ஒரு மக்கள் கலைஞனின் தூரிகைப் போர்!

சந்திப்பு: கா.சு. நாகராசன்
,

தங்க மங்கை
, பிப்ரவரி 2013

எப்போதும் சமுதாயமே மிகப்பெரிய படைப்பாளி. ஆனால், எப்போதாவதுதான் சமூகத்தைப் படைக்கிற படைப்பாளிகள் தோன்றுகிறார்கள். கலைஞன் என்பவன் யார்? அவன் எப்படி இருக்க வேண்டும்? என்கிற வினாக்களுக்கு விடையாகவும் இலக்கணமாகவும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஓவியர் புகழேந்தி.

கடந்த 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தமிழர்களும் உலகமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற ஒரு சேதி என்ன தெரியுமா? புகழேந்தியின் தூரிகை. ஒரு சமுதாயத்தை, ஒரு நல்ல சமுதாயத்தை, நேர்மையும், பகுத்தறிவும், மனிதநேயமும் கொண்ட ஒரு மகத்தான சமுதாயத்தைப் படைப்பதற்கான பெரும்பணியை ஒரு வேள்வியாய் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான்.

"கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே" என்கிறார் புரட்சியாளர் இலெனின். அப்படியானால், அவை மக்களின் மன மகிழ்ச்சிக்குப் பயன்பட வேண்டுமே அல்லாமல், மக்கள் கவலைப்படவும், கண்ணீர் சிந்தவும், கண்கள் சிவக்கவும், கோபப்படவுமான கரடு முரடான படைப்புகளை எப்படி 'கலை' பட்டியலில் சேர்ப்பது? அழகியல் இல்லாத வாழ்வியல் சுவையானதாக, சுகமானதாக இருக்காதே! என்றால், 'அழகியல் என்பது எது?' என்கிற எதிர்வினாவோடு பதில் தருகிறார் புகழேந்தி.

இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறு! எந்தவொரு கலைஞனும் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்! நேர்மையாகப் பதிவு செய்யவேண்டும்! ஒரு நல்ல கலைஞனின் படைப்புகளே சமூகத்தின் பாடங்களாகின்றன.

ஓவியர் புகழேந்தி, தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்திருக்கிற ஓர் அழகிய வரலாற்று ஆசிரியர். புகழேந்தியின் படைப்புகளோ போராளிகளைச் சமைக்கும் உலைக்கலன்கள்.

படித்த, மேல்தட்டு வர்க்க, சீமான்களும் சீமாட்டிகளும் உலா வருகிற கலை அரங்குகளை அல்ல, புகழேந்தியின் ஓவியங்கள் உழைக்கும் மக்களின் வெளிகளையே அலங்கரிப்பவை. இவை இளம் தலைமுறையினருக்கான பயிற்சிக் களங்களாகவே பரிணமிக்கின்றன. இங்கு எளிய மொழியில் மனிதநேயம் கற்பிக்கப்படுகிறது! மனிதம் அல்லாதவை அடையாளங் காட்டப்படுகின்றன. மனிதம் காக்கும் மகத்தான போராளிகள் உருவாக்கப்படுகிறார்கள்.

புகழேந்தியின் தூரிகைகள் வெறும் கிளர்ச்சியூட்டுவன அல்ல. அவை புரட்சியை விதைக்கின்றன. புதியதோர் உலகம் செய்ய பூபாளம் இசைக்கின்றன. இந்த ஓவியப் போராளியோடு கலந்துரையாடுகிற சேதிகளை பகிர்ந்தே தீர வேண்டும் என்கிற உந்துதல் அவரோடு பேசுகிற யாருக்கும் வந்தே தீரும்!

அரிதாரம் இல்லாத அந்தச் சொற்களை சேதாரம் இல்லாமல் தங்கமங்கை வாசகர்களுக்குப் படைப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சி எனக்கு!

எரியும் வண்ணங்கள். உறங்கா நிறங்கள், புகைமூட்டம், புயலின் நிறங்கள்... என்ன இதெல்லாம்? கலை என்பது 'ரசனை'க்குரியது. அது அழகியலைப் பாடவேண்டும்! மகிழ்ச்சியை, உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும்! உங்கள் படைப்புகளின் தலைப்புகளில் கூட அழகியல் இல்லையே? என்கிற கேள்வியோடு ஓவியர் புகழேந்தியின் முன்னால் உட்கார்ந்தோம்.

"என் படைப்புகளின் தலைப்புகளில் கூட அழகியல் இல்லையா? 'அழகியல்' என்பது எதுங்க? பெண்ணை, மண்ணை, கரையை முத்தமிடும் கடலலைகளை, நெடிதுயர்ந்த மலைமுகடுகளை, பள்ளத்தாக்குகளை, மரஞ் செடி, கொடிகளை, பாடித்திரியும் வண்டினத்தை, புல்வெளியை, பறவைகளைப் படைப்பதுதான் அழகியலா?

காதலைப் பாடினால் மட்டும்தான் 'கவிதை'ன்னு ஒப்புக் கொள்வீங்களா? எங்க அம்மா பாடுன தாலாட்டு? எங்க பாட்டனும் பூட்டனும் வயல் வெளியில, நாத்து நடயில, ஏத்தம் இறக்கையில பாடுன பாட்டுகள் கவிதை இல்லேனு சொல்லுவீங்களா?

எனது இழப்பை, எனது வலியை, எனது அழுகையை வெளிப்படுத்தற 'ஒப்பாரி' எனது கோவத்தை, எனது விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தற பூபாளம், போர்ப்பரணி கவிதையல்லவா? உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் இலக்கணப் பிழை காண்பதும் அழுகையின் வெளியில் இலக்கியச்சுவை தேடுவதும்தான் உங்கள் 'அழகியல்'னு சொன்னா எனது படைப்புகளில் அழகியல் இல்லைதான்.

பசியால் நைந்து போன தாயுக்கும், பாலில்லாத மார்பில் சோர்ந்து போய்க் கிடக்கும் குழந்தைக்கும், உண்டு கொழுத்துப் பெருத்த உடலுக்கு மருத்துவம் பார்க்கும் கனமானவர்களுக்கும் எப்படீங்க ஒரே அழகியல் இருக்க முடியும்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமை விலங்கைச் சுமக்கிறது என் இனம். நாங்கள் சாதிகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறோம். சாத்திர, சம்பிரதாயங்களால் எங்கள் ஏற்றத்தாழ்வுகள் நியாயப் படுத்தப்பட்டிருக்கின்றன. கல்வி மறுக்கப்பட்டிருந்தது. உழைக்கிறோம், உழைப்பின் பலன் எங்களுக்கு இல்லை. இதுதானே போன நூற்றாண்டு வரைக்கும் எங்கள் தமிழினத்தின் நிலைமை!

இந்தச் சமூக அவலம்தான் 'பெரியார்' என்கிற போராளியைப் படைத்தது. அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக 'பெரியார்' எனும் சூறாவளி சுழன்று சுழன்று அடித்ததில்தான் எங்கள் மீதான அடிமைத்தளைகள் மெல்ல அறுபட்டன. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக, பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல மேல் எழுந்து வருகிறோம். ஆனால், மீண்டும், மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எங்கள் மீது சாதியும், மதமும் ஏவப்படுகிறதே! சனாதான ஆதிக்கம் நிலை நிறுத்தப்படுகிறதே. இதை 'புகைமூட்டம்' என்று சொல்லாமல் நான் வேறு எந்த அலங்கார வார்த்தையை¢ போட்டு வர்ணிக்க முடியும்? சொல்லுங்க!

உலகமெல்லாம் தமிழர்கள் இல்லாத நாடில்லை. ஆனால், தமிழனுக்கென்று ஒரு நாடில்லையே! மொகஞ்சதாரோ ஹரப்பாவில், கடல் கொண்ட இலெமூரியாவில் கொடிகட்டி ஆண்ட தமிழனுக்கு கொற்றம் இல்லை, கொடியில்லை, ஒரு நாடில்லை. இதைக் கேட்பதற்கு ஒரு நாதியுமில்லை! தமிழர் என்கிற ஒரே காரணத்திற்காக வாழ்வுரிமை பறிக்கப்பட்டதே! தங்களுக்கான அடையாளங் கள் அழிக்கப்பட்டபோது, தங்களுடைய சுவாசக் காற்றை சிங்களவர்கள் பறித்தெடுத்தபோது தம்மை, தம் இனத்தை, இனத்தின் இருப்பைப் பாதுகாக்க ஈழத்தமிழினத்திற்கு ஒரு போராட்டம் தேவைப்பட்டது. அந்தப் போராட்டக் களம் தானே 'பிரபாகரன்' எனும் தலைவனைப் பிரசவித்தது.

எட்டுக்கோடித் தமிழர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிற தாய்த் தமிழ்நாடு அல்ல, உலக அரங்கில் தமிழன் என்கிற அடையாளத்திற்கு மரியாதையைப் பெற்றுத் தந்தது; தமிழன் என்கிற இனத்திற்கு முகவரியை உருவாக்கியது. சில லட்சம் தமிழர்களுக்காகக் களமாடிய தலைவன் பிரபாகரனுடைய தமிழ் ஈழம் தான் என்பதை யாரும் மறுக்க முடியாது! அந்தத் தமிழீழ தேசம், பெரியார் காண விரும்பிய தமிழர் பூமி நெறிமுறைகளுக்கு மாறாக, அறத்திற்கு எதிராக முற்றாய் அழித்தொழிக்கப்படும் முயற்சியில் தாக்கப்பட்டபோது, அந்தச் சின்னஞ்சிறிய அழகிய தேசத்தின் மீது வல்லாதிக்க நாடுகளின் குண்டு மழை பொழியப்பட்டபோது, கேள்வி கேட்பார் யாருமின்றி என் இனம் கொன்றொழிக்கப்பட்டபோது, என் இனத்தின் வலியை, துயரை, கண்ணீரை, போர்க்குரலை எதிரொலிக்க 'எரியும் வண்ணங்கள்' என்றும் போர் முகங்கள் என்றும் 'புயலின் நிறங்கள்' என்றும்தான் என் தூரிகை பேசும்! பேசியாக வேண்டும்!

காலத்தின் கட்டாயமாக சமூகம் படைத்தளித்த தலைவர்களாம் தந்தை பெரியாரையும், தேசியத் தலைவர் பிரபாகரனையும் காட்சிப்படுத்த, வளரும் தலைமுறையிடம் வண்ணம் தீட்டிக்காட்ட நான் துரிகை தூக்கினால் 'திசைமுகம்' தெரியும். 'முகவரி' தெரியும். இவைதான் எனக்கான அழகியல்! என் மக்களுக்கான அழகியல்! நாளைய என் சமுதாயத்திற்கான அழகியல்!
ஒரு சின்ன இடைவெளியில், தொடரும் சாதீயத் தாக்குதல்கள், சாதி ஆதிக்கங்களை நிலை நிறுத்தும் முயற்சிகளை எல்லாம் பார்க்கும்போது பெரியாரியல் முயற்சிகள் பலனளிக்க வில்லையோ என்று தோன்றுகிறதே! என்று கேள்வி எழுப்பினோம். உடனே அதை வேகமாக மறுத்த ஓவியர்.

"இல்லை. நான் அப்படிக் கருதமாட்டேன். வேறுயாரும் அப்படிக் கூறினால் அதை ஒப்புக் கொள்ளவும் மாட்டேன்.

காரணம், பெரியார் நடத்திய போர் என்பதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக வேர் ஊன்றி கிளை பரப்பி விழுதுகள் இறக்கி நிலை நிறுத்தப்பட்டிருக்கிற, சமூக அவல அமைப்புக்கு எதிரான ஒரு கடுமையான போர்! பெரியார் ஐம்பதாண்டு காலம் அதைச் சிறுக வெட்டி அதன் வேரை அசைத்து அடையாளங் காட்டி விட்டுப் போயிருக்கிறார். பெரியாருக்குப் பின்னால் வந்த யாரும் அதைப் பெரியாரின் வழிமுறைப்படி நடத்தத் தவறிவிட்டோம்! அதனால் அது அங்கொன்றும் இங்கொன்றுமாக தழைக்கிறதே தவிர தமிழ் மண்ணில் சாதியமோ, மதவெறியோ ஒருபோதும் மீண்டும் வேர்பிடிக்க முடியவே முடியாது! அதேநேரத்தில் தமது சொந்த மான அவமானங்களைக் குறித்து தலைமை, முக்கியத்துவம், மேலாண்மை குறித்து கவலைப்படாமல் பெரியாரின் கொள்கை வழி இன விடுதலை என்கிற இலக்கில் பயணிப்பதும், இளைஞர்களை பயணிக்கச் செய்வதும் ஒவ்வொரு பெரியாரியல் வாதிக்குமான கடமை என்றும் கருதுகிறேன். நாம் நமது கடமையைத் தவறினால் பகைமை பெருகும்!

தமிழ் இனத்திற்கு தமிழ் ஈழம்தான் உலக அரங்கில் முகவரி பெற்றுத் தந்ததாக சொன்னீர்கள். 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிறகு தொடரும் நிலை தமிழ் ஈழம் என்பது வெறும் கனவோ என்று அச்சப்படும்படியாக இருக்கிறதே! என்று அடுத்த கேள்வியைக் கேட்டபோது, ஒரு கனத்த அமைதி நிலவியது. (முள்ளிவாய்க்கால் துயரம் எந்த அளவு ஓவியரைத் தாக்கியுள்ளது என்று உணர முடிந்தது)

'ஃபீனிக்ஸ்' என்ற பெயரை இலக்கியத்தில் வாசித்திருக்கிறோம். அப்படியொரு பறவை இருந்ததா என்பது தெரியாது. ஆனால் அந்த வார்த்தை உணர்த்துகிற சேதி 'சாம்பலில் இருந்து உயிர்த்தெழுதல்' என்ற இயற்கையின் நியதியை. 1953இல் இருந்து தொடரும் இன ஒடுக்குமுறை பிரபாகரன் எனும் தலைவனைப் படைத்தது. 1983இல் நடந்த இனப்படுகொலை எண்ணற்ற போராளிகளை உருவாக்கியது. அரை நூற்றாண்டுகால அவலத்தையே முறியடித்த பேரவலம் 2009இல் நடந்தது. முள்ளிவாய்க்கால் முடிவல்ல! அந்தச் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைகளாய் போராளிகள் உயிர்த்தெழவே செய்வார்கள்.

இலங்கைத் தீவில் நிலவும் அனைத்து வகை சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு 'தனித்தமிழ் ஈழம்தான்.' ஈழம் மலராமல் வேறு தீர்வே கிடையாது. ஈழம் மலர்ந்தே தீரும். அது காலத்தின் கட்டாயம். முப்பதாண்டுகால களப் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இன்றைக்கு உலக நாடுகள் அவையில், அரங்கங்களில் ஈழவிடுதலை குறித்த விவாதம் எழுந்து கொண்டே இருக்கிறது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் பேராற்றல் இது. இதிலேயும் தானாக மலரும் என்று வீணாக நாம் இருந்தால் ஈழம் மலராது. ஒட்டுமொத்த தமிழர்களும், ஈழ விடுதலை என்பது நம் இனத்தின் விடுதலை என்கிற கருத்தில் ஒன்றுபட்டு 'ஈகோ' இல்லாத ஓர்மையில் களமாட வேண்டும்.

வளரும் தலைமுறை இளைஞர்கள் நம் வரலாறுகளைப் படிக்க வேண்டும். நம் இனத்தின் வேர்களை உணர வேண்டும். இயக்கங்களின் தலைவர்கள் இளைஞர்களை வெறும் உணர்ச்சியாளர்களாக மட்டுமே சமைக்காமல், வரலாற்று அறிவும், போராட்ட குணமும் கொண்ட தோழர்களாகப் படைக்க முன்வரவேண்டும். வரலாறு தெரியாத போராட்டமும், போர்க்குணமில்லாத வரலாற்று அறிவும் பயனளிக்காது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அதைத்தான் என் தூரிகையின் வழி பேசிக் கொண்டிருக்கிறேன். எனது பேச்சை, கருத்தை எழுத்தின் வழி என் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்பிய தங்கமங்கைக்கு நன்றிகள்!"

என்று தெளிவாக, துணிவாகப் பேசியவரிடம் கடைசியாக, ஒரு படைப்பாளியின் இலக்கணம் என்ன? என்று கேட்டோம். "உண்மையைப் பேச வேண்டும்! உரக்கப் பேச வேண்டும்! பிறருக்கு உரைக்கப் பேச வேண்டும்! என்றார். படைப்பாளிகளின் உள்ளத்தில் உளி கொண்டு செதுக்கிய இந்தச் சொற்களின் சுவையேயோடு நன்றி கூறி விடைபெற்றோம்!

. . . . . * . . . . .