இந்தியா தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. சிங்களத்துக்கு உதவுவதை உடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்!
                                                                    - ஓவியர் புகழேந்தி -
நிலவரம்

10.10.2008      
                       


ஓவியர் புகழேந்தி
   அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகு அறிந்த ஒரு சிறந்த ஓவியர். ஓவிய விரிவுரையாளர். அரசியல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர். ஈழவிடுதலை விரும்பி. அதற்காகப் பல்வேறு தியாகங்களைப் புரிந்தவர். இடைவிடாது ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருபவர். பொங்குதமிழ் உட்பட புலம்பெயர் தமிழர்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர். வெளிநாடுகளில் ஓவியக்கண்காட்சிகளை நடாத்தி ஈழவிடுதலையின் பல்வேறு பரிமாணங்களை உலகுக்கு வெளிப்படுத்துபவர். ஈழ தேசத்திற்குச் சென்று அம்மக்களின் வாழ்வியலை நேரில் கண்டுவந்தவர்.

அவர் நிலவரம் இதழுக்காக வழங்கிய சிறப்புச் செவ்வி.

செவ்வி கண்டவர் சண் தவராஜா

கேள்வி:  ‘தலையை, தசையை, கண்ணை, கைகளை ஓவியமாக்கலாம். ஆனால் ஓவியர் புகழேந்தி அவர்கள் பெருமூச்சை ஓவியமாக்குகின்றார்’ என கவி
ஞர் காசிஆனந்தன் அவர்கள் உங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறியிருந்தார். இது உங்களுக்கு எவ்வாறு சாத்தியமாகிறது?
பதில்: ஒரு ஓவியன் மனித உறுப்புக்களை ஓவியங்களாக்குவது என்பது இயல்பானது. ஆனால் மனித உணர்வுகளை, மனிதப்போராட்டங்களை, ஓவியங்களிலே வெளிப்படுத்துவது என்பது மிக முக்கியமானது. நானும் முதலில், மலர்களை செடிகளை, இயற்கைச் சூழலை ஓவியங்களாக்கிக் கொண்டிருந்தேன். ஈழப் போராட்டந்தான் என்னை மனிதனின் துக்கங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், அழுகைகள், அவலங்கள் போன்றவற்றை பார்க்கத் தூண்டியது, அதையே ஓவியங்களில் வெளிப்படுத்தத் தூண்டியது.

இன்றைக்கு உலகம் முழுவதும் நடைபெறும் தேசிய இனவிடுதலைப் போராட்டங்களை ஆதரிப்பதற்கும் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், போன்றவைகளை எதிர்ப்பதற்கும், சாதிய, மதவன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதற்கும், அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று போரடுவதற்கும் அவற்றையெல்லாம் என் ஒவியங்களே வெளிப்படுத்துவதற்கும் ஈழப்போராட்டமே காரணம். அப்போராட்டம்தான் எனக்கு உலகப் பார்வையை வழங்கியது. அதனால்தான் அம்மக்களின் விம்மல்களை, குமுறல்களை, மக்கள் சிந்துகின்ற இரத்தத்தை, மக்களின் போராட்டத்தை என்னுடைய ஓவியங்களிலே வெளிப்படுத்துகின்றேன்.

      என் ஓவியங்களிலே அதை உணர்ந்த அண்ணன் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் ‘பெருமூச்சை ஓவியமாக்குபவர்’ என்று எழுதினார், கூட்டங்களிலே பேசினார்.
நான் வலியை உணர்ந்து, அனுபவித்து ஓவியங்களாக்குகின்றேன். அதனால் தான் என் ஓவியங்களைப் பார்க்கின்ற பார்வையாளர்களும் அந்த வலியை உணர்கின்றார்கள். இது வெறும் ஓவியத்திறன் சார்ந்தது மட்டுமல்ல, வெளிப்பாட்டு உணர்வுசார்ந்தது. அதனால் தான் எனக்கு அது சாத்தியமாகிறது.

கேள்வி: கவின்கலை அல்லது நுண்கலைகளுள் மிகவும் கடினமான கலையெனக் கருதப்படுவது ஓவியம். இதன்பால் உங்களுக்கு ஈடுபாடு எற்பட சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?
    பதில்:  குழந்தைப் பருவத்திலிருந்தே நான் அதிகமாக எதுகிடக்கின்றதோ அதில் கிறுக்கியிருக்கின்றேன் என்று எனக்கு ஞாபகம். அதிகமாக மணற்பரப்பு. நான் பிறந்து தவழ்ந்து, வளர்ந்தது ஒரு கிராமம் என்பதால் மணற்பரப்பிற்கு பஞ்சமில்லை. அம்மணற் பரப்பில் எதாவதுகிறுக்குவது, சுவர்கள், விளக்குக் கம்பங்கள் போன்றவற்றில் எதுவித கட்டுபாடும் இல்லாமல் வரைவது என்றிருந்த என்னுடைய மனப்பாங்கு ஓவியத்தின் மேல் அதிகமாக ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியது.

     நான் வரைந்ததைப் பார்த்த என்னுடைய கிராமத்து மக்கள்தந்த ஊக்கம், பள்ளியில் என்னுடன் பயின்ற மாணவ, மாணவிகள் தந்த பாராட்டு என்னுடய ஆசிரியர்கள் எனக்களித்த வாய்ப்புக்கள் போன்றவற்றினால் ஏற்பட்ட உற்சாகம் என்னை மேலும் மேலும் வரையத் தூண்டியது. பிறகு அதில் என்னை வளர்த்துக் கொள்ள விரும்பினேன். அதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே  ஓவியனாகத்தான் ஆகவேண்டுமென்று தீர்மானித்து பள்ளி இறுதிமுடிவுடன் ஓவியக்கல்லூரியில் இணைந்தேன்.

கேள்வி:  தாய்த் தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழத் தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான நிலலைபாடு, அதிலும் வெளிப்படையான நிலப்பாடு, என்பது அரிதாகவே உள்ளதாகத் தெரிகின்றது. ஆனால், நீங்கள் வெளிப்படையாகவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் – ஆதரவு வழங்கி வருகின்றீர்கள். ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உங்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது எது?
பதில்:  நான் பள்ளி இறுதி வகுப்பை 1983 இல் முடித்துவிட்டு அதே ஆண்டு ஆகஸ்டில் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் மாணவனாக இணைகின்றேன். கல்லூரியில் இணைந்த முதல்நாளே போராட்டத்திற்காக மாணவர்களுடன் வெளியே செல்கின்ற நாளாக இருந்தது.

     
     1983 ஜூலையில் இலங்கையில் ஈழத் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த நிலையில், அப்படுகொலைகளைக் கண்டித்து ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக, இலட்சோப லட்சம் மாணவர்கள் வீதிக்கு வந்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், கண்டனக் கூட்டங்கள், மறியல்கள் என்று பல்வேறு வடிவங்களில் போராடினார்கள். எனக்கிருந்த தமிழ் உணர்வால், அப்போராட்டங்களில் என்னை மிக எளிதாக இணத்துக்கொள்ள முடிந்தது. மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அப்போது முதல்வராக இருந்த திரு எம்.ஜி.ஆர் அவர்கள் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை என்று அறிவித்தார்.

     கல்விக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டாலும், பெரும்பான்மையான மாணவர்கள், பூங்காக்களிலும் விளையாட்டுத் திடல்களிலும் ஒன்றுகூடி எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தோம்.
   
     அதுமட்டுமல்லாமல் ஏதிலிகளாக வந்திருந்த மக்களையும், போராளிகளையும் போராளிக் குளுக்களின் தலைவர்களையும் சந்தித்து எங்கள் ஆதரவையும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்தோம். என் கிராமத்திற்கு அருகில் ஓரத்தநாட்டில் ஒரு போராளிக்குழு முகாம் அமைத்திருந்தது. அம் முகாம் அமைப்பதற்குத் தேவயான மூங்கில்கள், தென்னங்கீற்றுகள், உணவிற்கான அரிசி, காய்கறிகள் என்று ஒருவருக்கு எதை எதையெல்லாம் கொடுக்க இயன்றதோ அதை எல்லாம் பெற்று அப்போராளிகளுக்கு வழங்கியதில் நானும் பங்காற்றினேன். எவ்வித தயக்கமும் இல்லாமல் தமது சொந்த உறவுகள் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றார்கள் என்ற ஒருமித்த உணர்வோடு எங்கள் பகுதி மக்கள் உதவினார்கள். இதேபோல் தமிழகம் முழுமையும் இருந்தது.
          
     இந்தக் காலங்களில் நான் சந்தித்த ஏதிலிகளாக வந்திருந்த மக்களின் கண்ணீர்க் கதைகள், நான் சந்தித்த போராளிகளின் வீரம்மிக்க போராட்ட உணர்வுகள், போராளிகளால் நடாத்தப்பட்ட ஒளிப்படக் கண்காட்சிகள் போன்றவை என்னிலும் போராட்டத் தீயைப் பற்ற வைத்தது. தமிழீழத் தேசியப் போராட்டத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அதில் பங்கேற்கவும் செய்தது. அது இன்றும் தொடர்கின்றது. என்றும் தொடரும்.

கேள்வி:  நீங்கள் ஓவியராக மட்டுமன்றி, ஒரு கல்லூரியில் ஓவியப் பேராசிரியராகவும் கடமையாற்றி வருகின்றீர்கள். உங்கள் தமிழ்த் தேசிய ஆதரவு நிலைப்பாட்டை உங்கள் மாணவர்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள்? உங்கள் செயற்பாடுகளுக்கு அவர்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது?
             பதில்:  பொதுவாக ஒரு மாணவன் சமூகத்தோடு, சமூக நிகழ்வோடு தொடர்புபடுத்திக் கொள்வதற்கும் அவற்றில் ஈடுபடுத்திக் கொள்வதற்கும் புறச்சூழல் மிக முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக 1965 இல் இந்தி எதிர்ப்பு என்பது மிக முக்கியமானது ஒன்று. அந்தப் போராட்டம் வெற்றி பெற்றதற்கு மாணவர்களின் ஈடுபாடும், பங்களிப்பும் மிக முக்கியமான காரணம்.அப்போதிருந்த அரசியல் புறச்சூழல் அம் மாணவர்களுக்கு களம் அமைத்துத் தந்தது. அப்போராட்டத்தில் மாணவர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பலர் இன்றைக்கு தலைவர்களாகவும், தளபதிகளாகவும் இருக்கின்றார்கள்.

                    
     அதேபோல் 1983இல் ஈழப் போராட்ட எழுச்சி, மாணவர் போரட்டத்திற்குக் களம் அமைத்துத் தந்தது. அதன் காரணமாகத்தான் என்னைப் போன்ற பல கலைஞர்கள், எழுத்தாளர்கள் பல அமப்புக்களுக்கு தலைவர்களாக இன்றைக்கு இருக்கின்ற பலர் உருவானார்கள்.
             
     ஆனால் 1965, 1983 இல் இருந்ததைவிட இப்போது மிக மோசமான நிலை தமிழர்களுக்கு  இருக்கின்றது     ஆனால் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான களத்தை அமைப்பதற்கும் புறச்சூழலை உருவாக்குவதற்கும் அரசியல் கட்சிகள் தயாரில்லை. புறநிலையில் பொதுநலத்தைவிட தன்னல அரசியலே மேலோங்கி இருப்பதால் அது மாணவர்களிடமும் பிரதிபலிக்கின்றது.        
      
     இதிலிருந்து தான் என்னுடைய மாணவர்களையும் நான் பார்க்கவேண்டி இருக்கின்றது.ஒன்றை இழந்துதான் மற்றொன்றைப் பெறமுடியும். ஆனால் எதையும் இழக்க யாரும் தயாராக இல்லை, தமிழ் குறித்தும், தமிழன் குறித்தும், சமூகம் குறித்தும் பேசுவது இங்குபயங்கரவாதச் செயலாக சுட்டப் படுகின்றது. இச்சூழலை புரிந்துகொள்வதும், அறிந்துகொள்வதும், உள்வாங்கிக் கொள்வதும், தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் இன்றைய மாணவர்களிடம் குறிப்பாக எங்கள் மாணவர்களிடம் குறைவாகவே இருக்கின்றது. ஆனால் என்னுடய செயற்பாடுகளில் என்னுடைய மாணவர்கள் தொடர்ந்து துணை நிற்கிறார்கள்.

கேள்வி:  தற்போது வன்னியில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள மனித அவலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. நீங்கள்கூட தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியின் தொடர்முழக்கப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாக அறிகின்றோம். வேறு என்னென்ன போராட்டங்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன? நீங்கள் அடுத்ததாக என்ன செய்ய உத்தேசித்து இருக்கின்றீர்கள்?
            பதில்:  தற்போது வன்னியில் தமிழ்மக்கள் எதிர்நோக்கியுள்ள மனித அவலம் குறித்து தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளார்கள். இன்று என்றல்ல எப்பொழுதெல்லாம் அங்கு தமிழீழத்தில் மக்கள் துன்பத்திற்கு உள்ளாகிறார்களோ அப்பொழுதெல்லாம் இங்கு தமிழகத்தில் துடிதுக், கொதித்துப் போகிறார்கள்.
                     
     குறிப்பாக வாவுனியா இராணுவத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் வளியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தியதில் இந்தியாவின் இரண்டு இராணுவப் பொறியியலாளர்கள் காயப்பட்டதற்குப் பின்னர், இந்தியாவின் பொய்முகம் கலைந்தது. எங்கள் தமிழர்களை கொல்வதற்கு இந்தியா துணைபோகிறதா என்று தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளார்கள். அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்து தமது கண்டனங்களை, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று பல வடிவத்தில் வெளிப்படுத்தி வருகின்றன.
     
முதலில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தைச் செய்தது. அடுத்து தமிழ் படைப்பாளிகள் முன்னணி சார்பில் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு நாள் முழுவதும் நடந்த தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

     அடுத்து திராவிட இயக்கத் தமிழர்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 2 அன்று காந்தி பிறந்த நாளில் இந்திய பொதுவுடமைக் கட்சி மாநிலம் தழுவிய உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தியது. இதில் பெரும்பாலான கட்சிகளும் அமைப்புக்களும் கலந்துகொண்டு ஈழத் தமிழ் மக்களுக்கு தம்முடைய ஆதரவைத் தெரிவித்தன. இந் நிகழ்வு அகில இந்திய அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழீழப் போராட்டம் குறித்த கொள்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கின்றேன்.    

     பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், இலங்கைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ம.தி.மு.க வும் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கின்றது. தி. மு.க வும்   பொதுக் கூட்டம் நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ந்து போராட்டத்தை அறிவித்து வருகிறார்கள்.

கேள்வி:  தமிழ்த் தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு இருந்தது. தற்போது அது குறைந்து போய்விட்டது. மீண்டும் முன்னரைப் போன்ற ஒரு ஆதரவு நிலைப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கின்றதா? அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவை?
                 பதில்: தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தில் இன்றைக்கும் பலத்த ஆதரவு இருக்கின்றது. மக்கள் உணர்வெழுச்சியுடன் இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இருந்த அதே ஆதரவுநிலை மக்களிடத்தில் அப்படியே இருக்கின்றது. ஆனால், அது நீறு பூத்த நெருப்பாக இருக்கின்றது.

                  
     மக்களிடத்தில் இருக்கின்ற உணர்வை, எழுச்சியை ஒருங்கிணைத்து வெளிக்காட்டவேண்டிய தலைவர்கள் ‘கூட்டணி உறவு’ என்ற சிக்கலில் மாட்டிக்கொண்டு நிற்கிறார்கள். கூட்டணி உறவு நலன்களைக் கடந்து ஈழ விடுதலையை ஆதரிக்கின்ற கட்சிகள் , அமைப்புக்கள் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்று என்னைப் போன்ற படைப்பாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம்.
                           
     எல்லாவற்றையும் கடந்து நாங்கள் தமிழகத்தில் தமிழீழ உறவுகளுக்காக எழுப்புகின்ற ஆதரவுக் குரல், தமிழீழத்திலும், புலத்திலும் வாழ்கின்ற நம்முடைய மக்களுக்கு கேட்காத அளவிற்கு ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.தமிழகத்தின் ஊடகங்கள் பெரும்பாலும் பார்பன உடகங்கள். தமிழர்களால் நடத்தப்படுகின்ற ஒருசில ஊடகங்களும் பார்ப்பானிய மயப்படுத்தப்பட்டு பார்ப்பனர்களை விட கேவலமாக இருந்து தமிழர்களின் ஆதரவுக் குரலை இருட்டடிப்புச் செய்து வருகின்றன. 
              
     தமிழகத்தின் பெரும்பான்மையான ஊடகவியலளர்களை சென்னையிலுள்ள இலங்கத் தூதரகம் பல்வேறுவகையிலும் வளைத்துப் போட்டு தமிழகத் தமிழரின் எழுச்சியை  வெளியுலகிற்குத் தெரியாமல் தடுப்பதாகவும் அறிகின்றோம்.

     ஆனந்தவிகடன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள், ஈழப் போராட்டத்தையும் விடுதலப் புலிகளையும் ஆதரிக்கின்றார்கள் என்று தெரியவந்தது. அந்தப் பத்திரிகை விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற பத்திரிகை அல்ல. உண்மையை அவர்கள் வெளியிட்டார்கள்.
             
     அதேபோல், தமிழீழத்தில் நடக்கும் போராட்டத்தைப் பற்றிய உண்மைச் செய்திகளை ஊடகங்கள் தமிழக மக்களுக்குத் தருவதில்லை. அதனால் உண்மை நிலை தெரியாமல் மக்கள் தவிக்கின்றார்கள். நான் தமிழீழம் சென்று வந்த பிறகு ‘தமிழீழம் நான்கண்டதும் – என்னைக் கண்டதும்’ என்ற நூலை  எழுதி வெளியிட்டேன். அது 380 பக்கங்கள் கொண்ட பெரிய நூல். பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி மூன்று பதிப்புகள் வெளிவந்து இருக்கின்றது. மக்களிடதில் மிகப்பெரிய வரவேற்பு இருந்ததால் தான் இது சாத்தியமாயிற்று.
                    
கேள்வி: தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘உலகத் தமிழர்களின் தலைவன்’என தன்னைக் கருதி வருகின்றார். ஆனால், அவரின் செயற்பாடுகள் ஈழத் தமிழர்களுக்கு விரோதமானவையாகவே இருந்துவருகின்றது. அவர் நிர்பந்தத்தில் இவ்வாறு செயற்பட்டுவருகின்றாரா? அல்லது மனப்பூர்வமாகவே இவ்வாறு செயற்படுகின்றாரா?
                           பதில்:  தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இம்முறை முதல்வராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து உலகத் தமிழர்கள் அவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்தார்கள். இன்றும் எதிர்பார்க்கின்றார்கள். நாங்களும் நிறைய எதிர்பார்க்கின்றோம். அவரின் செயற்பாடு நமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்பது உண்மையே.
 
      தமிழீழ விடுதலை வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருப்பது போன்ற பதிவு கலைஞருக்கும் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம் அதற்கானவாய்ப்பைக் காலம் அவருக்குத் தந்திருக்கின்றது. எந்த நிர்பந்தத்திற்கும் இடம் கொடுக்காமல் அந்த வரலாற்றுக் கடமையை அவர் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். தமிழினத்தின் சாபக்கேடு எல்லோரும் கட்சிகளாகப் பிரிந்து கிடப்பது.

      வேறு இனங்களிலும் பல்வேறுகட்சிகள் இருக்கின்றன. ஆனால், இன மொழி உரிமைக்காக கட்சி வேறுபாட்டைக் கடந்து ஒருமித்துச் செயற்படுகின்றார்கள். தமிழினத்தில் மட்டும்தான் உடன்பட்ட கொள்கையில் கூட வெவ்வேறு திசையில் நிற்கின்றார்கள். இதனால் பலவீனப்பட்டு நிற்கின்றோம். தமிழினத்தில் இருக்கின்ற தலைவர்களிலேயே கலைஞர்தான் மூத்தவர், அனுபவம் மிக்கவர். அவருடைய ஆட்சி நடைபெறுகின்ற போது இந்திய மத்திய அரசுக்கு இவர்தான் நிர்பந்தத்தைக் கொடுக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற ஒருசிலரின் நிர்ப்பந்தத்திற்கு இவர் பணிந்து விடுகின்றார். சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டபோது ‘செல்வா நீ எங்கே சென்றாய்’ என்று ஒரு இரங்கல் கவிதை எழுதினார். அது உண்மையிலேயே அவரின் ஆழமான உள்ளத்திலிருந்து வந்ததுதான். அதில் சிறிதும் ஐயமில்லை.
          
      தமிழீழ விடுதலைப் போராட்டம் மிக முக்கியமான கால கட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்ற இவ்வேளையில் கலைஞரிடம் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு வெறும் எதிர்பார்ப்பாகவே முடிந்துவிடக் கூடாது.
        
கேள்வி:  இந்திய நடுவண் அரசு ஈழத் தமிழர்களுக்கு விரோதமாகவே ஆரம்பம் முதல் செயற்பட்டு வருகின்ற போதிலும் ஒருசில ஈழத் தமிழர்கள் இன்னமும் இந்தியா தமிழ் மக்களுக்கு உரிமையைப் பெற்றுத்தரும்; என நினைக்கிறார்கள்.நீங்கள் அதனை நம்புகிறீர்களா?
                      பதில்:  திருமதி இந்திராகாந்தி இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது ஈழப் போரட்டத்தில் ஈடுபாடு கொண்டு ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அனைத்திற்கும் பயிற்சியும் உதவியும் செய்தார். இலங்கையில் ஈழத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தமிழகத்தில் எழுந்த ஒருமித்த குரலுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் திருமதி இந்திராகாந்திக்கு இருந்தது. எல்லவற்றுக்கும் மேலாக அவருக்கு இருந்த அரசியல் அனுபவம் தொலை நோக்குப் பார்வை என்பவற்றால் இப்பிரச்சனையில் தலையிட்டு இலங்கை அரசை தொடர்ந்து மிரட்டிப் பணிய வைத்திருந்தார்.
       
      அதற்கு முக்கிய காரணம் பிராந்திய வல்லாதிக்கமும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு ஆறரைக்கோடித் தமிழர்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று இந்திரா கொண்டிருந்த அபிப்பிராயத்தாலும் இப் பிரச்சனையில் தலையிட்டார்.

      அவருக்குப் பிறகு வந்த ராஜீவ்காந்தி அரசியலில் அனுபவமின்மையாலும் பக்குவமின்மையாலும் தமிழீழப் பிரச்சனையை சிக்கலாக்கி விட்டார்.இந்திரா காலத்தில் கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களுடைய கொள்கை வகுப்புக்கள் இந்திராவின் அரசியல் அனுபவம் மற்றும் தொலை நோக்குப் பார்வைக்கு உட்பட்டதாகவே இருந்தன.இந்திரா அவற்றை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் இப் பிரச்சனையில் அனுபவம் மிக்க அதிகாரிகளின் அறிவுரைகளை மீறியதோடு மட்டுமல்லாமல் அடாவடித்தனமாகவும் நடந்து இப் பிரச்சனையை சிக்கலாக்கினார். அதிலிருந்து தமிழர் நலனுக்கு எதிராகவே இந்திய நடுவன் அரசு செயற்பட்டு வருகின்றது இந்திய அயலுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் வேற்று மொழிக்காரர்கள். எனவே அவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்கு எதிராகத் தான் செயற்படுவார்கள்.
          
      மற்றொன்று இந்தியா தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்காது. இதை அண்ணன் பிரபாகரன் 80 களிலேயே உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவிலேயே உளுத்துப்போன மாநில உரிமையை தீர்வாக இலங்கையிலும் திணிக்க முயலும். அது ஒருபோதும் நம் போராட்டத்திற்கான தீர்வாகாது. நம்மைப் பொறுத்தவரை தனித் தமிழீழக் குடியரசை நிறுவுவதுதான் – அது ஒன்று தான் – தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுத்தரும்.இதற்கு இந்திய நடுவன் அரசு உதவாது.
 
      இந்திய நடுவண் அரசுக்கு நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்திற்கு உதவாவிட்டாலும் பறவாயில்லை. தமிழ்மக்களைக் கொன்றுகுவித்து கோரத்தாண்டவம் புரிகின்ற சிங்கள  இனவெறி அரசுக்கு ஆயுத உதவி செய்வதையும் துணைபோவதையும் நிறுத்தவேண்டும் என்பதுதான்.

கேள்வி:  பெரியாரியல் சிந்தனை மையம் தங்களுக்கு ‘பெரியாரியல் சிந்தனையாளர்’ விருதை அண்மையில் வழங்கியதாக அறிந்தோம். இது எதற்காகத் தரப்பட்டது? உங்களு மட்டும்தான் வழங்கப் பட்டதா?
                   பதில்:  பெரியாரியல் சிந்தனைமையம் – என்ற அமைப்பு இராசபாளையத்தில் செயற்பட்டு வருகின்றது. பெரியாருடைய சிந்தனையையும் கொள்கையையும் பரப்புவதற்கான ஒரு அமைப்பு. அவ்வமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும். பெரியார் சிந்தனைகளை ஒட்டி மாணவர்களுக்கான கட்டிரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி என்று பல்வேறு போட்டிகளை நடத்தி அவ்விழாவில் பரிசுகளை வழங்குகிறார்கள்.
                 
     ஒவ்வொரு ஆண்டும் அவ்விழாவில் ஒரு பெரியாரியல் சிந்தனையாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு பெரியாரியல் சிந்தனையாளர் விருது வழங்குகிறார்கள். இந்த ஆண்டு எனக்கு 27.09.2008 அன்று வழங்கினார்கள். இது என்னுடைய பெரியாரியல் சிந்தனை மற்றும் படைப்பு செயற்பாட்டிற்காக வழங்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பெரியாரின் பன்முகத்தோற்றத்தை 25 கோணங்களில் ஓவியங்களாக்கி ‘திசைமுகம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஓவியக்கண்காட்சி நடத்தினோம். அது உலக அளவில் பல நாடுகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.       

. . . . . * . . . . .