தமிழினத்திற்காகப் போராடிய வீரன் பிரபாகரன்!

முள்ளிவாய்க்கால் குருதி தோய்ந்த குறிப்புகள்.

மே,2013


தமிழர்களின் போராட்டம் என்பது அரசியல் ரீதியாகத் தொடங்கி ஆயுதப்போராட்டமாக மாற வேண்டிய காரணமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ?
ஈழப் போராட்டமானது அர்சியல் போராட்டமாக இருந்த போது அதை ஒடுக்க நினைத்த இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதப் போக்குதான் ஆயுதப் போராக மாற்றியது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த அரசியல்  ரீதியான போராட்டத்தில் தீர்வு கிடைக்காதபோது அன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வலியை உணர்த்தியதன் பயன்தான் இந்த ஆயுதப் போராட்டம்.  ஒரு நாட்டைக் கட்டமைத்து அதில் பல்வேறு நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கி 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஓர் இயக்கம்தான் ஆயுதப்போராட்டம் என்கிற ஒரு நிலை அடைந்திருக்கிறது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழகம் எதிர்கொண்ட விதம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ஈழத்தில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்த இனப்படுகொலைகளுக்கு தமிழகம் சரியாகவே தன்னுடைய எதிர்வினையை ஆற்றி வருகிறது.  1983 இல் நடந்த படுகொலையின் போது பல்வேறு கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்.  அதன்மூலம் பல்வேறு படைப்பாளர்கள் உருவானார்கள் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் உணர்வு இருந்தது.  ஆனால், அதன்பிறகு இந்திய அரசு நடந்து கொண்ட விதத்தின் போதும் உலக நாடுகள் குரல் கொடுக்கத் தவறிய போதும் தமிழகம் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள், இந்த இறுதி நிகழ்வின்போதும் தமிழர்கள் சரியான எதிர்வினையை நிகழ்த்தவில்லை.  வல்லாதிக்கமிக்க பல நாடுகள் இந்தியாவின் துணைகொண்டு தமிழர்களை நசுக்கியது.  அப்போது தமிழக மக்கள் உணர்வோடுதான் ஒன்றிணைந்தார்கள்.  ஆனால், அரசியல் அவர்களை திசை திருப்பியது.  பல்வேறு நிலைகளில் அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அவர்களை ஒருங்கிணைத்து போராட்ட உணர்வைத் தூண்ட சரியான தலைமை இல்லாமல் போனதுதான் அந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடக்கக் காரணமாக இருந்தது எனலாம்.  இருந்த சில மக்களின் உணர்வுகளைக் கூட ஒடுக்கியது அப்போதிருந்த மாநில அரசு.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக்க் குரல்கொடுத்து வந்த அமைப்புகள் இயக்கங்கள் கூட ஒரே மேடையில் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முடியாமல் போன அவலம் இங்கே நிகழ்ந்தது.  அங்கே ஈழத்தில் நடந்த பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.  இதனால், பெரிய வரலாற்றுப் பிழைக்கு தமிழகம் ஆளாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.  எதிர்காலத் தலைமுறையினர் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் தலைவர்கள் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.  நம்மிடையே இல்லாமல் போன ஒற்றுமையின்மைதான் அங்கு நடந்த பின்னடைவுக்கு காரணம் என நான் கருதுகிறேன்.

ஓவியர்கள், கவிஞர்கள் என படைப்பாளர்கள் தங்களுடைய பங்களிப்பை கொடுத்தும் 2009 இல் ஒரு பெரிய எழுச்சி இல்லாமல் போனதற்கு என்ன காரணம் ?
ஓவியக்கண்காட்சியாகட்டும் கவிதையாகட்டும் மக்களை உணர்ச்சிகளைத் தூண்டும் அளவிற்கு உள்ளது.  ஆனால், அதே உணர்வோடு மக்களை ஒருங்கிணைத்து ஒரு பெரிய போராட்டமாக மாற்றத் தவறிவிட்டன இங்குள்ள அரசியல் தலைமைகள்.  தனித்தனி அமைப்புகளாக ஆங்காங்கே போராடுவதைவிட அத்தனை அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரே இட்த்தில் போராடியிருந்தால் நம்முடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கும்.  படப்பாளர்கள் உருவாக்கிய உணர்வுக் கொந்தளிப்பை அரசியல் தலைவர்கள் ஒருங்கிணைக்கத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.  வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களுக்காக தங்களுடைய கொள்கைகளை விட்டுக்கொடுத்து அவர்கள் ஒன்றிணையத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.  இதையே, தன் சாதகமாக மாற்றிக்கொண்ட்து மத்திய அரசு.  எனவே, எந்த தீர்க்கமான முடிவையும் எடுக்க அது தயாராக இல்லை.

வெனிசுலா, கியூபா, பொலிவியா போன்ற நாடுகள் கூட ஈழத்தின் நியாயத்தை புரிந்துகொள்ளவில்லையே என்ன காரணம் ?

கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு முறையில் ஒடுக்கப்பட்டு வரும் பல நாடுகளுக்குச் சென்று ஓவியங்கள் படைத்துக் குரல் கொடுத்து வருபவன் என்கிற முறையில் சொல்கிறேன்.  எந்த கருத்தியலோடு பயணித்து எனது படைப்புகளை படைத்து வந்தேனோ அந்த கருத்துக்கு நேர் எதிராக நிகழ்ந்ததுதான் முள்ளிவாய்க்கால் நிகழ்வு.  அங்கே எம்மின மக்கள் கொல்லப்பட்டபோது, வல்லாதிக்கமிக்க நாடுகள் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.  அதற்கெல்லாம் நாம் எதுவும் கூற முடியாது.  ஆனால், எந்த கருத்தியலோடு இயங்கிக்கொண்டிருந்தேனோ அதை உள்வாங்க்கிக் கொண்ட நாடுகள் கூட தமிழினம் அழியும்போது குரல் கொடுக்கவில்லையே எனும்போது என் சிந்தையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

கியூபா, வெனிசுலா, நெகரகுருவா, பொலிவியா போன்ற இன்னும் எத்தனையோ நாடுகள் அடக்குமுறையை எதிர்த்து வெற்றி பெற்ற நாடுகள் கூட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் கொன்று குவித்தவனுக்கு ஆதரவாக இருந்ததே எனும் போது மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.  அப்போது நாம் சிறுவர்களாக இருந்த போது நடந்த போராட்டங்கள் எல்லாம் மக்களிடத்திலே கொண்டு சென்று சேர்த்ததனாலே இன்று நமக்கு அந்த போராட்டங்கள் தெரிகின்றது.

ஆனால், ஈழத்தில் நடந்த போராட்டங்கள் பற்றி எத்தனை பேர் மக்களிடையே பரப்ப முயற்சி செய்தார்கள், உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்தினார்கள்.  முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு முன்புவரை ஓர் அளவோடுதான் பன்னாட்டு மக்களுக்கு சென்று சேர்ந்தது, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகள் கூட ‘ஈழத்தில் இதுவரை என்ன நடந்ததென்றே தெரியாது, யாரும் எங்களுக்குத் தெரியப்படுத்தவில்லை’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன், அந்த நிலையில்தான் உள்ளது நம்முடைய மக்கள் மனநிலை.  முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது கூட உலக நாடுகள் குரல் கொடுத்திருந்தால் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை தடுத்திருக்க முடியும்.  ஆனால், அதை யாரும் செய்யவில்லை.

இன்றைக்கு உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரம், வளத்தைச் சார்ந்தே மற்ற நாடுகளை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்கின்றன.  இந்த கட்டமைப்பைத்தான் உலக நாடுகள் வரையறுத்து வைத்துள்ளன.

சோவியத் புரட்சிக்கு வித்திட்ட லெனின் வழி வந்த மார்க்சியர்கள் ஈழப்பிரச்சினையை எவ்வாறு கையாண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?

1980களில் நான் ஓவியக் கண்காட்சி வைத்தபோது அந்த ஓவியங்களைப் பார்த்த சிலர், நீங்கள் இடதுசாரி சிந்தைனையாளரா, உங்களுடைய ஓவியங்கள் அதைத்தான் சொல்கின்றன என்று கேட்டனர், அப்போதுதான் தெரிந்து கொண்டேன் மக்களுடைய உணர்வுகளை, அவர்களுடைய விடுதலையை முன்னெடுக்கும் ஒரு தத்துவம்தான் மார்க்ஸியம் என்று.  ஆனால், அத்தகைய கருத்தியலைக் கொண்டு ஆண்டு வருகிற நாடுகள் கூட ஈழத்திற்கு எதிராகத்தான் இருந்தன எனும்போது மிகவும் மனம் வருந்த வேண்டியுள்ளது.  ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை எனக்கும் தோழர்களுக்கும் கருத்துமுரண் இருக்கத்தான் செய்தன.  இருந்தாலும் ஒரே மேடையில் அவர்களோடு பல கூட்டங்களில் பேசியிருக்கிறேன்.  ஆனால், 2008க்குப் பிறகு ஒருமித்த கருத்தோடு அங்கு செயல்பட முடியவில்லை.  காரணம் 2008 இறுதியில் பாலஸ்தீனத்தில் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பதற்காக ஒரு போராட்டத்தை  நடத்தவேண்டும் என தோழர்கள் திட்டமிட்டார்கள், அந்த நேரத்தில்தான் ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது, எனவே அங்கு கொல்லப்பட்ட செஞ்சோலைக் குழந்தைகளுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்திவிட்டு கூட்டத்தை நடத்தலாம் என்று கூறினேன், ஆனால் தோழர்கள் மறுத்துவிட்டனர்.  அந்தளவிற்கு மார்க்சியர்களின் கருத்தியல் என்பது சுருங்கிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.  பல்வேறு பிரச்சினைகளை முன்னெடுக்கிறார்கள் என்பது வேறு ஆனால், தமிழர்களுக்கு எதிர்நிலையில் இருந்து செயல்படுகிறார்களே அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இறையாண்மை எனும் சொல்லாடல் அரசின் ஆயுத எல்லைக்கு உட்பட்டதா அல்லது மக்களின் உணர்வெல்லைகளுக்கு உட்பட்டதா ?

அந்த நாட்டிலுள்ள மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையதுதான் இறையாண்மை எனும் சொல்.  ஆனால், பல வல்லாதிக்கமிக்க நாடுகள் அதை ஆயுத எல்லைக்கு உட்பட்டதாக கட்டமைத்து வைத்திருக்கின்றன.  உண்மையில் அந்த ஒரு நாட்டின் இறையாண்மை என்பது அங்கு வாழும் மக்களுக்கு சம உரிமை அளிப்பது, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக் கொள்வது, அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என இது போன்றவற்றில் கவனம் செலுத்தும் அரசுதான் இறையாண்மையோடு ஆட்சி செய்வதாக அர்த்தம் கொள்ளப்படுகிறது.  ஆனால், அதையெல்லாம் தவிர்த்துவிட்டு நாங்கள் இந்த நாட்டு மக்களை எப்படி வேண்டுமென்றாலும் வதைப்போம், அதை யாரும் கேட்க்க் கூடாது என்பது இந்த நாட்டு இறையாண்மையாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.

தெற்கு சூடானைப் போல் ஐ.நா., மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தினால் தனி ஈழம் மலருமா ?       
ஐம்பதாண்டு கால அரசியல் ஆயுதப் போராட்டம் ஒரு பின்னடைவுக்குப் பிறகு இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறது.  பல பேர் இந்த பின்னடைவை பலவாறு கணித்து வைத்துள்ளனர்.  எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் தோல்வியைத் தழுவியதாக வரலாறு இல்லை.  இன்று இந்த போராட்டம் தொய்வடைந்திருப்பது உண்மைதான் அதற்காக முடிவுக்கு வந்துவிட்ட்தாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

சொல்லமுடியாத அளவிற்கு ஈழ மக்களுக்கு பெரும் துன்பத்தைத் தந்திருக்கிறது சிங்கள அரசு, இதைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற நாடுகளும் அமைதியாகத்தான் இருந்தன. போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் அங்கிருக்கும் மக்களை இன்றும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.  இந்த நிலையில் அங்கே பேசுவதற்கு புலிகள் இல்லை.  இங்குள்ள அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராக இல்லை.  புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் குரல் கொடுத்து வரும் நிலையில் அவர்களுடைய உணர்வுகளை மதித்து `உண்மையான விடுதலையை விரும்பும் தமிழர்களுக்கு அவர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்த மக்கள் விரும்பும் விடுதலையைப் பெற்றுத் தரவேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கையும்.

இலங்கை இனப் பிரச்சினைக்கான துவக்கமாக எதைக் கருதுகிறீர்கள் ?
இலங்கை தன்னுடைய பெரும்பான்மையைக் காட்ட வேண்டும் எனும் திமிர்த்தனத்தின் தொடக்கம்தான் இந்த இன அழிப்புக்கு மூல காரணம், சிங்களவன் தமிழர்களை மதித்திருப்பானேயானால் இந்த இனப்படுகொலைகள் நடந்திருக்காது.  சில சிங்கள இனவெறி அரசியல்வாதிகள் மக்களிடையே செய்த தவறான பரப்புரையே இதற்குக் காரணம்.  அடிப்படை உரிமைகள் தொடங்கி அனைத்தும் தமிழர்களிடத்திலிருந்து பறிக்கப்பட்டது. தரப்படுத்துதல் எனும் போலிக்காரணம் கூறி தமிழர்களுக்கான கல்வி முதலியவற்றைப் பறித்தனர்.  இதுதான் இரு இனத்திற்குமான விரிசலை அதிகமாக்கியது.  இலங்கை விடுதலைக்குப் பிறகு தமிழர்களுக்குத் தலைமை ஏற்றவர்களும் தமிழர்களுக்கான உரிமைகளை ஆரம்பத்திலிருந்தே கேட்கத் தவறிவிட்டனர்.  பிறகு தந்தை செல்வாவின் காலகட்ட்த்தில்தான் உரிமைகளைக் கேட்கத் தொடங்கினர்.

ஒரு காலத்தில் தீவிரமான இன உணர்வு பேசிவந்த திராவிட இயக்கத்தில் ஈழப்பிரச்சினையின் போது சரியான எதிர்வினையை ஆற்றாத்து ஏன் ?

1960களில் இந்தித்திணிப்புக்கு எதிராக பெரிய போராட்டத்தை நடத்தியது திராவிடர் கழகம், தந்தை பெரியார் மட்டும் இல்லையென்றால் இன்று தமிழர்கள் தமிழர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.  அதை மறுக்க முடியாது, ஆனால் திராவிட்த்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்கள், அதை முழுக்க அரசியல் கண்ணோட்ட்த்தில் பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.  ஓர் இயக்கமாக இருந்தவரை அது சரியாகத்தான் இருந்தது. பதவி அரசியலாக மாறியதும் மக்களையும் இன உணர்வையும் மறந்து விட்டது.

ஒரு மிகப்பெரிய உண்மை என்னவென்றால் அங்கு நடைபெற்ற ஈழப்போராட்டம் வெற்றி பெறக்கூடாது என்று மானசீகமாக வேண்டிக்கொண்டவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.  பிரபாகரன் தமிழினத்திற்கு தலைமை ஏற்றுவிடக்கூடாது என்று எண்ணினார்கள்.  காரணம் பிரபாகரன் மட்டும்தான் தன்னலம் பாராமல் தமிழினத்திற்காகப் போராடியவர்.

இன அழிப்பை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற சேனல்-4க்கு இருந்த அக்கறை கூட தமிழக ஊடகங்களுக்கு இல்லையே அது ஏன் ?
ஏனென்றால் இங்கிருக்கும் ஊடகங்கள் அனைத்தும் முதலாளித்துவத்தை மையமாக வைத்தும், கட்சியை மையமாக வைத்தும், இயங்குபவைதான். எனவே அவை அதிகமாக முன்னெடுக்க விரும்பவில்லை. பொதுவாக இருக்கும் பொதிகைத் தொலைக்காட்சி கூட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. எனவே இயல்பாகவே அவர்களுக்கு அந்த் எண்ணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒர் சில இதழ்கள் மட்டும் கட்டுரைகள் வெளியிட்டு போராட்டங்களை முன்னெடுத்தன. ஊடகங்கள் மட்டும் சரியான நோக்கோடு உண்மையாக நடந்திருக்குமேயானால் தமிழர்களுக்கு எப்போதோ நியாயம் கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது.