அழகியலைவிட அவலங்களை வரையவே விரும்புகிறேன்

ஓவியர் புகழேந்தியுடன்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் கலந்துரையாடல்.


தொகுப்பு: அப்பாவிச்சோழன்-சிங்கப்பூர் 2000

 
தமிழக ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சிகள் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் நடந்தன. ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 11 வரை நடந்த இக்கண்காட்சிகளை 12,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.

மலேசியாவிலிருந்து வெளியாகும் 'செம்பருத்தி' இதழும் எழுத்தாளர்கள் பீர்முகமது, உத்திராபதி, பாஸ்கர் ஆர்ட்ஸ் அகாடமி, முயற்சியில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 'உறங்கா நிறங்கள்' என்ற தலைப்பில் புகழேந்தி தனது ஓவியங்களை அமைத்துள்ளார். 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளை 'உறங்கா நிறங்கள்' என்ற தலைப்பில் ஓவியங்களாக்கியிருக்கிறார்.

பிரபல தமிழக ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி பாஸ்கர்ஸ் அகாடமியில் கடந்த 5,6.08.00 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன. உறங்கா நிறங்கள் என்ற தலைப்பை மையமாக வைத்து நடைபெற்ற இந்தக் கண்காட்சி, பார்த்தவர்களது மனதில் ஓயாத சிந்தனை அலைகளை ஏற்படுத்தியது. இவரது ஓவியங்களுக்கு கவிஞர் இன்குலாப், காசிஆனந்தன் போன்றவர்கள் கவிதைகள் மூலம் வார்த்தை வடிவமும் கொடுத்திருக்கிறார்கள்.

அன்னை தெரசா:                     


தாய்மை என்பது

கருப்பையில் அல்ல

பஞ்சம்:


ஒரு துளிப் பாலூமின்றி

ஒட்டிய மார்பு

இது சோமாலியாவின்

தேசப்படம்

போன்ற கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் பதிவுகளான இந்த ஓவியத் தொகுப்பிற்கு வலுச்சேர்க்கின்றன.

ஓவியத்தில் முதுகலைப்பட்டம் பெற்று, குடந்தை ஓவியக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் 32 வயது இளைஞரான புகழேந்தியின் தூரிகைக்குச் சகமனிதனின் சுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆசையே அதிகமாக இருக்கிறது.

1994ம் ஆண்டு வெளியான 'எரியும் வண்ணங்கள்' என்ற ஓவியத் தொகுப்பின் மூலம் இந்தியாவின் பரவலான பார்வையைப் பெற்று, தமிழகத்தின் சகல ஊடகங்களாலும் புகழப்பட்டாலும் இவரது ஓவியங்களைப் போலவே இவரும் எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கிறார்.

பாஸ்கர்ஸ் அகாடமியில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் அமலதாசனின் தலைமையில் ஓவியர் புகழேந்தியோடு ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதிலிருந்து சில பகுதிகள்...

ஓவிய ஆர்வலர்கள் அவரிடம் பல்வேறு வினாக்களை வீசினார்கள். புகழேந்தியின் பதில்கள் கவிநயத்தோடு வெடித்து விழுந்தன.

இயற்கையை, அழகை வரையாமல் பிரச்சனைகளை நீங்கள் வரையக் காரணம்..?


                                                                            - பிச்சினிக்காடு இளங்கை


உலகத்தின் பிரச்சனைகள், சகமனிதனின் பிரச்சனைகள் என்னைப் பாதித்தன. அதை இந்த ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. இங்கு சோமாலியா, ஹிரோஷிமா, ஆம்ஸ்ட்ராங், அன்னை தெரசா, மகாத்மா காந்தி எனப் பல ஓவியங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறேன். உதாரணமாக சோமாலியா, ஹிரோஷிமா போன்ற ஓவியங்களில் அந்தச் சோகங்களை உரித்தெடுத்திருக்கிறேன். நடப்பதே காந்தியின் வாழ்க்கையாக இருந்ததை அவரது ஓவியம் சுட்டுகிறது. ஓவியங்கள் பூடகமாக இருக்கலாம். புரியாமல் இருக்கக்கூடாது. பார்ப்பவரைப் பல கோணங்களில் யோசிக்க வைப்பதே ஓவியங்களின் வேலை. எப்படி ஒரு நல்ல கவிதை படிப்பவர்களை யோசிக்க வைக்கிற புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறதோ, அதே வேலையை எனது ஓவியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஓவிய வாழ்க்கை லாபகரமாக இருக்கிறதா?



                                                                                         - கவிஞர் இக்பால்


பொருளாதார லாபங்களை நான் பொருட்படுத்தவில்லை. என்னுடைய ஓவியங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால் லாபம். இன்று உலகம் முழுவதும் இந்த ஓவியங்கள் பார்க்கப்படுகிறதே அது லாபம்.

இந்த ஓவியங்கள் வெளிப்படுத்தும் துன்பங்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கிறது. தெரியாததைச் சொல்லவில்லையே...


                                                                                      - ப.திருநாவுக்கரசு


இந்தத் துன்பங்கள் எல்லோரையும் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. இது என் அனுபவம். இந்த நூற்றாண்டுத் துன்பங்கள் அடுத்த நூற்றாண்டிலும் அறியப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகவும் இந்த ஓவியங்கள் இருக்கின்றன.

கவிதைக்கும், ஓவியத்திற்கும் உள்ள வித்தியாசம்..?


                                                                                - கவிஞரேறு அமலதாசன்


ஓவியம் என்பது பேசாத கவிதை. கவிதை என்பது பேசும் ஓவியம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. படிக்கப் படிக்கத்தான் கவிதை புரியும். பார்க்கப் பார்க்கத்தான் ஓவியம் புரியும். ஓவியம் என்றால் புரியாது என்ற கருத்து பலரிடம் இருக்கிறது. அது தவறு.

நவீன ஓவியங்கள் பார்க்கிறவர்களுக்கும், ஓவியங்களுக்குமான இடைவெளியை அதிக
மாக்கிவிட்டதே...

                                                                                         - கவிஞர் இக்பால்


மக்கள் தங்களோடு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தங்கள் மனதுக்குள் ஏற்றுக் கொள்கிறார்கள். பாறை ஓவியங்கள், குகை ஓவியங்கள் போன்றவை மனிதன் ஓவியத்தைப் பேசும் மொழியாகப் பயன்படுத்திய வரலாற்றை உணர்த்துகின்றன. புகைப்படக் கலையின் வருகை, ஓவியர்கள் புதிதாகச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அது மக்களை ஓவியத்திடமிருந்து தூர விலக்கி வைத்துவிடுகிறது. அந்தத் தூரத்தை விலக்குவதைத்தான் எனது பணியாகக் கருதுகிறேன்.

புரியாத ஓவியங்களைப் புரிந்துகொள்ள ஏதாவது பயிற்சி கொடுக்க முடியுமா?


                                                                                          - உத்திரபாரதி


'Arts appreciation course' என்று வெளிநாடுகளில் உண்டு. எனது ஓவியங்களைப் பார்த்த பல வெளி நாட்டுக்காரர்கள் 'இது வித்தியாசமான பாணி' என்று சொன்னார்கள். அந்த அறிவை அவர்களுக்கு இந்தவகைக் கல்வி கொடுத்திருக்கிறது. அதை நமது கல்வித்திட்டங்களும் செய்ய வேண்டும்.

சிறுகதைக்குப் படம் வரைபவர்களுக்கும் உங்களைப் போன்ற ஓவியர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?


                                                                                          - சுப்பிரமணி


நானும் சிறுகதைக்குப் படம் வரைந்திருக்கிறேன். பெரும்பாலும் சிறுகதையில் ஒரு சம்பவத்தைப் படமாக வரைவார்கள். ஆனால் கதையின் சாரத்தைக் கொண்டு வருவதுதான் நல்ல படம். ஒரு புத்தகத்தின் அட்டைப்படம் கூட. அந்தக் கதையின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும்.

ஏதாவது நவீன ஓவியங்கள் உங்களுக்கே புரியாமல் இருந்ததுண்டா?


                                                                                      - ப.திருநாவுக்கரசு


உண்டு. ஆனால் ஓர் ஓவியராக இருப்பதால் பெரும்பாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். சில ஓவியங்கள் வரைபவர்களுக்கே புரிவதில்லை. அவை யாருக்கும் புரியப் போதும் இல்லை.

பரத்நாட்டியம் தவிர மற்ற கலைகளில் சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினர் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களை எப்படி முன்னேற்றுவது?


                                                                                          - பாஸ்கரன்


மலேசியா சென்ட்ரல் மார்க்கெட்டில் எனது ஓவியக் கண்காட்சி நடந்தபோது அந்த வழியாகச் சென்ற மலாய்க்காரர், சீனர், வெளிநாட்டினர் பலரும் வந்து பார்த்தார்கள். ஆனால் தமிழர்களில் 5 சதவீதம் பேர்தான் வந்து பார்த்திருப்பார்கள். காரணம் சின்ன வயதிலேயே நமது கலை ஆர்வம் அழிக்கப்படுகிறது. படித்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இந்த நிலையில் போனால் நமது சமூகம் இன்னும் பின் தள்ளப்படும். நமது அடையாளங்களை இழந்து விடுவோம். இந்த நிலையை மாற்றுகிற பொறுப்பு பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும்தான் இருக்கிறது.

மென்மையான, சுகமான விஷயங்களை ஓவியத்தில் வெளிப்படுத்தும் ஆசையில்லையா?


                                                                                       - பாலு மணிமாறன்


என்னைச் சுற்றிப் பல இருள் சூழ்ந்த விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்கிறேன். ஒரு மனிதனாக நான் பார்க்கிற விஷயங்களை ஓவியங்களாகப் பதிவு செய்கிறேன். இதில் அறிவியல் வளர்ச்சி போன்ற விஷயங்களும் இருக்கின்றன. எனது ஓவியங்களில் மென்மையான விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அது இன்னும் சரியாக வெளிப்படவில்லை.

இந்த ஓவியங்களில் மேலை நாட்டு ஓவியங்களின் தாக்கம் இருப்பதாகத் தோன்றுகிறது...


                                                                       - முனைவர் சபா. ராஜேந்திரன்


நாங்கள் படித்ததெல்லாம் மேலைநாட்டு ஓவிய வடிவங்கள். அதன் பாதிப்புதான் இது. நமது பழைய இலக்கியங்கள் பெரும்பாலும் அழகியலையே பாடிக்கொண்டிருந்தது. இன்று நமது வாழ்க்கையும், இலக்கியமும் அதையும் தாண்டிப் போய்விட்டது. தமிழ்ப் பாரம்பரியத்தின் வடிவங்களை ஓவியத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன?


                                                                          - பிச்சினிக்காடு இளங்கோ


இந்தச் சமூகத்தில் அழகியலைவிட, அவலங்களே மேலோங்கி நிற்கின்றன. மனித சமூகத்திற்கு எதிரான சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனது ஓவியங்களில் அதை வெளிப் படுத்துவதன் மூலம் மக்களது சிந்தனையைத் தூண்ட விரும்புகிறேன். எதிர்காலத்தில் நான் என்ன வரைய வேண்டும் என்பதை நான் வாழுகின்ற சூழலும், காலமும்தான் நிர்ணயிக்க முடியும்.

. . . . . * . . . . .