வலிகளை சுமந்து வரும் ஓவியங்கள்...!

நேர்காணல்: யோ. புரட்சி.

மித்திரன் வாரமலர், இலங்கை – 3.11.2013


இத்துறையின் ஆரம்பம்...
மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், நான் வரைந்தது பசுமையாக நினைவில் உள்ளது. வரலாற்று நூல்களில் உள்ள ஆங்கில பிரபுக்களின் உருவ ஓவியங்களைப் பார்த்து அவர்களுடைய சுருள் முடிகளால் ஈர்க்கப்பட்டு, அவர்களை ஓவியமாக வரைந்தேன். என் ஆர்வமும், ஈடுபாடும் வெளிப்படும் காலமாக அது இருந்தது.

பள்ளிக் காலத்தில் ஓவியத்தின் மீதான ஈடுபாடு...

உயர்நிலைப் பள்ளியில்தான் என் ஓவிய ஆர்வமும், ஈடுபாடும் மேலும் விரிவடைந்தது. இயற்கைக் காட்சிகள், வயல்வெளிகள், மரங்கள் செடிகள், கொடிகள், மலர்கள் எல்லாம் என்னை வசீகரித்தன. அதற்கு நான் வாழ்ந்த, வளர்ந்த சூழல் ஒரு காரணம். வயல்வெளிகளும், அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதிகளும் என் ஓவியப் பசிக்கு விருந்தாக அமைந்தது. வயல்வெளிகள், மணப்பரப்புகளில், நத்தைகளும், மண் புழுக்களும், பாம்புகளும் ஊர்ந்த தடங்கள் கூட எனக்கான பாதிப்புகளாக இருந்திருக்கின்றன. பள்ளி நாட்களில் நடைபெறும் ஓவியப்போட்டிகளில் தொடர்ந்து பல முதல் பரிசுகளை பெற்றிருக்கிறேன். நான் முதன்முதலாகப் பரிசு பெற்றதும், முதல்பரிசு பெற்றதும் 'பாரதி' ஓவியத்திற்காக.

படிக்கின்ற நேரம் போக, மீதி நேரம் எல்லாம் ஓவியம்தான். எனக்கு ஒரு ஆளுமை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியது அந்த பள்ளி நாட்கள்தான். அது ஒரு வசந்த காலம். அந்த நாட்களிலேயே எனக்கு ரசிகர்கள் அதிகம். நான் ஒரு கதாநாயகன் போல பள்ளியில் வலம் வந்தேன். என் ஆர்வமும், ஈடுபாடும், திறனும் மேலும் வளர்வதற்கு அது துணைபுரிந்தது. ஓவியத்தின் மீதான என் காதலால், பலருக்கு என் மீது காதல். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பருவம் என் பள்ளிப்பருவம்.

இயற்கையின் மோகத்திலிருந்து விலகி இயற்கைக்கு அப்பால் யதார்தங்களை ஓவியமாக படைக்க ஆரம்பித்தது ஏன்
?
பள்ளிப் பருவம் முடிந்து, ஓவியக் கல்லூரியில் 1983ல் மாணவனாக இணைந்தபோது, இலட்சக்கணக்கான  தமிழர்கள் ஈழத்திலிருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். அது என்னை மிகவும் பாதித்தது. இயற்கைக் காட்சிகளையும், மரங்களையும், மலர்களையும் வரைந்து கொண்டிருந்த என்னை, மனிதனையும், மனிதத்தையும் வரையத் தூண்டியது அந்நிகழ்வு. அதன் பிறகு உலகில் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், நிறத்தின் பெயரால், வர்க்கத்தின் பெயரால் நடைபெறும் அனைத்து அடக்கு முறைகளையும், ஒடுக்கு முறைகளையும், மனிதத்திற்கு எதிரான அனைத்தையும், ஒடுக்கப்படுகின்றவர்கள் பக்கம் நின்று ஓவியத்தில் பதிவு செய்திருக்கின்றேன். தொடர்ந்து செய்து கொண்டும் இருக்கின்றேன்.

கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு ஓவியங்களை செய்திருக்கின்றேன். எனக்கு ஏற்பட்ட வலியை அவ்வோவியங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன். அதைப் பார்க்கின்ற மக்கள் அந்த வலியை உணர்கிறார்கள். அதனால் சமூகம் சார்ந்து, மனித விடுதலை சார்ந்து வெளிப்படுத்திய அனைத்து ஓவியங்களும், நான் மட்டுமல்ல அதைப் பார்க்கின்ற மக்களும் மனதை இழக்கின்ற ஓவியங்களாக இருக்கின்றன.

உங்களைப் பற்றி...

தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ளது எனது ஊர் தும்பத்திக்கோட்டை. இந்த சின்னஞ்சிறிய கிராமம். தஞ்சாவூரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. நான் முன்பே கூறியபடி வயல் வெளிகள், ஒருபுறமும், அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி மறுபுறமுமாக, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கிராமம். எனது தந்தை மா. குழந்தைவேலு, தாய் நாகரெத்தினம், எனக்கு தம்பிகள் இருவர். தங்கை ஒருவர்.

எனது மனைவி சாந்தி, எங்களுக்கு சித்திரன், இலக்கியன் என்று இரண்டு மகன்கள். எனது மனைவி மத்திய அரசு அலுவலகத்தில் பணிபுரிகின்றார். எனது மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

ஓவியம் குறித்த உங்களது பார்வை...

எழுத்து என்பது மொழி சார்ந்தது. அந்த மொழி அறிந்தவர்கள் மட்டுமே அந்த கட்டுரையையோ, கதையையோ, கவிதையையோ படித்து புரிந்து கொள்ளமுடியும். ஆனால் ஓவியம் என்பதே ஒரு பொதுமொழி. அது உலகத்தின் அனைத்து மக்களாலும் உள்வாங்க முடியும். எழுத்துக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் ஓவியத்திற்கு எல்லை கிடையாது. ஓவியம் என்பது காட்சி மொழி.

தமிழர் மரபில் காவியம்
, ஓவியம் இரண்டுமே அழியாதது ஓவியம் ஒருவருக்கு இயல்பிலே வர வேண்டுமா? பயிற்சி மூலமும் வர முடியுமா?
இயல்பில் இருக்கின்ற ஆற்றலை, பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு ஆர்வமும், ஈடுபாடும் வேண்டும். இயல்பான ஆர்வமும், ஈடுபாடும் இல்லாமல் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ள முடியாது.

சமூக சிந்தனையூட்டும் ஓவியங்களில் உங்கள் பங்களிப்பு எப்படி
?
தமிழீழ விடுதலைப் போராட்டம், பாலத்தீன விடுதலைப் போராட்டம், தென்னப்பிரிக்க விடுதலைப் போராட்டம், உள்ளிட்ட சமகால போராட்டங்கள், சாதி, மத, இன ஒடுக்குமுறைகள், இயற்கைப் பேரழிவுகள் என்று சமூகத்தின் அனைத்து பரிமாணங்களையும் என் ஓவியங்களில் வெளிப்படுத்தி யிருக்கின்றேன். என் படைப்புகள் அனைத்துமே சமூக சிந்தனையுடன் வெளிப்படுத்தப் பட்டவையே.

பலர் பாமர மக்கள் புரிந்து கொள்ள கடினப்படும் அளவிற்கு ஓவியம் படைப்பது பற்றி
?
ஓவியம் என்பது ஒரு காட்சி மொழி. அது எல்லோராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அ, ஆ, தெரிந்தவன் மட்டும்தான் எழுத்துக் கூட்டி ஒருவார்த்தையை படிக்க முடியும். அதுபோல் ஓவியத்தில் உள்ள சில கூறுகள் குறித்து அடிப்படைப் புரிதல் அவசியம் ஒரு ஓவியத்தைப் புரிந்துகொள்ள. அ, ஆவன்னா தெரியாதவன் எப்படி ஒன்றை படிக்க முடியாதோ, அதுபோல ஓவியக்கூறுகள் குறித்து அறியாதவர் ஒரு ஓவியத்தை உள்வாங்க முடியாது. ஒரு படம் என்ற அளவில் மட்டுமே பார்க்க முடியும். ஓவியத்தைப் புரிந்து கொள்வதற்கும் பயிற்சித் தேவைப்படுகிறது.

எழுத்து வடிவம் இல்லாத, மொழி தோன்றாத காலத்தில் ஓவிய வடிவம்தான் பேச்சு மொழியாக, தொடர்பு மொழியாக இருந்து இருக்கின்றது என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு வடிவம் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்த அளவில் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஓவியத்தைப் படைக்க வேண்டும். இன்றைக்கு நவீனம் என்ற பெயரில் பலர் மக்களை மருட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓவியம் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டதற்கு முக்கியக் காரணம். ஓவியத்தின் உள்ளடக்கமும் மக்களைப் பற்றியதாக இல்லை. சமூகம் குறித்து, மக்கள் குறித்து செய்யப்படும் ஓவியங்கள் வியாபார ரீதியாக வெற்றியடையாது என்பதால், வியாபார ரீதியாக சிந்திக்கின்ற ஓவியர்கள் மக்கள் குறித்து சிந்திப்பதும் இல்லை. அதை வெளிப்படுத்துவதும் இல்லை. அதனால் ஓவியம் என்பது வியாபாரம் என்பதாகிவிட்டது. சந்தை மதிப்பு பெற வேண்டுமானால் அதற்குரியவைகளை செய்ய ஓவியர்கள் முனைகிறார்களே ஒழிய, மக்களைப் பற்றியோ, அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதைப் பற்றியோ அவர்கள் அக்கறை கொள்வதில்லை.

ஈழத்தமிழர்கள் குறித்த உங்கள் ஓவியங்கள் பற்றி உரைப்பீர்களா
?
1983 ஆண்டு தொடக்கம், இன்றுவரை 30 ஆண்டுகளாக, ஈழத்தமிழர்கள் போராட்டத்தோடு ஒன்றினைந்திருக்கின்றேன். பங்களித்திருக்கின்றேன். அந்த மக்கள் பட்ட துன்ப துயரங்களை, சிந்திய இரத்தத்தை, இழந்த இழப்புகளை, நாடு நாடாக ஓடித்திரியும் அகதி வாழ்வை, புயலின் நிறங்கள் என்றும், உயிர் உறைந்த நிறங்கள் என்றும், போர் முகங்கள் என்றும் 85க்கு மேற்பட்ட ஓவியங்களை செய்திருக்கின்றேன்.

ஓவியங்களாக செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழகம், தமிழீழம், மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. காட்சிப்படுத்தப்பட்டும் வருகின்றன. அவ்வோவியங்கள் மக்களிடத்தில் மிகப்பெரியத் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

சாதாரண ஓவியத்திற்கும் கார்ட்டூனுக்கும் இடையிலான வேறுபாடு
என்ன?
நான் படைக்கின்ற ஓவியத்திற்கும், கார்ட்டூன் போன்ற வடிவத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஓவியப் படைப்பு என்பது, பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கூட்டமைவு, வண்ணம், வேற்றியல்பு, அசைவு, இழையமைவு, போன்ற கொள்கைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு படைப்பு ரீதியான மதிப்புக் கிடைக்கும். ஆனால் கார்ட்டூன் என்ற வடிவத்தின் வேலை வேறு. அதனால் ஓவியம் உயர்வு என்றோ, கார்ட்டூன் குறைந்தது என்பதோ பொருள் அல்ல. அதனதன் வேலையை அது அது செய்யும்.

என் ஓவியங்களை பார்த்த பிறகு, சிறந்த பேச்சாளர்களாக விளங்குபவர்கள் "ஆயிரம் மேடைகளிலே நாங்கள் பேசி எழுப்ப முடியாத உணர்வுகளை உங்கள் ஒரு ஓவியம் செய்கிறது" என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோல் சிறந்த எழுத்தாளர்கள் சிலர் என் ஓவியங்களை பார்த்த பிறகு, "ஆயிரம் பக்கங்களில் சொல்லக்கூடிய செய்திகளை உங்கள் ஒரு ஓவியம் செய்கின்றது" என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

எனவே ஓவியப் படைப்பு என்ற ரீதியில் மட்டும் நான் கவனம் செலுத்தி வருகிறேன்.

பெற்ற பரிசுகள் விருதுகள்...

1987 ஆம் ஆண்டு, என்னுடைய 19 வயதில், 'தேசிய விருது', தேசிய விருது உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப். உசேன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது. அதே ஆண்டு தமிழ்நாடு 'மாநில விருது'. அகில உலக விமான போக்குவரத்துக் குழுமத்தின் விருது, ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் 'சிறப்பு தகுதி விருது', தர்மபுரி, மனிதவள மேம்பாட்டு மையத்தின் 'சிறந்த ஓவியர் விருது', தமிழீழம் அழகியல் கலா மன்றத்தின் 'தங்கப்பதக்க விருது', ராஜராசன் கல்வி மற்றும் பண்பாட்டு கழகத்தின் 'சாதனையாளர் விருது', திருச்சி செயின் ஜோசப் கல்லூரி வழங்கிய 'ஓவியம் வழி சமூக மாற்ற விருது' வேலூர் தமிழ் இயக்கம் விருது, பெரியாரியல் சிந்தனையாளர் மையம் வழங்கிய 'பெரியாரியல் சிந்தனையாளர் விருது', சென்னை கிருத்துவ கல்லூரி வழங்கிய 'ஆளுமைக்கான' விருது போன்றவைகள் குறிப்பிடத்தகுந்தவைகள்.

இவை எல்லாவற்றையும் விட மக்கள் எனக்கு வழங்குகின்ற  அங்கிகாரமே உயரிய விருதாக கருதுகின்றேன்.

மனதில் நினைத்து வரையாமல் விட்ட ஓவியங்கள் உண்டா
?
வரையாமல் விட்ட ஓவியங்கள் என்று சொல்வதைவிட, மனதில் அழுத்திக்கொண்டு, இன்னும் வரையப்படாமல் உள்ள 'கரு'க்கள் இன்னும் ஏராளம் உள்ளன. நிச்சயம் அது ஓவியமாக வெளிப்படும்.

இளம் ஓவியக் கலைஞர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை
?
சமூக சிந்தனையுடன் ஓவியப் படைப்புகளை உருவாக்குங்கள். புதிய புதிய உத்திகளை கையாளுங்கள், திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள், வரலாற்றை அதிகமாக படியுங்கள். அவற்றை சமகால வரலாற்றோடு பொறுத்திப் பாருங்கள். உங்கள் மண்ணில் காலூண்றி கொண்டு உலகைப் பாருங்கள். வாழ்க்கைக்கு பணம் முக்கியம் தான். பணமே வாழ்க்கையல்ல, என்பதை மனதில் இருத்தி. படைப்பை உருவாக்குங்கள்