இயற்கைக்கும் மனிதனுக்குமான போரா்டத்தின் விளைவு

நேர்காணல்: தளவாய் சுந்தரம்

குமுதம் தீராநதி, மார்ச் 1-16, 2001

குஜராத் பேரழிவை 150 அடி நீள தொடர் ஓவியத்தில் பதிவு செய்து சென்றவாரம் சென்னைத் தியாகராய நகர் மேநிலைப்பள்ளியில் கண்காட்சிக்கு வைத்திருந்தார் ஓவியர் புகழேந்தி. தலைப்பு 'சிதைந்த கூடு'. இவ்வோவியக் கண்காட்சியின் நோக்கம் இப்பெரு பேரழிவை ஓவியமாகப் பதிவு செய்வதும் இதன்மூலம் கிடைக்கும் நிவாரண நிதியைப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படும் விதத்தில் கொடுப்பதும்தான் என்றும் கூறும் புகழேந்தியைக் கண்காட்சி அரங்கத்தில் கண்டு சந்தித்தோம். பிரம்மாண்டமான 150 அடி நீள ஓவியம் எங்களைச் சுற்றியும் காட்சியாக இருந்தது.

முதலில் குஜராத் நிலநடுக்கத்தை மையமாகக் கொண்ட இந்த ஓவியத்தை வரைவதற்கான தாக்கம் உங்களுக்குள் எப்படி உருவானது?

பூகம்பம் நிகழ்ந்த ஜனவரி 26லிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் பூகம்பம் தொடர்பான செய்திகள். வீடியோ காட்சிகள் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். செய்திகள் சொன்ன கணக்குகள் ஒருபுறம் இருக்க, எனக்கு மனித இழப்பு ஒரு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்றுபட்டது. இந்தியாவில் இதுவரைக்கும் நிகழ்ந்திருக்கும் அழிவுகளுடன் ஒப்பிடும்போது இதுதான் பெரியது. இது என்மீது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்விலிருந்து ஓர் ஓவியனாக இந்த நிகழ்வைப் பதிவு செய்யவேண்டிய பொறுப்பு எனக்குண்டு என்று உணர்ந்தேன்.

ஏற்கெனவே பூகம்பப் பேரழிவை மையமாகக் கொண்ட ஒரு ஓவியத்தை நீங்கள் வரைந்திருக்கீங்க. அது 4க்கு 10 அடி அளவுடையது. ஆனால் இந்த ஓவியம் 150 அடி நீளமுடையாது. இவ்வளவு பிரம்மாண்டமானதா ஏன் தீர்மானித்தீங்க.

முதலில் குறிப்பிட்ட ஓவியம் அர்மீனியாவில் பூகம்பம் நடந்தபோது பண்ணியது. அந்த பூகம்பம் இவ்வளவு பேரழிவுகள் இல்லாதது. ஆனால் குஜராத் பூகம்பத்தின் ஒட்டுமொத்தப் பேரழிவுகளையும் ஓவியத்தில் கொண்டுவரனும்னா குறைந்தது 100 அடி நீளமுடையதாகவாவது இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று தோன்றியது. பின்பு ஓவியக் கண்காட்சியைக் கடற்கரையில் வைக்கலாம் என்று திட்டமிட்டபோது, அந்தப் பரந்தவெளியில் 100 அடி நீளம் மிகக்குறுகிவிடும் என்பதாலும்,  வரைந்து கொண்டிருந்தபோது அதனுடன் நான் மிகவும் ஒன்றிப் போயிருந்தாலும் 150 அடியாக அது நீண்டது.

ஏன் கருப்பு - வெள்ளை

அது நான் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டதுதான். பிற வண்ணங்களைவிட, கறுப்பு வெள்ளைதான் எப்போதும் துயங்களையும் துக்கங்களையும் வெளிப்படுத்த மிகச்சரியான நிறமாக இருக்கும் என்று பட்டது.

ஆரம்பத்திலிருந்தே உங்களது ஓவியங்களில் காணப்படும் ஒரு பொதுத்தன்மை என்னன்னா வரலாற்றுச் சம்பவங்களை, மனிதர்களைப் பதிவு செய்வதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான். இதற்கு என்ன காரணம்?

நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்த நாள் நடைபெற்ற சம்பவங்கள் பெருமளவில் வரலாற்றோடு தொடர்புடையது. அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்கிற ஆர்வமுடைய ஓர் ஓவியனாய் என்னைத் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தும் தினமும் நான் முதலில் ஓவியக் கல்லூரி சென்ற தினமும் ஒன்றாகயிருந்தது. சுமார் இரண்டு வருடத்திற்குப் பின்பு நான் வரைந்த ஈழப் போராட்டம் தொடர்பான தொடர் ஓவியங்களுக்கும் அந்த மாணவர் போராட்டத்திற் கும் மிக நெருங்கிய தொடட்பிருக்கிறதுன்னுதான் நான் நினைக்கிறேன். அப்போதிருந்தே நான் வரைந்த ஓவியங்கள் சமூகப் பிரச்சினைகள் தொடர்பானதாகத்தான் இருந்து வருகிறது. குறிப்பாக என்னைப் பாதித்த பிரச்சினைகளை நான் ஓவியத்தில் வெளிப்படுத்தும் விதம் சார்ந்து அவை மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் நினைத்தேன்.

நீங்கள் கடைசியாக 'உறங்கா நிறங்கள்' கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியத்திலிருந்து மிகவும் நகர்ந்து வந்துவிட்டீர்கள். நேரடித் தன்மையுடையதாய் உறங்கா நிறங்களின் ஓவியங்கள் இருந்தன. பூகம்பம் பற்றி இந்த ஓவியத்தில் யார்த்தமும் அரூபமும் கலந்துவிட்டிருக்கின்றன.

உண்மையைச் சொல்லணும்னா நான் ஆரம்பத்திலிருந்தே கையாள விரும்பிய பாணி இதுதான். உறங்கா நிறங்களின்போது எடுத்துக்கொண்ட கருவால் எனக்குச் சில கட்டுப்பாடுகள் இருந்தன. காந்தியை வரையும்போது அது காந்திதான் என்பதைப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். காந்தியை, பிரபாகரனை நெல்சன் மண்டேலாவை எல்லோரையுமே அரூபமாகவும் செய்திருக்க முடியும். ஆனால் அப்படிச் செய்யக்கூடாது. அது மக்களிடம் போய்ச்சேரத் தடையாக இருக்கும் என்று நினைத்தேன். நான் அந்த ஓவியங்கள் மூலமா சொல்ல நினைத்ததை மக்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் எனக்குப் பிரதானமான நோக்கமாக இருந்தது. ஆனால், குஜராத் பூகம்பத்தை மையமாகக் கொண்ட இந்த ஓவியம் பிகரெட்டிவ் அப்ஸ்ராக்ட் என்கிற பாணியில் வரையப்பட்டது. இதுதான் என்னுடைய பாணியும். அரூபமாகவும் அதேநேரத்தில் நேரடியான புரிதலுடனும் இருக்கும்.

குஜராத் பூகம்பத்தை மையமாகக் கொண்ட இந்த ஓவியம் மூலமாக என்ன சொல்ல விரும்புனீங்க.

ஒரு பூகம்பம் நிகழும் விதத்தை அப்படியே படம் பிடித்திருக்கிறேன். கட்டடங்கள் இடிந்து விழுவது. தப்பிக்கும் மாட்டிக்கொள்ளும் மனிதர்களின் வேதனைகள், துயரங்கள், உதவிகள் இப்படி. ஆனால் இவ்வளவு இடிபாடுகள் உயிரிழப்புகளுக்கு மத்தியிலும் நம்பிக்கை துளிர்த்து மனிதன் மீண்டு வருவான் என்று சொல்ல விரும்பினேன்.

பூகம்பங்கள் பற்றியும் மனித உயிரிழப்புகள் பற்றியும் தொடர்ந்து வெவ்வேறு துறைகள் சார்ந்து வெவ்வேறு விதமான பார்வைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனா தொடர்ந்து நீங்க அதனுடன் ஈடுபட்டு வந்திருக்கும்போது இதனை எப்படிப் பார்த்தீங்க.

இயற்கைக்கும் மனிதனுக்குமான நீண்ட பெரிய போராட்டத்தின் விளைவுதான் பூகம்பம். இயற்கை மீண்டும் மனிதனை ஜெயித்துவிட்டது. இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்க்கையைத்தான் மனிதன் மேற்கொள்ள வேண்டும். அணைகள் கட்டுவது, அணுகுண்டுகள் வெடிப்பது, நிலத்தடி நீரை உறிஞ்சுவது, காட்டை அழிப்பது என்று தொடர்ந்து இயற்கையை மனிதன் சீண்டிக் கொண்டேயிருக் கிறான். கடைசியில் ஒரு கட்டத்தில் இயற்கை சீறி வெடிக்கிறது. அதுதான் பூகம்பமும், புயலும், குஜராத்தில் பூகம்பத்தின் போது ஒரு மரங்கள்கூட விழலை. ஆனால் எண்ணற்ற அடுக்குமாடிக் கட்டடங்கள் அப்படியே சரிந்துவிட்டன. அதனால் ஓவியத்தில்கூட கட்டடங்கள் இடிந்து கிடப்பதை மட்டும்தான் பதிவு செய்தேன்.

. . . . . * . . . . .