புகழேந்தியின் ஓவிய உலா!

நேர்காணல்:அருணகிரி

சங்கொலி,6.9.2013


என்னுடைய சொந்த ஊர் தும்பத்திக் கோட்டை. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில், மரங்களும், வயல் வெளிகளும் சூழ்ந்த, அழகிய குக்கிராமம். தந்தை மா. குழந்தைவேலு ஒரு விவசாயி. சோழவளநாட்டில் எங்கள் பகுதியை, பதினெட்டு கிராமங்களை உள்ளடக்கிய ‘கீழ் வேங்கை நாடு’ என்று சொல்லுவார்கள். நாயன்மார்கள் பாடிய பரிதியப்பர் கோவில் உள்ளது. பழம்பெருமை மிக்கது.

எங்கள் ஊரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல உளூர் கிராமத்துப் பள்ளியில்தான், 1983 ஆம் ஆண்டு, உயர்நிலைக் கல்வி வரையிலும் கற்றேன். நாள்தோறும், போகவர எட்டு கிலோமீட்டர்கள் நடக்க வேண்டும். மரங்கள் சூழ்ந்த கோவில் தோப்பு, மண்சாலை, தார்ச்சாலை வழியாகப் போவோம். மழை பெய்தால் நனைந்துகொண்டே செல்ல வேண்டியதுதான். மிதிவண்டி கூட எனக்குக் கிடையாது. மழை பெய்தாலும், நான் தவறாமல் பள்ளிக்குச் சென்று விடுவேன். எங்கள் பள்ளியில் நான்தான் கதாநாயகன். நன்றாகப் படிப்பேன். ஓவியம் வரைவதில் முதன்மையானவன், சாரணர் அணிக்குத் தலைவன், செய்தி வாசிப்பாளன்.

நாள்தோறும் காலை இறைவணக்கத்தின்போது, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள், நான்தான் செய்திகளை வாசித்தேன். எங்கள் பள்ளிக்கு தினமணி ஏடுதான் வந்து கொண்டு இருந்தது. அதில் உள்ள செய்திகளைத்தான் வாசிக்க வேண்டும். ‘இன்றைய செய்திகள் வாசிப்பது புகழேந்தி’ என்று சொல்ல வேண்டும். ஆனால், என்னுடைய ஆங்கில ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள், ‘எப்போதும் நீதானே வாசிக்கிறாய்; எனவே, செய்திகள் வாசிப்பது புகழேந்தி’ என்று சொன்னாலே போதும் என்பார். 9,10 வகுப்பு படிக்கும்போதே, உலக அளவிலான செய்திகளை அறிந்து கொள்வதற்கு, புரிந்து உள்வாங்கிக் கொள்வதற்கு, செய்தி வாசித்தல் என்பது, மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது.

ஒருநாள் நான் ஐந்து நிமிடங்கள் தாமதாக பள்ளிக்குச் செல்ல நேர்ந்தது. அன்று, தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டு இருந்தது. தலைமை ஆசிரியரிடம், ஏன் அரைக்கம்பத்தில் பறக்கிறது? என்று கேட்டேன். ‘நீதானே செய்திகள் வாசிக்கிறாய். அது ஏன் என்பதை நீதான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நீ தாமதமாக வந்து இருக்கிறாய்’ என்றார். அன்று ஒரு தலைவர் மறைந்த நாள். அது எனக்கு வெட்கமாகப் போய்விட்டது. அதனால், செய்திகளைத் தவறாமல் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே, நான் எப்படியும் பள்ளிக்குக் குறித்த நேரத்திற்கு முன்பே சென்று விடுவேன். அன்று மட்டும் அல்ல; இன்று வரையிலும் நேரந் தவறாமையைக் கடைபிடித்து வருகிறேன்.

தொடக்கப் பள்ளிப் பருவத்திலேயே, ஓவியங்கள் மீது எனக்கு நாட்டம். வரலாற்றுப் புத்தகத்தில் உள்ள ஆங்கில பிரபுக்களின் முக அமைப்பு, அவர்களுடைய முடி அலங்காரங்கள் என்னை ஈர்த்தன. அந்த உருவங்களை வரைந்து பார்த்தேன். நன்றாகவே இருந்தது. அதனுடை நீட்சியாக, எங்கள் பகுதியில் உள்ள மலர்கள், செடிகள், கொடிகள், வயல்வெளிகளை எல்லாம் பார்த்து, இயற்கைக் காட்சிகளை வரைந்தேன். எல்லாமே பென்சில் ஓவியங்கள்தான். நண்பர்கள் எல்லாம் பார்த்துப் பாராட்டினார்கள். உற்சாகமாக இருந்தது.

உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றபிறகு, நீர்வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டினேன். அட்டைத்தாள்களைப் பயன்படுத்துவேன். நான் வரைந்த பாரதி ஓவியத்துக்காக, பள்ளியில் பரிசு பெற்றேன். அதுவே, எனக்குக் கிடைத்த முதல் பரிசு. ஓவியம், பேச்சுப் போட்டி, திருத்தமான கையெழுத்து, கட்டுரை என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். ஓவியத்தில் பரிசு எனக்குத்தான். பேச்சுப் போட்டியில், முதன்முதலாக காமராசரைப் பற்றிப் பேசினேன். அடுத்து, அண்ணாவைப் பற்றிப் பேசினேன்.

என் தந்தையார், நான் மருத்துவம் படிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, ஓவியக் கல்லூரியில்தான் சேர வேண்டும் என உறுதி பூண்டு, அதற்காகவே என்னைத் தயார் செய்து கொண்டு வந்தேன். என்னுடைய கனவெல்லாம், ஒரு ஓவியனாக வேண்டும் என்பதுதான். என்னுடைய தலைமை ஆசிரியர், எங்கள் பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக என் தந்தையிடம் பேசினார்கள். இந்தத் துறையில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குமா? என்பதே அவரது கவலையாக இருந்தது. நான் உறுதியாக இருந்து அடம் பிடித்து, ‘மருத்துவன் ஆவதைவிட, நான் வயலில் ஏர் ஓட்டுகிறேன்’ என்று என் தந்தையிடம் சொன்னேன். ‘சரி, ஏர் ஓட்டுவதை விட, ஓவியம் படி’ என்று சொல்லி விட்டார்.

பத்தாவது முடித்தபிறகு, குடந்தையில் உள்ள அரசு ஓவியக் கல்லூரியில், ஐந்து ஆண்டுகள் பட்டயப் படிப்பில் சேர்ந்தேன். ஓவியக் கல்லூரியில், மூன்று பிரிவுகள் உண்டு. விளம்பரக் கலைப்பிரிவு, வண்ணக் கலைப்பிரிவு, சிற்பக் கலைப்பிரிவு. இந்த மூன்றில், எந்தப் பிரிவைத் தேர்ந்து எடுத்துப் படித்தால், எதிர்காலம் இருக்கும் என்பதை ஆராய்ந்து, விளம்பரக் கலைப் பிரிவைத் தேர்ந்து எடுத்தேன்.

நான் ஓவியக் கல்லூரியில் சேர்ந்த அன்றே, மாணவர் போராட்டத்தின் காரணமாக, கால வரையறை அற்ற விடுமுறை அறிவித்து விட்டார்கள். அது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம். ஊர்வலம், உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்த அந்தப் போராட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன். அதன் விளைவாக, ஈழத்தமிழர்களின் துயரத்தை வரையத் தொடங்கினேன். அதன் பிறகு, சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, ஓவியத்தின் வழியாக, மக்களின் துன்பங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு மேலீட்டால், வண்ணக் கலைப் பிரிவுக்கு மாறினேன். தொடர்ந்து ஈழத்தமிழர்களின் துன்பங்களை ஓவியங்களாக வரைந்தேன்.

ஈழ விடுதலைப் போராட்டம்தான் எனக்கு உலகப் பார்வையைத் தந்தது. உலகத்தில் எந்த மூலையில் எந்த மக்களுக்குத் துன்பம் நேர்ந்தாலும், மக்கள் பக்கம் நின்று குரல் கொடுக்கின்ற, ஓவியம் செய்கின்ற ஒருவனாக என்னை மாற்றியது. தமிழகத்திலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடந்த சாதீய வன்முறைகள், மதவெறிக் கொடுமைகள் மற்றும் வர்க்கப் போராட்டங்கள், உலக அளவில் பாலÞதீன விடுதலைப் போராட்டம், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டம் போன்ற மக்கள் விடுதலைப் போராட்டங்களையும், இயற்கைப் பேரழிவுகளையும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களையும் ஓவியங்களில் பதிவு செய்தேன்.

அந்த ஓவியங்களை, ‘எரியும் வண்ணங்கள்’ என்ற தலைப்பில், 1994 ஆம் ஆண்டு தொகுத்தோம். 99 மற்றும் 2000 ஆவது ஆண்டுகளில், இருபதாம் நூற்றாண்டைப் பற்றிய ஒரு வரலாற்று ஓவியப் பதிவை உருவாக்கினேன். அந்த ஓவியங்கள், சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஓவியக் காட்சிகளாக நடைபெற்றன.

இதன்பிறகு, முதன்முதலாக, 2000 ஆவது ஆண்டில், ‘செம்பருத்தி’ என்ற, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான அமைப்பின் அழைப்பின்பேரில் மலேசியா சென்றேன். அங்கே, கோலா லம்பூர் சென்ட்ரல் மார்க்கெட் என்ற மையமான இடத்தில், திறந்தவெளியில் எனது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ஒரு மணி நேரத்தில், பத்து ஆயிரம் பேர் கடந்து செல்லுகின்ற, பரபரப்பான இடம் அது. ஏராளமான மக்கள் நின்று பார்த்துப் பாராட்டினர். தமிழர்கள் மட்டும் அல்ல, மலாய், சீன மக்களும் பார்த்து, அவர்களுடைய கருத்துகளையும் பதிவு செய்தார்கள். மலேசியாவின் அனைத்து இதழ்களும், இந்தக் கண்காட்சி குறித்த செய்திகளை வெளியிட்டன. தொடர்ந்து சித்தியவான், பட்டர்வொர்த், பினாங்கு உள்ளிட்ட பல இடங்களில், ஒரு மாதம் எனது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. எனவே, நாள்தோறும் மலேசிய நாளேடுகளில் செய்திகள் வெளிவந்தன. ஒன்றரைப் பக்க அளவில், பல ஏடுகளில் எனது பேட்டிகள் வெளிவந்தன. வானொலியிலும் எனது நேர்காணல் ஒலிபரப்பானது.

இந்தப் பயணத்தில், மலேசியத் தமிழர்களோடு கலந்துஉரையாடுவதற்கும், தமிழ்ப் பள்ளிகளில் உரை ஆற்றுவதற்கும், தமிழ் மாணவர்களுக்கு ஓவியப் பயிலரங்குகள் நடத்துவதற்கும் மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. தோட்டத் தொழிலாளர்களான தமிழ்க் குடும்பங்களை நேரில் சந்தித்துப் பழகி, அவர்களோடு தங்கி, அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தன.

மலேசியா என்பது பல்வேறு இன மக்கள் வாழுகின்ற, பல்லினக் கலாச்சாரம் கொண்ட நாடு. தமிழகத்து வாழ்க்கை முறைக்கும், மலேசியாவில் இருக்கின்ற வாழ்க்கை முறைக்கும், மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. மலாய், சீன மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறையோடு, தமிழர்கள், இணைந்து வாழ்வதோடு மட்டும் அல்லாமல், தமிழ் மொழி, பண்பாட்டைத் தக்க வைத்துக கொள்வதற்காகப் போராட வேண்டி இருக்கின்றது. அதற்காகத் தமிழர்கள், அதிகமாக உழைக்க வேண்டி இருக்கிறது, செயலாற்ற வேண்டி இருக்கிறது. இந்த மூன்று சமூகத்தினரிடையே கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. அப்படி சில குடும்பங்களைப் பார்த்தேன். அங்கே வாழுகின்ற தமிழர்களுக்கு, இந்தக் கலப்பு அதிகமாகி விடக் கூடாதே என்ற கவலை இருப்பதையும் புரிந்து கொண்டேன். அதே நேரத்தில், மற்ற இன மக்களோடு இணக்கமான உறவும், தொடர்பும் தமிழர்களுக்கு இருக்கிறது.

அரசியலில், தமிழர்கள் தங்களுடைய தனித்தன்மையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல பிரிவுகள் இருந்தாலும், ‘மலேசிய இந்தியர் காங்கிரÞ கட்சி’தான், பெரும்பான்மைத் தமிழர்களின் கட்சியாக இருக்கிறது. இடதுசாரிச் சிந்தனைகளும் உண்டு. செம்பருத்தி என்பது, அப்படிப்பட்ட ஒரு அமைப்புதான். அவர்கள் தேர்தல் அரசியலில் இல்லை. அதேபோல, தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட அமைப்புகள் வளர்ந்து கொண்டு இருந்த காலம் அது. தமிழ்க் குடும்பங்களுக்குள் சாதிகளைக் கடந்து, தமிழ் உறவு என்கின்ற அடிப்படையில், `மலேசியத் தமிழ்நெறிக் கழகம்` என்ற அமைப்பை உருவாக்கி, கூர்மையாகச் செயலாற்றி வருகிறார்கள். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துக் குடும்ப நிகழ்வுகளும் அமைகின்றன. துக்க நிகழ்வுகளிலும் திருக்குறளை, எல்லோரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது எனக்குப் புதுமையாக இருந்தது.

சிங்கப்பூர்
எனது பயணத்தின் அடுத்த கட்டமாக சிங்கப்பூருக்குச் சென்றேன். அங்கே, ‘பாÞகர் ஆர்ட் அகடமி’ என்ற ஓவியக் கலைக் காட்சிக் கூடத்தில், எனது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ‘தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார்கள். தமிழ் எழுத்தாளர்களோடும், கவிஞர்களோடும் நடந்த சந்திப்பில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் மறக்க முடியாதவை. வானொலியிலும் எனது செவ்வி ஒலிபரப்பானது. அப்போது, நேயர்கள் தொலைபேசி வழியாகக் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அது எனக்குப் புதிய அனுபவம். சிங்கப்பூரின் பிரபல தமிழ் நாளிதழான, தமிழ் முரசு ஏடு, சிறப்புக் கட்டுரை வெளியிட்டது. தமிழ் உறவுகள் என்னைத் தேடி வந்து சந்தித்தனர்.

சிங்கப்பூர் நாட்டின் கட்டமைப்பு, ஒழுங்குமுறைகள் என்னை மிகவும் கவர்ந்தது. வானுயர்ந்த கட்டடங்கள், அவற்றின் உள்ளும், புறமும் அமைக்கப்பட்டு இருக்கின்ற சிற்பங்கள், மிகவும் நவீனத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. அது அவர்களுடைய, நவீன கலைப்புரிதலை வெளிப்படுத்துகிறது. மிகை இயல்பியலான சிற்பங்கள் அவை. மேற்கத்திய நாடுகளில் வளர்ந்த அந்தக் கலை பற்றிய புரிதல், சிங்கப்பூரிலும் இருப்பதைக் கண்டு வியந்தேன். வரலாற்று மரபுகளை எப்படி உள்வாங்குகிறோமோ, அதேபோல நவீன வெளிப்பாடுகளை உள்வாங்குவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான தேவை இருக்கின்றது. அதை, அவர்கள் உணர்ந்து இருப்பதாகவே நான் புரிந்து கொண்டேன். இதை ஒரு வளர்ச்சியின் அறிகுறியாகவே பார்க்கிறேன். வெறும் பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல், இதுபோன்ற கலை, அறிவியில் புரிதல்களிலும் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அரசியலைப் பொறுத்தமட்டில், எல்லாவற்றையும் பேச முடியாது அளவுக்கு, என்றாலும், கருத்துப் பரிமாற்றங்களுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இதுபோன்ற கலைச் செயல்பாடுகளுக்கு எந்தத் தடையும் இல்லை. சிங்கப்பூர் வாழ் தமிழர்கள், சாதாரண வேலை செய்வதில் இருந்து, உயர் பதவிகளை வகிப்பது வரை, தகுதிபெற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த தமிழர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுள் பலர், கவிஞர்களாகவும், எழுத்தாளர்களாகவும், வேறு சில கலை விற்பன்னர்களாகவும் திகழ்கிறார்கள். சிங்கப்பூர் அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உரிய இடம் அளித்து உள்ளது. அதற்காக அவர்கள் ஒதுக்குகின்ற நிதியும் கணிசமாக இருக்கின்றது.

அமெரிக்கா, ஐரோப்பா
2002 ஆம் ஆண்டில், அமெரிக்க, ஐரோப்பியப் பயணம் மேற்கொண்டேன். அமெரிக்காவில் 15 நாள்கள் சுற்றினேன். முதலில் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க ஆண்டு நிகழ்வில் பங்கு ஏற்றேன். அதே ஆண்டில், அண்ணன் வைகோ அவர்களும் அங்கே வந்து நிகழ்ச்சிகளில் பங்கு ஏற்றார்கள். அந்த மாநாட்டில் நானும் உரை ஆற்றினேன். ‘உறங்கா நிறங்கள்’ பெரியார் குறித்த ‘திசை முகம்’ என்ற தலைப்பில் எனது இரண்டு ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. வட அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வசிக்கின்ற தமிழர்கள், அந்த நிகழ்வுக்கு வந்து இருந்தார்கள். ஓவியக் கண்காட்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மாணவர்களுக்கான ஓவியப் பயிலரங்குகளை நடத்தினேன்.

இங்கே மறக்க முடியாத பல நிகழ்வுகள் அமைந்தன. கண்காட்சி அரங்கில், தமிழர்கள் பலரும், அமெரிக்க வெள்ளையர்கள் சிலரும் நின்றுகொண்டு இருந்த நேரம். ஒரு வெள்ளையர், நீண்ட நேரமாக பெரியார் ஓவியங்களை நின்று நிதானித்து உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு என்னிடம் வந்தார். ‘வெரி கிரேட்’ என்று கைகுலுக்கிப் பாராட்டினார்.

‘ஒரு மனிதரை, இத்தனை கோணங்களில் (25), வரைந்து இருப்பது, உலகத்தில் இதுதான் முதன்முறை’ என்று கருதுகிறேன். இவர் எவ்வளவு பெரிய தாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி இருந்தால், இத்தனைக் கோணங்களில் வரைந்து இருப்பீர்கள் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இவர் யார்? என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் ஓவியங்களில் இருந்து, இவர் ஒரு மாபெரும் சிந்தனையாளர் என்பதைப் புரிந்து கொள்கிறேன். சாக்ரடீசைப் போல, அரிÞடாட்டிலைப் போல, இவரும் ஒரு தத்துவ ஞானி போல் எனக்குத் தோன்றுகிறது’ என்று சொன்னார். அதோடு மட்டும் அல்லாமல், இந்த ஓவியத்தில் ஒன்றை, நீங்கள் விலைக்குத் தர வேண்டும். அது விலை மதிக்க முடியாதது என்பது எனக்குத் தெரியும். இப்போது என்னால், அதற்கு 100 டாலர் தர முடியும். அவ்வாறு நீங்கள் தந்தால், என்னுடைய படுக்கை அறையில் இந்த ஓவியத்தை வைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.

பெரியாரைத் தமிழர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதை வரைந்தேன். அது தமிழர்களையும் கடந்து, ஒரு அமெரிக்கரின் உள்ளத்தையும் தொட்டு இருக்கிறது என்பதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்ததோடு மட்டும் அல்லாமல், ‘இது மூல ஓவியம் அல்ல; இது ஒரு அச்சு ஓவியம்தான்; எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறி, அவருக்குப் பிடித்த ஓவியத்தைக் கொடுத்தேன். அந்த நகல் ஓவியத்துக்கு, 100 டாலர்களைக் ( ரூ 5000) காசோலையாக வழங்கினார்.

அங்கே நின்று கொண்டு இருந்த தமிழர்களுக்கு, வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒரு கலையை எப்படி உள்வாங்க வேண்டும் என்பதை அவர்கள், அந்த அமெரிக்கரிடம் இருந்து அவர்கள் புரிந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு என் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாததாக அமைந்தது. ஓவியங்களை விற்றுக் காசு ஆக்குவது அல்ல என் நோக்கம். அந்த ஓவியம் ஏற்படுத்துகின்ற தாக்கம், எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வதற்கான நிகழ்வாக அது அமைந்தது. ஏனென்றால், பெரியார் யார்? அவரது பின்புலம் என்ன? என்பது எதுவுமே அந்த அமெரிக்கருக்குத் தெரியாது. அவர் பார்த்தது, ஓவியத்தை மட்டும்தான். நாம் சரியாகச் சிந்தித்து ஒரு செயலை நடைமுறைப்படுத்தினால், அதற்கு உரிய மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கும் என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு.

அமெரிக்கப் பயணத்தில், நிகழ்வுகளில் கலந்து கொள்வது, கண்காட்சி நடத்துவது ஒருபுறம் என்றாலும், அதன் மறுபுறத்தில், சிகாகோவில் இருக்கின்ற அருங்காட்சியகங்கள், ஓவியக் கலைக் கூடங்களில், நாள் கணக்கில் என்னுடைய நேரத்தைச் செலவிட்டேன். நூல்களில் மட்டுமே நான் பார்த்து அனுபவித்த, மிகப்பெரிய முதன்மை ஓவியர்கள் பலருடைய மூல ஓவியங்களை நேரடியாகப் பார்த்து உள்வாங்குவதற்கும், அனுபவிப்பதற்கும் அது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. லியனர்டோ-டா-வின்சி போன்ற மேதைகளின் ஓவியங்கள் அங்கே உள்ளன. பிகாசோ, கிளவுட் மேனட், பால் செசானே, வின்சென்ட் வான்கா, எட்வர்ட் மங்க், பிரான்சிÞ கோயா, ஹென்றி மேத்யூÞ, பால் காகைன், பீட்டர் பால் ரூபன்Þ உள்ளிட்ட பல ஓவியர்களுடைய ஓவியங்களும் அங்கே உள்ளன.

சிகாகோவில், இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு. விவேகானந்தர், ‘சகோதர சகோதரிகளே’ எனத் தொடங்கி உரை நிகழ்த்திய இடத்தில்தான், எங்களுடைய துறை சார்ந்த ஓவியக் கலைக்கல்லூரி (The school of art Institute of Chicago) இருக்கின்றது. அந்தக் கல்லூரியை, முழுமையாகச் சுற்றிப் பார்த்தேன். அவர்கள் மாணவர்களைக் கையாள்கின்ற விதம், வகுப்புகள் எடுக்கின்ற முறை, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு, அவர்களுடைய பாடத்திட்டம், மதிப்பீட்டு முறை அனைத்தையும் குறித்து, பேராசிரியர்களோடு விவாதித்தேன். மாணவர்களோடும் கலந்துரையாடினேன். இந்தியக் கல்வி முறைக்கும், அமெரிக்கக் கல்வி முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

நியூ யார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்று சில மாதங்கள் ஆகி இருந்தன. அதனுடைய தாக்கம், அமெரிக்கர்களுக்கு இருந்ததை உணர முடிந்தது. அந்த இழப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஆப்கானிÞதானில், அமெரிக்க இராணுவம் நிகழ்த்துகின்ற கொடுமைகளையும் அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. இருந்தாலும், இரட்டைக் கோபுரத் தாக்குதல் ஏற்படுத்திய வலி, மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்.

பெரு முதலாளிகளின் பிடிக்குள் அமெரிக்க அரசு..
அமெரிக்கா உலகத்தின் பல்வேறு நாடுகளில் மூக்கை நுழைத்து வல்லாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டு இருந்தால், அமெரிக்கர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதை அவர்களிடம் நான் வலியுறுத்தினேன். அதற்கு ஒரு பேராசிரியர் சொன்னார்: ‘அமெரிக்க அரசை இயக்குவது மக்கள் அல்ல; முதலாளிகள்தான்’ என்று சொன்னார். அதுதான் உண்மை. இப்படி எங்களுடைய வாதம் நிகழ்ந்தது. இப்போது, இந்தியாவிலும் அதேபோன்ற நிலைமை உருவாகிக் கொண்டு இருப்பதைக் காண முடிகிறது.

மே நாள் சதுக்கம், ஹே மார்க்கெட், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய, வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைப் பார்த்தேன். மற்றொரு இடத்தில், அதற்கான நினைவுச் சிற்பம் ஒன்று வைத்து இருக்கின்றார்கள். அந்தச் சிற்பத்தின் கீழே, “இன்று நீங்கள் நெரித்து அழிக்கும் எங்கள் குரலைக் காட்டிலும், எங்கள் மௌம் அதிக வலிமை பெறும் காலம் வந்தே தீரும்” என்று எழுதி வைத்து இருக்கின்றார்கள்.

அடுத்து, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் கண்காட்சி நடைபெற்றது. நியூ யார்க் நகரில் உள்ள, உலகப் புகழ் பெற்ற எம்ஓஎம் (Museum of modern art) என்ற அருங்காட்சியகத்தைப் பார்த்தேன். இது ஒரு நவீன ஓவியம் மற்றும் கலைகளை உள்ளடக்கிய ஒரு அருங்காட்சியகம் ஆகும். நம் ஊர் திருவிழாக் கூட்டத்தைப் போல, மக்கள் சாரை சாரையாக இந்த அரங்குக்கு வருகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்காக வருகிறார்கள். இங்கே ஒரு நாள் முழுமையும் சுற்றிப் பார்த்தேன். இதைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது. இங்கே இருக்கின்ற கலைப் படைப்புகள் செய்யப்பட்ட காலத்திற்கும், நம்முடைய இந்தியாவில் இருக்கின்ற கலை செயல்பாடுகளுக்கும் இடைவெளியாக 80 ஆண்டுகள் பின்தங்கி இருக்கின்றோம். என்னுடைய அயல்நாட்டுப் பயணங்களில் பெரும்பாலும் மக்களைச் சந்திப்பதிலும், அருங்காட்சியகங்களைப் பார்வை இடுவதற்காகவே நேரத்தைச் செலவழிப்பேன். மலேசியாவில் ஒரு மாதம் தங்கி இருந்தபோதிலும், இரட்டைக் கோபுரத்தில் ஏறிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.

செப்டெம்பர் 11 இல் தகர்க்கப்பட்ட இரட்டைக் கோபுரம் இருந்த இடத்தைப் பார்வையிட்டேன். வெறுமையாகக் காட்சி அளித்தது.
படங்களில், ஐ.நா. சபைக்கு முன்பு உலக நாடுகளின் கொடிகள் பறப்பதைப் பார்த்துப் பார்த்து, அங்கே தமிழனின் கொடியும் பறக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. அதற்காகவே அங்கே சென்று பார்த்தேன்.

கனடாவில்...
அடுத்து, 15 நாள்கள் பயணமாக கனடா நாட்டுக்குச் சென்றேன். வாஷிங்டனில் இருந்து டொரண்டோவுக்குப் பேருந்தில் சென்றேன். 14 மணி நேரம் ஆனது. நயாகரா அருவியில் உளள பாலத்தின் வழியாகத்தான் பேருந்து செல்கிறது. ஆனால், அது பன்னாட்டுப் பேருந்து என்பதால், இறங்கிப் பார்க்க அனுமதி இல்லை. டொரண்டோ நகரில், சுமார் மூன்று இலட்சம் ஈழத்தமிழர்கள் வாழ்கிறார்கள். அது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்று கூடச் சொல்லுகிறார்கள். எங்கு பார்த்தாலும், தமிழ்ப் பெயர்கள் தாங்கிய பதாகைகள் உள்ள கடைகளைப் பார்க்கலாம்.

அங்கே தமிழ் மக்களோடு சந்திப்பும், ஓவியக் கண்காட்சியும், மாணவர்களுக்கு ஓவியப் பயிலரங்குகளும் ஏற்பாடு ஆகி இருந்தன. கனடியத் தமிழ் வானொலியில், எனது செவ்வி, நேரலையில் ஒலிபரப்பானது. அப்போது, தமிழகத்தில் பொடா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த அண்ணன் வைகோ, கைது ஆகி சிறையில் இருந்தார். எனவே, பொடாவை மையமாகக் கொண்டே கேள்விகள் அமைந்தன. ‘பொடாவைத் தவிடுபொடியாக்குவோம்’ என்று நான் சொன்னேன். அடுத்தடுத்துப் பலர் பொடாவில் கைது செய்யப்பட்டனர்.

நயாகரா
நயாகரா அருவியைப் பார்ப்பதற்காக நண்பர்களோடு சென்றேன். மறக்க முடியாத அனுபவம் அது. பல மைல் தொலைவுக்கு நீர்த்துவாலைகள் எழும்புகின்றன. அங்கே தோன்றுகின்ற வானவில்லின் காட்சி அற்புதம். அதைப் படங்களும் எடுத்து வைத்து இருக்கின்றேன். அந்த அருவி, நமக்குள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மூன்று பக்கங்களிலும் இருந்தும் நீர் வருகிறது. அருவிக்கு அருகில் படகில் அழைத்துச் செல்லுகிறார்கள். அருவியை நெருங்க நெருங்க அச்சமாக இருக்கிறது. நான் பார்த்த அருவிகளுள், ஒப்பிட முடியாத, மிகப் பிரமாண்டமான அருவியாக நயாகரா இருக்கிறது. மீண்டும் டொரண்டோ திரும்பினேன்.

அங்கே, இரண்டு இடங்களில் எனது கண்காட்சி நடைபெற்றது. அதில் ஒரு ஓவியமாக வியட்நாமின் மைலாய் வரைந்து வைத்து இருந்தேன். அமெரிக்க விமானங்கள் குண்டு வீசியபோது, நெருப்புப் பொறிகள் உடலில் பட்டு, ஆடைகளை அவிழ்த்துப் போட்டு, அம்மணமாக ஓடி வருகின்ற சிறுமியின் படம் அது. அந்தச் சிறுமி, இப்போது கனடா நாட்டின் குடி உரிமை பெற்று அங்கே வசிப்பதாகச் சொன்னார்கள். அவரைச் சந்திப்பதற்கு முயற்சித்தேன். அப்போது அவர் அயல்நாட்டுச் சென்று இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

ஐரோப்பாவில்...
அடுத்து, ஜெர்மனிக்கு வந்தேன். ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் இறங்கி, மூன்று மணி நேர கார் பயணத்தில், சார்புருகன் என்ற சிறிய நகரத்துக்குச் சென்றேன். இதற்கு 80 கிலோமீட்டர் தொலைவில்தான் கார்ல் மார்க்Þ பிறந்த ஊர் இருக்கின்றது. ஜெர்மனியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். பல தமிழ் நண்பர்களைச் சந்தித்தேன். Expressionism என்ற ஓவியக் கலையின் தாயகம் ஜெர்மனி. அந்த இயக்கத்தில் முக்கியமான ஓவியர்களாக, வரலாற்றில் நான் படித்த மேக்Þ பெக்மென், ஆட்டோ டிக்Þ என்ற இரு ஓவியர்களுடைய, மூல ஓவியங்களை சார்புருகன் அருங்காட்சியகத்தில் பார்த்தது, எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது. அதேபோல, புரட்சிகர பெண் ஓவியராக விளங்கிய, கதே கோல்விச் அவர்களின் படைப்புகளையும் அங்கே பார்த்தேன்.

நான் சென்றபொழுது, உலகப் புகழ்பெற்ற பீர் திருவிழா அங்கே நடைபெற்றது. புகழ் பெற்ற ரைன் நதியின் கரையில், இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி, ஆண், பெண், குழந்தைகள் என வேறுபாடுகள் இல்லாமல், ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.

சார்புருகனில் இருந்து, காரில் இரவு நேரப் பயணமாக, பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிÞ சென்றேன். ‘கலைகளின் தாயகம்’ என அழைக்கப்படுகின்ற நகர் இது. அடேல் பாலசிங்கம் அவர்கள் எழுதிய will to freedom என்ற ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பான ‘சுதந்திர வேட்கை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை ஆற்றினேன். அந்த ஆங்கில நூலை அமெரிக்காவில் பார்த்தபொழுது, அதன் தமிழாக்கம் வெளிவர வேண்டும் என்று நண்பர்களிடம் கூறினேன். ஆனால், இவ்வளவு விரைவில், நானே அந்த வெளியீட்டு விழாவில் சிறப்புரை நிகழ்த்துவேன் என எதிர்பார்க்கவே இல்லை. பாரிÞ நகரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் எனது ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. தமிழர்களுடன் சந்திப்பும் நிகழ்ந்தது.

உலகப் புகழ் பெற்ற லூவர் மியூசியம், பாரிÞ நகரில் உள்ளது. பல்வேறு ஓவிய மேதைகளுடைய, பல நூற்றாண்டுகளைக் கடந்த படைப்புகள் இங்கே உள்ளன. முழுக்க முழுக்க, குளிர்பதனப்படுத்தப்பட்ட பிரமாண்டமான காட்சி அரங்குகள். ஒரு அருங்காட்சியகம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இங்கேதான், லியனர்டோ-டாவின்சி வரைந்த மோனாலிசா ஓவியம் இருக்கிறது. அந்த ஓவியத்தைப் பார்ப்பதற்கு கூட்டம் அலைமோதுகிறது. இப்படி ஒரு கூட்டத்தைத், திருப்பதியில்தான் பார்க்க முடியும் என்று சொல்லுவார்கள். நான் திருப்பதிக்குப் போனது இல்லை. அந்த ஓவியத்துக்கு முன்பாக நின்று படம் எடுத்துக் கொள்கின்றார்கள். இதுபோன்ற பல ஓவியங்கள், அந்தக் காட்சி அரங்கில் உள்ளன. மோனாலிசா ஓவியத்தை விட, பல்வேறு நிலைகளிலும் உயர்ந்த படைப்புகள், அங்கே இருக்கின்றன. ஆனால் அவை, மோனாலிசா ஓவியத்தைப் போல் புகழ் பெறவில்லை. அதனால், புதிதாக அங்கே வருகின்றவர்களும், அதையே பார்க்க விரும்புகிறார்கள். அந்த அருங்காட்சியத்தைக முழுமையாகப் பார்ப்பதற்கு, ஒரு வாரம் தேவைப்படும். என்னால், ஒருநாள் மட்டுமே ஒதுக்க முடிந்தது.

அன்று இரவு என்னால் உறங்க முடியவில்லை. அங்கே நான் பார்த்தப் படைப்புகள் குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்து இருந்தேன். பாரிÞ நகரில், ஒயிட் சர்ச் என்ற ஒரு தேவாலயம் இருக்கிறது. அதற்கு அருகிலேயே Place du tertre என்ற இடம் இருக்கின்றது. அங்கே தெருவில் அமர்ந்து இருக்கின்ற ஓவியர்கள், வருகின்ற மக்களை மாதிரிகளாக வரைந்து தருகிறார்கள். அதற்குக் கட்டணம் உண்டு. அதேபோல், அந்த ஓவியர்கள் ஏற்கனவே வரைந்த படைப்புகளையும் விற்பனைக்கு வைத்து இருக்கிறார்கள். அப்படி, நூற்றுக்கணக்கான ஓவியர்கள் வீதிகளில் அமர்ந்து வரைந்து கொண்டு இருக்கின்றார்கள். அது ஒரு புதுமையான காட்சி. அங்கே ஓவியர்களுக்குக் கிடைக்கின்ற வரவேற்பு, ஒரு ஓவியன் என்கின்ற அடிப்படையில், எனக்கு ஊக்கத்தையும், புத்துணர்வையும் தந்தது.

சோழ மண்டல ஓவியர் கிராமம்
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சோழமண்டல ஓவியர் கிராமம் இருக்கின்றது. அங்கே, ஓவியர்கள் தனித்தனியாக வீடுகளைக் கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். படைப்புகளையும் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். அதைக் காட்சிப்படுத்துவதற்கென்றே ஒரு காட்சிக்கூடமும் உள்ளது. அயல்நாடுகளில் இருந்து வருபவர்களும், ஓவியங்களைச் சேகரிக்க விரும்புகின்றவர்களும், அங்கேயே சென்று தங்களுக்கு விருப்பமான படைப்புகளை வாங்கிச் செல்லலாம். அதேபோல, பாரிÞ நகரில், ரு தெரிவொலி என்ற சாலையில், 59 ஆம் எண் கொண்ட, ஓவியர்களின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இருக்கின்றது. அங்கே முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள், சிற்பிகள் வசிக்கின்றார்கள். அங்கேயே தங்கள் படைப்புகளை உருவாக்குகின்றார்கள். அதில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடுகள் இல்லை. வேறு எந்த வேலையும் செய்யாமல், முழுக்க முழுக்க ஓவியங்களைப் படைப்பது; பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வது என்று அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களோடு, என் படைப்புகள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினேன். சமூகம் சார்ந்த எனது படைப்புகள் குறித்தும், புரட்சிகரச் சிந்தனைகள் குறித்தும், அவர்கள் வியந்து பாராட்டினார்கள். இந்த நிகழ்வை, ஒளிப்படமாகப் பதிவு செய்து வைத்து இருக்கின்றேன்.

‘ஈழ முரசு’ ஏட்டின் அலுவலகத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அப்போது, ஈழத்தில் சமாதான காலம். அதுகுறித்து என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்கள். ‘அமெரிக்காவுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று இÞரேல் முகம்; இன்னொன்று நோர்வே முகம். தமிழ் ஈழத்தில், நோர்வே முகத்தைக் காட்டி இருக்கின்றார்கள். அவர்களை நம்ப முடியாது. இந்த சமாதான காலம், தமிழர்களுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தும் என்று அவர்களிடம் கூறினேன். அதுபோலவே நிகழ்ந்தது.
2004 ஆம் ஆண்டு, தலைவர் பிரபாகரன் அவர்களை, ஈழத்தில் சந்தித்தபோது, இதைப்பற்றி அவரிடம் கூறினேன். ‘சரியாகக் குறிப்பிட்டு இருக்கின்றீர்கள்’ என்று அவர் சொன்னார். எனது ஈழப்பயணம் குறித்து தமிழ் ஈழம் நான் கண்டதும், என்னைக் கண்டதும் என ஒரு நூலை எழுதி வெளியிட்டு இருக்கின்றேன். இதுகுறித்து மேலும் விரிவாக எழுதிக் கொண்டு இருக்கின்றேன். தூரிகைச் சிறகுகள் என்ற தலைப்பில், எனது அயல்நாட்டுப் பயண அனுபவங்களை விரிவாக எழுதி இருக்கின்றேன். இரண்டு நூல்களையும், தோழமை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

பாரிÞ நகரில், சால்வடார் டாலி என்ற உலகப் புகழ் பெற்ற ஓவியருடைய காட்சிக்கூடம் இருக்கின்றது. அதையும் பார்வையிட்டேன். அதேபோல், ‘நவீன ஓவியத்தின் தந்தை’ எனப் போற்றப்படுகின்ற பிகாசோ அவர்களுடைய காட்சிக்கூடத்தையும் பார்த்தேன். தமிழ்நாட்டின் ஒரு மூலையில் பிறந்து, உலகப் புகழ் பெற்ற படைப்பாளர்களின் படைப்புகளைப் பார்க்கின்ற, உள்வாங்குகின்ற வாய்ப்புகள் எனக்குக் கிடைத்ததை, பெரும்பேறாகக் கருதுகிறேன்.
பாரிÞ நகரில் அமைந்து உள்ள உலகப் புகழ் பெற்ற ஈஃபெல் இரும்புக் கோபுரத்தைப் பார்த்தேன். ஆனால், மேலே ஏறிப் பார்க்கவில்லை. அதன் கட்டுமானம் என்னை வியக்க வைத்தது.

கடலடித் தொடர்வண்டியில் லண்டனுக்கு...
அடுத்து, லண்டன் சென்றேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று விமானப் பயணம். மற்றொன்று, ‘யூரோ Þடார்’ என்ற, கடலடித் தொடர்வண்டி. நான் இரண்டாவதைத் தேர்ந்து எடுத்தேன். பகல் நேரப் பயணம்தான். வழிநெடுகிலும், மான்கள் துள்ளி விளையாடுவதும், மயில்களும் தோகை விரித்து ஆடுவதும் காணக்கிடைக்காத காட்சிகள்.

இங்கிலாந்து, பிரான்Þ ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்து உள்ள ஆங்கிலக் கால்வாய் என்ற கடலுக்கு அடியில், 27 கிலோமீட்டர்கள் இந்தத் தொடர்வண்டி செல்லுகிறது. ஆனால், அந்த அனுபவத்தை நாம் உணர முடியாது. காரணம், சாதாரணமாக தில்லி, கொல்கத்தாவில் ஓடுகின்ற தரையடித் தொடர்வண்டிகளைப் போலவே, இதுவும் ஒரு கட்டுமானக் குகை வழியாகத்தான் ஓடுகிறது. கடலைப் பார்க்க முடியாது. விரைவாகச் செல்லுகிறது. பாரிசில் இருந்து லண்டனுக்கு நான்கு மணி நேரத்தில் போய்ச் சேர்ந்தது.

லண்டன் ஐ.பி.சி. வானொலியின் அழைப்பின் பேரில் சென்று இருந்தேன். இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்தார்கள். ஒன்று நேரலையாக ஒலிபரப்பானது. யமுனா இராஜேந்திரன் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல், மிக முக்கியமானது.
கொள்ளையடித்ததும் நல்லதுதான்

நான் குடந்தைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருந்தபொழுது, லண்டன் சென்று லண்டன் ராயல் கலைக் கல்லூரி (Royal College of Art) கல்லூரியில் படிக்க வேண்டும் என விருமபினேன். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டேன். விண்ணப்பங்களை வரவழைத்தேன். அப்போது என்னுடையை பொருளாதார நிலையால் படிக்கச் செல்ல முடியவில்லை. ஆனால் இப்போது, அந்தக் கல்லூரியைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. தேசிய அருங்காட்சியகத்தையும் பார்த்தேன். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் செல்லுகின்ற பொழுது, நம்முடைய கலைக் கருñலங்களை, தஞ்சை சரÞவதி நூலகத்தில் இருந்து அரிய பல நூல்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டார்கள் என்று சொல்லக் கேட்டு இருக்கின்றேன்.

அந்த அருங்காட்சியகத்தில், சோழர் காலச் சிற்பங்களையும், அரிய பல நூல்களையும் பார்த்தேன். மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தி வைத்து இருக்கின்றார்கள். ஒருவகையில், அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதும் நல்லதுதான் என்று எனக்குப் பட்டது. ஏனென்றால், நம் நாட்டில் இருக்கின்ற அருங்காட்சியகங்கள் பலவற்றில், காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்ற படைப்புகள், சரியான முறையில் இல்லை. அங்கே பாதுகாப்பாகவும் இருக்கின்றது; பல்வேறு நாட்டவர்கள் வந்து பார்க்கவும் வாய்ப்பாக இருக்கின்றது. எந்த ஊரில் இருந்து, அந்தச் சிற்பங்கள் கொண்டு வரப்பட்டன; அவற்றின் சிறப்புகள் யாவை என்பது பற்றிய குறிப்புகளையும் எழுதி வைத்து இருக்கின்றார்கள்.

கார்ல் மார்க்சின் கல்லறையில்...
லண்டன் ஹை கேட் கல்லறையில் அமைந்து உள்ள கார்ல் மார்க்சின் கல்லறையைப் பார்த்தேன். எத்தனையோ நினைவிடங்களுக்குச் சென்று இருக்கின்றேன். உலகம் முழுவதும் மே தினம் கொண்டாடப்படுவதற்கான அடித்தளத்தை அமைத்த, அமெரிக்காவின் சிகாகோவில், வைக்கோல் சந்தை சதுக்கத்தைப் (Hey market) பார்த்து இருக்கின்றேன். கார்ல் மார்க்சின் கல்லறையில் என் உடல் சிலிர்த்தது. உலகத்துக்கே பொது உடைமைத் தத்துவத்தைத் தந்த அந்த ஞானியின் கல்லறையில், நீண்ட நேரம் செலவிட்டேன். அதன் அருகிலேயே, அவரது அன்பு மனைவி ஜென்னியின் கல்லறையும் உள்ளது. ஒரு அடர்ந்த காடு போலத் தோற்றம் அளிக்கின்ற அந்தக் கல்லறைத் தோட்டத்தில், கார்ல் மார்க்சின் முகத்தையும் செதுக்கி வைத்து இருக்கின்றார்கள். என் பயணத்தின் மறக்க முடியாத ஒரு இடமாக இது இருக்கின்றது.

பக்கிங்ஹாம் அரண்மனையைப் பார்த்தேன். ஒருகாலத்தில், உலகத்தைக் கட்டி ஆண்ட பரம்பரையின் அந்த மாளிகை ஒரு ஆதிக்கக் கோட்டை. இன்றைக்கும் அவர்களுடைய ஆட்சி அங்கே தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அந்தக் காலத்தை நினைவுபடுத்துகின்றது. கலை வேலைப்பாடுகள் நிறைந்த கட்டடம். நாள்தோறும், பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வந்து, அந்த அரண்மனையைப் பார்க்கின்றார்கள். அரண்மனைக்கு முன்பு, பரந்து விரிந்து பச்சைப் பசேல் என்ற புல்வெளி அமைந்து இருக்கின்றது. கண்ணைக் கவர்கிறது. இத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வந்து சென்றாலும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் என்பதே இல்லை. அவ்வளவு தூய்மையாகப் பராமரிக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது.

தேம்Þ நதிக்கு அருகில் இருக்கும் புகழ் பெற்ற லண்டன் நேஷனல் தியேட்டரைப் பார்த்தேன். அங்கேஒரு இடத்தில், சத்யஜித்ரேயின் மிகப்பெரிய உருவப்படம் தொங்கிக் கொண்டு இருக்கின்றது. ஒரு திரைப்பட விழா நடந்து கொண்டு இருந்தது.

என்னுடைய லண்டன் பயணத்தை, தமிழ்த் தொலைக்காட்சி (டிடிஎன்), ஒரு ஆவணப்படமாகத் தயாரித்தது. யமுனா இராஜேந்திரன்தான் இயக்கினார். இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர். கோவைக்காரர். சிறந்த எழுத்தாளர், விமர்சகர். பன்முக ஆற்றல் படைத்தவர். பள்ளிப் பருவத்திலேயே தேம்Þ நதியைக் குறித்து இலக்கியங்களில் படித்து இருக்கின்றேன். நான் பார்த்தபோது, தண்ணீர் அதிகமாக இல்லை. எனவே, நதிக்கு உள்ளேயே இறங்கி மணலில் நடந்தேன். அதையும் ஒளிப்பதிவு செய்தார்கள்.

டென்மார்க்
இங்கிலாந்தில் இருந்து தொடர்வண்டியில் பயணித்து பிரான்Þ, ஜெர்மனி வந்து, அங்கிருந்து காரில் டென்மார்க் நாட்டுக்குச் சென்றேன். அங்கே, பத்து நாள்கள் தங்கி இருந்தேன். ஹேனிÞ, ஹால்Þப்ரோ ஆகிய இரண்டு இடங்களில் ஓவியக் கண்காட்சி நடந்தது. தலைவர் பிரபாகரன் அவர்களுடைய உடன்பிறந்த மூத்த அண்ணன் மனோகரன் அவர்களுடைய இல்லத்தில் இரண்டு நாள்கள் தங்கி இருந்தேன். டென்மார்க் நாட்டில் மக்கள் தொகை குறைவு. வளமான வாழ்க்கை. சிறந்த மேய்ச்சல் நிலங்கள் உள்ளதால், கறவை மாடுகள் அதிகம் உள்ளன. பால்பண்ணைத் தொழிலுக்கு உலகப் புகழ் பெற்றது. சில நாள்கள் தங்கிச் சுற்றிப்பார்த்துவிட்டு, தலைநகர் கோபன் ஹேகனில் இருந்து, ஃபிராங்பர்ட் வழியாக சென்னைக்குத் திரும்பினேன். இரண்டு மாத காலப் பயணம் இனிதே நிறைவு பெற்றது.

என்னுடைய பயணங்களில் நிறையப் படங்கள் எடுத்து வைத்து உள்ளேன். மேலும் பல செய்திகளை விரிவாக எழுதத் திட்டமிட்டு உள்ளேன்!