உலக இந்திய வல்லாதிக்க சக்திகள் சிங்களத்திற்கு துணைநின்று போரிட்டபோது நாம் புலிகளிற்கு உற்ற துணையாக நிற்கவில்லை! வேண்டும்!

                                                                    - ஓவியர் புகழேந்தி -

சூரியக்கதிர்
01-09-2012           


ஓவியர், நூல் ஆசிரியர் பேச்சாளர் என்கிற பன்முகங்கள் கொண்டவர் ஓவியர் புகழேந்தி. தமிழீழம் சம்பந்தமாக அதிகளவு ஓவியங்கள் வரைந்த ஒரே ஓவியர் என்கிற பெருமை இவரையே சேரும். எரியும் வண்ணங்கள், உறங்காத நிறங்கள், திசைமுகம், சிதைந்த கூடு, புயலின் நிறங்கள் போன்ற இவரது படைப்புக்கள் பலரது கவனங்களை ஈர்ந்தவை அதிலும் 150 அடி கொண்ட இவரது குஜராத் பூகம்பம் ஓவியம் மிகப்பிரபலம். மாணவ பருவத்தில் இருக்கும் போதே ஓவிய மேதை எம். எப். உசேனிடமிருந்து இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர தமிழீழ ஆதரவாளரான புகழேந்தியை அவரது ஓவிய கூடத்தில் ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

தமிழீழத்தின் தீவிர ஆதரவாளராகவும், அது சம்பந்தமான பங்களிப்பையும்  பல வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஓவியராக இருந்து வருகிறீர்கள். சமீபத்தில் நடந்து முடிந்த டெசோ மாநாடு பற்றி சமூக அக்கறையுள்ள நீங்கள் கூற விரும்பும் கருத்து என்ன?
"தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன தமிழீழத்தில் தமிழ் மக்களின் வாழ்வில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை இன்னமும் துயரத்தையும் அவலத்தையும் அவர்கள் சந்தித்து கொண்டேதான் இருக்கிறார்கள். நான் கடந்த 25 முதல் 30 வருடங்களாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகிறேன். தமிழிழ் போராட்டம் மிக பெரிய பின்னடைவை சந்தித்ததற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் மற்றும் தமிழர்கள் தான் காரணம்! ஈழ் விடுதலைப் போராட்டத்தில் ஒருமித்த கருத்து வருவது இல்லாமலேயே இருக்கிறது. இது தான் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு மிகப்பெரிய காரணம் உலக வல்லரசுகள் மற்றும் இந்திய வல்லாதிக்கம் சிங்களத்துக்கு உதவியது எல்லாமே உண்மை! இவர்களை எதிர்த்து நின்று போரிட்ட புலிகளுக்கு நாம் உற்ற துணையாக இல்லை. தமிழகத்தில் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற போராட்டங்களை நசுக்கியது அப்போது இருந்த அரசு! அதே நிலையில் முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பிறகு பல்வேறு வகையான குழுக்கள் 'அவரவர் செய்வது தான் சரி ' என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் 2009 மே 18 தேதிக்கு பிறகு தமிழன் திருந்தவில்லை என்றால்         ஒரு போதுமே தமிழன் திருந்த மாட்டான் என்பது என்பது எனது கருத்து !

தவறு செய்வது இயல்பு, மனிதர்களுக்கு இயல்பு தலைவர்களுக்கும் அது  இயல்பு  ஒரு தவறு செய்யப்படும் போது அதன் பிறகு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதுதான் சரியான தலைமையின் அடையாளமாக இருக்க முடியும் அந்த அடிப்படையில் யாரும் சரியாக திருந்தியதாக தெரியவில்லை. இதில் ஒன்றே ஒன்றை தன இறுதியாக கூற முடியும் . தமிழிழீழ பிரச்சனைக்கு தீர்வு என்பது  தமிழீழம் மட்டும்தான்! உலகம் முய்ழுவதும் தமிழீழத்தில் நடந்த உரிமை மீறல், போர்குற்றம் என்கிற பேச்சுக்கள் எழுந்துவிட்ட நிலையில் கலைஞர் கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தி இருக்கிறார். அவர் நடத்திய நோக்கம் எனக்கு ஆயிரம் கேள்விகளை ஏற்படுத்தி இருக்கிறது தமிழீழ பிரச்சனை நடக்கும் போது அதை தடுக்க வேண்டிய இடத்தில் இருந்தவர் இன்றைக்கு எல்லாம் முடிந்த பிறகு இந்த மாநாட்டை நடத்தி இருக்கிறார். அவர் நினைத்து இருந்தால் தமிழீழத்தில் உள்ள தமிழ் அரசை காப்பாற்றிகொள்ள  நடந்த போராட்டத்துக்கெதிராக இந்திய துணை புரிவதை நிச்சயமாக தடுத்திருக்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறவன். குறைந்த பட்சம் இதையாவது இவர் செய்கிறார் என்ற அளவில் தான் இதை நான் பார்க்கிறேன் "

உங்களுடைய தமிழீழம் சார்ந்த ஓவியங்களில் போராளிகள் குறித்த பல ஓவியங்கள் கறுப்பு வெள்ளை வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. நீங்கள் கறுப்பு வெள்ளை வண்ணங்களை பயன்படுத்தியதற்கு பிரத்யேக காரணங்கள் என்ன ?
" என்னுடைய ஓவியங்களில் பல்வேறு வகையான ஓவியங்கள் வண்ணங்களிலும் கறுப்பு வெள்ளை நிறங்களிலும் வரையப்பட்டுள்ளன. மக்கள் சந்தித்த அவலம், துன்பம்,போன்ற விஷயங்களை ஓவியங்களாக செய்தாலும் ஒரு தலைப்பின் கீழ் திமெட்டிலாக (The matical )  தான் செய்வேன் அப்படி செய்யும் போது அப்படி செய்யும்போது முப்பது நாற்பது ஓவியங்கள் தான் வரைவேன். கவிஞர்கள், எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களில் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவர். 'போர்முகங்கள்' தொகுப்பில் ஏற்கனவே நான் வரைந்த தமிழிழ் போராட்டங்கள் சார்ந்த 50 ஓவியங்கள் இருக்கின்றன. அதன் பிறகு 30 ஓவியங்களை வரையத் திட்டமிட்டிருந்தேன் . ஏற்கனவே இருக்கக்கூடிய பழிய ஓவியங்களை நான் கவனிக்கும் போது பல வண்ணங்களில் ஓவியங்கள் இருக்கின்றன. உலகளவில் நான் ஒரு ஓவியத் தொகுப்பில் இவற்றை  சேர்க்கும்போது   அவை அனைத்தும் ஒரே மாதிரி இருக்க கூடாது என்பது அங்கே முக்கியம். அதற்காகதான் அவற்றை கறுப்பு வெள்ளையில் (Drawing)  வகையில் வரைந்தேன்.மக்கள் சந்தித்த போராட்டங்களை கடந்த 25 முதல் 30 வருடங்கள் பதிவு செய்த நான் அந்த போராட்டங்களில் பங்கெடுத்த போராளிகளின் பதிவு அதில் இல்லாமல் இருப்பதைக் கவனித்தேன். போராளிகளை பதிவு செய்ய கறுப்பு வெள்ளை வண்ணங்களை வரைந்தேன். இதற்கு காரணம் கறுப்பு வெள்ளையில்  வரைவதின் மூலமாக  அந்த போராளிகளின் வலிமையை அதிகளவில் காட்ட முடியும் என்பது எனது கருத்து"

நீங்கள் ஓவியத்துறைக்கு வருவதற்கு உங்களது குடும்பத்தினர் எந்த வகையில் ஆதரவு தந்தனர்?
" என் பிறந்த ஊர் பெயர் தும்பத்திக்கோட்டை நான் 3 ம் வகுப்பு படிக்கும் பொது படம் வரைந்த அனுபவம் எனக்கு இப்போதும் இருக்கின்றன. எல்லா விதமான படங்களையும் வரைந்து வந்தேன். பள்ளிபருவம் முடியும் வரையில் இயற்கை காட்சிகளை வரைந்தேன் 9 ம் வகுப்பு படிக்கும் போது பாரதியார் படம் வரைந்து எனக்கு முதல் இடம் கிடைத்தது. நான் படித்த மேளஉளுவூர்  அரசு உயர் நிலைப்பள்ளியில் நான் வரைந்த அனைத்து ஓவியங்களுக்கும் முதல் பரிசு கிடைத்துவிடும் அதனால் எனக்கு பள்ளியில் ஒரு கதாநாயகன் அந்தஸ்தை கொடுத்தது. அப்போதே ஓவியக்கல்லூரியில் மாணவனாக வேண்டும் என்று உறுதி செய்து விட்டேன். என் தந்தைக்கு இரண்டு கண்களிலும் பார்வை கிடையாது. அவர் என்னை மருத்துவர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார். என் தந்தைக்கு சமூக அக்கறை நிறைய உண்டு நான் மருத்துவராக இருந்தால் தன்னை போன்று கண் தெரியாதவர்களுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைத்தார் ஆனால் நான் ஓவியனாக வேண்டும் என்ற விஷயத்தில் பிடிவாதமாக நின்றேன். இது அவருக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கலாம் ஆனாலும் அவர் என்னை தடுக்கவில்லை என் தந்தை இந்த விஷயத்தை எனது பள்ளி தலைமை ஆசிரியர் கனகசுந்தரம் அவர்களிடம் கூறினார் ஆனால் எனது ஆசிரியர் எனது விருப்பத்தை தடுக்க வேணாம் என்று கூறிவிட்டார்"

குஜராத் பூகம்பம் சம்பந்தமான ஓவியத்தை 150 அடி அளவில் மிகப்பெரிய வடிவத்தில் வரைவதற்கு என்ன காரணம்?
"குஜராத் பூகம்பம் நடந்த காலகட்டத்தில் இரண்டு மூன்று நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை அதிலும் தொலைக்காட்சியில் ஒரு குழந்தை கொடூரமான முறையில் இறந்து கிடந்த காட்சியை நான் பார்க்கும் போதுதான் அந்த விஷயங்களை ஓவியங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு வந்தது. அதற்கு முன்பாக 1988 ல் நான் அமீனியா பூகம்பத்தை வரைந்திருக்கிறேன் அதை விட அதிகமான வழியை குஜராத் பூகம்பம் ஏற்படுத்தி விட்டது. அப்போது நான் ஒரு திட்டமிடலில் ஈடுபடுகிறேன் குஜராத் பூகம்பம் எனப்படும் மிகப்பெரிய துயரத்தை போலவே மிக நீளமான ஓவியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன் 'இவ்வளவு நீலம் எதற்கு ' என்று பலர் அப்போது கேட்டனர். எனக்கு அந்த நீளம் போதவே இல்லை !"

நீங்கள் உங்கள் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், படிக்கும் தத்துவங்கள், அறியும் அவலங்கள் போன்றவற்றில் எவற்றை ஓவியங்களாக பதிவு செய்ய வேண்டும் என்பதை எப்போது முடிவு செய்கிறீர்கள்?
"1983 - ம் ஆண்டில் நான் கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் நான் மாணவனாக சேர்கின்ற காலகட்டத்தில் ஈழ விடுதலை போராட்டம் , தமிழகத்தில் மாணவர் போராட்டம் தொடங்கியது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன் அப்போது தன ஈழ விடுதலை சம்பந்தமான ஓவியங்கள் வரைய தொடங்கினேன் அதற்கு அடுத்த வருடங்களில் 1984 ,௧௯௮௫ கால கட்டத்தில் உலகம் முழுவதும் நடக்கின்ற பல்வேறு போராட்டங்கள் குறிப்பாக தென்னாபிரிக்க விடுதலைப்போராட்டம், இந்தியாவில் நடக்கும் ஜாதி சமய பிரச்சனைகள் போன்றவற்றை கவனிக்க ஆரம்பித்தேன் அவற்றை வரையவும் செய்தேன் இவற்றை எல்லாம் சேர்த்து நான் முதல் ஓவிய கண்காட்சியாக 1988  ல் வைத்தேன். அப்போது பார்வையாளர் ஒருவர் 'நீங்கள் இடதா வலதா' என்று கேட்டார். நான் வலது கைப்பழக்கம் உள்ளவன் என்பதை குறிக்க வலது என்றேன் அப்போது அருகில் இருந்த தோழர் ஒருத்தர் இடது கம்யூனிஸ்டா அல்லது வலது கம்யூனிஸ்டா என்கிற விளக்கத்தை சொன்னார். அதன் பிறகு தான் மார்க்சிஷம் போன்ற தத்துவங்கள் இருக்கிறது என்பதை  அறிந்தேன். நான் மானித இன உணர்வாளன் என்றேன் நான் செய்தது தான் கம்யூனிசம் என்றால் நான் கம்யூனிஸ்ட் நான் செய்தது பெரியாரியல் என்றால் நான் பெரியார் ஆதரவாளன்.எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுடைய விடுதலை பற்றி பேசுவதுதான் தத்துவங்கள் என்றால் அந்த தத்துவங்களுக்குள் நான் உள்ளடங்குகிறேன் என்பதை புரிந்து கொண்டேன் தத்துவங்கள் என்னை வழி நடத்த வில்லை. நான் செய்த ஓவியங்கள் என்னை தத்துவவாதியாக மாற்றுகின்றன."

நீங்கள் வரையும் பத்திரிகை ஓவியங்களுக்கும் சுயமாக வரையும் ஓவியங்களுக்கும் எந்த மாதிரியான வித்தியாசங்கள் இருகின்றன?
"இரண்டிற்கும் வேறுபாடுகள் பெரிதாக ஒன்றும் இல்லை சுயமாக வரையும் ஓவியங்களில் சமூகத்தில் நடக்கும் விசயங்களில் நான் வெளிப்படுத்த விரும்பும் விசயங்களை படைப்பாக வரைகிறேன். பத்திரிகைகளுக்கு வரையும் போது அவர்கள் கொடுக்கும் கவிதைகள் கதைகளை படித்து அதன் மூலமாக எழுகின்ற உணர்வுகளை நான் படைப்பாக வரைகிறேன். அந்த கதை அல்லது கவிதை ஏற்படுத்துகிற பதிப்பை மட்டுமல்லாமல் தனியாக அந்த ஓவியம் இருந்தாலும் அது சிறப்பாக இருக்கின்ற அளவில் நான் ஓவியத.்தை வரைவேன்

. . . . . * . . . . .