மனிதவிடுதலையை நோக்கியே என் தூரிகைப் பயணம்

நேர்காணல்: பா. இரவிக்குமார்


சிறப்புமலர் - 2005, தஞ்சை


தங்களைப் பொறுத்தவரை 'நவீன ஓவியம்' என்பதற்கான வரையறை என்ன?
நவீனம் என்பது காலத்தைக் குறிக்கின்ற ஒருசொல். வரலாற்றுப் பார்வையோடு காலத்தை பழையகாலம், இடைக்காலம், மறுமலர்ச்சிக்காலம், நவீனகாலம் என்று சுட்டுகிறோம். உள்ளதை உள்ளபடியே மரபு வழியில் வெளிப்படுத்தி வந்த ஓவியர்கள் அறிவியல் புரட்சிக்குப் பிறகு, புகைப்படக் கருவிகளின் வருகையால் உள்ளத்தை வெளிப்படுத்தி படைப்புகளைப் படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். கலை இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதுதான் புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அச்சிந்தனைகளை வெளிப்படுவதற்கும் வழிவகுத்தது. பல்வேறு இயல்கள் (இசம்) இயக்கங்களாக உருவெடுத்தன.

எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் மிகவும் எளிமையாக வெளிப்படுத்துவதற்கான கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை நவீன வடிவம் வழங்குகிறது. ஒரு வரையறுக்கப்பட்ட அளவுகோல் இல்லையென்றாலும் வடிவங்கள், உருவங்கள் ஆகியவற்றின் அடிப்படை அறிதல்களும், புரிதல்களும் மிகவும் முக்கியம்.

தாங்கள் ஓவியத் துறையில் ஈடுபட்டதற்கான பின்புலங்கள் என்ன? இளம் வயதில் தங்களுக்கு ஓவியத்தின்மீது ஏற்பட்ட ஈடுபாட்டை விளக்கிச் சொல்லுங்கள்...
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, தரையிலோ, சுவரிலோ, சாலையிலோ, விளக்குக் கம்பங்களிலோ, கரித்துண்டுகளாலோ, பச்சை இலைகளாலோ என்மனதில் தோன்றியவைகளை நான் கிறுக்கி வந்திருக்கிறேன். என் நினைவு சரியாக இருக்குமானால் நான் மூன்றாவது படிக்கும்போது வரலாற்று நூல்களில் உள்ள, குறிப்பாக, ஆங்கிலப் பிரபுக்களின் முகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றை வரைந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் நோட்டுப் புத்தகங்களிலிருந்து தாள்களைக் கிழித்து, தலையில் தேய்த்து, புத்தகத்தில் உள்ள படத்தின் மீது வைத்தால், கீழுள்ள படம் தாளையும் ஊடுருவி மேலே தெரியும். எல்லாம் எண்ணெயின் மகிமை. அப்படியே பென்சிலால் வரைவேன். ஆனால் புத்தகம் வீணாகிவிடும். அதனால் பார்த்து வரையத் தொடங்கினேன். நேரம் போவது தெரியாமல் எப்பொழுதும் வரைந்து கொண்டிருப்பேன். தொடக்கப் பள்ளி வரை வெறும் பென்சிலும், கரித்துண்டும், பச்சை இலைகளும்தான். உயர்நிலைப்பள்ளிப் பருவத்தில்தான் வண்ணப் பென்சிலையே பார்க்க முடிந்தது. அதன் பிறகு இயற்கையையும் மனிதனையும் ஆடு, மாடு, கோழி என்று சக உயிரினங்களையும் வரைந்தேன். நான் படித்த மேலஉளூர் உயர்நிலைப்பள்ளி எனக்கு ஒரு திருப்புமுனை. அப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்த திரு. பசுபதி என்னைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தினார். மற்ற ஆசிரியர்களிடமும் அன்பும் மதிப்பும் கிடைத்தது. மற்ற மாணவ மாணவிகளிடமிருந்து தனித்து அடையாளங் காணப்பட்டேன். குறிப்பாக மாணவிகளிடம் எனக்குத் தனி மரியாதை. ஓவியப் போட்டிகளில் தொடர்ந்து முதல் பரிசைத் தக்க வைத்துக்கொண்டேன். போட்டிகளில் நான் பங்கெடுத்து முதலில் பரிசுப் பெற்றதும், அதுவும் முதலிடத்தைப் பெற்றதும் முண்டாசுக் கவிஞன் 'பாரதி' ஓவியத்திற்குத்தான். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே ஓவியக் கல்லூரியில்தான் சேரவேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படியே பள்ளிப்படிப்பை முடித்து, கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தேன்.

நடுத்தர வர்க்கத்தினரை, நவீன கதைகள் சென்றடைந்ததைப் போல நவீன ஓவியங்கள் சென்றடையவில்லையே... இதற்கான காரணத்தை விளக்குவீர்களா?
பொதுவாக ஓவியம் என்பது பணம் படைத்த உயர் வர்க்கத்தினருக்கு மட்டுமே உரியது என்ற கருத்து இருந்தது. இன்றும் கூட இருக்கிறது. அதற்குக் காரணம் ஓர் ஓவியத்தைச் செய்வதற்கு ஆகும் செலவும், ஓவியத்தை முடிப்பதற்கு ஆகும் நேரமும் அதிகம். எனவே அதனுடைய விலை ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் பெறமுடியாத அளவிற்கு உயர்ந்துவிடுகிறது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பொருளாதார நிலையும் அதற்கு இடம் தரவில்லை. இது ஒரு காரணம்.

அதேபோல் ஓவியங்களைக் காட்சிக்காக வைக்கப்படுகின்ற இடங்களும் அதிகமாக நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் நெருங்க முடியாத நட்சத்திர விடுதிகளிலும், அச்சுறுத்துகின்ற கலைக்கூடங்களிலும் (Art Gallery) நடைபெறுவது மற்றொரு காரணம்.

பெரும்பான்மையான நவீன ஓவியங்களின் வடிவம் மக்களை மிரட்டுவதாகவும், உள்ளடக்கமும் அவர்களுக்குத் தொடர்பில்லாத ஒன்றாகவும் இருக்கிறது. எனவே இதுவும் ஒரு காரணம். அடுத்து நம்முடைய ஊடகங்கள். அது சரிவர தனது கடமையைச் செய்யவில்லை. (தற்போது சற்று நிலைமை மாறியிருக்கிறது.) அடுத்து ஓவிய நூல்கள் அதிகம் வரவில்லை. வந்திருக்கும் மேலைநாட்டு ஓவியர்களின் நூல்களை வாங்குகின்ற சக்தி, நடுத்தர வர்க்கத்தினருக்கு இல்லை. இப்படி நிறையக் காரணங்கள். ஆனால் இன்றைக்கு அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

கவிதைக்கு அதிகமான களங்களும், தளங்களும் இருக்கின்றன. பல கவிதைகள் படித்த மாத்திரத்திலேயே புரிந்துவிடுகின்றன. சில கவிதைகளை எத்தனை முறை படித்தாலும் புரிவதேயில்லை.

நவீன ஓவியர்களில் உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார்? யார்? ஏன்?
உலக அளவில் பிக்காசோ, செர்மன் எக்ஸ்பிரசனிஸ்ட் ஓவியர்கள், உசேன், தமிழக அளவில் வீரசந்தானம், பிக்காசோ மிகப்பெரிய கலைஞன். பன்முகத்தன்மையோடு இயங்கியவர். இருபதாம் நூற்றாண்டு வன்முறையை இனிவரும் நூற்றாண்டுகளுக்கு சாட்சியாக குவர்னிகா, ஓவியத்தைப் படைத்தளித்தவர். மேலாதிக்கத்தைத் தொடர்ந்து எதிர்த்தவர். அதேபோல் செர்மன் எக்ஸ்பிரசனிஸ்ட் ஓவியர்கள் மேக்ஸ்பெக்மென், ஆட்டோடிக்ஸ் போன்ற பல ஓவியர்களும் அப்போதைய மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்குத் தங்களுடைய படைப்புக்களை அர்ப்பணித்தவர்கள். அதனால் அரசின் அடக்குமுறைகளுக்கும் உள்ளானார்கள். எம்.எஃப் உசேன் அவர்களும் சமூக சிந்தனையோடு பல்வேறு படைப்புக்களைப் படைத்திருக்கிறார். (அவருடைய சில செயல்பாடுகளைத் தவிர) வீர சந்தானம் தமிழகத்தில் நான் அறிந்த முதல் சமூக சிந்தனைமிக்க படைப்பாளி. அவருடைய ஈழவரிசை ஓவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தவை.

கவிதையில் காசி ஆனந்தன், இன்குலாபைப் போல... ஓவியத்தில் நீங்கள்... தங்கள் ஓவியத்தில் பிரச்சாரத்தன்மை சற்றுத் தூக்கலாக இருக்கிறது என்ற விமர்சனத்தை முன்வைத்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?
எந்த ஒரு கலைப்படைப்பும், அது கவிதையாக இருந்தாலும் சரி, ஓவியமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுகதை, நாவல் என்று எந்தப் படைப்பாக இருந்தாலும் அது, தான் வாழ்கின்ற சமூகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். படைப்புக்கும், படைப்பாளனுக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன் நான். அந்த அடிப்படையிலேயே சமூகத்திலிருந்து நான் உள்வாங்கிக் கொண்டவைகளை ஒரு படைப்பாக வெளிப்படுத்துகிறேன். அதுவும் உரக்கப்பேசும். இன்றைய காலகட்டத்தில் படைப்பு என்பது உண்மை பேச வேண்டும். உரக்கப் பேசவேண்டும், உறைக்கவும் பேசவேண்டும்.

அப்ஸ்ட்ராக்ட் ஓவியத்தைத் தாங்கள் அவ்வளவாக வரைவதில்லை. அதற்கான காரணம்?
என்னுடைய படைப்பாக்கங்களுக்கு அருவ வடிவத்தைவிட உருவ வடிவங்களே அதிகம் துணை புரிகின்றன. ஆனாலும் அருவங்களையும் என்னுடைய படைப்புகளில் பயன்படுத்தியிருக்கிறேன். இருந்தாலும் என்னுடைய படைப்பு நோக்கம் மக்களைச் சார்ந்தது. அதனால் அவர்களுக்குப் புரிந்த மொழியில் பேசவேண்டியிருக்கிறது. என்னுடைய மேதைமையை வெளிப்படுத்துவதற்காக மட்டும் நாந் படைக்கவில்லை. அது மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற அக்கறையோடும் படைக்கிறேன்.

ஓவியங்கள் வெறும் ரசனைக்குரியவை என்ற நிலையை மாற்றி, அதனை ஓரளவு அரசியல்மயப்படுத்தியுள்ளீர்கள்... ஓவிய விமர்சகர்கள் இதனை எந்த அளவு வரவேற்றார்கள் அல்லது எதிர்த்தார்கள்?
என்னுடைய பள்ளிப் பருவத்தில் நானும் அழகியல் சார்ந்துதான் நிறைய வரைந்து கொண்டிருந்தேன். இயற்கையையும், மலர்களையும், செடிகளையும், மரங்களையும் என்று இன்னும் இன்னும் நிறைய... 83இல் சூலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழர் படுகொலை எல்லோரையும் போலவே என்னையும் பாதித்தது. சிந்திக்க வைத்தது. படைப்பில் வெளிப்படுத்தவும் வைத்தது. அதன் பிறகுதான் ஒரு படைப்பாளனுக்கு அரசியலும், அழகியலும் சமஅளவில் தேவை என்று உணர்ந்தேன். ரசனையை மீறிய ஓர் ஆற்றல் ஒரு படைப்பிற்கு உண்டு என்று நம்பினேன். ஒரு படைப்பின் மூலம் மக்களைச் சிந்திக்க வைக்கவும், செயல்படவைக்கவும் முடியும் என்று நம்பினேன்.

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், தென்னாப்பிரிக்கா நிறவெறிக்கு எதிராகவும், பாலத்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், என்னுடைய ஓவியங்கள் குரல் எழுப்பின. இந்தியாவில் நடைபெற்ற சாதிய வன்முறைகளை, மத வன்முறைகளை, பெண்ணிய ஒடுக்குமுறைகளை, வர்க்க ஒடுக்குமுறைகளை, அரசு பயங்கரவாத அடக்குமுறைகளை என்னுடைய ஓவியங்களில் வெளிப்படுத்தினேன். மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் இருந்தன. விமர்சகர்களும் வரவேற்று எழுதினார்கள். பேசினார்கள். ஆனால் என்னுடைய பயணம் மக்களை நோக்கித்தானே விமர்சகர்களை நோக்கி அல்ல.

'முகவரிகள்' தங்களுடைய ஓவிய முயற்சியில் குறிப்பிடத்தக்க தொகுப்பு... பல்வேறு ஆளுமைகளை ஓவியமாகத் தீட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
'முகவரிகள்' தொகுப்பில் உள்ள ஓவியங்கள் திட்டமிட்டு வரையப்பட்டது அல்ல. கடந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் பலருடைய தேவைகளுக்காகச் செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு ஆளுமைகளைச் செய்கின்றபோது என்னுடைய ஆளுமையையும் வெளிப்படுத்துவதற் கான தளமாக அமைத்துக்  கொண்டேன். நவீனத்துவ வெளிப்பாடுகள் சார்ந்து இயங்குகின்ற நிலையில் என் திறனுக்கு சாட்சியாக அந்த முகவரிகள்...

புகழேந்தி என்றால் முற்போக்குத்தன்மை கொண்ட ஓவியங்களை மட்டுமே படைப்பவர் என்ற இமேஜ் விழுந்துவிட்டது.. இது தங்கள் கலை ஆளுமையைப் பாதிக்காதா?
நிச்சயம் இல்லை. அதுதான் என்னுடைய பலம். இந்த சமூகத்தில் பல்வேறு நிகழ்வுகள் என்னைப் பாதிக்கின்றன. பல்வேறு செய்திகள் என்னைத் தாக்குகின்றன. பல்வேறு காட்சிகளை நான் கடந்து செல்கின்றேன். ஆனால் அவற்றில் எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதைவிட, எதை வெளிப்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய படைப்புகள் மக்களைப் பண்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதுமட்டுமல்ல. என்னுடைய ஆளுமை என்பது பன்முக நிலைகளில் வெளிப்படுகிறது. திசைமுகம், முகவரிகள், அதிரும் கோடுகள் தொகுப்புகளைப் பார்த்தால் புரியும்.

பல்வேறு ஊர்களில், நாடுகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளீர்கள். அறைக்குள் இருந்த ஓவியக் கலையை வெகுசனப்படுத்தும் முயற்சி என்று இதனை எடுத்துக் கொள்ளலாமா? மக்களிடையே இதற்கு எத்தகைய வரவேற்பு இருந்தது? தமிழ்ப் பத்திரிகைகள் இதற்கு எந்த அளவு ஊக்கம் கொடுத்தன?
23 ஆண்டுகளுக்கு மேலான என்னுடைய கலை மற்றும் பொதுவாழ்க்கையில் நூறுக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளைத் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், பல்வேறு நாடுகளிலும் நடத்தியிருக்கின்றேன். அறைக்குள் முடங்கிக் கிடந்த ஓவியங்களை வீதிக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இது மக்கள் மயப்படுத்தும் முயற்சிதான். சென்னையில் கண்காட்சி நடக்கின்றபோது வார இதழ்கள், மாத இதழ்கள் நல்ல ஊக்கம் தந்து செய்திகளை வெளியிடுகின்றன. நாளிதழ்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்யவில்லை. அவர்கள் சரியாகச் செய்தி  வெளியிட்டால் இன்னும் கூடுதலான வெற்றிபெறும். சென்னையைத் தவிர்த்துப் பிற இடங்களில் கண்காட்சி நடைபெறும்போது நாளிதழ்கள் மிகவும் ஒத்துழைக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். மக்களுடைய ஆதரவும் மக்கள் இயக்கங்களின் ஆதரவும் மக்களின் வரவேற்பைப் பற்றி நான் கூறுவதற்குப் பதிலாக மலேசியாவிலிருந்து பார்வையாளர் எழுதிய ஒரு கடிதத்தைச் சான்றாக வைக்கிறேன்.

மோகனா முருகேச

குவான்தான், மலேசியா

மதிப்பிற்குரிய ஓவியர் புகழ் அவர்களுக்கு,

பணிவான வணக்கம்.

நலம். நீங்கள் நலமுடன் வாழ எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள். முதலில் என் அறிமுகம். நான் உங்கள் மலேசியா ரசிகை. சென்ற மாதம் தங்களின் மலேசியப் பயணத்தின்போது ஒரு முறை குவான்தானிலிருந்து (என் வசிப்பிடம்) உங்களை, போனில் தொடர்பு கொண்டேன். என் message கண்டு நீங்கள் என்னை அழைத்துப் பேசினீர்கள். பிறகு கடிதம் மூலம் தொடர்பு கொள்ளத் தங்களின் முகவரியைக் கொடுத்தீர்கள். சார்... நினைவுபடுத்த முடிகிறதா? அன்றிலிருந்து இன்றுவரை எப்படி எழுதுவது? எழுதினால் பதில் வருமா? இலக்கியத் தமிழா அல்லது நடைமுறைத் தமிழிலா? என எண்ணி எண்ணி ஒருவாறாக இன்று எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவோடும், நிச்சயம் நீங்களும் எங்களுக்குப் பதில் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். இலக்கியத் தமிழ் எனக்குத் தெரியாது. குறைகள் இருப்பின் தயவு செய்து மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். (நிற்க)

புகழ் சார், எனக்கு ஓவியம் வரையத் தெரியாது. ஆனால் நன்றாக ரசிப்பேன். எனது பார்வையில் ஓவியர்கள் நல்ல கற்பனைவாதிகள், அழகை மட்டுமே ஆராதிக்கக் கூடியவர்கள் என்றும், சமுதாய சிந்தனை குறைந்தவர்கள் என்ற கணிப்பே இருந்தது. கவிஞர்களும், எழுத்தாளர்களும் மட்டும்தான் தனது படைப்புகளின் வழி சமுதாய உணர்வை, சிந்தனையைத் தூண்ட முடியும் என்ற என் எண்ணம் தங்களின் ஓவியங்களைக் கண்ட பிறகு தவறு என்று உணர்கிறேன்.

தங்களுடைய ஓவியங்களை நேரில் காண இயலாவிட்டாலும் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு சில ஓவியங்களைப் பார்த்தபோது இந்த ஓவியனால் மட்டும் எப்படி மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க முடிந்தது என்று வியந்தேன்? உயிரான உங்கள் ஓவியங்களுக்கு வாழ்வு தந்த கவிஞர்களின் கவிதை வரிகளை வாசிக்கும்போது மீண்டும் ஒரு முறை ஓவியங்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. யாழ் வெளியேற்றம், அன்னை தெரசா, பிரபாகரன் மற்றும் பஞ்சம் என்னை மிகவும் கவர்ந்தவையாகும். குறிப்பாக, 'பஞ்சம்' என்னுள் ஒரு பெரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்க மிகவும் பிடிக்கும். எனக்குத் தெரிந்த பெண்கள் யாராவது கர்ப்பமாக இருந்தால் அவர்கள் தேவையைக் கேட்டறிந்து அவர்கள் இஷ்டப்பட்ட உணவைச் செய்து கொடுத்து மகிழ்வேன். குழந்தையைச் சுமந்துகொண்டு அந்தத் தாய் நடக்கும் அழகை மிகவும் ரசிப்பேன். பத்துத் திங்களாகப் பலவகையான வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு குழந்தையை ஈன்றெடுக்கும்போது மறுபிறவி எடுக்கும் தாய்மார்கள் அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும்போது அவர்களின் முகபாவங்களையும் அதில் ஏற்படும் நிம்மதி, நிறைவு, மகிழ்ச்சி போன்ற இன்ப உணர்வுகளையும், சுகமாகக் கண்களை மூடித் தன் பசி போகும் மட்டும் பாலருந்தும் மழலைகளின் அந்த ஓவியம்.. ஒரு துளிப்பாலுமின்றி ஒட்டிய மார்பு.. மழலை பசி தீர்க்க முடியாத அன்னையின் துடிப்பு. பசிக்கு ஒரு துளி பாலாவது சுரக்காதா என்ற அந்தப் பிஞ்சின் சோர்வு என் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது. தாய்மை என்பது கருப்பையில் அல்ல. அன்னை தெரேசாவின் மூலம் நீங்கள் உணர்த்தியது. நான் தாயாகவிட்டாலும் என்னுள்ளும் இருக்கும் தாய்மை உணர்வு என்னை மிகவும் வாட்டியது.

பத்திரிகையில் அவ்வப்போது சோமாலியர்களின் அவல நிலைகளைக் கண்டு அனுதாபப் பட்டிருக்கிறேன். என்ன கர்ம வினைகள் தீர்க்க அந்த மண்ணில் பிறந்திருக்கிறார்களோ? என்று நினைப்பதோடு சரி. ஆனால் உங்களின் பேரங்காடிகளின் நுழைவாயிலில் ஒரு கண்ணாடிப் பேழையை உண்டியலாக வைத்திருப்பார்கள். இது சோமாலிய நிவாரண நிதிக்காக. உங்கள் ஓவியம் என் கண்ணில்படும்வரை நான் அந்த உண்டியலில் ஒரு காசு கூடப் போட்டது கிடையாது. ஆனால் இப்பொழுது காசு போடத் தவறுவதில்லை. தாங்கள் எதிர்பார்க்கும் மனித நேயமிக்க சமூகத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது உங்களின் வெற்றிதானே! தாய்மை பெண்களுக்கு மட்டும் சொந்தமில்லை. ஆண்களுக்கும் இருக்கின்றது என்பதனை உங்கள் ஓவியம் மூலமும் உங்களிடமும் நான் காண்கிறேன்.

தாங்கள் கொண்டு வந்த 37 ஓவியங்களையும் நேரில் கண்டு கவர்ந்ததை வாங்கி உங்களுக்கே கைகுலுக்கி வாழ்த்துக் கூறி autograph பெற்றுக்கொண்டு திரும்பலாம் என்று முயற்சித்தேன். முடியவில்லைய எங்கள் ஊர் கோலாலம்பூரில் இருந்து 365 கி.மீ. தொலைவில் இருக்கிறது. காரிலோ, பஸ்சிலோ பயணம் செய்தால் 5 மணி நேரம் தான். இருந்தாலும் என் தொழில் பாதிக்கும். தந்தை முழுப்பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்து விட்டதால் நான் உடனே எங்கும் கிளம்பிவிட முடியாது. மீண்டும் ஒரு Good-by call செய்தேன். நீங்கள் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நிறைய ஏமாற்றம். அடுத்தமுறை தாங்கள் வந்தால் நிச்சயமாக நாங்கள் அனைவரும் உங்களை நேரில் சந்திப்போம். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? திட்டம் ஏதும் இருக்கிறதா? தங்களின் மலேசியா பயணம் வெற்றிகரமாக அமைந்ததா? இதுதான் தங்களின் முதல் வெளிநாட்டுப் பயணம் எனப் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். வாழ்த்துக்கள்! இந்தப் பயணம் உங்களுக்கு நிறைய புகழையும், வெற்றியையும் அளித்திருக்குமென நம்புகிறேன்.

புகழ் சார், நயனத்தில் இடம் பெற்ற உங்களின் பேட்டியில் ஓவியக் கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்தி, புதிய உறவுகளைச் சுவாசிக்கும் மனிதநேச எண்ணத்தோடு வந்திருக்கிறார். என எழுதப்பட்டிருந்தது. எந்தளவு இந்த வாக்கியம் உண்மை எனத் தெரியாது. எங்கள் வீட்டில் நாங்கள் ஒன்று கூடும் கலந்துரையாடலில் தங்களின் ஓவியங்களையும், நண்பன், நயனம் இதழ்களில் தங்களின் பேட்டிகளையும் படித்து நிறையப் பேசினோம். ஆக நீங்கள் எங்களுள் ஒருவர். தாங்கள் எப்படி.

என் மடலை நிறைவுக்குக் கொண்டு வரும் முன், மீண்டும் கடிதத்தில் எங்காவது தவறாக எழுதியிருந்தால் தயவுசெய்து மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். புகழேந்தி எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். ஆனால் இந்தப் பெயரில் எனக்கு நண்பர்கள் எவரும் இல்லை. புகழ் பெயரைப் போலவே என்றும் அழியாப் புகழோடு வாழ வாழ்த்துகிறோம். உலக அரங்கில் புகழ் புகழ் பேசப்பட வேண்டும். தனது தனித்தன்மை வாய்ந்த ஓவியத்தால் அனைத்து மக்களாலும் பேசப்பட வேண்டும். அடையாளங் காணப்பட வேண்டும். இன்னும் நிறைய பட்டங்கள் பெற்று என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள்.

இறுதியாக இந்த அற்புதக் கலை-ஞனை ஈன்றெடுத்த, தங்களின் பெற்றோர்களுக்கும் எங்கள் அன்பைச் செலுத்துகிறோம். அதோடு என்றும் உங்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அளித்து உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திட்ட அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

பின் குறிப்பு:
யோசனை புகழ் சார், ஏன் நீங்கள் இணையதளத்தில் ஒரு அகப்பக்கத்தைத் திறக்கக்கூடாது. அதன் வழி தங்கள் ஓவியங்கள் உலகளவு பேசப்படுமே! உங்களைப் போல உங்களின் ரசிகர்கள் உங்கள் ஓவியங்களை upto date ஆகப் பார்க்க முடியுமே!

புகழ் மனசுக்குள் என்றும் புயல்தானா? (ஆதாரம் உங்கள் தலைப்புக்கள் பாதிக்கப்பட்டவன், உறங்காத நிறங்கள், எரியும் வண்ணங்கள்) அல்லது தென்றலும் வீசுமா? கைவண்ணத்தில் மென்மை எப்படியிருக்கும்?

“மீண்டும் அடுத்த மடலில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
என்றுடன் அன்புடன்,

மோகனா.

நவீன கவிதையை யார் எழுதினாலும் முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் அவற்றில் சிறிதேனும் இருக்கும். ஓவியத்திலும் அப்படியா? தங்கள் ஓவியத்தில் உங்கள் முன்னோடிகளின் பாதிப்பு உண்டா?
ஓவியமாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும், ஒரே சிந்தனைப் பள்ளியில் இயங்குகின்றவர்களுக்கு அவர்கள் அறிந்தோ, அறியாமலோ முன்னோடிகளின் தாக்கம் இருக்கும். இதில் தவறு ஒன்றும் இல்லை. அதையும் மீறித்தான் ஓவியமோ கவிதையோ தனித்துவமான படைப்பாக நிற்கிறது. எனக்கு என்னுடைய ஓவியங்களில் பிக்காசோ, எம்.எஃப்.உசேன், வீரசந்தானம் இவர்களின் பாதிப்பும் சிறிதளவில் இருப்பதை உணர்கிறேன். ஆனால் நான் படைப்புகளை செய்யத் துவங்கிய காலகட்டத்தில் இவர்களுடைய படைப்புகளைக் காணுகின்ற வாய்ப்பைப் பெறவில்லை.

'எரியும் வண்ணங்கள்', 'திசைமுகம்' முதலிய நூல்களுக்கு மக்களிடையே எத்தகைய வரவேற்பு இருந்தது?
'எரியும் வண்ணங்கள்' தான் தமிழில் வெளிவந்த முதல் பலவண்ண நூல். வீர சந்தானத்தின் 'முகில்களின்மீது நெருப்பு' அதற்கு முன்னோடி நூல். ஆனால் கருப்பு வெள்ளையில் வெளிவந்தது. "எரியும் வண்ணங்கள்" நூல் வெளியீட்டிற்கு ஒரு குழு அமைத்து எழுத்தாளர்கள். கவிஞர்கள், ஓவியர்கள் கையொப்பமிட்டு, தாமரைச் செல்விப் பதிப்பக வெளியீடாக வருவதற்கு முன்வெளியீட்டுத் திட்டத்தில் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்தார்கள். அப்பொழுதே மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கூட்டுமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், அதிரும்கோடுகள் என்று என்னுடைய ஓவிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவும் ஓவியத்தை மக்கள் மயப்படுத்தும் முயற்சிதான். தமிழகச் சூழலில் வெளியீட்டாளர்களுக்கு லாபம் கிடைப்பது என்பது  சிரமம்தான்.

காசி ஆனந்தன், எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா, இந்திரன் போன்ற முற்போக்காளர்கள் மட்டுமே பெரும்பாலும் உங்கள் ஓவியத்தை அங்கீகரித்துள்ளனர். இலக்கியத்துறையில் மற்ற கலை இலக்கியவாதிகள் உங்கள் ஓவியங்கள் குறித்து எழுதுவதில்லையே.. சிலர் வேண்டுமென்றே உங்கள் கலையைப் புறக்கணிக்கிறார்கள் என்று கருத இடமுண்டா?
ஒரு படைப்பை எல்லோருமே ஒரேசமயத்தில் ஏற்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்த்தும் நான் படைப்பை உருவாக்குவதில்லை. எனக்கென்று ஒரு கருத்தியல் உண்டு. அரசியல் பார்வை உண்டு. அதனடிப்படையில்தான் என்னுடைய படைப்புகள் உருவாகின்றன. ஒன்றை ஏற்பது என்பதும் புறக்கணிப்பது என்பதும் கருத்தியல் சார்ந்ததுதானே. இன்றைக்கு, கலை இலக்கியத் துறையில் பல்வேறு கருத்தியல் கூறுகளுடன் படைப்பாளிகள் இயங்கி வருகிறார்கள். அவர்கள் நம்பும் அல்லது ஏற்கும் கருத்தியலை, கொண்ட படைப்பை அல்லது படைப்பாளியை அங்கீகரிக்கிறார்கள். யார் என்னை அங்கீகரிக்க வேண்டுமோ அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். மக்களிடம் எனக்கு அங்கீகாரம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் வாழும் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறேன். வேண்டும் என்றே புறக்கணிக்கிறார்கள் என்று நான் எந்த நேரத்திலும் நினைத்ததில்லை.

கீழ்வெண்மணிக் கொடுமை, ஈழத்தின் அவலம் என்று பெரும்பாலும் சமூகப் பிரச்சினைகளே தங்கள் ஓவியத்தின் மையப்பொருள்.. தனிமனிதப் பிரச்சனைகளைத் (அகவுணர்வுகளை) தாங்கள் ஓவியமாகத் தீட்டுவீர்களா?
தனி மனிதப் பிரச்சினைகளை விட, சமூகப் பிரச்சினைக்கே நான் முன்னுரிமை வழங்குகிறேன். முன்பே நான் சொன்னதைப்போல எனக்குள்ளும் பல்வேறு உணர்ச்சிகள், சிந்தனைகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்த நேரமும் பொருளாதாரமும் இடம் தரவில்லை. நமக்கு முன்னால் இன்றைக்குப் பல்வேறு சவால்கள். அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது என்னுடைய கடமை. ஓர் ஓவியக் கண்காட்சி வைத்து மூச்சு விட்டு, உள்ளிழுக்கும் போது, இரத்தவாடை மீண்டும் என் நாசியைத் தாக்குகின்றன.

ஒன்று, மனிதனை மனிதன் ஆதிக்கம் செலுத்துவதில் சிந்துகின்ற இரத்தம், அல்லது வல்லாதிக்க மனப்பான்மை, சாதி, மத ஒடுக்குமுறைகளால் எழுகின்ற மரண ஓலம், இயற்கைப் பேரழிவினால் சிக்கித் திணரும் மனித இனம், இவைகளிலிருந்து நான் எப்படி விடுபட முடியும். என்னுடைய தனிமனித உணர்வுகள் இச்சமூகத்திற்கு பயன்படுவதைவிட என்னுடைய சமூகம் சார்ந்த வெளிப்பாடுகள் கூடுதலாகப் பயன்படும் என்றே நம்புகிறேன். என் தூரிகை மனித விடுதலையை உறுதிப்படுத்துவதை நோக்கியே பயணிக்கும்.

ஓவியத் துறையில் தங்கள் எதிர்காலத் திடடமென்ன?
இன்னும் நிறைய, நிறையச் செய்யவேண்டும். என்னிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் ஓவியங்களைவிட, வெளிப்பட இருக்கும் படைப்புகள் அதிகம். இன்னும் மூலை முடுக்கெல்லாம் ஓவியங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். பரிசோதனை முயற்சியாக இன்னும் நிறையச் செய்துபார்க்க வேண்டும். புதிய புதிய உத்திகளைக் கையாள வேண்டும் என்று நினைக்கின்றேன். உலகளாவிய நிலையில் சில ஆய்வுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. உலகளாவிய ஓவியர்கள், இயக்கங்கள் பற்றித் தமிழில் எழுத வேண்டும். விரைவில் ஒரு தொகுப்பு வெளிவர இருக்கிறது. ஆசை நிறைய இருக்கிறது. பல்வேறு பணிகளுக்கிடையில் நேரம்தான் சிக்கலாக இருக்கிறது.