சமூகத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சியை ஓவியமாக மக்களுக்கு உணர்த்துவேன்

நேர்காணல்: பூவை அண்ணாதுரை


ஜனசக்தி, 11.7.1987

1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அகில இந்திய இளைஞர் ஓவியக் கண்காட்சி கல்கத்தாவில் நடைபெற்றது. நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் 4000 இளைஞர்கள் வரைந்த ஓவியங்கள் போட்டிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்தப் போட்டியை நடுவராக இருந்து உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். உசேன் நடத்தினார்.

போட்டியில் முதல் இடத்தை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாத்தாஸ் குப்தா பெற்றார்.

இரண்டாவது இடத்தை, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தும்பத்திக்கோட்டையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் புகழேந்தி பெற்றார். இவர் வரைந்த "பாதிக்கப்பட்டவன் 1987" என்ற ஓவியம் பார்ப்போரைச் சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்தது. இவர் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஒரத்தநாடு மேல உழூரில் தொடங்கினார். இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் 1983இல் சேர்ந்தார். தற்பொழுது இவர் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறார்.

ஓவியர் புகழேந்தியுடன் நிருபர் பூவை அண்ணாதுரை பேட்டி.

உங்களுக்கு இத்துறையில் எப்படி முதன்முதலில் ஈடுபாடு ஏற்பட்டது?
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே, இந்த ஆர்வம் இருந்தது. இதற்கு மேலும் உரம் ஊட்டுவதாக எனது தந்தை எனக்கு ஆர்வமூட்டினார்.

தற்பொழுதுள்ள இளைஞர்கள் ஆபாச ஓவியங்களை அதிகமாக விரும்பும் சூழ்நிலையில், இப்படி சமூக எதார்த்தங்களை வரையும் நோக்கம் எப்படி எழுந்தது?
எனக்குள் பொதுவாகவே சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்ற நினைப்புண்டு. முடியாத காரணத்தால் அவர்களுடைய நிலையை என்னுடைய ஓவியத்தால் விளக்குவது என்ற எண்ணத்தோடு இந்த மாதிரி ஓவியங்களை நான் வரையத் தொடங்கினேன்.

இந்தப் போட்டியில் "பாதிக்கப்பட்டவன் 87" என்ற ஓவியத்தை எந்தப் பின்னணியில் வரைந்தீர்கள்?
நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தபோது ஒருநாள் என்னுடைய அறையிலிருந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு வயதானவர் பட்டினியால் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். அவரை யாருமே கவனிக்கவில்லை. பிறகு மாலை 4 மணிக்கு மேல் கல்லூரி முடிந்தபிறகு மீண்டும் அவரை நான் பார்த்தேன். அவர் இறந்து கிடந்தார். இந்த நிகழ்ச்சி என்னை வெகுவாகப் பாதித்தது. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. அந்த நிகழ்ச்சியை நான் ஓவியமாகத் தீட்டினேன். அந்த ஓவியம்தான் "பாதிக்கப்பட்டவன் 1987" என்ற ஓவியம்.

வேறு ஏதாவது போட்டியில் பங்குகொண்டு விருது பெற்றிருக்கிறீர்களா?
தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு நடத்திய ஓவியப் போட்டியில் ஜுனியர் பிரிவில் விருது பெற்றிருக்கிறேன்.

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?
என்னுடைய எதிர்காலத் திட்டம் சமூகத்தைப் பாதிக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் ஓவியமாகத் தீட்டி மக்களுக்கு உணர்த்துவது. சிலர் தற்பொழுது மாடர்ன் ஆர்ட் என்றால் மக்களுக்குப் புரியாதது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாடர்ன் ஆர்ட் என்றால் பெரிய நிகழ்ச்சியை எளிமைப் படுத்திக் காட்டுவதுதான். அதை முழுமையாகச் செய்ய வேண்டுமென்பது என்னுடைய நோக்கம்.