மக்களிடம் சென்றடையவே கலை...

நேர்காணல்: ஆர்.பி.எஸ்.

சுபமங்களா, ஜ
ூன் 1992

 
வன்முறையைத் தங்களின் ஆயுதமாக்கிக் கொண்டு மக்கள் உரிமைக் கழகத்தினர் மேல் போலீஸ் தொடுத்த அராஜகங்களை எதிர்த்து நடந்த சமீப ஊர்வலத்தில் அந்தத் தமிழ் இளைஞரின் குரல் ஒலித்தது. மதக் கலவரங்களுக்கு எதிரான கலைவெளிப்பாட்டுக் கருத்தரங்குகளில் அந்த இளம் ஓவியர் தன் படைப்புகளை வன்முறைக்கு எதிரான வகையில் அது உணர்த்தப்பட வேண்டிய அவசியம் பற்றியும், தீர்வு பற்றியும், வெளிப்படுத்தி இருந்தார். மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் மேல் திணிக்கப்பட்ட ஆசிரியர்களின் பாசிசச் செயல்களை எதிர்த்துக் குரல் கொடுத்திருந்தார் அவர். ஆந்திராவில் அவ்வப்போது நடந்துவரும் கீழ்ஜாதியினர் மேலான அடக்குமுறையும், சுரண்டலும் அவரின் பல ஓவியங்களில் வெளிப்பாடாகி இருக்கிறது. உலகெங்கும் நடந்துவரும் வன்முறையை அவ்வப்போது ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். கும்பகோணம் மகாமகப் பலிகள் பற்றின வேதனையை அவர் முகம் வெளிகாட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பலிகள் பற்றின ஓவியமொன்றின் மனத்தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார். அந்த இளைஞர் கு. புகழேந்தி

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை ஓவியப் படிப்பின் இறுதியில் இருக்கும் புகழேந்தி, கல்கத்தாவின் ஓவியப்போட்டி ஒன்றில் கேட்பாரற்றுக் கிடக்கும் ஒருவனை மையமாக்கி வரைந்த 'பலி' என்ற ஓவியம் பரிசு பெற்றதன் மூலம் அகில இந்திய அங்கீகாரத்திற்கு உட்பட்டார். அப்போட்டிக்கு மிருணாள் சென். எம்.எஃப். உசேன். ஷபானா ஆஸ்மி ஆகியோர் முக்கியஸ்தர்களாக இருந்தார்கள். ஈழப் படுகொலைகளுக்கு எதிரான தொடர் ஓவியங்கள். நெல்சன் மண்டேலா. அரசியல் சட்டவிதி 356. ஹரிஜனப் பெண்ணை நிலப்பிரபு நிர்வாணமாக்கி நடத்தின. ஆந்திர ஊர்வலம், வன்முறைக்கு எதிரான கலை என்ற தலைப்பிலான தொடர் ஓவியங்கள் ஆகியன குறிப்பிடத்தக்கவை.

தஞ்சாவூர் மாவட்டம் தும்பத்திக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கு.புகழேந்தி, மனித மனங்களின் விசித்திர நிலைகளை ஓவியங்களாக்கியவர்களின் மத்தியில், சமூக ஈடுபாடே தன் ஓவியத்தில் பெரும்பங்கு வகிப்பதாய் நம்புகிறார்.
அவரிடம்...

படைப்பாக்கம் என்ற வகையில் ஓவியம் உருப்பெறுவது பற்றி..?
பொதுவாக எதைப்பற்றி ஓவியம் செய்ய வேண்டும் என்பதை முழுமையாக மனதில் உள்வாங்கிக்கொண்டு, அதை எப்படிக் காட்சி ரூபமாக வெளிப்படுத்துவது என்பதை ஒருமுறைக்குப் பலமுறை செய்து, பல மனவடிவங்களைப் பெற்றபின் அதற்கு ஒரு முழுமையான வடிவம் கிடைக்கும். அதுவும் திருப்தி அளிக்குமா என்பது சந்தேகமே. இதற்கு எல்லையே இல்லை. ஆகையால், ஓவியம் உருவாக வேண்டும் என்றால் பல பிரசவ வேதனைகளைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். என் மனம் வரித்துக் கொண்டிருக்கிற ஈடுபாடே எனக்குக் கிடைத்திருக்கிற வடிவத்திற்கு ஒரு முக்கிய விஷயமாக அமைகிறது. அதுதான் என் பலமாகவும் இருக்கிறது. என் சமூக ஈடுபாடு ஓவியங்கள். அது என்னை வெவ்வேறு மேல்தளங்களுக்கும், பூரண அர்த்தத்திற்கும் கொண்டு செல்கிறது.

வெகுஜன அளவில் செல்லும் கலை நீர்த்துப் போகிற கட்டாயம் உண்டா?
இந்தக் கேள்வி எழுவதும், கேள்வியின் நோக்கமும் தவறானவை எனக் கருதுகிறேன். இன்றைய கலையைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான பயிற்சியைப் பெரும்பான்மையான மக்கள் இன்னும் பெறவில்லை. அதற்கான முயற்சியையும் நாம் மேற்கொள்ளவில்லை. முயற்சியை மேற்கொள்ளாமல் இருக்கும்வரை இந்தக் கேள்வியும் நீடிக்கும். இது அபத்தம். கலை வெகுஜன அளவில் செல்ல வேண்டும். அப்படிச் செல்லாதவரையில் கலையின் முழுப்பயன்பாட்டை, கலைஞனும் உணரமாட்டான்.

உருவ வெளிப்பாடு மட்டுமே செய்திகளைச் சுலபமாகக் கொண்டு செல்லுமா?

இக்கேள்வியும் பயிற்சி சம்பந்தப்பட்டதுதான். ஓவியங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்துப் பழகிய பின்னர்தான் சரியாகப் புரிந்துகொள்ளுகிற பயிற்சி கிடைக்கும். அது உருவமாக இருந்தாலும் சரி (Figurative) அருவமாக (Abstract) இருந்தாலும் சரி. ஆகையால் உருவ வெளிப்பாடு மட்டுமே செய்திகளை எடுத்துச் செல்லும் என்பதல்ல. அருவவெளிப்பாடும் அந்தப் பணியைச் செய்யும். ஆனால் தற்போதான நிலையில் உருவவெளிப்பாடு சுற்றுச் சுலபமாக இருக்கும். போகப் போக இந்நிலை மாறி அருவ வெளிப்பாட்டிற்கு இந்த இடம் கிடைக்கலாம்.

மாணவர் என்ற நிலையை மீறி ஓவிய வாழ்க்கையில் உங்களின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும். இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
மாணவர் என்ற நிலையில் என் மீது பல கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையைக் கடந்தபின் நான் சிந்திப்பதை முழுமையாக என்னுடைய ஓவியத்தில் செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். வேறு ஒன்றும் பெரிதாகக் கற்பனை செய்யவில்லை. சமூகம் என் சூழலையும், என் கடடையையும் நிர்வகிக்கும்.

மேல்நாட்டுத் தாக்கத்தால் தமிழில் நவீன ஓவியங்கள் சென்றடைந்துள்ள திசையை எப்படிக் காண்கிறீர்கள்?

மேல்நாட்டுத் தாக்கம் என்பது தமிழ் நவீன ஓவியங்களில் மட்டுமல்ல; கலை, இலக்கியம், மற்றத் துறைகளிலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதில் தவறேதும் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. இன்றைய தேசிய ஓவியர்களாக விளங்கும் ஆதிமூலம், பாஸ்கரன், அல்போன்ஸோ, சந்தானராஜ் போன்ற பெரும்பான்மையான ஓவியர்களிடம் மேல்நாட்டுத்தாக்கம் இருக்கிறது. அது அவரவர்களின் தனித்தன்மையும் கூட. அது சென்றடைந்துள்ள திசையைக் கணிக்கிற அளவுக்கு எனக்கு அனுபவம் போதாது என்றே எண்ணுகிறேன்.

கலையின் வெளிப்பாடு போராட்ட குணங்களைக் கொண்டது என்று நம்புகிற நீங்கள், உங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டங்களில் வெறும் ரசனையோடான கலையை விரும்பும் கட்டம் வரும் என்பதை நம்புகிறீர்களா?
போராட்டக் குணங்களைக் கொண்ட கலைக்கு ரசனை இல்லை என்று ஒருபோதும் கூறமுடியாது. ஓவியத்தின் மூலம் எதை வெளிப்படுத்துவதற்கும், ரசனை கட்டாயம் தேவை. சிலர் அழகியல் உணர்ச்சியை மட்டுமே வெளிப்படுத்த விரும்பலாம். அவர்களில் இருந்து நான் வேறுபடுகிறேன். சிலர் சமூகப் பிரச்சினைகளை ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்பலாம். அது அவரவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. இரண்டிற்கும் ரசனை என்பது அவசியம். நான் என் ஈடுபாட்டு நோக்கத்தால் சமுதாயப் பிரச்சினைகளை மையமாக வைத்து ஓவியங்களை வரைவதால் ரசனையை நான் விரும்பவில்லை என்று அர்த்தம் அல்ல. இன்றைய சமூகச் சூழலில் அழகியல் உணர்ச்சியை மட்டுமே நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் நான் அதை விரும்பக்கூடும். அது அப்போது இருக்கும் சமுதாயச் சூழ்நிலையைப் பொருத்தது.

சாதரணப் பொதுஜனம் விளங்கிக்கொள்ளும் வகையில் 'மாடர்ன் ஆர்ட்' என்பதற்குத் தாங்கள் கூறும் விளக்கம்?
'மாடர்ன் ஆர்ட்' மூலம் ஓர் ஓவியன் அவன் என்ன நினைத்தாலும் கிரியேட் செய்ய முடியும் என்ற சுதந்திரத்தை அவன் பெறமுடிகிறது. இது மறுமலர்ச்சி ஓவியங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது. சுருங்கச் சொன்னால் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாகச் செய்தியைக் கூறுவதும், சில சமயங்களில் பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டுவதும்தான்.

போராட்டத்தை வளர்க்கும் கலையை மக்களிடம் கொண்டு செல்லும் வழிக
ள்...
போராட்டத்தை வளர்க்கக் கலையைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தெரு நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள் போன்ற வடிவங்கள் நடைமுறையில் உள்ளவையும்கூட. ஓவியங்களையும் தெருக்களில் மக்கள் காட்சிக்கு வைப்பதுபோல மக்களிடம் சுலபமாகச் சென்றடைய வாய்ப்பு இருக்கிறது. சமீபத்தில் தஞ்சையிலும் நானும், சில நண்பர்களும் வன்முறைக்கு எதிரான கலை வெளிப்பாடு என்ற தலைப்பில் பெரிய கூட்டு ஓவியமொன்றை வரைந்து தெருவில் கண்காட்சி யாக்கினோம். மக்களின் வரவேற்பு சந்தோஷம் தந்தது. இன்றைக்குத் தொலைக்காட்சியும், பத்திரிகைகளும் நல்ல தொடர்பு சாதனங்களாக இருப்பதால் இவற்றின் மூலம் மக்களிடம் சுலபமாகக் கொண்டு செல்லலாம். மக்களிடம் சென்றடைகிறபோதே ஓவியனின் பணி முழுமையாகும்.