ஓவியம் மக்களிடமிருந்து விலகிப் போய்விட்டது!

சந்திப்பு:ஜீவ சகாப்தன்.

பல்சுவை காவியம்.ஆகஸ்ட் 2014.

ஓவியனாக வரவேண்டும் என்கிற தாகம் உங்களது சிறு வயது கனவா?அல்லது இடையில் ஏற்பட்டதா?

குழந்தைப் பருவத்திலிருந்தே ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருந்தது.எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஓவியக் கல்லூரியில் சேர வேண்டும் என்கிற முடிவினை எடுத்து விட்டேன்.ஆனால் மருத்துவராக வரவேண்டும் என்பது அப்பாவின் விருப்பம்.அழுது போராடி பத்தாவது முடித்தவுடன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன்.கல்லூரியில் சேர்ந்தவுடன் தன் மகனின் எதிர்காலம் பாழாகிவிடுமோ என்கிற பயம் அப்பாவிற்கு இருந்தது. இன்று ஒரு ஓவியனாகவும்,கவின் கலைக் கல்லூரியில் 20 வருட காலமாக ஓவியப் பேராசிரியராக எனக்குப் பிடித்த துறையில் பணிபுரிந்து வருகிறேன்.

சமூக மாற்றத்திற்கான பணியில் ஓவியனின் பங்கு என்ன?

சமூக மாற்றத்திற்கு மிகப்பெரிய படைத்தளம் ஓவியம்.எழுத்திற்கு மொழி தேவை.ஆனால் ஓவியத்திற்கு மொழி தேவையில்லை.ஓவியம் உலகப் பொதுமொழி. உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களை இணைப்பதற்கு ஓவியத்தை ஆயுதமாகப் பயன்படுத்தமுடியும்.எழுத்திற்கு எல்லை உண்டு. ஓவியத்திற்கு எல்லை இல்லை.உலக மானுடர் அனைவருக்கும் ஒரு செய்தியை ஓவியம் கொண்டு சேர்க்கும்.

சமூகப்பொறுப்பு ஒருவனை படைப்பாளி ஆக்குகிறதா,அல்லது படைப்பாளியின் இயல்பு அவனுள் சமூகப் பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

இரண்டுமே நிகழும்.இரண்டிற்கும் சரிவிகிதத்தில் சாத்தியப்பாடுகள் உண்டு.சமூகப் பொறுப்புணர்ச்சி ஏற்படுவதற்கு சமூகச்சூழல் முக்கிய வினையாற்றுகிறது.பிறப்பின் அடிப்படையில் யாருமே போராளி கிடையாது. வாழும் சூழல் ஒருவனின் போராட்டக் குணத்தை தீர்மானிக்கிறது.என்னைப் பொறுத்தவரை 83ல் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தேன்.அப்போது இருந்த தமிழகத்தின் சமூகச் சூழல் என்னுள் போராட்ட உணர்வினை ஏற்படுத்தியது. ஆகவே சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாக நான் பரிணமிப்பதற்கு 80களில் தமிழகம் கண்டிருந்த சூழல் மிகமுக்கிய காரணம் எனலாம்.

உலகின் மூத்த மொழி தமிழ்மொழி என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எத்தகைய தொன்மையான மொழியாக இருந்தாலும், அதற்கு முந்தைய தொடர்பு மொழியாக ஓவியம்தான் இருந்திருக்கிறது.அந்த வகையில் மொழி என்கிற வடிவம் கண்டறியப் படாமலிருந்திருந்தால், இன்று நாம் அனைவரும் சிறந்த ஓவியர்களாக இருந்திருப்போமா?


சிறந்த ஓவியர்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. தற்போது பயன்படுத்துகிற மொழி வடிவம் கண்டறிவதற்கு முன் ஆதிமனிதன் பயன்படுத்திய வடிவம் வெறும் குறியீட்டு வடிவந்தான்.அந்தக் குறியீடுதான் தொடர்பு மொழியாக இருந்திருக்கிறது.ஆனால், மொழியை மனிதன் கண்டறிந்த பின் இன்று ஓவியம் பல்வேறு பரிணாமங்களை அடைந்து விட்டது.நமது பெண்கள் கோலங்கள் அழகாக வரைவதைப் பார்க்கிறோம். அதற்காக கோலம் நன்றாக வரையத்தெரிந்த பெண்களையெல்லாம் சிறந்த ஓவியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியுமா. கோலங்கள் வேறு, ஓவியங்கள் வேறு. அதுபோலத்தான் அன்றையக் குறியீடுகள் வேறு. இன்றைய ஓவியங்கள் வேறு.

இசைக்கும்,திரைப்படத்திற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை தமிழர்கள் ஓவியத்திற்கு கொடுப்பதில்லையே, ஏன்?

ஒப்பீட்டளவில் பார்த்தால்,இசையைவிட ஓவியம்தான் குழந்தைக்குத் தோற்றுவாய். மொழி தெரிந்த பின்னர் தான் குழந்தைக்கு இசையே அறிமுகம். மொழிக்கு முந்தைய வரலாறு ஓவியத்திற்கு உண்டு.இசை இன்று மக்களின் சந்தைப் பொருளாகி விட்டது. ஆதிக் காலத்திலிருந்து மக்களுடன் ஒன்றியிருந்த ஓவியம் இன்று மக்களிடமிருந்து விலகி அந்நியத்தன்மை கொண்டதாக மாறிவிட்டது.

தமிழ்ச்சமூக மரபிற்கும் ஓவியத்திற்கும் உள்ள பிணைப்பு பற்றி சொல்லுங்களேன்?


தஞ்சை பெரியக்கோவில், சித்தன்னவாசல் ஓவியங்கள் அன்றையக் காலகட்டத்தின் பதிவுகள்.கோவில் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் கோயிலின் ஸ்தலப் புராணத்தை வெளிப்படுத்துபவை. நம் மரபு சார்ந்த கூறுகள் அனைத்தையும் நாம் ஓவியங்களிலிருந்து தான் கற்க முடியும்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழனின் வரலாற்றை இந்த ஓவியங்கள் தான் செப்புகின்றன. தமிழர்களின் பண்பாடு,வரலாறு,கலாச்சாரம் தொடர்பான செய்திகள் குறித்த முறையானத் தொகுப்பு இல்லை.இன்னும் நம்முடைய தொன்மை வாய்ந்த கலைப்படைப்புகளை ஆராய்சிகள் மூலமாக வெளிக்கொணர வேண்டும்.தமிழர்களின் வரலாற்றையும் கலை அறிவையும் பாதுகாக்க வேண்டும்.

தமிழில் அரசவைக் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள்.அதுபோல அரசவை ஓவியர்கள் இருந்திருக்கிறார்களா?

இல்லை.ஆனால் உலகம் முழுவதும் ஓவியர்களை ராஜதந்திரிகளாக, தூதர்களாக பயன்படுத்தும் பழக்கம் இருந்திருக்கிறது.ஏனென்றால் ஓவியர்களுக்கு மதிநுட்பம் அதிகம்.அந்த நுண்ணறிவை அரசர்கள் பயன்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம்.இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது.

அழகியலை ஓவியமாகப் பதிவு செய்யும்போது தங்கள் மனம் எப்படி இருக்கும்.அவலத்தைப் பதிவு செய்யும் போது தங்கள் மனம் எப்படி இருக்கும்.காட்சியின் பாதிப்பு ஓவியனுக்குள் இறங்க வேண்டுமா, அல்லது தொழில் நிமித்தம் திறமையாக இருந்தால் மட்டும் போதுமா?

உணர்வும் நுட்பமும் இணைந்தால் தான் ஒரு படைப்பு வெற்றி பெரும். அழகியல் என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். சேரியில் இருக்கும் குழந்தைக்கும், மாளிகையில் வசிக்கும் குழந்தைக்குமான அழகு குறித்த வரையறை வேறுபடுகிறது. மேலும் அழகிற்கான வரையறையை நிர்மாணிப்பதில் சமூகம், நிறம், வர்க்கம் சார்ந்த அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் குறித்த அறிவும் நுட்பமும் உடையவர் மட்டுமே சிறந்த ஓவியராக பரிணமிக்க முடியும்.அழுகையும்,சிரிப்பும் உணர்வின் வெளிப்பாடுதான். இவன் ஏன் அழுகிறான்,இவன் ஏன் சிரிக்கிறான் என்கிற அரசியல் பார்வையோடு ஓவியத்தைப் படைக்கும்போது அது முழுப் பரிணாமம் பெறுகிறது. வெறும் ஓவியனாக மட்டும் ஓவியத்தைப் படைத்துவிட முடியாது.முதலில் அவன் மனிதனாக அந்தக் காட்சியை உள்வாங்க வேண்டும்.பிறகுதான், தான் அனுபவித்த வலியை, இன்பத்தை அனுபவத்தை படைப்பாக வெளிக்கொணர வேண்டும்.அப்போதுதான் அது மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்.

ஓவியத் துறையில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு நிறைவானதாக இருக்கிறதா? குறைவாகத்தான் இருக்கிறது. இந்திய அளவிலும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். தமிழக அளவிலும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு மிகப் பெரிய அளவிலான வெற்றிடம் இருக்கிறது. அவர்களது வாழ்க்கைச் சூழலும் சமூகக் கட்டமைப்பும் இந்தத் துறைக்குள் நுழைவதற்கு தடையாக இருக்கிறது. ஆண்கள் இத் துறைக்குள் நுழைவதையே இன்றைய குடும்ப அமைப்பு ஏற்றுக் கொள்வதில்லை.அப்படி இருக்க பெண்களின் குறித்து தனியாக விளக்க வேண்டியதில்லை.

படைப்பாளிகள் பலரும் மது அருந்துபவர்கள் என்கிற கருத்து நிலவுகிறது. சில படைப்பாளிகள் மது அருந்துவதை இயல்பான நிகழ்வாக பதிவு செய்கிறார்கள். இந்தக் கருத்தாக்கத்தை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

மது அருந்துதல் தனிமனித சுதந்திரம் சார்ந்தது. உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்துதான் பலர் இங்கு மது அருந்துகின்றனர். ஆனால், அதன் எல்லை சமூகத்திற்குக் கெடுதலாக வந்துவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். தனிமனித சுதந்திரம் என்கிற பெயரில் சமூகத்தின் சுதந்திரத்தைக் கெடுக்கக்கூடாது. கலைஞர்கள் மற்ற மனிதர்களை விட சமூகத்தில் கூடுதல் பொறுப்புடையவர்கள். சராசரி மனிதர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. இன்னும் பல ஓவியர்களுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை. எத்தனையோ ஓவியர்கள் பல்வேறு சிரமங்களுக்குப் பிறகு தான் திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த அளவிற்கு ஓவியர்கள் மீது நம்பிக்கை இல்லாத போக்கு இந்த சமூகத்தில் நிலவுகிறது. இதையெல்லாம் உடைத்தெறிகிற கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது.

உங்கள் ஓவியங்கள் சமூகத்திற்கு என்னென்ன செய்திகளை சொல்லியிருக்கிறது?

உலகில் எந்த மூலையில் ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் அதற்கு எதிரான ஆயுதமாக எனது ஓவியங்கள் இருக்கும்.குஜராத் பூகம்பம்,குஜராத் மதப் படுகொலை,சுற்றுச்சூழல் சீர்கேடு,சாதி, மத, நிற,பாலின பாகுபாடுகள் என பல்வேறு தளங்களில், என் தூரிகைகள் பேசியிருக்கின்றன,கடந்த 30 ஆண்டுகளாக ஈழத்தில் நம் சொந்தங்கள் அனுபவித்து வரும் இன்னல்களை என் தூரிகை வலியுடன் பதிவு செய்து வருகிறது. இப் பாரினில் மானிட சமூகம் சந்திக்கும் இன்பம்,துன்பம்,கண்ணீர்,புன்னகை என அனைத்தையும் என் ஓவியங்கள் பேசும்.

ஓவியங்களை வீட்டில் வாங்கி வைத்து, மேல்தட்டு வர்க்க மனநிலையாக மட்டுமே பார்க்கப்படும் சூழலை எவ்வாறு பார்க்கிறீர்கள்.அடித்தட்டு மக்களிடம் ஓவியங்கள் குறித்த ரசனை இல்லையா அல்லது ஓவியச்சந்தை அவர்களிடம் சென்று சேரவில்லையா?

ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு மேட்டுக்குடி வர்க்கத்திடமும் கிடையாது. தமிழ்க் குடும்பங்களில் நம் முன்னோர்களின் படத்தை மாட்டி வைக்கும் மரபு குறைந்து வருகிறது. சமாதி வணக்கம் குறைந்து விட்டது. முப்பாட்டன் வரலாறு தெரிவதில்லை. ஓவியங்கள் நம் மக்களிடம் சென்று சேராததற்கு இந்த சமூகக் காரணிகள் மிக முக்கியக் காரணம்.சாமானிய மக்கள் நுகர முடியாத பண்டமாக ஓவியம் இருக்கிறது. ஓவியத்தை வாங்குவது என்பது, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதுபோல் ஆகிவிட்டது. நல்ல புகழ்பெற்ற ஓவியரின் ஓவியங்கள் வணிக நோக்கத்திற்காகவே வாங்கப்படுகின்றன. பத்து இருபது வருடங்களுக்குப் பின் அது நல்ல விலைக்கும் போகும். இந்த வியாபார நோக்கமே இன்று ஓவியங்களை நுகர்வோரின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

இந்திய அளவில் உசேன் அவர்களின் ஓவியங்கள் நல்ல விலைக்குப் போகின்றன. ஓவியங்கள் ஏழை எளிய மக்களிடம் சேற்று சேருவதற்கு அழகுணர்ச்சியுடன் சேர்த்து, பொருளாதாரமும் தேவை. இன்று ஓவியக் கண்காட்சிகள் நடைபெறும் இடங்கள் அனைத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகளே. அல்லது அதுபோன்ற இடங்களே.அங்கு எப்படி சாமானியன் செல்ல முடியும்.மக்கள் இருக்கும் இடங்களைத் தேடி ஓவியக் காட்சிகள் நடத்தப்பட வேண்டும். என்னுடைய கண்காட்சிகள் அனைத்தும் தெருக்கள், பள்ளிக்கூடங்கள், சமூகக்கூடங்கள் என மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டன. தொடர்ந்து அவ்வாறே நடத்துவேன்.

ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பெருகுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

பள்ளிக்கூடங்களில் ஓவியத்தை பாடமாக வைப்பதை கட்டாயமாக்க வேண்டும்.பயிற்சி பெற்ற ஓவிய ஆசிரியர்களைக் கொண்டு அந்தப் பாடம் நடத்தப் பட வேண்டும்.ஓவிய அறிவை வளர்த்துக் கொண்டால் ஓவியத் துறையில்தான் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில்லை. கணிதத்துறையில் நிபுணத்துவம் பெறவும் ஓவியம் முக்கியம். பௌதீகத்தைப் புரிந்துகொள்ளவும் ஓவியம் துணை புரியும். பொறியியல் மற்றும் அறிவியல் துறையில் சாதிக்கவும் ஓவிய அறிவு அவசியம்.மொத்தத்தில் அனைத்துத் துறைக்கும் ஓவிய அறிவு முக்கியம். இந்த உண்மைகளை மாணவர்களுக்கு உணர்த்தும் பணியினை அரசு செய்ய வேண்டும்.ஓவியர்களாக இருப்பவர்கள் சமூகம் சார்ந்த பொது அறிவை வளர்த்துக் கொண்டு தனிதன்மையாளர்களாக சமூகத்தில் பரிணமிக்க வேண்டும்.