்சிவ் ஆனேன். அதனாலதான் இதை ஒரு முக்கியமான ஓவியமாகக் கருதினேன். 'உறங்கா நிறங்களில்' ஒரு திட்டமிடல் இருந்தது. ஆனால் சிதைந்த கூட்டில் ஸ்பான்டேனியஸ் வெளிப்பாடு இருந்தது. நிகழ்வு நடந்து 25 நாட்களுக்குள் 9 நாள் கண்காட்சி நடந்து முடிந்துவிட்டது. அவ்வளவு வேகமாக வெளிப்படுத்த வைத்த ஒரு நிகழ்வு அது.

யமுனா:
பொதுவாக இயற்கை சார்ந்த உங்களுடைய பார்வை என்ன? இந்த இயற்கை இவ்வளவு பெரிய அழிவை நிகழ்த்தியிருக்கிறது. இந்த இயற்கை மீது உங்களுக்கு விருப்பு உருவாகிறதா? இல்லை வெறுப்பு உருவாகிறதா? அல்லது மானுடக் கூறுதான் இந்த அழிவுக்குக் காரணம் என்று கருதுகிறீர்களா?

புகழ்:
இப்ப நீங்க சொன்ன மூன்றாவதுதான். மானுட குலம்தான் இதற்குக் காரணமாக இருக்கிறது. நிகழ்வு நடந்த உடன் என்னுடைய கோபம் இந்த அரசுகள் மீது அவர்கள் கையாள்கிற கொள்கைகள் மீதும், அந்த இயற்கையைச் சிதைக்கின்ற செயல்கள் மீதும் எனக்கு வெறுப்பு வந்தது. அங்கே அதன் பக்கத்தில் நர்மதா அணைக்கட்டு. அதனாலும் அழிவு ஏற்பட்டிருக்கலாம். அணு குண்டு போட்டு பூமியைச் சிதைப்பது...

யமுனா:
இதெல்லாம் அந்த ஓவியத்தில் கொண்டு வந்தீர்களா?

புகழ்:
இல்லை. அதைக் கொண்டுவரவில்லை.

யமுனா:
அது சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

புகழ்:
உண்மைதான். அந்த நேரத்தில் அந்த அழிவுகளில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது...

யமுனா:
'சுற்றுப்புறச் சூழல் பேரழிவு' சம்பந்தமான விசயங்களை சித்தரிக்கும்போது, இன்றைக்குப் பெரும்பாலான கலைஞர்கள் இந்த விசயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக பிரேசிலில் நடந்த இரண்டு மூன்று நிலச்சரிவுகளுக்குக் காரணம் என்னன்னா அங்குள்ள மரங்களை வெட்டியது. உலகம் வெட்டப்பட்டுக் கொண்டு வருகிறதென்று சொல்கிறார்கள். அதற்குக் காரணங்கள் கூட எங்களுடைய இயற்கை வளங்களை அழித்ததுதான் என்று சொல்கிறார்கள்.

அடுத்ததாக உங்களின் மீது சமீபத்திய, Figurative art, என்பது Portrait art என்பது ஓவியப் பாரம்பரியத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. மாதிரிகளை (Model) வைத்தெல்லாம் நிறைய வரைந்திருக்கிறார்கள். பெரிய பெரிய தத்துவவாதிகள், சிந்தனைவாதிகள் உருவங்களை வரைந்து இருக்கிறார்கள். இன்னும் சொன்னால் ஓர் அளவுக்கு Authoritarian art என்று சொல்லப்படுகிறது. ஸ்டாலினுடைய ஓவியங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, மாவோவுடைய ஓவியங்களை எடுத்துக் கொண்டாலும் சரி, சதாம் உசேனை எடுத்துக் கொண்டாலும் சரி அப்படி ஒரு நாட்டினுடைய உறுதியான தலைவராக வர்ற யாருமே பிடல் காஸ்ட்ரோ வரைக்கும். அவர்களுடைய ஓவியங்கள் Hordings ஆக வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தளவில் போர்ட்ரெய்ட் வரையரது மிக முக்கியமான விஷயம். இங்கே லண்டனில் போர்ட்ரெய்ட் கேலரி என்றே தனியாக இருக்கிறது. அந்த வகையில போர்ட்ரெய்ட் வரையிற பண்பாடு தமிழ்ல ஒரு படுமோசமான சீரழிந்த அம்சமாகத்தான் இருக்கிறது. இந்தச் சூழலில், முழு மானுடக் குலத்திற்குமாகச் சிந்தித்த தமிழ்ச் சிந்தனையாளர் என்று தந்தை பெரியாரைச் சொல்லலாம். அவருடைய பல்வேறு கருத்துகள், பெண்விடுதலை சார்ந்த கருத்துகள் இன்றைக்கு வெகு முற்போக்காகப் பெண்ணியம் பேசுகிறவர்கள் பேசாத விசயங்கள் கூட அவர் தன்னுடைய கருத்துக்களை அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து இருக்கிறார். அதேமாதிரி மாதம் சம்பந்தமான விசயங்களில் தத்துவம் சம்பந்தமான விசயங்களில் சமூக மாற்றம், சாதிய ஒழிப்பு சம்பந்தமான விசயங்களில் எல்லாம் நிறைய முற்போக்காகச் சிந்தித்து இருக்கிறார்.  இந்த நூற்றாண்டினுடைய மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர் என்று பெரியாரைச் சொல்லலாம். அந்த வகையில் பெரியாரைச் சித்தரிப்பதற்கான உந்துதல் எப்படி உங்களுக்கு வந்தது. நான் அவ்வோவியங்கள் பற்றி விமர்சனங்களைப் படித்தேன். நீங்கள் பெரியாரைப் பார்த்ததே இல்லை என்று. நான் பெரியாரைப் பார்த்திருக்கிறேன். நீங்கள் பெரியாரைப் பார்க்காமல் இருந்தும்கூட, பெரியாரினுடைய பல்வேறு விதமான பரிமாணங்களைக் கொண்டுவந்து இருக்கிறீர்கள். எப்படி உந்துதல் வந்தது. உங்கள் கண்காட்சியைப் பார்த்த உடனேயே நான் சொன்னேன். இந்த ஓவியங்களைப் பார்க்கும்போது இதற்குப் பின்னணியாக இருந்த புகைப்படங்கள் இருக்குந்தானே அது எப்படி உங்களுக்குக் கிடைத்தது. எனக்குப் பெரிய ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. ஏனென்றால் இதுமாதிரி போஸ்சரில் பெரியாரை நாங்கள் பார்த்ததே இல்லை.

புகழ்:
நான் பெரியாரைப் பார்த்தது இல்லையே தவிர. இன்றைக்குப் பெரியாரால் வாழ்கிறோம் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரியும். ஒரு கலைஞனாக வெளியில் வந்து சமூக நிகழ்வுகளை ஓவியங்களாகச் செய்யும்போது பலபேர் என்னிடம் பெரியார் இருந்திருந்தால் உங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடி இருப்பார் என்று கூறியிருக்கிறார்கள். எப்படி ஒரு கலைஞன் இருக்கவேண்டும் என்று பெரியார் நினைத்தாரோ அப்படிப்பட்ட கலைஞனாக நீங்கள் இருக்கீங்க என்று சொல்லியிருக்கிறார்கள். அது என்னை, என்னதான் பெரியார் சொன்னார் என்பதைப் பற்றி ரொம்பச் சிந்திக்க வைத்தது. அதன் பிறகுதான் பெரியாரை அதிகமாகப் படிக்க ஆரம்பிக்கிறேன். முழுமையாகப் படித்துவிட்டேன் என்று சொல்லமுடியாது. இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றிப் புதிது புதிதாகப் பார்த்து வியந்திருக்கிறேன். அவரைப் பற்றிக் கேள்விப்படும்போது, அவரைப் படிக்கும்போது, அவருடன் இருந்தவர்கள் சொல்லும் பொழுது எனக்கு ஆச்சரியமான பல்வேறு தகவல்கள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் மேல, பெரியார் நம் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு என்பது மிகப்பெரியது.

யமுனா
: ஒரு interruption- தமிழ்ச் சமூகம் சொல்லுறதிலே எனக்கு உடன்பாடு இல்லை.

புகழ்:
மானுடச் சமூகம் என்று சொல்லலாம்.

யமுனா:
முழு மானுடக்குலத்துக்கும்.

புகழ்: நான் தமிழ்ச் சமூகம் என்று சொல்வது ஒரு அடையாளத்துக்குத்தான். பெரியார் மானுடச் சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்திருக்கிறார். இன்றைக்கு உலக அளவில் எந்த ஒரு புரட்சியாளர்களையும் சிந்தனையாளர்களையும்விட, பெரியார் குறைந்தவர் அல்ல என்ற கருத்துக்கு நான் வந்தேன். எல்லாவற்றுக்கும் மேலே பெரியார் தான் வாழ்ந்த காலங்களை விட, இன்றைக்கு இந்தியா முழுவதும் தேவைப்படுகிற ஒருவராக இருக்கிறார். ஏன் என்றால் மதம் அதிகமாக மதம் பிடித்து  ஆடுகின்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல் சாதிரீதியான வன்முறை கள், ஒடுக்குமுறைகள், அவலங்கள் இந்தியா முழுமைக்கும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பெரியாரைப் பற்றிப் பேசுகின்ற பல்வேறு இயக்கங்கள், இன்றைக்குப் பெரியாருடைய கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டுப் போகின்ற ஒரு அவலத்தை நான் தமிழகத்தில் பார்க்கிறேன்.

ஒரு கலைஞனாக, எனக்கிருந்த சமூகக் கடமையாக, ஒரு மானுடச் சமூகத்திற்குப் பாடுபட்ட ஒருவரை, அவர் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகின்ற பல்வேறு அரசியல் இயக்கங்கள் இன்றைக்கு அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கின்ற நிலையைப் பார்த்து வேதனை யடைந்தேன். எதிர்காலச் சந்ததிக்குப் பெரியார் என்கிற ஒருவர் என்ன செய்தார் என்பதைப் பற்றிய தவறான புரிதலைக் கொடுக்கும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அப்பொழுது நான் பெரியாரை இன்றைய இளைஞர்களுக்கும், வருங்காலச் சந்ததிக்கும் அழியாத நினைவுகளைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்பொழுதுதான் 'போர்ட்ரெய்ட்' என்ற விசயத்தை எடுத்துக் கிட்டேன். உலகளவில் பார்த்தோமென்றால் உருவ ஓவியக் கலை (Portraiture) என்பது அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகு மறைந்து போய்விட்டது. ஏன்னா ஓவியர்களுக்கு வேலை இல்லாமல் புதிதாகப் படைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

யமுனா:
அதற்குக் காரணம் புகைப்படத்தினுடைய பரவலான அறிமுகம், ரீப்ளேஸ் பண்ணிடுச்சு என்று சொல்லலாமா?

புகழ்:
அந்தக்காலத்தில் அய்ரோப்பாவில் போட்ரெய்ட்சர் என்பதுதான் மிகமுக்கியமான கலை வடிவமாக இருந்தது. பல்வேறு அருங்காட்சியகங்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதனுடைய கலைத்தன்மை அவர்கள் அதை வெளிப்படுத்தியிருக்கும் விதம், கையாண்டிருக்கின்ற உத்தி, இவை எல்லாம் மிகமுக்கியமான நிலையை அடைந்திருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டிலேயோ, இந்தியாவிலேயோ, மூக்கை மூக்காகப் போடாமல், மூக்கு மாதிரி இல்லாமல் செய்கிறதுதான் முக்கியமான கலைப்படைப்பாகக் கருதப்படுகிற ஓர் அவலம் தமிழ்நாட்டிலேயும் இந்தியாவிலேயும் நடந்து கொண்டிருக்கிறது.

யமுனா:
நீங்கள் சொல்வது Abstract, Modern art என்கிற பேரில உருவச் சிதைப்புதான் நடந்துகிட்டு இருக்கு.

புகழ்:
பெரியாரின் உருவத்தைச் செய்வது ஒன்று. பெரியாரின் உணர்ச்சிகளைச் செய்வது மற்றொன்று. பெரியாரை உருவமாகப் பார்த்து அவர் சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வது. நான் என்ன நினைத்தேன் என்றால் பெரியாரையும் அடையாளப்படுத்த வேண்டும். பெரியாருடைய முகத்தை முதலில் பதியவைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால் எந்த ஒரு கொள்கையையுமே, எந்த ஒரு சிந்தனையுமே நாம் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்றால் அந்த சிந்தனையாளனுடைய உருவத்தைப் பதியவைக்க வேண்டும் என்பது உலகளவில் இருக்கக் கூடிய ஒரு விசயம். ஏன் தலைவர்களுடைய போர்ட்ரெய்ட் அதிகமாக அச்சிடப்பட்டு, பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது என்றால், முதலில் அந்த உருவம் மக்கள் மனதிலே பதிய வேண்டும். அப்பொழுதான் அந்தக் கொள்கைகள் பதியும் என்பது நடைமுறையில் இருக்கக்கூடிய ஒன்று. அதனால்தான் நான் பெரியாரை உருவமாக வெளிப்படுத்தி அந்த உருவத்தோடு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு இருக்கக்கூடிய அந்த முடிவுகள், முகத்தில் இருக்கக் கூடிய பாகங்கள் இவைகளை வைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். பல்வேறு சிந்தனைகளை உடையவர் பெரியார். அவரிடம் குழந்தைத்தனமான சிரிப்பு இருக்கிறது. ஆழ்ந்த சிந்தனை இருக்கு. ஆவேசம் இருக்கு. இப்படிப் பல்வேறு உணர்ச்சிகளை உடையவர் பெரியார். அவருக்குப் பன்முகத் தோற்றம் உண்டு. அப்துல் ரகுமான் சொன்னார். "பன்முகத்தோற்றம் என்பது அருமையான சொல்லாட்சி" என்று. பன்முகத் தோற்றம் என்று நான் வைத்ததே - பன்முகத்தன்மை உடையவர் என்பதற்காகத்தான். அவர் பேசாத, சிந்திக்காத துறையே இல்லை. அவர் பன்முக ஆளுமையைக் கொண்டிருந்தார். வெவ்வேறு உணர்ச்சிகளை உடைய, பன்முகத்தன்மை உடைய, பன்முகத் தோற்றத்தை உடைய பெரியார், அவர் தமிழகத்திற்கு இன்றும் அதிகமாகத் தேவைப்படுகிறார். இன்றைக்கு நூறு பெரியார்கள் இருந்தாலும் இந்தச் சமூகத்தை மாற்ற முடியுமா என்ற சந்தேகம் எனக்குத் திசைமுகம் கண்காட்சிப் பயணத்தில் ஏற்பட்டது.

யமுனா:
நான் ஒன்று கவனித்தேன். அந்த எமோசன்ஸ் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் அந்த முடி, தாடியும் தலையில் ஒரு பத்து இருபது முடிதான் இருக்கும். அதை வைத்துத்தான் அந்த எமோசன்ஸைக் கொண்டு வந்து இருக்கிறீர்கள். கோபம் வரும்போது எரிதழல் மாதிரி கொண்டு வந்து இருக்கிறீங்க. சாந்தம் வரும்போது ஒரு எலிதன்னுடைய வாலைச் சுருட்டிக்கிட்டு இருக்கிறமாதிரி அப்படியே செய்திருக்கிறீங்க. அப்படி எந்த எமோசன்ஸ் முழுக்க அந்த மூடியை வைத்துத்தான் செய்து இருக்கிறீர்கள். நீங்க கான்சியசாக அந்த முடிதான் அந்த எமோசன்ஸை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று நினைத்தீர்களா?

புகழ்:
எந்த ஒன்றையும் வெளிப்படுத்துவதற்கு ஒரு உத்தி தேவை. இங்கு நான் முடியைப் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய புருவ முடிகள் கூட சில இடங்களில் பேசும். அவருடைய முடிகளை வைத்தே உணர்ச்சிகளை வெளிப்படுத்த நினைத்தேன். நான் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஓவியத்தின் வழியாகத் தமிழகத்தில் அதிகமாகப் பதியப்பட்டிருக்கிறது. இருபத்தைந்து இடங்களுக்கு மேல கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பார்த்து இருக்கிறார்கள். பல்வேறு நிலைகளில் ஓவியம் சென்றடைந்திருக்கிறது.

யமுனா:
மற்றது இன்னொன்று. ஓவியம் சம்பந்தமான விமர்சனம், அல்லது ரசனை மரபு வெகுமக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்ற சூழல் தமிழகத்தில் தொடர்ந்து நிலவிக் கொண்டு இருக்கிறது. ஓவியம் என்றால் என்ன நினைக்கிறார்கள் என்றால், நடனம் என்றால் தமிழ்ச் சினிமாவில் வருகின்ற நடனம் மாதிரி, ஓவியம் என்றால் செயராஜ் போடுற ஓவியம், அல்லது குமுதம் ஆனந்த விகடன்ல வர்ற ஓவியம் என்றுதான் நினைக்கிறார்கள்.

புகழ்:
அதை நினைத்தால்கூட பரவாயில்லை. விளம்பரப் பதாகைதான் ஓவியம் என்று நினைக்கிறார்கள். சினிமா ஹோர்டிங் போன்றவைகளைத்தான் ஓவியம் என்று நினைக்கிறார்கள். என்னையே பலர் கேட்கிறார்கள். அதுமாதிரி எல்லாம் செய்வீர்களா? என்று. நான் எதையும் தாழ்ந்தது என்று பார்க்கவில்லை. எல்லாம் ஒவ்வொரு வகை, விளம்பர ஹோர்டிங்ஸ் ஒருவகை, அதை எல்லோராலும் செய்யமுடியாது. செயராஜ் போன்ற மற்றவர்கள் செய்வதை எல்லோராலும் செய்யமுடியாது. அதேபோல நாங்கள் செய்து கொண்டிருக்கிறவைகளையும் எல்லோராலும் செய்ய முடியாது.

யமுனா:
எங்களுடைய உரையாடலின் இறுதிக்கட்டமாக கேட்கிறது என்னவென்றால், பெரும்பாலான ஓவியர்கள் அமைப்புசார்ந்து இருக்கிறார்கள் அல்லது நிறுவனம் சார்ந்து, கல்வி அமைப்புகள் சார்ந்து இருக்கிறார்கள். சோழ மண்டலக் கிராமம் சார்ந்து இருக்கிறார்கள். கலை இலக்கிய அமைப்புகள் சார்ந்து இருக்கிறார்கள். ஆனால் உங்களுடைய ஓவியங்கள் பெரும்பாலும் மக்களுடைய அடிப்படையைச் சார்ந்து இருக்கிறது. மக்களிடம் கொண்டு செல்வது, டிஸ்பிளே செய்வது, சமூக உணர்வுகளைச் சித்திரிப்பது, அந்த வகையில் பார்வையாளர்களிடம் இந்த ஓவியங்கள் ஏற்படுத்திய விளைவுகள் உங்களுக்கு சந்தோசமாக இருக்கிறதா?

புகழ்:
நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏன்னா, ஒருபடைப்பு செய்வதே என்னைப் பொருத்தவரை மக்களுக்கான ஒரு விசயமாகத்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு கலைஞனாகப் பல்வேறு விசயங்களைப் பற்றி யோசிக்கும்போது அது யாருக்குக் கொடுக்கிறோம் என்கிற ஒரு புரிதல். தெளிவு எனக்கு இருக்கிறது. அதனால்தான் என்னுடைய ஓவியங்களைக் கலைத்தன்மை குறையாமல் எளிமைப்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நான் யாருக்காகச் செய்கிறேனோ அவர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

யமுனா:
புரிந்து கொள்கிறார்களா? புரிந்து கொண்டு நீங்கள் எந்தத் தளத்தில் வெளிப் படுத்தினீர்களோ அதே தளத்தை அவர்கள் புரிந்து கொண்டு சொல்லும்போது சந்தோசமாக இருக்கும். அப்படியான 'இன்டர்ஆக்சன்' இருக்கிறதா?

புகழ்:
அப்படித்தான் நிறைய இருக்கிறது. அதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எரியும் வண்ணங்களிலிருந்து உறங்கா நிறங்களுக்கு நான் வந்த நிலை எல்லோருக்கும் ஒரு பரிச்சயத்தை ஏற்படுத்தியது. அது ஒரு முக்கிய காரணம். உறங்கா நிறங்கள் எல்லோரிடத்திலும் பேசப்பட்டது. ஏன் என்றால் அந்த வடிவம் மிக எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. நான் எந்த இடத்திலிருந்து பேசுகிறேனோ அந்த இடத்திலிருந்து அவர்கள் பயணிக்கிறார்கள்.

யமுனா:
அப்ப நாம் இப்படி வரையறுத்துக்கலாம் என்று நினைக்கிறேன். மக்களுடைய அனுபவங்களிலிருந்தும் அவர்களுடைய வாழ்விலிருந்தும் நாங்கள் கலை இலக்கிய ஆதாரங்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய அனுபவத்திற்கு மறுபடியும் அதைக்கொண்டு செல்கிறபோது, அதனோடு அவர்கள் உறவாடுகிறார்கள் என்று நாங்கள் நினைக்கலாம். அதுமட்டுமல்ல; கலை இலக்கிய நுகர்வு என்பது வெகுமக்களுக்கு அன்னியமானதல்ல என்பது எங்களுக்குத் தெரிகிறது. ஆகவே, இந்த அளவில் உரையாடலை நிறைவு செய்வோம். மிக முக்கியமான ஒரு உரையாடலை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்காக நிலையத்தின் சார்பிலேயும், என்னுடைய சார்பிலேயும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வணக்கம்.

புகழ்:
நானும் என்னுடைய மகிழ்ச்சியை, உங்களுக்கும் நிலையத்தாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.