அமெரிக்கர்களை மலைக்க வைத்த பெரியார்...

நேர்காணல்: அ. குமரேசன்

தீக்கதிர், வண்ணக்கதிர், 24.11.2002

ஓவியக் கண்காட்சிகள் என்றால் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர் வட்டத்தோடு நிற்கிற நிலையில் ஓவியர் புகழேந்தியின் படைப்புகள் கடல் கடந்து சென்றுள்ளன. அமெரிக்கா, கனடா, ஜெர்மன், பிரான்ஸ், டென்மார்க் முதலிய நாடுகளில் நடந்த கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம்பெற்று அந்த மக்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளன. சமூக அவலங்கள் குறித்து இவர் தீட்டிய 'உறங்கா நிறங்கள்' அவற்றுக்குத் தீர்வு காணப் போராடிய தந்தை பெரியார் பற்றிய 'திசை முகம்' ஆகிய படைப்புகள் அங்கெல்லாம் தமிழகக் கலைஞர்கள் மீது புதிய பார்வையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பெரியார் ஓவியங்களின் படைப்பு நேர்த்திக்காக அவற்றை ரசித்த மேற்கத்திய மக்கள் அவரது கோட்பாடுகள் குறித்து அறிந்ததும் வியப்பையும் மலைப்பையும் வெளிப்படுத்தினர். இத்தகைய உலகளாவிய சந்திப்புகள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்குத் தமிழகத்திலும் முயற்சிகளை மேற்கொள்ளும் தாகத்தை ஏற்படுத்திய அந்தப் பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் புகழேந்தி.

எந்தெந்த நாடுகளுக்கு ஓவியப் பயணம் மேற்கொண்டீர்கள்? அங்கு இந்தச் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தவர்கள் யார்? ஓவியங்களைக் காண வந்தவர்கள் யார்?

அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புகளும் கனடா நாட்டுத் தமிழ்ச் சங்கமும் இணைந்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் அவர்கள் மாபெரும் மாநாடு நடத்துகிறார்கள். தமிழகக் கலைஞர்கள், எழுத்தாளர்களை வரவழைத்து கௌரவித்துக் கலந்துரையாடுகிறார்கள். இந்த ஆண்டு என்னை அழைத்திருந்தார்கள். அதையொட்டி அமெரிக்காவில் சிகாகோ வாஷிங்டன் நகரங்களிலும் அப்படியே கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் எனது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இங்கிலாந்தில் லண்டனில் இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

கண்காட்சிகளுக்குப் பெருமளவு தமிழர்கள்தான் வந்தார்கள். சிகாகோ வாஷிங்டனில் அமெரிக் கர்களும் கணிசமாக வந்தார்கள். மற்ற நாடுகளில் அந்த மக்கள் ஓரளவுக்கு வந்தார்கள்.

உங்களுடைய ஓவியங்களைப் பார்த்த அமெரிக்கர்களும் மற்ற நாட்டவர்களும் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?

சிகாகோ வாஷிங்டன் கண்காட்சியில் பொதுவாக எனது உறங்கா நிறங்கள் வண்ண ஓவியங்களை ரசித்தபடி வந்தவர்கள் கறுப்பு -வெள்ளையில் கோட்டோவியமாக வரைந்திருந்த திசைமுகம் படங்களைப் பார்த்ததும் அவற்றின் முன் நீண்டநேரம் நின்றுவிட்டார்கள். மற்ற நாடுகளிலும் அப்படித்தான். பெரியாரின் தோற்றமும் நான் சித்தரித்த விதமும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன.

பெரியார் ஓவியங்களை அவர்கள் ரசித்தது உங்களது படைப்பு நேர்த்தி அடிப்படையிலோ அல்லது அவரது சிந்தனையின் அடிப்படையிலா?

முதலில் அவர்களை ஈர்த்தது ஓவியத்தின் நுட்பம்தான். பொதுவாக ஓவியக் கலை பற்றியும் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் பற்றியும் ஞானத்தோடு வந்த அவர்கள் அந்தக் கறுப்பு வெள்ளைக் கோட்டோவியங்களின் மாறுபட்ட தன்மையாலும் அவற்றில் வெளிப்படும் ஓர் ஆழமான உணர்வாலும் முதலில் கவரப்பட்டார்கள். 25 கோணங்களில் யாரோ ஒரு முதியவர், ஒரு ஞானி என்று மட்டுமே அவைகளைப் பார்த்தவர்கள், பெரியாரின் சிந்தனைகளைப் பற்றியும் போராட்டங் கள் பற்றியும் நாங்கள் சொன்னபோது மிகுந்த வியப்பும் மலைப்பும் அடைந்தனர். இப்படியொரு போராளி இருந்தாரா எனக் கேட்டு அவரைப் பற்றி நிறைய விவரங்களை ஆர்வத்தோடு விசாரித்தனர். அவரைப்பற்றி ஆங்கிலத்தில் புத்தகங்கள் விலைகொடுத்து வாங்கவும் செய்தனர். டென்மார்க்கில் தொடர்ச்சியாகப் பெரியார் ஓவியங்களைக் கண்காட்சியாக நடத்துகிறோம் என்று மீதமிருந்தவற்றைச் சொல்லி வாங்கி வைத்துக் கொண்டனர்.

தமிழர்கள் எவ்வாறு ரசித்தனர்? அவர்களது வெளிப்பாடு எப்படி இரு
ந்தது?

தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலோர் பெரியாரை கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தவர், பார்ப்பனர்களைத் திட்டியவர் என்பதாகவே அறிந்து வைத்துள்ளனர். சமூக நீதி, பெண்ணுரிமை, அறிவியல் கண்ணோட்டம் முதலியவற்றை வளர்க்கவும் வலுப்படுத்தவும் அவர் நடத்திய போராட்டங்களைச் சொன்னபோது அவர்களும் முதல்முறையாகக் கேட்பவர்களாக வியப்படைந்தனர்.

கண்காட்சிகளுக்குத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்தது இங்கே நாம் பார்க்க முடியாத அம்சமாக இருந்தது. அதேநேரத்தில் அவர்கள் தங்களது மொழி பண்பாட்டு அடையாளங்களை இழந்திருப்பதைக் காண முடிந்தது. இன்று மறுபடி அந்த அடையாளங்களை மீட்டு நிறுவிக் கொள்கிற முனைப்பு ஏற்பட்டுள்ளது. மாநாடும் கண்காட்சிகளும் கலந்துரையாடல்களும் அந்த முனைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருந்தன. குழந்தைகளுக்குத் தமிழ், தமிழ்க் கலைகள் பற்றி அறிமுகப்படுத்தும் இடமாக இதுபோன்ற சந்திப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக இளைஞர்கள் நமது நாட்டவர்களைவிடப் பெரியார் பற்றிய அடையாளங்கள் குறித்து அதிகமான அறிவும் அக்கறையும் கொண்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது.

அங்குள்ள ஓவியர்களும் ஓவிய விமர்சகர்களும் வந்தார்களா?

மற்ற இடங்களில் ஓரளவுக்கு வந்தார்கள். பாரீஸ் நகரக் கண்காட்சிக்குப் பிரெஞ்சு ஓவியர்களும் நிறையப் பேர் வந்தார்கள். அவர்களோடு கலந்துரையாடிபோது நம்மைப் பற்றியும் நமது ஓவியங்கள் பற்றியும் அவர்களுக்கு என்ன விதமான புரிதல் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அங்கெல்லாம் 'அப்ஸ்ட்ராக்ட்' (அருவ) வழியில்தான் ஓவியம் போய்க்கொண்டிருக் கிறது. எனவே உருவத்தை அடிப்படையாகக் கொண்டு யதார்த்த வடிவில் நான் தீட்டியிருந்த பெரியார் ஓவியங்களை ஒரு கனமான, மாறுபட்ட சித்தரிப்பாக எடுத்துக்கொண்டு, என்னோடு நீண்டநேரம் விவாதித்தார்கள்.

முற்போக்குச் சிந்தனையுள்ள, இடதுசாரிச் சிந்தனையுள்ள இலக்கியவாதிகளும் வாசகர்களும் அந்தக் கண்காட்சிகளுக்கு வந்திருந்ததைக் குறிப்பிட வேண்டும்.

அந்த நாடுகளின் ஓவியர்கள், விமர்சகர்,
கலை குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள்?
அமெரிக்காவில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் உள்பட, கலைத்துறை ஈடுபாடு உள்ளோரிடம் பேசியதில், பொதுவாக அவர்கள் கருத்து சார்ந்து இயங்குதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. கலையை உணர்வின் வெளிப்பாடு என்கிற அளவில் மட்டுமே அணுகுகின்றனர். கலை ஒரு சமூகக் கருத்தைக் கூறுவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டோரும் அங்கே இருக்கிறார்கள். கலையின் சமூகத் தன்மை பற்றிய அக்கறை கொண்ட ஓவியர்களும் விமர்சர்களும் பிரான்சில் தான் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

சென்னையில் சோழமண்டலம் கலைக் கிராமம்போல பாரீஸ் நகரில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட் வீடு உள்ளது. அங்கே பல ஓவியர்கள் தங்கியுள்ளனர். அவர்களது படைப்புகளை அங்கேதான் உருவாக்குகிறார்கள். அந்த இடத்திற்கே போய் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிலும் பெரும்பாலோர் கலை என்பது ஒரு தனிமனித வெளிப்பாடு என்கிற அளவில்தான் கருத்துக் கொண்டுள்ளனர். சிலர் சமூக அக்கறையோடு செயல்படும் அணுகு முறையைத் தாங்கள் புரிந்து கொள்வதாகவம் கூறினார்கள். சமூகம் சார்ந்த நமது வெளிப்பாடுகள் ஒரு வலுவான உணர்வை ஏற்படுத்துவதாகவும் சொன்னார்கள்.

"நீங்கள் ஏன் சமூகம் சார்ந்து படைப்பதில்லை?" என்று கேட்டபோது, நாங்கள் அதிலிருந்து விடுபட்டு ஓர் உன்னதக் கலைநோக்கிப் பயணிக்கிறோம் என்பதாகப் பதில் சொன்னார்கள்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்கள் அங்கே தங்கியிருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது தங்களின் உணர்வு வெளிப்பாடாகத் தீட்டுவது, அதை எடுத்துக்கொண்டு மற்ற நகரங்களுக்கும் நாடுகளுக்கும் செல்வது என ஒரு நாடோடி வாழ்க்கை போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரான்சின் புகழ்பெற்ற ஓரியர் பிகாசோ பற்றிக் குறிப்பிட்டு, அவர் ஒரு கம்யூனிஸ்டாக சமுதயப் பொறுப்புடனும் ஓவியங்கள் படைத்தவர்தானே என்று நான் கேட்டபோது எல்லாவகையிலும் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. அதற்குத் தேவையுமில்லை என்றுதான் பதிலளித்தார்கள். அவர்களது பதில் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது.

விவாதங்களில் அரசியல் கருத்துகள் வெளிப்பட்டனவா? எப்படிப்பட்ட கருத்துகள்?

தமிழர்களுடன் பேசுகையில் நம் நாட்டு அரசியல் நிலைமைகள், போக்குகள் குறித்து அதிகமாகக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். அமெரிக்கர்களோடு பேசுகையில், அந்நாட்டு அரசின் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தேன். உலகத்தை அமெரிக்க அரசு கையாள்கிற விதம், உலகத்தின் தாதா போல அமெரிக்கா செயல்படுவது, ஒரு ஆக்கிரமிப்புச் சக்தியாக இருப்பது பற்றியெல்லாம் நான் விமர்சித்தபோது அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

அமெரிக்காவின் பூர்வகுடிகள் என்றால் செவ்விந்தியர்கள்தான். மற்றவர்கள் அங்கே குடியேறியவர்தான். அவர்கள் தங்களது அரசு உலக அரங்கில் செயல்படும் விதம் பற்றிய கவலையைப் பகிர்ந்து கொள்ளவே செய்கிறார்கள். ஜனநாயகத்தைப் புரிந்து கொள்கிற, அதை நேசிக்கிற மக்களாக இருக்கிறார்கள்.

'செப்டம்பர் 11' அமெரிக்காவில் ஒரு முக்கிய அடையாளமாகியிருக்கிறதே, அதுபற்றிப் பேசினீர்களா?

ஆம். பயங்கரவாதிகளின் தாக்குதலைச் சாக்கிட்டு அமெரிக்க அரசு உலகம் முழுவதும் ஒரு யுத்தப் பதட்டத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்து எனது விமர்சனத்தை முன்வைத்தபோது அவர்கள் முற்றிலுமாக உடன்பட்டார்கள். அமெரிக்க மக்கள் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படுத்திய விஷயமே, வியட்னாம் மீது அவர்களது அரசு நடத்திய யுத்தத்தை அவர்கள் எதிர்த்தார்கள் என்பதுதான் செடம்பர் 11 தாக்குதலில் அந்த அப்பாவி மக்கள் பலியானார்கள் என்பதே எனக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. அந்த அப்பாவி மக்கள் மீதான தாக்குதலைச் சாக்கிட்டு, ஆப்கானிஸ் தானின் அப்பாவி மக்கள் மீது அமெரிக்க அரசு தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக் காட்டினேன். அதையும் ஏற்றுக் கொண்டார்கள். அமெரிக்காவுக்கு அப்படியொரு ஆழமான காயம் ஏற்பட்டபோதிலும் அரசின் இத்தகைய தாக்குதல்கள் ஆப்கனில் நடத்திய படுகொலைகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று கூறினார்கள்.

"அரசு இப்படிச் செயல்படுவதை இனிமேலும் நீங்கள் அனுமதித்துக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் மிகக் கடினமான வாழ்க்கையைத்தான் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும் என்று நான் கூறினேன். அதற்கு அவர்கள் எங்கள் பாதையையும் அரசாங்கத்தையும் நாங்கள் தீர்மானிக்கவில்லை. முதலாளிகள் தான் தீர்மானிக்கிறார்கள்" என்றார்கள்.

இந்தப் பயணத்தின் மறக்க முடியாத, முக்கியமான அம்சங்களாக எதைச் சொல்வீர்கள்?

ஐரோப்பாவில் நான் பார்த்த கலைக்கூடங்கள் மறக்க முடியாதவை. பிரான்சின் லூவர் மியூசியத்தில்தான் லியார்னோட டாவின்சியின் மோனாலிசா உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற முக்கியமான ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுப் பின்னணியும் வரலாறுமுள்ள ஓவியங்கள் அவை. அந்தக் கலைக்கூடத்து வளாகத்தில் காலை வைத்தபோது பிறவியின் பயனை அடைந்த ஒரு மன எழுச்சி ஏற்பட்டது.

பிகாசோ மியூசியத்துக்குச் சென்றபோது எந்த அளவுக்கு ஒரு கலைஞனை அந்த மக்கள் போற்றுகிறார்கள் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. மிகைப்படுத்தாமல் சொல்கிறேன். அப்படியொரு கூட்டத்தை இங்கே திருப்பதியில்தான் பார்க்க முடியும்! அப்படியொரு கூட்டம்! மக்கள் உணர்வு அப்படியிருப்பதால்தான் அந்நாட்டு அரசாங்கமும் அந்த மியூசியங்களை அவ்வளவு அக்கறையோடு பராமரித்து வருகிறது. பிரான்ஸ் நாடே கலைகளின் சங்கமமாக, பிரான்ஸ் மியூசியங்கள் பல்வேறு இன மக்களின் சங்கமமாக இருக்கிறது.

கலைகளின் நவீன வளர்ச்சிகளை அமெரிக்காவில் பார்த்தேன். தமது நாடுகளின் தொன்மைக் கலைகளைப் போற்றிப் பாதுகாப்பதில் இந்த நாடுகள் அனைத்துமே அக்கறை காட்டுவதைக் கவனித்தேன். அடுத்தடுத்த சந்ததிகளுக்கு அவற்றைப் பாதுகாத்து ஒப்படைக்கிற அக்கறை இது.

அமெரிக்கா பற்றி, பிரமிப்புகளைத் தகர்க்கிற காட்சி ஒன்றையும் பார்த்தேன். நம் ஊர் சேரிப் பகுதிகள் போல சிகாகோவில் கறுப்பின மக்களைத் தனியாகப் பிரித்து, சேரிபோல வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் பல பகுதிகளில் இதைக் காணலாம் என்று பிறகு தெரிந்து கொண்டேன். அதைப் பார்க்காமல் வந்திருந்தால் எனது பயணம் முழுமையடையாத ஒன்றாகவே இருந்திருக்கும்.

சிகாகோ சென்றிருந்தீர்களே, அங்கே மே தினப் போராட்டக் களங்களைப் பார்த்தீர்களா?

அந்த இடங்களைப் பார்த்தது என் வாழ்நாளில் முக்கியமான ஒரு தருணம். சிகாகோ தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டம் நடந்த ஹே மார்க்கெட் பகுதியைப் பார்த்தேன். மே தின வரலாற்றைப் படிக்கிறபோது பெயர்களாக அறிந்து கொண்ட இடங்களில் நேரில் நின்றபோது உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போயின.

ஆனால், உலக வரலாற்றோடு இணைந்துவிட்ட அந்தத் தொழிலாளர்களுக்கு அங்கே நினைவுச் சின்னம் எதுவும் இல்லை. நடந்த மோதலில் அரசுத் தரப்பில் இறந்தவர்களுக்குத்தான் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்ததாம். அண்மையில்தான் அது அகற்றப்பட்டதாம். பழைய ஹே மார்க்கெட்டை நினைவு கூறும் வகையில் சில கட்டிடச் சிதைவுகள் தான் உள்ளன. எனினும், நீண்டகால கோரிக்கைகளுக்குப் பிறகு, கிளிண்டன் அதிபராக இருந்தபோது சிகாகோ தியாகிகளுக்கு நினைவுச் சின்னமாக ஒரு சிலை வேறொரு இடத்தில் அமைக்கப்பட்டது. அந்த இடத்திற்கு நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். தாக்கப்பட்ட ஒரு தொழிலாளி ஆவேசமாக எழும் ஒரு பெண்ணின் பின்னால் சாய்ந்திருப்பது போன்ற அருமையான சிலை அது. அந்த நினைவுச் சின்னத்தை அந்த இடத்திலேயே கையில் கிடைத்த ஒரு தாளில் ஓவியமாக வரைந்து வந்தேன். அந்த இடத்திலேயே மனித உரிமைப் போராளிகள் பலருக்கும் இதுபோல் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற எல்லை தாண்டிய கலை உறவுகளை வளர்க்கவும், தமிழகத்தில் இப்படிப்பட்ட ஆரோக்கியமான சந்திப்புகளை ஏற்படுத்தவும் இந்தப் பயணத்தின் மூலம் ஆலோசனை எதுவும் உருவாகியுள்ளதா?

அந்த நாடுகளில், ஓவியத்தைப் பற்றி ஓவியர்தான் பேசவேண்டும் என்றில்லாமல், இதற்கென்றே சிறப்பு ஈடுபாடு கொண்ட, ஆனால் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த ஓவியத் திறனாய்வாளர்கள் ஓவியம் பற்றிப் பேசுவோர் என உள்ளனர். அத்தகைய ஒரு ரசனையையும் ஈடுபாட்டையும் இங்கே வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு நான் சந்தித்தவர்கள் எல்லோருமே இந்தியாவில் தமிழகத்தில் அவர்களுடைய படைப்புகளைக் கொண்டு வந்து காட்சிப்படுத்து வதற்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்டனர். இது என்னை மிகவும் யோசிக்க வைத்தது. ஓவியக் கலை சார்ந்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள இப்படிப்பட்ட சந்திப்புகள் நிச்சயம் தேவை. முற்போக்கான பார்வை உள்ள இதர ஓவியர்கள் மற்றும் கலை இலக்கிய அமைப்புகளின் உதவியுடன்தான் இதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும
்.