உறங்கா நிறங்கள்

நேர்காணல்: சுந்தரபுத்தன்

புதியபார்வை, மே 1- 15, 2005


ஓவியர் புகழேந்தி வண்ணங்களில் வாளின் வீச்சையும், தூரிகையைப் போராடும் ஆயுதமாகவும் பார்க்கிற சமூகத்தின் மீது நேசம் வைத்த மனித நேயம்மிக்க ஒரு கலைஞன். காலத்தை மீறி சிந்திக்கிற ஓவியராக வெளிப்படுகிற இவர், கலை மக்களுக்காகவே என்பதில் உறுதியாக நிற்கிறார். கலை, வாழ்க்கை இரண்டையும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நேர்மையான படைப்பாளி, எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், அதிரும் கோடுகள், தூரிகைச் சிறகுகள் போன்ற நூல்களின் ஆசிரியர். தஞ்சை மண்ணின் தும்பத்திக்கோட்டை என்ற சிற்றூரில் பிறந்தவரான புகழேந்தி, தனது பூர்வீகத்தின் வேர்களைத் தேடிப்பார்க்கிறார்.

என் சிறு பிராயத்தில் கிராமியச் சூழல்தான் ஓர் ஆசிரியனாக இருந்து தூரிகை பிடிக்க வைத்தது. எனது ஞாபகங்கள் சரியாக இருக்கமானால் மூன்றாவது படிக்கும்போதே வரலாற்று நூல்களில் காணப்பட்ட பிரபுக்களின் முகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவற்றை நேரம் போவது தெரியாமல் வரைந்திருக்கிறேன். தொடக்கப்பள்ளி வரை வெறும் பென்சிலும், கரித்துண்டும் பச்சை இலைகளும்தான் தூரிகைகளாக இருந்தன. உயர்நிலைப் பள்ளியில் தான் வண்ணப் பென்சிலையே பார்க்க முடிந்தது. பள்ளி வாழ்க்கையில் ஓவிய ஆசிரியர் பசுபதிதான் என்னை நெறிப்படுத்தியவர். அவர்தான் என்னுடைய ஆர்வத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு தட்டிக் கொடுத்தவர். அவர் தந்த உற்சாகம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்தது. அப்போதே நாம் ஒரு ஓவியனாகத்தான் வாழவேண்டும் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில் ஓவியப் படிப்பில் சேரவேண்டும் என்று நான் சொன்னபோது குடும்பத்தினர் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனது பிடிவாதம் அதையெல்லாம் வெற்றிகொண்டு விட்டது. 1983இல் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஐந்தாண்டுகள் படித்தேன். கல்லூரி வாழ்க்கை ஓவியக் கலையின் புதிய பரப்புகளையும் களங்களையும் அறிமுகப்படுத்தியது. நுட்பம் தெரிந்த வனாக வளர வழிகாட்டியது. அப்போது கல்லூரிக் காலத்தில் ஈழப்போராட்டம் கொழுந்து விட்டெறிந்தது.

மற்ற மாணவர்கள் அழகியல்ரீதியான ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தபோது நான் ஈழத் தமிழர்களின் துயரங்களை, கண்ணீரை ஓவியங்களாக மாற்றினேன். நல்ல வரவேற்பும், உற்சாகக் குரல்களும் கேட்டன. அதன் பிறகுதான் ஒரு படைப்பாளனுக்கு அழகியலும், சமூக அரசியலும் சமஅளவில் தேவை என்பதை உணர்ந்தேன். 1987இல் ஈழத்தை அடிப்படையாக வைத்து வரைந்த "பாதிக்கப்பட்டவன்" என்ற ஓவியத்திற்குத் தேசிய விருது கிடைத்தது. மரங்களையும், இயற்கைக் காட்சிகளையும் ஓவியங்களாகத் தீட்டிக் கொண்டிருந்த நான் புதிதாகப் பிறப்பெடுத்தேன். இந்தியாவின் சாதிய, மத, பெண்ணிய, வர்க்க ஒடுக்குமுறைகளையும் அரசு பயங்கரவாதத்தையும் படைப்புகளில் வெளிப்படுத்தத் தொடங்கினேன். மறுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான குரலாக, மனித விடுதலைக்கான போர் முழக்கமாக ஈழப் போராட்டத்தைப் பார்த்தேன்.

அதற்கான ஆதரவுக் குரலை என்னுடைய ஓவியங்களில் பார்த்தவர்களெல்லாம் பாராட்டினார்கள். வரவேற்றும் எழுதினார்கள். ஆனாலும், எனது கலைப் பயணம் மக்களை நோக்கித்தானே தவிர விமர்சகர்களை நோக்கி அல்ல. முதலில் அரூப ஓவியங்களை வரைந்திருக்கிறேன். என் படைப்புகளின் நோக்கம் மக்களைச் சார்ந்து இருப்பதால் அவர்களுக்குப் புரிந்த மொழியில் பேசவேண்டியிருக்கிறது. எனவே உருவ ஓவியங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டேன்.

கல்லூரியில் படிக்கும்போது தைல வண்ணத்தில் ஆர்வமாக இருந்தேன். அப்போது என்னிடம் அஜந்தா ஓவியங்களின் பாதிப்பும் அதிகம். தமிழர்களுக்கே உரிய வெளிச்சமான வண்ணங்களையே தேர்ந்தெடுத்து வரைந்து கொண்டிருந்தேன். சமூகப் பிரக்ஞையுடன் ஓவியப்படைப்புகளை செய்துகொண்டிருந்தேன். ஆனால் இதுபோன்ற ஓவியங்களுக்கு, சக மாணவர்கள் மத்தியில் ஒத்துழைப்பு இல்லாமல்தான் இருந்தது. எப்போதும் படைப்புக்கும், படைப்பாளனுக்கும் ஒரு நோக்கம் இருக்கவேண்டும். நானொரு ஓவியன் என்பதை மீறி என்னுடைய ஈடுபாடும், அக்கறையும் இந்த சமூகத்தின் மீது இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

ஓவியப் படிப்பை முடித்ததும் இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்தேன். பிறகு ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் எம்.எஃப்.ஏ. படித்தேன். அது இன்னும் என் ஓவிய வெளியை  விசாலமாக்கியது. பெயிண்டிங் பற்றி நுட்பமான விஷயங்கள் பிடிபட்டன. உலகின் பல்வேறு வகைப்பட்ட ஓவியப் போக்குகளைத் தெரிந்து கொண்டேன். மொழி, நாடு, இனம் என்ற எல்லைகளைத் தாண்டி இன்னொரு தளத்திற்குச் செல்லும்போது அறிவு விரிவடைகிறது. அங்கும் மண்டல்-க்கு ஆதரவான ஓர் அமைப்பை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தேன். மனித உரிமைப்போராளிகளான கத்தார், வரவரராவ், கேஜி. கண்ணபிரான், பேராசிரியர் பாலகோபால் ஆகியோரைச் சந்தித்தேன்.

எம்.எஃப்.ஏ. முடித்து வந்ததும் உடனே வேலை கிடைத்துவிடவில்லை. பல பத்திரிகை அலுவலங்களுக்குப் படையெடுத்தேன். புதிய பார்வை, தினமணிக் கதிர், தாமரை போன்ற இதழ்களில் தொடர்ந்து ஓவியங்கள் வரையும் வாய்ப்புக் கிடைத்தது. ஓரியண்ட் லாங்மேன் புராஜெக்ட் ஒன்றில் வேலை செய்தேன். இப்படியாகச் சில ஆண்டுகள் ஓடிப்போயின.

1994 ஆம் ஆண்டு ஓவியக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. 95இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் பணிபுரிந்தேன். வெறும் வடிவங்களோடு மட்டும் பயணிப்பதா என்ற சிக்கல் மனதில் இருந்தது. கருப்பொருளுக்கா வடிவத்திற்கா எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது ஒரு சிந்தனையாக முளைத்தது. எனக்குத் தெரிந்த வடிவத்தில் மக்களுக்குப் புரிவதையே ஓவியப் படைப்புகளாகக் கொடுப்பதை விரும்புகிறேன். அதில் உறுதியான நிலைப்பாடு உண்டு. நான் ஓவியக் கலையில் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப, பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கிறேன். உறங்கா நிறங்கள் ஓவியங்களைத் திட்டமிட்ட சோதனை முயற்சியாகத்தான் செய்தேன்.

குஜராத் பூகம்பம் பற்றி ஓவியத்தை க்ரெயானில் கருப்பு - வெள்ளையில் தான் செய்தேன். பெரியார் ஓவியங்களை பென் மற்றும் இங்கில் வரைந்தேன். நாம் ஓவியத்திற்கென எடுத்துக்கொள்கிற கருப்பொருளே அதற்கான வடிவத்தையும் மீடியத்தையும் தேர்ந்தெடுக்கிறது. எந்தவொரு கலைஞனும் சமூகப் பொறுப்புள்ளவனாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் வெகுஜனங்களுக்கான செய்திகளை உண்மையாகப் பேசமுடியும். ஓவியக் கலையின் மேன்மை குறித்த புரிதலும் அனுபவமும் கைகூடி வந்திருக்கிறது.

நான் மாணவனாக எதை இழந்தேனோ அதையெல்லாம் என் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டும் என விரும்புகிறேன். அவர்களோடு நவீன ஓவியங்களின் உலகம் பற்றிப் பகிர்ந்கு கொள்வதையும் விவாதிப்பதையும் பெரும் வாய்ப்பாகக் கருதுகிறேன். ஒரு நல்ல கலைப்படைப்பு எதைப் பேசுகிறது? யாருக்காகப் பேசுகிறது என்பது முக்கியம். எப்போதும் நல்ல கருத்தைச் சொல்கிற படைப்பு நல்ல வடிவத்தோடும் இருக்கும்.

 

. . . . . * . . . . .