தமிழ்த் தேசியத்தினுள் புகுந்து கீழறுப்பவர்களை அடையாளங் காணுவோம்!

நேர்காணல்: வன்னி அரசு

உலகத் தமிழர் சக்தி, ஜூலை 2004

ஓவியர் புகழேந்தி... இவர் ஓவியர் மட்டுமல்ல... சமூகக் கட்டமைப்பையே புரட்டிப் போடத் துடிக்கும் தூரிகைப் போராளி.

பெண்களின் அழகியலையும் இயற்கையையும் ஓவியமாக்கும் ஓவியர்களுக்கு நடுவே, சிதிலமான சாமான்ய மனிதர்களின் வாழ்க்கையையும் குஜராத்தில் மடிந்துபோன மனிதநேயத்தையும் தேடி நம் கண்முன் நிறுத்துபவர்.

எரியும் வண்ணங்கள், உறங்கா நிறங்கள், திசைமுகம், முகவரிகள், புகை மூட்டம் என்று தொடரும் இவரது ஓவிய சமூகப்பணி பலரைத் திருந்த வைத்திருக்கிறது... கண்ணீரையும் வரவைத்திருக் கிறது. கும்பகோணம் ஓவியக் கல்லூரிப் பேராசிரியரான இவருக்குப் பிடித்த அம்சமே போராடுவதுதான்!

ஆம், சமூகக் கட்டமைப்புக்கு எதிரான மேல், கீழ் படிநிலைகளை உடைக்கத் துடிக்கும் அந்தத் தூரிகைக் கவிஞருடன்...

ஓவியனாக உங்களை எப்போது கண்டு கொண்டீர்கள்?

குழந்தைப் பருவத்தில் எனக்கு நினைவு தெரிந்து எல்லா குழந்தைகளைப் போலவே சுவரிலும் தாளிலும் கிறுக்கி மகிழ்ந்திருக்கிறேன். சற்றுப் பெரியவனான காலத்தில் அதாவது மூன்றாவது, நான்காவது படிக்கும் காலகட்டத்தில். அறிவியல் நூலில் உள்ள படங்கள், வரலாற்று நூலில் உள்ள படங்களைப் பார்த்து வரைந்து கொண்டிருப்பது வழக்கம். மற்ற மாணவர்கள் வரைவதைவிட நான் வரைவது நன்றாக இருப்பதாக ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் காலகட்டத்தில் இந்த வகை ஓவியங்களோடு மனிதர்களையும், மலர்களையும், செடிகளையும், கடவுள் படங்களையும் வரைந்து கொண்டிருப்பேன். இந்த காலகட்டத்தில்தான் எங்கள் பள்ளியிலும் பகுதியிலும் நான் ஓர் ஓவியனாக அடையாளங் காட்டப்பட்டேன். ஓவியப் போட்டிகளில் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டேன். ஆசிரியர்களும் மாணவர்களும் என் குடும்பத்தினரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். மொத்தத்தில் கிராமத்துச் சூழல் என்னைத் தன்வயப்படுத்திக் கொண்டது.

ஓவியங்கள் சமூக மாற்றத்திற்கு எந்த அளவிற்கு உதவுகின்றன?

பொதுவாகக் கலை என்பது ஒரு காலக்கண்ணாடி. நம் முன்னோர்கள் வாழ்ந்த விதம் பற்றியும், அவர்களுடைய போராட்டங்கள், வெற்றிகள் பற்றியும் ஓர் ஓவியத்தின் மூலமாகவோ, ஒரு சிற்பத்தின் மூலமாகவோ அல்லது கல்வெட்டுகள் போன்ற பல கலைப்படைப்புகள் மூலமாகவோ தான் அறிந்து கொள்கின்றோம். அதும்டடுமல்லாமல், அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து நமது போராட்டங்களைத் தொடர்வதற்கும் அந்தக் கலைப்படைப்பு துணைபுரிகிறது. அதில் ஓவியம், நிகழ்வுகளை ஓவியப் படைப்புகளாக்கி மக்களிடத்திலே கொண்டு செல்கின்றபோது அவர்களைச் சிந்திக்கவும் போராடவும் செயல்படவும் தூண்டுகிறது. அதுவே சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடுகிறது.

வணிக நோக்கத்தோடு செயல்படுகிற ஓவியர்கள் மத்தியில் உங்களை மாதிரி சமூக அக்கறையுடன் விரல்விட்டு எண்ணக்கூடிய ஓவியர்கள் எந்தப் பின்னணியில் இயங்குகிறீர்கள்?

மிகவும் முக்கியமான கேள்வி, வணிக நோக்கோடு செயல்படுகின்ற ஓவியர்களுக்கு விற்பனையைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலை இல்லை. ஆனால் சமூக அக்கறையோடு செயல்படுகின்ற என்னைப் போன்றவர்களுக்கு, ஓவியம் செய்யத் தொடங்குவது முதல், மக்களிடம் கொண்டு சேர்வதற்காகப் பல இடங்களில் காட்சிப்படுத்துவது வரை, பல்வேறு சிரமங்களைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. என்னுடைய ஓவியங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கின்ற பணியில் சமூக அக்கறையுள்ள, முற்போக்கு கலை இலக்கிய, சமூக, அரசியல் அமைப்புகளும், இயக்கங்களும் துணை நிற்கின்றன. நபர்களும் துணை நிற்கின்றார்கள். இந்தப் பின்னணிதான் என்னை இயக்குகிறது. இது தமிழக அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும், பொதுவாக ஓர் ஓவியக்காட்சி வெற்றி தோல்வியை, எத்தனை ஓவியம் விற்பனையானது. எவ்வளவு தொகைக்கு விற்பனையானது என்பதை வைத்துத்தான் அளவிடுவார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை எத்தனை ஆயிரம் மக்கள் பார்வையிட்டார்கள் என்பதை வைத்தே மதிப்பிடுகிறோம். இதுதான் நம்முடைய பலம்.

அரசியல் ஈடுபாடு எங்கிருந்து தொடங்கியது?

தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பள்ளிப்பருவத்திலேயே எனக்குப் பற்று உண்டு. திராவிட இயக்க அரசியல் அதை எனக்கு ஊட்டியது. இந்தப் பின்னணியில்தான் 1983 ஆம் ஆண்டு ஜூலையில் ஈழத்தமிழர்கள் சிங்களர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழகமே கொதித்தெழுந்தது. குறிப்பாக மாணவர்கள் வெடித்தெழுந்தார்கள். அக்காலகட்டத்தில்தான் குடந்தை ஓவியக் கல்லூரிகளில் என்னை மாணவனாக இணைத்துக் கொள்கிறேன். போராட்டத்திலும் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன். மாணவர்கள் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. போராட்டம் அவ்வளவு உக்கிரமாக இருந்தது. ஈழப் படுகொலைகள் பற்றி ஓவியங்கள் வரையத் தொடங்கினேன். அங்கிருந்துதான் என்னுடைய அரசியல் ஈடுபாடு தொடங்கியது. அந்நிகழ்வுதான் அனைத்து வகையான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் அது எங்கு நடந்தாலும் எதிர்க்கத் தூண்டியது.

தமிழகத்தில் ஒரு குழப்பமான சூழல் உள்ளது. இந்தியத் தேசியமும் திராவிடமும் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு மாற்றாக வந்த தமிழ்த் தேசியமும் கூட அந்த மாதிரி ஒரு குழப்பத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இதற்குக் காரணம் என்ன?

அரசமைப்புச் சட்டப்படியோ, சமூக அறிவியல்படியோ இந்தியத் தேசியம் என்று ஒன்று கிடையாது. அது ஒரு மாயை. திராவிடம் பேசியவர்களும் அரசியலுக்காகவும், பதவிக்காகவும் இந்தியத் தேசியத்தோடு ஐக்கியமாகிவிட்டார்கள். அதனால்தான், இந்தப் பிணைப்பு என்று எனக்குப்படுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது தமிழ் உணர்வையும் இனஉணர்வையும் என்னுள் விதைத்தது இந்தத் திராவிடக் கோட்பாடுதான். ஆனால், அவை எல்லாம் இன்று மறக்கடிக்கப்படுகின்றன. தமிழும் தமிழின உணர்வும் தேர்தலுக்கான முழக்கங்கள் ஆகிவிட்டன. இந்தியத் தேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்த பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தோழர்களும், காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், திராவிடம் பேசிய தோழர்களும் அதில் முரண்பட்டு இன்று தமிழ்த் தேசியம் என்பதை முன்வைக்கிறார்கள். அதை வளர்ச்சி என்றே நான் பார்க்கிறேன். அதிலும் சில முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தலில் பங்கெடுத்துக் கொள்வது, தேர்தலை ஆதரிப்பது, தேர்தலைப் புறக்கணிப்பது என்று முரண்பாடுகள் தொடர்கின்றன. என்னுடைய தனிப்பட்ட கருத்து, தேர்தலைப் புறக்கணிப்பது என்பதுதான்.

இந்த முரண்பாடுகள், விவாதங்களுக்குப் பிறகு, சரியான திசையை நோக்கி நகரும். அது சரியான தமிழ்த் தேசியத்தில் மையங்கொள்ளும் என்று நம்புகிறேன்.

இத்தகைய அரசியலில் உங்களின் தெளிவான அரசியல் எது?

நிச்சயமாகத் தமிழ்த் தேசிய அரசியல்தான். அதுதான் இனவிடிவிற்கும் மொழிவிடிவிற்கும் சரியான திசையைக்காட்டும் களத்தையும் அமைக்கும் என்று நம்புகிறேன். பெரியாரியமும் மார்க்சியமும் அதற்குத் துணை புரியும் என்பதே என்னுடைய நம்பிக்கை.

தமிழ்த் தேசியத்திற்குள் பிறமொழியாளர்களின் ஆக்கிரமிப்பு குறித்து..?

தமிழுக்குத் தலைமையிடம் கொடுக்கும் தமிழ்த் தேசியத்தை முழுமையாக உள்வாங்கி ஏற்றுக் கொண்டு நடைமுறையில் உண்மையாக அதற்காகப் பாடுபடும் ஒருவர் தமிழ்நாட்டில் பிறமொழியாளராக இருந்தாலும் நேச சக்தியாகக் கொள்ளலாம். ஆனால், தமிழ்த் தேசியத்தினுள் புகுந்து கீழறுப்பு வேலை செய்கின்றவர்களையும் நாம் அடையாளங் காண வேண்டும். உலக வரலாற்றில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிராக கறுப்பின மக்களுக்கு ஆதரவாக சில வெள்ளையர்களும் போராடியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைப் பெண்மணியான அடேல் பாலசிகம் அவர்களும் இன்னும் களத்தில் நிற்கிறார்கள். ஆகையால் உண்மையானவர்களை அடையாளங் காணுவது நம் கையில்தான் உள்ளது.

தமிழகச் சாதியச் சிக்கல் குறித்து?

தமிழ்நாட்டில் சாதி ஆழ வேரூன்றி இருக்கிறது. அவை பிடுங்கி எறியப்படவேண்டும். சாதி ஒழிப்பிற்கான பல போராட்டங்களுக்குப் பிறகும் சாதி நிலைகொண்டுள்ளது. கடந்த காலகட்டங் களைவிட தற்போது சாதி உணர்வு மேலோங்கியிருப்பதாகவே எனக்குப்படுகிறது. இருபத்தோறாம் நூற்றாண்டைக் கணினியுகம் என்று அழைக்கிறோம். அறிவியலில் மாபெரும் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் மனிதனே மனிதனுக்கு மனித மலத்தைத் திணிக்கும் அவலத்தைத் திண்ணியத்தில் பார்த்தோம். வெளிவந்தது திண்ணியம். வெளிவராதது எத்தனையோ, மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள். சாதி ஒழிக்கப்பட வேண்டும். அதே வேளையில் தமிழர்களையும் ஒருங்கிணைக்க வேண்டும்.