பூப் பூக்கும் விரல்கள்

நேர்காணல்: அக்கினி


மலேசிய நண்பன், மலேசியா 23, ஜூ
லை 2000

எண்ணச் சாறுகள் எழுதுகோல் முனையில் வழியும்போது இலக்கியம் பிறக்கிறது. வண்ணச் சாறுகள் தூரிகை முனையில் வழியும் போது ஓவியம் பிறக்கிறது. இந்த இருவகை வினைப் பாடுகளுக்கும் பின்னணியில் இருப்பது ஒரே வகையான உந்துதல்தான். அந்த உந்துதலைத்தான் கவித்துவம் என்கிறோம்.

உணர்வுகளையும் எண்ணங்களையும் பேனா கொண்டு செதுக்கி எடுப்பவன் எப்படி கவிஞானாகிறானோ, அப்படியே தூரிகை கொண்டு துல்லியப்படுத்துபவனும் கவிஞனாகிறான். சிற்றுளி கொண்டு, உயிர்மை ததும்பும் சிலைகளை வடிப்பவனும் கவிஞானாகிறான். இங்கே உணர்வை வெளிப்படுத்துகின்ற சாதனங்கள் வெவ்வேறே தவிர அந்த உணர்வு ஊற்றுகளின் கிளர்வுகளுக்கு அடிப்படை ஒன்றுதான். அதுவே கவிதா உணர்வு என்று சொல்லலாம்.

ஆயினும், ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டிக் குவித்து உணர்த்த முடியாத உன்னதங்களின் உச்சத்தை ஒற்றை வரிக்கோடுகளால் உணர்த்த முடியும் என்பதையும் நம்மால் உணர முடியும் என்பதையும் நான் உணர்ந்து இருக்கிறேன். அந்தக் கோடுகளின் பிரம்மரிஷிகளாக ஓவியர்களைத் தான் சொல்ல வேண்டும்.

பிரம்மனே ஓவியர்களின் தலைமகன். இந்தப் பிரபஞ்சங்களிலும் சரி, இந்தப் பிரபஞ்ச லோகங்களுக்கு அப்பால் உணரப்படும் ஆத்மலோகங்களிலும் சரி, படைப்பின் நாயகனாய் விளங்கும் பிரம்மனே சிறந்த ஓவியன் என்பதை யாரும் மறுக்க முடியாது.

படைப்பாளிகள்தான் உண்மையில் பிரம்மனின் வழி வந்தவர்கள். அந்தப் படைப்பாளிகள் மத்தியில் பிரம்மனின் அருட்கடாட்சம் பெற்ற ரிஷிமகர்களாய் விளங்குபவர்களில் ஓவியர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு.

தெய்வ ஆளுமைக்கு உட்பட்டவை ஓவியர்களும் தூரிகைகளும் என்ற பொன்யுகம் மாறிப் போய்விட்டது.

இன்றைய யுகத்தில், மனிதன் குரல்தான் மகேசன் குரல் என்பதால்தானோ என்னவோ, ஓவியத் தூரிகைகள் இப்போதெல்லாம் மனிதத்தை அதிகம் தொட்டுத் தீட்டுகின்றன. ஓவிய உலகம் நவீனப்பட்டபோது அது அழகியல் என்ற பூங்காவில் இருந்துகொண்டு உலகியல் என்ற நடைமுறையை ரசித்துத் தீட்டத் தொடங்கியது. அந்த ரசனை, எப்படி இலக்கிய உலகத்தைப் புரட்டிப் போட்டு, அரண்மனை சமாச்சாரமாக இருந்த இலக்கிய வனப்பை மானுடம் பாட வைத்ததோ, அப்படி ஓவியமும் மானுடத்தைப் பாடத் தொடங்கியது. மனிதத்தைப் படைக்கத் தொடங்கியது. "உங்கள் தூரிகைக்கு எது விருப்பம்?" என்று கேட்டேன். "என் தூரிகைக்கு மனிதனைப் பிடிக்கும். அவனது பிரச்சினைகளை அவலங்களை போராட்டங்களை வெற்றிகளை விலாசங்களை தீட்டத் துடிக்கிறது எனது தூரிகை" என்கிறார் ஓவியர் கு. புகழேந்தி.

கோடுகளின் நவீனங்களில் புதினங்களையே சிறைபிடித்து வைக்கும் ஒரு ராஜ பரம்பரை இவர் என்று சொல்லலாம். தமிழகம் கண்டெடுத்த தலைசிறந்த தூரிகைகளில் இவரும் ஒருவர்.. புகழேந்தியின் விரல்களில் பூப்பூக்கும்.. புயலடிக்கும்.. குயில் கூவும.. கொடும்பசியின் வெயில் தாக்கும்.. மனுஷத்தை நேசித்து ஒரு சர்வதேசக் கொடி பறக்கும்.. மானுடத்தின் விரோதிகளை மாய்க்கும் வகையில் விரல் விசைகளில் தோட்டாக்கள் சிதறும். வறுமைக் கோலம் கண்டு தூரிகை முனையில் துளிர்க்கும் கண்ணீர்..

மென்பொருள் எனும் மனித நேயத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்ற எந்த உயிர்க்கும் பொருந்தும் என்றாலும் 33 வயதில் தமிழ் மக்களின் மனங்களில் தூரிகை ஆட்சி நடத்தும் புகழேந்திக்கு இந்தப் புகழ் ஏந்தல் பொருந்தும். தமது ஒற்றுச் சேர்க்கையில் உயிர்ப்பித்து இருக்கும் தனது 37 ஜீவன்களுடன் புகழேந்தி மலேசியா வந்திருக்கிறார். இங்கே ஜீவன்கள் என்று நான் குறிப்பிடுவது அவரோடு இங்கு வந்திருக்கும் 37 ஓவியங்களை.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி, மக்களின் மனங்களைக் கவர்ந்த புகழேந்தி, கடல் கடந்து ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்துவதற்காக மலேசியா வந்திருக்கிறார்.

"ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள்" என்ற தலைப்பில் வரும் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களைக் கொண்டு இந்தக் கண்காட்சிகளை அவர் நடத்தினார். அந்த ரசிக உள்ளம், மலேசிய மண்ணில் தனது ரசனையை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறது.

கோலாலம்பூர் சென்ட்ரல் மார்க்கெட்டில், ஒரு குறுகிய பகுதியில் தனது ஓவியங்களைக் கண் காட்சிக்கு வைத்துவிட்டு, குறுகுறுத்த சிந்தனையோடு நினைறிருந்த புகழேந்திக்கு எதிர்பாராத அதிர்ச்சி. அத்தனையும் இன்பப் பூ வீச்சுகளாய் இருந்தன.

அதிகமான அளவில் தமிழர் அல்லாதார் திரண்டு, அந்த ஓவியங்களை ரசித்து ரசித்துப் பார்த்து, அந்தப் பூக்களைப் புஷ்பித்த அந்தப் புயல்களைக் கிளப்பிய விரல்களைப் பற்றிக் குலுக்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது அவரே எதிர்பாராத விஷயம். அந்தக் கண்காட்சிக்கு வருகை புரிபவர்களுக்காக வைக்கப்பட்ட கையேட்டில் சீனர்களும் மலாய்க்காரர்களும் தங்களின் கருத்து என்ன? என்பதை மிக விரிவாய்ச் சுட்டிக் காட்டிச் சென்றது புகழேந்திக்கு மிகவும் பிடித்திருந்தது என்பதை அவரே சொல்கிறார்.

"ஒரு குறுகிய இடத்தில் எப்படி ஓர் ஓவியக் கண்காட்சியை வெற்றிகரமாய் முடிக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு எனக்கு முதலில் இருந்தது. ஆனால் பரவலான மக்கள் கண்காட்சிக் கூடத்திற்கு வந்து ஓவியங்களை ரசித்த விதம் என்னைத் திக்கமுக்காட வைத்துவிட்டது. குறிப்பாக மலாய்க்காரர்கள் ஓவியங்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆர்வத்துடன் விசாரிக்கிறார்கள். நிறைய உள்ளூர் ஓவியர்கள் குறிப்பாக, மலாய் சமூக ஓவியர்கள் வந்திருந்து ஓவியங்கள் பற்றிய நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நான் மீண்டும் புதிதாய்ப் பிறப்பெடுத்தது போன்ற ஒரு பிரமைக்கு உள்ளாகிவிட்டேன்" என்கிறார் ஓவியர் புகழேந்தி.

அவருடன் நேர்காணலுக்காய்ச் சிறிது நேரம் செலவிட்டபோது...

எந்தக் கோடும் ஒரு புள்ளியிலிருந்து தான் புறப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால் உங்களை ஓவியனாக்கிய அந்தப் புள்ளி எது?
நிச்சயமாக அந்தப் புள்ளி நான் முதன்முறையாகப் பென்சில் பிடித்த அன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனக்கோ, என்னைப் பெற்றவர்களுக்கோ, அல்லது போதித்த ஆசிரியர்களுக்கோ நான் பென்சில் பிடித்து இழுத்த கோடு ஓவியமாகத் தெரிந்திருக்கிறது. நான் இங்குதான் ஓர் ஓவியனாய் உதயமாகிறேன் என்று..!

ஐந்தாறு வயதில் எனது கோடுகள் கொஞ்சம் ஓவியங்கள் போல் வளையத் தொடங்கின. பிறகு பத்துப் பதினொரு வயதில், பாடப் புத்தகங்கள், இதர சஞ்சிகைகளில் காணப்பட்ட ஓவியங்களைப் பார்த்து வரைகிற பக்குவம் வந்தது. 14 வயதில் முடிவாகிவிட்டது. இனி நான் ஓர் ஓவியன் என்பது..! எதிர்காலம் ஓவியத்திற்குள் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்து திட்டவட்டமான முடிவை மனதுக்குள் திணித்துக் கொண்டுவிட்டேன்.

இதன் காரணமாக, பள்ளிகளிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நடக்கும் ஓவியப் போட்டிகள் எதுவானாலும் நான் முதல் பரிசுடன் வீடு திரும்பத் தொடங்கினேன். ஆசிரியர்கள் பாராட்டினார் கள். சக மாணவர்கள் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். எனது சின்னஞ்சிறு கிராமத்து மக்கள் எனது ஓவியத்திறனை மெச்சிப் பேசினார்கள். ஆனால், ஒரே ஒருவரைத் தவிர... அவர் தான் என் தந்தை. ஓவியக் கல்லூரியில் சேருவதை லட்சியமாகக் கொண்டிருந்தேன். ஆனால், இதில் எல்லாம் வாழ்க்கையைத் தொலைத்து விடாதே என்று கடிந்து கொண்டார். ஓவியம் சோறு போடாது என்றார். எதிர்காலம் இதில் இல்லை என்றார். இஞ்ஜினியர் அல்லது டாக்டர் படிப்புக்கு முயற்சி செய் என்று கடிந்து கொண்டார்.

இஞ்சினியர் அல்லது டாக்டர் என்று உங்கள் தந்தை சொல்கிற அளவுக்கு ஓர் ஓவியப் பிரியரான உங்களுக்கு, படிப்பு வெற்றிகரமாக அமைந்ததா?
எனக்கு இதுவொரு வித்தியாசமான அனுபவம். பல சந்தர்ப்பங்களில் ஓவியத்தில் சிறந்து விளங்குகின்ற மாணவர்கள் படிப்பில் சிறப்புடன் விளங்க மாட்டார்கள். ஆனால், நான் இரண்டிலுமே சிறந்து விளங்கியதால் என் தந்தை ஓவியத்தைத் துறந்து விடவேண்டும் என்று வற்புறுத்தினார்.

முடிவு என்னவாயிற்று?
முடிவில் வெற்றி. எனக்கு..! காலப்போக்கில் இந்த மறைமுகப் போராட்டத்திற்கு இடையே என் தந்தையைச் சந்தித்த ஆசிரியர்கள், பிரமுகர்கள், உள்ளூர்க்காரர்கள், உறவினர்கள் என்று பல தரப்பினரும் "புகழேந்திக்கும் ஓவியம் தான் நல்லா வருதே விட்டுட வேண்டியதுதானே" என்று அன்பு நச்சரிப்பு செய்தபோது அவர் பணிந்துவிட்டார்.

பிறகு 16வது வயதில் ஓவியக் கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தேன். படித்தேன். பிறகு ஓவியத்திலேயே எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்தேன். ஓவியக் கல்லூரியில் மாணவர்களுக்குப் போதிக்கும் பணியைச் செய்தேன்.

ஓவியனுக்கு எதிர்காலம் இல்லை என்று உங்கள் தந்தை கருதியதைத் தவறு என்று சொல்வீர்களா?
அப்படிச் சொல்லிவிட முடியாது. ஒரு தந்தைக்கு இருந்த பொறுப்புணர்வின் வெளிப்பாடு அது. அந்த நேரத்தில் அப்படியொரு நிலை தமிழகத்தில் இருந்தது என்பது உண்மை. காலத்தின் துரித மாற்றம் என் தந்தையின் அன்றையக் கருத்தை இன்று தவறாக்கி விட்டிருக்கிறது. மேலும் இதில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அந்தந்த மனிதனின் தனித்துவத்தைப் பொறுத்தது. எனது ஓவியங்களின் தனித்துவ, ஈடுபாடு, முயற்சி என்னை வெற்றியாளனாக்கி இருக்கலாம். எனது காலத்தில் என்னைப் போல் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்தவனின் வாழ்க்கை தொய்ந்து போயிருக்க லாம். அதற்குத் தனித்துவம் தான் காரணமாக இருக்க முடியும்.

இன்னொரு விஷயம் என் தந்தை ஓவியத்தைப் பற்றி அன்று மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த போது, கணினியுகம் என ஒன்று வரும்; அந்த நவீன தொழில்நுட்பம் பாய்ந்து வறண்ட பூமி செழிக்கும் என்றெல்லாம் அவருக்குத் தெரியாது. இன்றைக்கு கணினித் தொழில்நுட்பம் ஓவியனை உச்சநிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. பல ஓவியர்கள், கணினியைப் பயன்படுத்தி பல முனைகளில் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கணினித் துறையில் அதிக அளவில் ஓவியர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஜனரஞ்சகமான சஞ்சிகைகளில் ஜனரஞ்சகமான ஓவியங்களைத் தீட்டுபவர்களுக்கு அப்பால் வாழ்கிற ஓவியர்களின் வாழ்க்கையில் தர்மசங்கடம் தட்டுப்பட வில்லையா?

சிலரது விஷயங்களில் அப்படி இருக்கலாம். ஓவியம் என்பது ஒரு ரசனை. ஒரு கலை. ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு நிலைமை மாறி வருகிறது. ஜனரஞ்சகமாக வரைகிற ஓவியர்கள் நிறையப் பின் தங்கிவிட்டார்கள். நவீனத்துவமும் தனித்தன்மையும் கொண்ட ஓவியர்கள் மிகவும் வரவேற்கப்படுகிறார்கள். இது ரசனையால் ஏற்பட்ட மாற்றம். மக்களின் ரசனையும் மாறிக்கொண்டே இருக்கிறது.

இலக்கியத்தைப் போலவே ஓவியத்திலும் புதுமை பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதற்காகப் பழைய அணுகுமுறைகளைக் கொண்ட ஓவியங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று நான் சொல்லவில்லை. அவை, மிகவும் ஆரவாரமின்றிப் போற்றப்படுகின்றன. அவ்வளவே!

உங்களின் தனித்துவம் என்ன?
எனது தனித்துவம் மனிதன்தான்... மனிதனை மனிதனுக்குள் நிலவும் முரண்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றை எனது தூரிகைகளுக்குள் கொண்டு வருகிறேன். இது உலகம் முழுவதும் பார்க்கப்பட வேண்டிய விஷயம். ஒட்டுமொத்தமாக உலக மானுடத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்குதல், அடக்குமுறைகள், புறச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிக்கிறேன். இவை எனக்கு வெற்றியை அளித்திருக்கின்றன.

எத்தனையோ விதமாக வரைந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும், சமூக நோக்கில் மானுடச் சிக்கல்களை ஓவியங்களில் அணுகுவதுதான் எனக்குப் பிடித்தமான அம்சமாக விளங்குகிறது. நெருடலில் இருக்கின்ற மனிதன் பக்கத்தில் நின்று அவனது நெருக்கடியைப் புரிந்து கொண்டு அதனை ஓவியமாக மொழியாக்கம் செய்வதில் தான் எனது ஈடுபாடு ஒளிந்து கொண்டிருக்கிறது. இதுதான் என் கலைக் கோட்பாடு. மக்களிடம் இதனைக் கொண்டு சென்று அவர்களிடையே சிந்தனைக் கிளர்ச்சிக்கு வழிகோலுவதாக, தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பதே நோக்கு.

கவிஞனோ, ஓவியனோ, அது எழுதுகோலோ, தூரிகையோ எதுவானாலும் பெண்களை நோக்கியே இருக்கும். அழகுப் பதுமைகளின் தாக்கத்தில் இருக்கும் என்று பொதுவாக மக்கள் நினைக்கிறார்கள். உங்களின் தூரிகை, பெண்கள் விஷயத்தில் எப்படி இருக்கும்?
அழகு எல்லோருக்கும் பொதுவானது. அது பார்க்கப்படும் விதத்தில் இருக்கிறது. பெண்களை வெறும் அழகுப் பொருட்களாக அணுக நான் விரும்புவதில்லை.

அவர்கள் உலகின் ஆணிவேர்கள். உலகின் சூட்சுமமே அவர்கள் தான். அவர்களை அழகு என்கிற அம்சத்திற்காக மட்டுமே தூரிகை தொடுவதை நான் வெறுக்கிறேன். அவர்கள் முன்பு இருத்தி வைக்கப்பட்டிருந்த அழகுப் பெட்டகங்களை உடைத்துக்கொண்டு வெளிக்கிளம்பி வெகுகாலம் ஆகிவிட்டது. அவர்கள் போராட்ட வாழ்க்கைக் களத்திற்குள் புகுந்து விட்டார்கள்.

ஈழத்துச் சகோதரிகளை எடுத்துக் கொள்ளுங்கள். தமிழ்ப் பெண்ணியத்திற்கும் உலகப் பெண்ணியத்திற்கும் இவர்களை விடச் சிறந்த முன்னோடி இருக்க முடியாது. இவர்களைவிடச் சிறந்த பெண்ணியப் போராளிகள் இருக்க முடியாது.

இன்றைக்கு ஈழத்துச் சகோதரிகளின் அழகை, போதைக்காக வர்ணிக்க எந்தப் பேனாவுக்காவது (அதாவது ஈழத்துக் கவிஞனுக்கும் சரி, தமிழ்நாட்டுக்கு கவிஞனுக்கும் சரி) துணிச்சல் இருக்கிறதா? வீரம் விளைந்த பெண்மை அது. வீரம் விளைந்த இலக்கியம் அது. ஈழத்துச் சகோதரியைப் பூவோடு ஒப்பிட்டுக் கவிஞன் புலம்ப முடியாது. அவர்களைப் பூவாகக் காட்ட முனைகிற தூரிகையில் காளான் பூத்துவிடும். அவர்களின் வீரம் பேசப்பட வேண்டும். பெரும்பாலும் எனது ஓவியங்களில் வருகின்ற பெண்கள், அழகு அணிகலன்கள், பூ, பொட்டு இல்லாமல்தான் இருப்பார்கள். அவர்கள் ஒப்பனை செய்து கொள்ளவும் பூ வைக்கவும் பொட்டு வைக்கவும் நேரமில்லாதவர்கள். என் ஓவியப் பெண்கள் அணிகலன்களுக்கு ஆசைப்படாத போராளிகள்.

உங்களின் ஓவியக்கண்காட்சியை மலேசியாவில் நடத்த முனைந்ததன் நோக்கம் என்ன?
தமிழகத்தில் "ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள்" என்ற தலைப்பில் 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளை ஓவியங்களாக்கி கண்காட்சி நடத்தினேன். மிகச் சிறந்த வெற்றி கிடைத்தது. பத்திரிகைகள் ஒரு முகமாகப் பாராட்டின. பிறகு இத்தகைய ஓவியங்கள் உலகளாவிய, குறைந்தபட்சம் தமிழர்கள் வாழும் தேசங்களிலாவது நடத்தப்பட வேண்டும் என்று சில சஞ்சிகைகள் கருத்துரைத்தபோது அந்த எண்ணம் எனக்குள்ளும் பரவியது. இதன் முதல்படி தான் மலேசியா. அடுத்தடுத்து எங்கே நடத்துவது என்பதை மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும்.

20 ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று குறிப்பிடுகிறீர்களே, அப்படியானால் நீங்கள் தீட்டியிருக்கும் 37 ஓவியங்களுக்குள் 20 ஆம் நூற்றாண்டை அடக்கிவிட முடியுமா?
முடியாது என்பது ஒரு விஷயம். முயற்சித்திருக்கிறேன் என்பது ஆறுதல் தரும் விஷயம். இதில்கூட சில முக்கிய நிகழ்வுக்குக் காரணமானவர்கள் பலர் இடம் பெறவில்லை என்பதற்காக வருந்துகிறேன். அந்தந்தக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சில அம்சங்கள் குறித்து ஓவியமாக்கி இருக்கிறேன். ஓவியங்களுக்கு அடிக்குறிப்பாக சில வரிகள் தரப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்களுக்கே இன்னொரு முறை உயிர்கொடுத்த மாதிரி, அடிக்குறிப்புகளை வழங்கி இருக்கிறார்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் கவிஞர் இன்குலாபும்... தமிழனத்தின் பால் அன்பும் பற்றுக்கொண்ட, ஆனால், உலகப் பார்வையுடைய ஒரு கலைஞனின் முயற்சி இது என்று சொல்வேன்.

20 ஆம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகளுக்குக் காரணமானவர்களை அல்லது பங்களித்தவர்களை இந்த ஓவியங்களாக்கி இருக்கிறேன். சிலர் விடுபட்டுவிட்டார்கள் என்பதை நானும் உணர்கிறேன். பிறகும் உணர்த்தினார்கள். நூற்றாண்டின் தொடக்கத்தில். யுகப்புரட்சிக்குரியவராக லெனினில் தொடங்கி நூற்றாண்டின் முடிவில் தமிழ் இனப் புரட்சிக்குரியவராக விளங்கும் பிரபாகரன் வரை பல போராளிகளை வரிசைப்படுத்தி இருக்கிறேன். குறைவான ஓவியங்களுடன் நிறைவான பார்வையைத் தர வேண்டும். அதுவே ஓவியக் காட்சிக்கு வெற்றி தரும் எனக் கருதுகிறேன்.