வலிகளை வெளிப்படுத்துவதில் வண்ணங்களுக்கு அளப்பரிய சக்தி உண்டு.

நேர்காணல்:எஸ்.மல்லிகா

தினக்குரல்,இலங்கை. 13.07.2014. வெளிச்ச வீடு.காம்.22.07.2014.

“1983 லிருந்து ஈழ மக்களின் போராட்டத்தோடு ஒன்றி,மக்களின் அழிவையும் அவலங்களையும் ஓவியங்களாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றேன்.ஈழத்தில் கால் வைத்தப்பிறகு நாட்டின் உருவாக்கத்திற்கும் கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் பங்காற்ற வேண்டும் என்று நினைத்தேனே தவிர, மீண்டும் என் மக்களின் அவலத்தையும் அழிவையும் இழப்பையும் பதிவுசெய்ய நேரிடும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை”என்று கூறுகிறார் இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியர் புகழேந்தி.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 தமிழகத்தில் மட்டுமல்ல,தமிழர்கள் வாழ்கின்ற எல்லா தேசங்களிலும் புகழ் ஏந்தி நிற்பவர் தான் ஓவியர் புகழேந்தி.

குடந்தை கவின் கலைக் கல்லூரியில் வண்ண ஓவியத்தில் பட்டப் படிப்பையும் ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஓவியத்துறையில் முதுகலைப் பட்டதையும் பெற்றுள்ள இவர் தமிழகத்திலேயே முதன்முதலாக ஓவியக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர்.

இவர் சமூக-அரசியல் செயற்பாட்டாளராக,பேராசிரியராக,சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவராக,ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு நல்குபவராக,போராளிக் கலைஞராக எனப் பன்முகங்களுடன் மிளிர்கின்றார். இனி அவர் செவ்வியிலிருந்து......  

உங்களைப் பற்றிச் சுருக்கமான அறிமுகம்...

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள, தும்பத்திக்கோட்டை என்ற கிராமத்தில் தான் நான் பிறந்தேன்.  தொடக்கக் கல்வியும் அச்சிற்றூரில் தான்.  குழந்தைவேல் – நாகரத்தினம் இணையருக்கு மூத்த மகன் நான்.

தூரிகைப் பயணம் எப்போது தொடங்கியது ?

எனக்கு நினைவு தெரிந்து, மூன்றாம் வகுப்பிலேயே என் கிறுக்கல்களைத் தொடங்கி விட்டேன்.  வரலாற்று நூல்களில் உள்ள ஆங்கிலப் பிரபுக்களின் படங்களைப் பார்த்து வரையத் தொடங்கினேன்.  மணற் பரப்புகளிலும், சுவர்களிலும், கிறுக்கத் தொடங்கிய போதே என் தூரிகைப் பயணம் தொடங்கி விட்டது என்றே நினைக்கிறேன்.

ஓவியக்கலை மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது ?

தொடக்கப்பள்ளி பருவத்தில் வரலாற்று நூல்களில் உள்ள ஆங்கிலப் பிரபுக்களின் படங்களினால் ஈர்க்கப்பட்டு, பார்த்து வரையத் தொடங்கிய நான், வயல் வெளிகளும், மரங்கள் சூழ்ந்த தோப்புகளும், இயற்கை எழில் நிறைந்த என் கிராமத்துச் சூழலும் என்னை மேலும் வசீகரித்தது.  அவைகளைப் பார்த்து வரையத் தொடங்கினேன்.  இவ்வாறு தொடர்ந்த பழக்கத்தால் ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.

பாடசாலைக் காலத்தில் உங்கள் ஓவியங்களுக்கு எத்தகைய வரவேற்பு கிடைத்தது ?

பள்ளிப் பருவத்தில், ஓவியப் போட்டிகளில் என்னுடைய ஓவியங்களே தொடர்ந்து முதல் பரிசு பெற்றுக் கொண்டிருந்தன.  ஓவிய வகுப்புகளில் நான் செய்த ஓவியங்கள் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்புகளிலும், ஓவிய ஆசிரியரால் முன்மாதிரியாகக் காண்பிக்கப்பட்டு வந்தன, இது, எனக்கு மேலும் உற்சாகத்தைத் தந்தது.  அனைத்து ஆசிரியர்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.  அது என்னைத் தனித்தவனாகக் காண்பித்ததோடு, என்னுள் தன்னம்பிக்கையையும் வளர்த்தது.  ஒரு கதாநாயகன் போலவே என் பள்ளியில் நான் வலம் வந்தேன்.

வர்ணங்களா அல்லது வார்த்தைகளா, எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்த வல்லன ?

வார்த்தைகளில் வெளிப்படுத்துவதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது.  அந்த மொழியை அறிந்தவர்கள் தான் அந்த அந்த வார்த்தைகள் வெளிப்படித்தும் பொருளை புரிந்து கொள்ள முடியும். 
ஆனால், வண்ணம் – என்பது ஒரு பொது மொழி.  அது வெளிப்படுத்தும் உணர்வை உலகில் எந்த மொழிக்காரனும் உணர்ந்து கொள்வான்.  அதனால், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவது வண்ணங்கள் தான். 

காலத்தை விஞ்சி நிற்கும் ஓவியங்கள் எவை ?

சமூகத்தை, மக்களின் வாழ்க்கையை, மக்களின் போராட்டத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள் காலத்தை விஞ்சி நிற்கும்.  ஓவியம் மட்டுமல்ல அனைத்து படைப்புகளுக்கும் இது பொருந்தும். 

கலைகளின் அரசியாகத் தாங்கள் கருதுவது ?

கலைகள் அனைத்திற்கும் முன்னோடியாக ஓவியக்கலையே உள்ளது.

ஓவியக்கலைக்குப் பெயர் பெற்ற நாடுகள் உள்ளனவா ?

கலைகளின் தாய்வீடு என்று பிரான்ஸ் நாட்டைக் குறிப்பிடுவோம்.  இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளில் தொடக்கத்தில் ஓவியக்கலை செழிப்புற்று வளர்ந்தது என்று சொல்லலாம்.

ஓவியக்கலையில் நீங்கள் யாரை ஆதர்சமாகக் கொண்டிருந்தீர்கள் ?

ஆதர்சம் என்று நான் யாரையும் கொண்டிருக்கவில்லை.  ஆனால், உலகளவில் பிக்காசோ மற்றும் டாலியின் படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தன.  இன்னும் பல்வேறு ஓவியர்களின் படைப்புகள் பல நிலைகளில் ஊக்கியாக இருக்கிறது.

ஓவியக்கலை மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா ?

நிச்சயமாக ஏற்படுத்த முடியும்.  விதைக்கப் படுகின்ற விதைகளும், உச்சரிக்கப்படுகின்ற வார்த்தைகளும் எப்படி சும்மா இருப்பதில்லையோ அதுபோல கீறப்படுகின்ற கோடுகளும் சும்மாயிருப்பதில்லை என்று தொன்னூறுகளில் நான் குறிப்பிட்டேன்.  சமூகத்தில் அவலங்களைத் துடைத்தெறிவதற்கான போராட்டத்திற்காக மக்களைச் சிந்திக்க வைக்கவும், செயல்பட வைக்கவும் முடியும்.  ஆதிக்க சக்திகள் வேறு எந்த கலையையும் விட ஓவியத்தைக் கண்டே அஞ்சுகிறார்கள்.  ஏனென்றால், அது காட்சி மொழி.  என்னைப் பொறுத்தவரை அது ஒரு போராட்டக் கருவி.

இக்கலையில் தாங்கள் சந்தித்த சவால்கள் பற்றிக் கூற முடியுமா ?

சவால்கள் என்று சொல்ல முடியாது.  கடந்த 30 ஆண்டுகளாக இடைவிடாத பயிற்சியும், பரிசோதனை முயற்சியும் என்னை மேலும் மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன.  ஒரு படைப்பை உருவாக்குவதற்கு முன்பு அது குறித்த தெளிவும், வெளிப்பாட்டு முறை குறித்த சிந்தனையும், வடிவங்கள், வண்ணங்கள் பயன்பாடு குறித்த ஆழ்ந்த ஈடுபாடும் எவ்வளவு முக்கியம் என்பதை இன்னும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

தங்கள் ஓவியக் கண்காட்சிகளுக்குச்சிறந்த வரவேற்பு கிடைக்கின்றனவா?

மாநகரங்கள், நகரங்கள், சிற்றூர்கள், கிராமம் என்று உலகளவில் பல நாடுகளில் நூறுக்கும் மேற்பட்ட என்னுடைய தனி நபர் ஓவியக்காட்சிகள் நடைபெற்றிருக்கின்றன.  அதற்கு அடிப்படைக் காரணமே மக்களின் அமோக வரவேற்பு தான்.

ஈழத்தில் தாங்கள் நடத்திய ஓவியக் கண்காட்சி பற்றிக் கூறுங்கள் ….

என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு அது.  தமிழீழத்தில் பதினைந்து இடங்களுக்கு மேல் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக்காட்சி நடைபெற்றது.  எந்த மண் பாதிக்கப்பட்டதோ, எந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களோ அந்த மண்ணிலும், அந்த மக்களிடத்திலும் தன் படைப்புகளை காட்சிப்படுத்துவது என்பது ஒரு படைப்பாளனுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.  அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.    ஒவ்வொரு இடத்திலும், மக்களும், மாணவர்களும், இளைஞர்களும், ஆசிரியர்களும், போராளிகளும் கூட்டம் கூட்டமாக வந்து ஓவியங்களைப் பார்த்தார்கள்.  பலர் வேதனையுற்றார்கள், பலர் கதறி அழுதார்கள்.  பலர் வரலாற்றை உள்வாங்கிக் கொண்டார்கள். 

ஒவ்வொருவரும் என்னோடு கதைத்தார்கள், கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.  ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கதைகள் இருப்பதை நான் உணர்ந்து கொண்ட காலம் அது.  என் மீது தமிழீழ மக்கள் கொண்ட அன்பிற்கு அளவே இல்லை.

பத்திரிகைகளும், ஊடகங்களும் என்னுடைய நேர்காணல்களையும், என்னுடைய ஓவியங்கள் குறித்த கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டன.  இதுபோல், சொல்லுவதற்கு நிறைய இருக்கிறது.  சொன்னால், சொல்லிக் கொண்டே போகலாம்.

முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தங்கள் தூரிகையில் பதிவு செய்தபோது எத்தகைய உணர்வு ஏற்பட்டது ?

என் வாழ்வில் மிகவும் துயரமான ஒரு காலம் அது.  வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்குத் துயரம்.  2009- ஆம் ஆண்டு சனவரியிலேயே போராட்டம் எப்படிப்பட்ட ஒரு முடிவை எட்டப்போகிறது என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.  தினந்தோறும் இடப்பெயர்வைச் சந்தித்துக் கொண்டிருந்த மக்கள் மீது வான் தாக்குதல் நடத்தியும், கொத்துக் குண்டுகளைப் போட்டும், இரசாயணக் குண்டுகளை வீசியும் அப்பாவித் தமிழ் மக்களை இராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருந்தது.  தமிழீழத்திலிருந்து கிடைத்த செய்திகள் அனைத்தும் துயரம் நிறைந்ததாகவே இருந்தன.  தமிழக அரசியல் கட்சிகள் இந்தியப் பாராளுமன்றத் தேர்தலில் மூழ்கியிருந்தன.  நான் ஓவியங்கள் செய்வதில் மூழ்கியிருந்தேன்.  நான் மிகவும் வேதனையோடு என் தூரிகையை எடுத்து வண்ணத்தைக் குழைத்து கித்தானில் (Canvas) அந்த வண்ணத்தை வைக்கும் போதெல்லாம் என் தமிழ் உறவுகளின் இரத்த நெடி என் நாசியைத் தாக்கியது.  காயம்பட்ட, படுகொலை செய்யப்பட்ட மனித முகங்களை, உருவங்களை வரையும் போது, நான் அம்மண்ணில் சந்தித்த எம் உறவுகளின் முகங்கள், உருவங்கள் என் கண் முன்னே நிழலாடியது.  மேலும், அது எனக்குத் துயரத்தையும் வேதனையையும் அளித்தது.  கண்ணீரோடும், கதறலோடும், வேதனையோடும் 25 ஓவியங்களை முடித்த நிலையில் தான், உலகையே குலுக்கிய அந்த ‘முள்ளிவாய்க்கால்’ அவலம் நடைபெற்றது. 

இறுதி மூன்று நாட்கள் என்ன நடந்தது, என்பது குறித்த செய்தியோ, ஒளிப்படங்களோ தமிழர் தரப்பிலிருந்து இல்லை.  அதனால், வெறும் கற்பனையாக ‘முள்ளிவாய்க்கால்’ ஓவியம் ஒன்றைச் செய்தேன்.  ஓரிரு மாதங்கள் கழித்து, உயிர் பிழைத்துத் தப்பி வந்த மக்கள், போராளிகள் கடைசி மூன்று நாட்களில் நடைபெற்றது குறித்து கூறிய தகவல்கள் கல் நெஞ்சக்காரரையும் கரைய வைக்கக்கூடியவை.  அந்தப் பகுதியே நெருப்பு மண்டலமாகவும், புகை மண்டலமாகவும் காட்சி அளித்ததையும், இரத்தச் சகதியிலும், பிணங்கள் மீதே மக்கள் நடந்து கடந்து வந்ததையும், காயம்பட்ட உறவுகளை காப்பாற்ற முடியாமலும், மாண்ட உறவுகளின் உடலங்களை புதைக்க அவகாசம் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டு வந்ததையும், இன்னும்… இன்னும்…. ஏராளமான தகவல்களை பல நாட்கள் அவர்களிடம் கேட்டு, உள்வாங்கி 5 அடி உயரமும் 10 அடி அகலமும் உள்ள ‘முள்ளிவாய்க்கால்’ அவலத்தை ஓவியமாகச் செய்தேன்.  அது இன்றளவிலும், பார்ப்பவர்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.  உண்மையைச் சொன்னால் 83 –லிருந்து தமிழீழ மக்களின் போராட்டத்தோடு ஒன்றி, மக்களின் அழிவையும் அவலங்களையும் ஓவியங்களாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றேன்.  தமிழீழத்தில் கால்வைத்த பிறகு, நாட்டின் உருவாக்கத்திற்கும், கட்டமைப்பின் வளர்ச்சியிலும் பங்காற்ற வேண்டும் என்று நினைத்தேனே தவிர, மீண்டும் என் மக்களின் அவலத்தையும், அழிவையும், இழப்பையும் செய்ய நேரிடும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை.  நான் உடைந்து போனேன்.  ஆனால், எழ வேண்டிய தேவை உள்ளது என்பதையும், நான் உணர்ந்து கொண்டேன்.  அதையே ஓவியங்களிலும் வெளிப்படுத்தினேன்.    

பாடசாலைகளில் ஓவியக்கலைக்கு வரவேற்பு உள்ளதா ?

பள்ளிக்கூடங்களில் முன்பெல்லாம், ஓவியம் கைத்தொழில், நீதி போதனை, விவசாயம் போன்ற வகுப்புகள் இருக்கும்.  அவை, பல்வேறு நிலைகளில் மாணவர்களின் மனங்களைப் பண்படுத்தும்.  ஆனால், இப்பொழுது இருக்கின்ற கல்வித்திட்டம் என்பது மாணவர்களை ‘புத்தகப்’ புழுக்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.  ஓவியத்திற்காக ஒதுக்கி இருக்கின்ற ஓரிரு வகுப்புகளையும் பிற பாடங்களுக்காக எடுத்துக் கொள்கின்ற நிலையே உள்ளது.  ஓவியத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை.

தாங்கள் வரைந்த ஓவியங்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த தங்களால் மறக்க முடியாத ஓவியங்கள் பற்றிக் கூறுங்கள்…

நான் சமூகம் சார்ந்து வெளிப்படுத்திய ஓவியங்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்த ஓவியங்கள் தான்.  ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒரு சமூக வரலாற்றுப் பின்னணி உள்ளது.  அந்த வகையில் என்னால் எப்போதும் எந்த ஓவியங்களையும் மறக்க முடியாது. 

ஓவியக்கலைக்கும் மற்றைய கலைகளுக்கும் என்ன வேறுபாடு ?

ஓவியக்கலைக்கு வண்ணங்களும், வடிவங்களும், உருவங்களும், முதன்மையாக உள்ளன.  எழுத்திற்கு மொழி, சொற்கள் முதன்மையாக உள்ளன.  இசைக்கு ஒலியும், காலமும் அவசியம்.  நாட்டியத்திற்கு அபிநயமும், பாவங்களும், உடல் மொழியும் அவசியம்.  நாடகத்திற்கு உடல் மொழியும், வசன மொழியும் அவசியம்.  இவ்வாறு ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைகளில் அதனதன் தேவைகளுடனும் செயல்களுடனும் தனித்துவமாக விளங்குகின்றன. 

தங்கள் எதிர்காலத் திட்டம் என்ன ?

தொடர்ந்து ஓவியங்கள் செய்ய வேண்டும், உலக ஓவிய வரலாறுகளை தமிழில் எழுத வேண்டும், இப்படி நிறைய திட்டத்தோடு இருக்கின்றேன். 

தங்கள் ஓவியங்களுக்குப் புலம்பெயர் நாடுகளில் எத்தகைய வரவேற்புள்ளது ?

மிகப்பெரிய அளவிற்கு வரவேற்பு உள்ளது.  தமிழர்களிடம் மட்டுமல்லாமல் வேற்று இன, மொழிக்காரர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.  இன்றும் உலகில் ஏதோ ஒரு இடத்தில் ஓவியக் காட்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் ஓவியக்கலை எவ்வாறுள்ளது ?

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் பல, ஓவியக் கலைக்கு ஊற்றுக் கண்ணாக இருந்து, பல நூற்றாண்டு படைப்புகளை பொக்கிசமாக பாதுகாத்து வைத்து, எதிர்காலத் தலைமுறைக்கு ஓவியத்தை மட்டுமல்ல வரலாற்றையும் சென்று சேர்க்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றன.  அவற்றிலிருந்து தமிழர்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.  உள்வாங்கிக் கொள்ளலாம்.  வளர்த்துக் கொள்ளலாம்.  வளர்த்துக்கொள்ள வேண்டும்.  தமிழீழத்தில் வாழ்கின்ற மாணவர்களுக்கும், தமிழகத்தில் வாழ்கின்ற மாணவர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு, புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது.  அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

தாங்கள் பெற்றுள்ள விருதுகள் – பாராட்டுகள் பற்றிக் கூறுங்கள்…

1987     கல்கத்தாவில் நடைபெற்ற அனைத்திந்திய இளைஞர் ஓவியக்காட்சியில், புகழ் பெற்ற ஓவியர் எம்.எப். உசேன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.
1987     தமிழக அரசின் மாநில விருது.
1987     இந்தியாவின் சர்வதேச விமான போக்குவரத்துக் குழுமம் விருது.
1988     காரைக்குடி ACCET ஓவியப்போட்டி முதல் பரிசு.
1990     ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் சிறப்புத் தகுதி விருது.
2002     தர்மபுரி மனிதவள மேம்பாட்டு மையத்தின் சிறந்த ஓவியர்   விருது.
2005     தமிழீழத்தின் அழகியல் கலாமன்றம் வழங்கி கௌரவித்த             தங்கப்பதக்கம்விருது.
2007     இராசராசன் கல்விப் பண்பாட்டுக் கழகத்தின் சாதனையாளர் விருது.
2007     திருச்சி தூயவளனார் கல்லூரி வழங்கிய ஓவியம் வழி சமூகமாற்ற இயக்க விருது.
2007     வேலூர் தமிழ் இயக்கம் வழங்கிய ஓவியத்தை சமூக விடுதலைக்கு பயன்படுத்து வதற்கான விருது.
2008     இராசபாளையம் பெரியாரியல் சிந்தனை மையம் வழங்கிய பொரியாரியல் சிந்தனையாளர் விருது.
2009     சென்னை கிருத்தவக் கல்லூரி ஆளுமைக்காக கௌரவிப்பு.

ஓவியப் பயணத்தில் தாங்கள் சந்தித்த சவால்கள் பற்றிக் கூற
முடியுமா ?

எனது இந்த 30 ஆண்டு கால ஓவியப் பயணத்தில், நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.  படிப்பதில் தொடங்கி, பணி பெறுவது வரை போராட்டம் தான்.  படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக – ஓவியக்காட்சி நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், போட்டிகள், பொறாமைகள், அவதூறுகள் எல்லாவற்றையும் கடந்து வெற்றிகரமாக பயணம் தொடர்கிறது என்றால், நான் மட்டும் அதற்குக் காரணம் அல்ல.  உலகம் முழுவதும் உள்ள தோழர்கள், நண்பர்கள், என் மனைவி மற்றும் என் குடும்பம். 

உங்கள் கலையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எதாவது உண்டா ?

எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.  இங்கு ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகின்றேன்.  என் தமிழீழப் பயணத்தில் ஒரு நாள், வல்வெட்டித்துறை சென்றபோது, தளபதி கிட்டு நினைவிடத்திற்கு அருகில், இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுச் சின்னம் இருந்தது.  அதனைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது என்னுடன் வருகை தந்த நண்பர் சேரலாதன், ஒரு முதியவரைக் காண்பித்து, அண்ணா, “இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்டவர், அந்த அய்யாவிடம் கொஞ்சம் பேசுங்கள்” என்றார்.  அவரிடம் சென்று கதைத்தேன்.  “இந்தியாவிலிருந்து வருகிறீர்களோ” என்று என்னிடம் கேட்டார். “ஆம் அய்யா” என்றேன்.  கதைத்துக் கொண்டிருந்த அந்த முதியவர், தன் சட்டையைக் கழட்டி நெஞ்சுப் பகுதியைக் காண்பித்தார்.  நெஞ்சின் மய்யப் பகுதியிலிருந்து இடது கை தோள்பட்டை வரை மிகப்பெரிய தழும்பு.  “இந்திய அமைதிப்படைச் சுட்டதில் அதிர்ஷ்டவசமாகத் தப்பியவன் நான்.  நெஞ்சின் மையப்பகுதியில் பாய்ந்த குண்டு பக்கவாட்டில் சாய்ந்து கிழித்துக் கொண்டு சென்றதால் உயிர் பிழைத்தேன்” என்றார்.  “வடு” அதற்குச் சாட்சியாக இருந்தது.  நான் செய்த “வல்வைப் படுகொலை” ஓவியத்தை எடுத்து அவரிடம் காண்பித்தார் நண்பர்.  அதைப் பார்த்ததும், “இப்படித்தான் அய்யா முழங்காலில் இருக்க வைத்துச் சுட்டான்கள்.  அப்படியே வரைந்திருக்கிறீர்கள்.  உங்களுக்கு எப்படித் தெரிந்தது” என்றார் அந்த முதியவர்.  அந்த ஓவியத்தை நான் செய்கின்ற போது, அந்நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவர், இவ் ஓவியத்தைப் பார்ப்பார் என்றோ பாராட்டுவார் என்றோ நான் ஒரு நாளும் நினைத்ததில்லை.  அந்தப் பாராட்டை மிக உயரிய விருதாக இன்றும் மதிக்கின்றேன்.     

ஓவியக்கலையில் தங்களின் சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள் ?

கலைக்காட்சிக் கூடங்களிலும் (Art Gallery) நட்சத்திர விடுதிகளிலும் முடங்கிக் கிடந்து, அல்லது முடக்கி வைக்கப்பட்டிருந்த ஓவியங்களை தெருவுக்குக் கொண்டு வந்து மக்கள் மயப்படுத்தியதையும், மேல் தட்டு மக்களுக்கானது ஓவியம் – அது அழகையும், அமைதியையும், இயற்கையையும், அது ஏற்படுத்தும் தாக்கத்தை மட்டுமே வெளிப்படுத்தக் கூடியது என்பதை உடைத்து, அது மக்களின் வாழ்வையும், அரசியலையும், அவலங்களையும், போராட்டங்களையும், கண்ணீரையும், வேதனையையும், துன்பத்தையும் உரத்துப் பேசக் கூடியது என்பதை செய்து காட்டியது தான்.

தற்போது தாங்கள் மேற்கொண்டிருக்கும் பணி… ?

எம் தலைவன் பிரபாகரனின் பண்முக ஆளுமை குறித்து எழுதிக் கொண்டிருக்கின்றேன்.  முடியும் தருவாயில் உள்ளது. 

தங்களைப் பெரிதும் ஊக்குவிப்பவர்கள் பற்றிக் கூறுங்கள்…….

குழந்தைப் பருவத்திலிருந்து நான் எதைக் கிறுக்கினாலும், அது குறித்து புரியாமலே எல்லோரிடமும் காட்டி மகிழும் என் தாய், அதைப் பார்க்க முடியாமல் கேட்டு மட்டுமே மகிழ்ந்த என் தந்தை மற்றும் குடும்பம், பாராட்டி மகிழ்ந்த என் கிராமத்து மக்கள், இவர்கள் இல்லாமல் நான் துளிர் விட்டிருக்க முடியாது.  பள்ளிப் பருவத்தில் என் ஆசிரியர்கள், உடன் பயின்ற மாணவ-மாணவிகள், கல்லூரிப் பருவத்தில் ஒத்த சிந்தனை உள்ள பல்வேறு நண்பர்கள், அன்றிலிருந்து இன்று வரை என் ஓவியங்களைத் தங்களது முதுகில் சுமந்து உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் தோழர்கள், முற்போக்கு, தமிழ் தேசிய, கலை இலக்கிய, சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகள், அதன் தலைவர்கள் ஓவியக் காட்சியிலும், இதழ்களிலும், ஊடகங்களிலும் ஓவியங்களைப் பார்த்து ஊக்கப்படுத்தும் மக்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் என் மனைவி மற்றும் என் குழந்தைகள்…

தாங்கள் வெளிநாடுகளில் நடத்திய ஓவியக் கண்காட்சி பற்றிக் கூற முடியுமா ?

இரண்டாயிரத்தில் மலேசியப் பயணத்தில் தொடங்கிய என் கலைப் பயணம், சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, பிரான்சு, செர்மனி, டென்மார்க், ஆஸ்திரேலியா, தமிழீழம், நார்வே, சுவிட்சர்லாந்து என்று பறந்து, விரிந்து சென்று கொண்டிருக்கிறது.

வேறு கலைகள் மீதும் தங்களுக்கு ஈடுபாடு உள்ளதா ?

ஓவியம் தவிர எழுதுவதிலும், பேசுவதிலும் என் பணி தொடர்கிறது.  பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன.  நூற்றுக்கணக்கான மேடைகளில் உலகம் முழுவதும் கலை, இலக்கிய, சமூகம், இனம், மொழி, போராட்டம் குறித்து உரையாற்றி இருக்கின்றேன்.  பிற கலைகளில் ஈடுபாடு உண்டு.  வாய்ப்பு கிடைக்கும் போது பார்ப்பது, கேட்பது என்ற அளவில

தாங்கள் எழுதிய நூல்கள் குறித்துக் கூறமுடியுமா?

ஆம்.இதுவரை 17 நூல்கள் வெளிவந்துள்ளன.எனது அடுத்த நூல் விரைவில் வெளிவர உள்ளது.வெளிவந்த நூல்களின் விபரம்- தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமாக எரியும் வண்ணங்கள் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், அதிரும்கோடுகள், சிதைந்தகூடு, புயலின் நிறங்கள் என்ற தலைப்பில் எனது  ஓவியப்படைப்புகள் நூலாக வெளிவந்துள்ளன. தூரிகைச் சிறகுகள் என்ற தலைப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய வெளிநாட்டு அனுபவ நூலும், அகமும் முகமும் என்ற தலைப்பில் என்னுடைய நேர்காணல்கள் தொகுப்பும் வெளிவந்துள்ளன.

நெஞ்சில் பதிந்த நிறங்கள்
என்ற தலைப்பில் என்னுடைய ஓவியங்களைப் பற்றி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் தொகுப்பும், மேற்குலக ஓவியர்கள் என்ற தலைப்பில், ஐரோப்பிய ஓவியர்கள் ஓவியங்கள் பற்றிய வரலாறும் நூலாக வெளிவந்துள்ளன. தமிழீழப் பயண அனுபவங்கள், தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும் என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Tamil Eelam – What I saw How I was seen என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. ஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் என்ற தலைப்பில் அனைத்து காட்சி ஊடகத்திற்குமான அடிப்படை நூல் ஒன்றும் வெளிவந்துள்ளது.வண்ணங்கள் மீதான வார்த்தைகள் என்ற தலைப்பில்-ஓவியர் புகழேந்தியின் கண்காட்சியில் பார்வையாளர் பதிவுகள் நூலாக தொகுக்கப்பட்டிருக்கிறது. ஓவியர் எம்.எப்.உசேன்-இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூல் ஆகியவை  வெளிவந்துள்ளன. 

இளம் கலைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது ?

எந்த துறை சார்ந்த கலைஞர்களாக இருந்தாலும், அதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வளர்த்துக் கொள்வது, அர்ப்பணிப்பு உணர்வும், உழைப்பும், படைப்பிலும் வாழ்விலும் உண்மையும், நேர்மையும், மேலும் மேலும் வளர துணை புரியும் என்பதை உணருங்கள்.