"அழகியல் என்பதே அரசியல்தான்!"

நேர்காணல்: கி.ச. திலீபன்

கல்கி - ஏப்ரல் 2013

இலங்கைத் தமிழர் போராட்டத்தின் மறக்க இயலாத ரத்தச்சுவடுகளை தம் தூரிகை மூலம் உயிரூட்டியவர் ஓவியர் புகழேந்தி. ஓவியத்தை ஒரு காட்சி ஊடகப் போராட்டமாக மாற்றி அதன் வீரியத்தைப் பார்வையாளர்களிடமும் ஏற்படுத்தியதே இவரது கலைப்பயண வெற்றி.

எப்படித் துளிர்விட்டது தூரிகைக் காதல்?

"எல்லாக் குழந்தைகளும் கையில கிடக்கிறதை சுவத்துல கிறுக்கிற மாதிரி என்னோட ஓவியப் பயணம் தொடங்கியது. பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பாடங்களில் இருக்கக்கூடிய ஆங்கிலப் பிரபுக்களின் மிடுக்கைப் பார்த்துப் பிரமிச்சிருக்கேன். அவர்களை அப்படியை வரையத் தொடங்கி, தஞ்சை மண்ணில் எங்கு திரும்பினாலும் தென்படும் வயல்வெளிகளையும், இயற்கை அழகையும் கூட வரைந்தேன். அதுதான் என் ஓவியத்துக்கான ஊற்றுக்கண்."

சமூக அவலங்களை நோக்கித் திரும்பியது எப்போது?

"1983ம் ஆண்டில் கும்பகோணம் அரசு ஓவியக் கல்லூரியில் மாணவனாக நான் சேர்ந்தபோது இலங்கையில் போர் உச்சக்கட்டம். லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தார்கள். வகுப்புகளைப் புறக்கணித்தும், உண்ணாவிரதம், ஊர்வலம் ஆகியவற்றை நடத்தியும் மாணவர்களின் போராட்டம் எழுச்சிகரமாக இருந்தது. அப்போதுதான் நான் தூரிகை வழியாகவும் போராட நினைத்தேன். அந்த உணர்வுதான் உலகத்தில் எந்த மூலையில் மனிதத்துக்கு எதிரான வற்றை எதிர்க்கும் எண்ணத்தை எனக்குள் விதைத்தது. இந்தியாவில் நடைபெற்ற மனிதத்துக்கு எதிரானவற்றை நோக்கியும் என் தூரிகை திரும்பியது."

வெட்டவெளி ஓவியக் கண்காட்சி நடத்தினீர்களே?

"பொதுவாக ஓவியக் கண்காட்சிகள் நட்சத்திர விடுதிகளில்தான் நடத்தப்படும். இதனால் உயர்குடிகள் மட்டுமே அந்த ஓவியங்களைப் பார்த்து ரசிக்க முடிந்தது. என் ஓவியங்கள் அனைத்து மக்களையும் சென்றடையத்தான் திறந்தவெளி ஓவியக் கண்காட்சி. காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். அதைக் கண்டித்து தஞ்சையில் திறந்தவெளியில் என் ஓவியங்களைக் காட்சிப்படுத்தினேன். மக்களிடம் நல்ல வரவேற்பு. ஓவியங்களைப் பார்வையிட்ட மக்களிடம் கட்டணத்துக்குப் பதிலாகக் கருத்துக் களை வசூலித்தேன். அதைத் தொகுத்து 'வண்ணங்கள் மீதான வார்த்தைகள்' எனும் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்."

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு சரியா?

"ஈழ விடுதலையை ஆதரிக்கின்ற தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகளிடையே ஒற்றுமை இல்லை. இவை ஒருங்கிணைந்து போராடியிருந்தால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப் பட்டதைத் தடுத்திருக்கலாம். இவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்காது. இதன் பிறகாவது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கட்சிகளும் அமைப்புகளும் உணர வேண்டும்."

ஓவியக் கண்காட்சிக்காக தாங்கள் இலங்கை சென்றீர்களே..?

"ஈழ மண்ணில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய ஓவியக் கண்காட்சிகள் மறக்க முடியாதவை. போரால் சிதையுண்ட வீடுகளையும் மக்களையும் பார்த்து வெதும்பினேன். அங்குள்ள மக்களுடன் பேசியபோது அவர்களது இன்னலான வாழ்க்கையைக் கேட்டு உடைந்தேன். போரில் தம் சொந்தங்களை இழந்தபோதும், போராட்ட உணர்வு குன்றாமல் இருக்கும் மக்களைப் பார்த்துப் பிரமித்தேன். 'தமிழக மக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தரவில்லை. நாங்கள் அனாதைகளாகி விட்டோம்' என அவர்கள் சொன்னார்கள்."

ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை அவசியமா?

"சமூக அக்கறை இல்லை எனில் அவன் கலைஞனே அல்ல. கலைஞன் முதலில் மனிதன். ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய சமூக அக்கறை, மனிதாபிமானத்தைவிட கலைஞனுக்கு ஒரு படி கூடுதலாக வேண்டும். சமூக அக்கறையுடன் படைக்கப்படும் கலைகள்தான் மதிக்கப்படும்."

ஓவியம் சமூகத்தைப் புரட்டிப்போடுமா?

"நிச்சயமாக ஸ்பேனிஷ் நாட்டு மன்னன் ஃப்ரேங்கோ தம் சொந்த நாட்டின் மீதே போர் தொடுத்த வன்மத்தை மேற்கத்திய ஓவியர் பிகாஸோ, குவர்னிகா என்கிற ஓவியமாகத் தீட்டினார். நூற்றாண்டுகளுக்கு முன்வரையப்பட்ட அந்த ஓவியம் இன்றும் மக்களிடையே எழுச்சியை ஊட்டிக் கொண்டே இருக்கிறதே!"

ஓவியம் அழகியலின் வெளிப்பாடுதானே?

"உண்மைதான். ஆனால், யாருடைய அழகியல் என்பதுதான் முக்கியம் உழைப்பவனுக்கும் உழைப்பைச் சுரண்டுபவனுக்குமான அழகியல் ஒன்றாக இருக்க முடியாது. ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்படுபவனுக்குமான அழகியல் ஒன்றாக இருக்க முடியாது. அழகியல் என்பது அரசியல்தான்."

ஈழ ஆதரவால் ஆபத்தைச் சந்தித்திருக்கிறீர்களா?

"இதுவரை இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக ஈழம் என்கிற கருத்தோடு ஒன்றி நிற்கிறேன். உலகில் யார் ஒடுக்கப்பட்டாலும் அவர்கள் பக்கம் நியாயங்களைப் பேசுபவர்கள் இங்கு தீவிரவாதிகளாக சித்திரிக்கப்படுகிறார்கள். எந்த ஆபத்தையும் சந்திக்கக் கூடிய துணிவு ஒரு படைப்பாளன் என்ற முறையில் எனக்கு இருக்கிறது."