என் தூரிகையை இருட்டின் பிரதிநிதியாக நியமித்திருக்கிறேன்!

நேர்காணல்: அயன்புரம் மணிவண்ணன்


உண்மை, நவம்
பர் 1993

தந்தை பெரியார் காலத்தில் அவரைப் பின்பற்றிப் பரப்ப இலக்கியத் துறையில் அய்யாவின் கொள்கைகளைக் கனல் பறக்க கவிதையாக, கதையாக, கட்டுரையாக வடித்துத்தர புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவருக்குக் கிடைத்தது போல கலைத்துறையில் எம்.ஆர். ராதா, கலைவாணர் என்.எஸ்.கே., கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் அவருக்குக் கிடைத்ததுபோல ஓவியத் துறையில் அப்படி யாரும் பெரியாருக்கு அவர் காலத்தில் கிடைக்கவில்லை. ஆனால் பெரியார் மறைந்து இருபது ஆண்டுகளுக்குப்பின் அவரது கொள்கைகளுக்கு வடிவம் தர இப்போது ஒருவர் கிடைத்திருக்கிறார். அவர்தான் இளம் ஓவியர் புகழேந்தி!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்திலுள்ள தும்பத்திக்கோட்டை என்னும் கிராமத்தில் 1967 இல் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், சமூகத்தின் ரணங்களை வெளிப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டு, பெரியார் வழியில் ஓவியங்கள் வரைந்து வருகிறார்.

தமிழகத்திலேயே ஓவிய நுண்கலையில் முதுகலைப்பட்டம் (M.A.) பெற்ற முதல் ஓவியர் என்ற சிறப்புக்குரிய இவர், தனது 16 ஆம் வயதிலிருந்தே தன் நவீன பாணி ஓவியம் வரையும் ஆற்றலுக்காகப் பாராட்டும் பரிசும் பெறத் தொடங்கினார். அதனால் இவரைத் தமிழகத்து அனைத்துப் பத்திரிகைகளும் (The Hindu, The Indian Express உட்பட) பாராட்டின; இவரது மாடர்ன் ஆர்ட்டைப் பாராட்டிப் புகழ்ந்து கட்டுரைகளையும், இவரது பேட்டிக் கட்டுரைகளையும் வெளியிட்டுச் சிறப்பித்தன.

1987 இல் இவர் தனது 20 ஆம் வயதில் அகில இந்திய அளவிலான நாடு முழுவதுமிருந்து 4000 ஓவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்திய ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்று, இளைஞர் தேசிய விருது (Youth National Award) பெற்றார்; அதே ஆண்டில் தமிழக மாநில விருதும் பெற்றார்; International Airport Authority of India-ன் விருது, ஹைதரபாத்திலுள்ள Central University-ன் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றதற்கான விருது போன்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர் ஓவியர் புகழேந்தி.

ஈழப் படுகொலை பற்றிய தொடர் ஓவியங்களும், சுண்டூர் படுகொலை பற்றியும், சலக்குறுத்தி ஆதி திராவிடப் பெண் நிர்வாண ஊர்வலம் பற்றியும் ஓவியங்கள் வரைந்து, அவற்றைக் கண்காட்சியாக வைத்து மக்களிடையே பாராட்டுகளைப் பெற்ற ஓவியர் புகழேந்தியை 'உண்மை' இதழ் நேர்காணலுக்காகச் சந்தித்தோம்.

இன்றைய ஓவியர்கள் பெரும்பாலும் பொழுது போக்காகத் தொடங்கி தங்கள் ஓவியத் திறமையை வியாபார ரீதியில் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். மனித வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களையும் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்துவதாகவுமே அவர்களது ஓவியங்கள் அமைகின்றன. ஆனால், உங்கள் ஓவியங்கள் அனைத்தும் அப்படியில்லாமல், சமூகக் கொடுமைகள், அவலங்கள், வறுமை, ஒடுக்குமுறை, வன்முறைக்குப் பலியானவர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இருக்கின்றனவே! அதுபற்றிக் கூறுங்கள்?
கலையும் இலக்கியமும் மக்களுக்காக மக்களிடமிருந்து பெற்று மக்களிடமே கொண்டு செல்வது ஆகும். மாவோ போன்றவர்கள் கலை இலக்கியத்தில் இதுபோன்ற நிலைப்பாடு எடுத்தவர்கள் ஆவார்கள். ஆரம்ப காலத்தில் ஓவியம் என்பது ஒரு கருத்து பரிமாற்றச் சாதனமாக ஒரு தகவல் தொடர்புச் சாதனமாக இருந்தது. பாறை ஓவியங்கள், குகை ஓவியங்கள் போன்ற வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் இதைத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தகவல் தொடர்புச் சாதனமாக விளங்கிய இந்த ஓவியக் கலையை, காலப்போக்கில் மேல்தட்டு வர்க்கத்தினர் தங்கள் மகிழ்ச்சிக்கும் பொழுது போக்கிற்கும் பயன்படும் சாதனமாக மாற்றிக் கொண்டனர்; தங்கள் மாட மாளிகைகளை அலங்கரிக்கும் அலங்காரச் சாதனமாக காட்சி இன்பத்திற்காக மட்டுமே பயன்படுவதாக இதனை மாற்றி விட்டனர்.

உதாரணமாக, தமிழர் கலைவடிவமான கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களின் கலையான நாட்டுப்புறக் கலையைக் கூட அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் தமதாக்கிக் கொண்டு தமது புகழுக்கும் பெருமைக்கும் அதைப் பயன்படுத்தி ஆதாயம் அடைகின்றனர் மேல்தட்டு வர்க்கத்தினர். எந்தக் கலைவடிவமும் மக்களைச் சிந்திக்கத் தூண்டவும் சமூக, பொருளாதார மாற்றத்துக்கு மக்களைத் தயார்படுத்தவுமே பயன்பட வேண்டும் என்பதே சமூகத்தின்மேல் ஆழ்ந்த கவலை கொண்டுள்ள என்போன்ற கலைஞர்களின் கருத்து. எனது ஓவியங்களும் அந்த வகையில் சமூக விழிப்புணர்வுக்காகப் பயன்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த அடிப்படையிலேயே என் ஓவியங்களை அமைத்து வருகிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கவும், உலகில் நடைபெறக் கூடிய தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் குறிப்பாக ஈழம், தென் ஆப்பிரிக்கா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் நடைபெறும், நடைபெற்ற தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களைப் பற்றி என் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

பெரும்பாலான ஓவியர்கள் சமூக வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தவே விரும்பி, அவ்வாறே செய்கிறார்கள். இது ஒரு சராசரி மனிதனுக்குள்ள மனப்பான்மை. அவன்தான் மற்றவரைப் பற்றிக் கவலைப்படாமல் தான் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறான்.

நம்மைச் சுற்றிப் பல்வேறு வகைகளில் சமூக அவலங்கள், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பாலியல் வன்முறை, கொலை, கொள்ளை, ஆதிக்கவாதிகளின் அடக்குமுறைகள் இவற்றிற்கு ஆளாகி விழிபிதுங்கி மானுடம் மரித்துக் கொண்டிருக்கும்போது, 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று ஒருவன் சொன்னால், அவன் சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்க முடியாது; அதுபோல என்னைச் சுற்றி எல்லாம் பற்றி எரியும்போது கண்ணை மூடிக்கொண்டு என்னால் கனவுலகத்தில் மிதக்க முடியாது. எல்லோருமே வெளிச்சப்பகுதியைப் படம் பிடித்துக் காட்டும் போது, 'நான் இவ்வளவு இருட்டு இருக்கிறது' என்று சமூகத்தின் இன்னொரு பகுதியை ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துகிறேன். அதன் மூலம் அந்த இருட்டு விரட்டப்பட்டு அங்கிங்கெனாதபடி எங்கும் வெளிச்சமாக வேண்டும் என்று எண்ணுகிறேன். அதனால், என் தூரிகையை இருட்டின் பிரதிநிதியாக நியமித்திருக்கிறேன்.

உங்களை இதுபோன்ற சமூக அவலங்களை மட்டுமே ஓவியமாக வரையவேண்டும் என்று எது தூண்டியது?
1983 ஜூலையில் ஈழத்தில் நடைபெற்ற தமிழருக்கெதிரான இனப்படுகொலை என்னைப் பெரிதும் பாதித்தது; அந்தப் படுகொலைச் சம்பவங்கள் ஆறாத ரணமாக என் உள்ளத்தைப் பிசைந்தன. என் இனத்திற்கு நேர்ந்த இப்பெரும் கொடுமையை என் ஓவியத்தின் மூலம் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணினேன்; அதன்படிச் செய்தேன். இதுதான் 'உலகம் முழுதும் நிகழும் சமூகக் கொடுமைகளை மட்டுமே இனி என் ஓவியத்தில் வடித்துக் காட்டவேண்டும்' என்று நான் எனக்குள் ஓர் உறுதி எடுத்துக் கொண்டு செயல்படக் காரணம்!

அதன்பின் உலக நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற மனித குலத்துக்கு எதிரான செயல்களை ஏகாதிபத்தியத்தின் கொடூரங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் வேதனைகளை சமூகக் கொடூரங்களை என் ஓவியங்களில் பதிவு செய்து உலகுக்குக் காட்ட விரும்பினேன். இதுவே சமூகப் பொறுப்புள்ள ஒரு கலைஞனின் கடமை என்று கருதுகிறேன். நான் இந்தச் சமூகத்தில் ஓவியனாக மட்டுமில்லாமல் அடிப்படையில் ஒரு மனிதனாகவும் இருப்பதால் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் என் ஓவியத்தில் அவற்றைப் பதிவு செய்கிறேன்.

நீங்கள் நவீன பாணி ஓவியம் வரைகிறீர்கள். மாடர்ன் ஆர்ட் பலருக்குப் புரிவதில்லை என்ற கருத்து பற்றி...
எந்த ஒரு கலை வடிவமும் காலத்துக்கேற்ப மாறுதல் அடையும் என்பது பரிணாம வளர்ச்சித் தத்துவம். அதுபோலவே ஓவியக்கலையும் காலமாற்றத்துக்கேற்ப மக்கள் அறிவு வளர்ச்சிக்கேற்ப பல மாறுதல்களை அடைந்து, நவீனத்துவம் அடைவது என்பது தவிர்க்க முடியாது. அந்த மாறுதல் என்பது புரியாமை என்பதாகவும் நவீனபாணி என்ற பெயரில் பார்வையாளனை மிரட்டுவது என்பதாகவும் பெரும்பாலும் இருக்கிறது.

பார்வையாளனுக்கு ஓவியத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய பயிற்சியையும் ஓவியர்கள் உருவாக்கித் தருவதில்லை. எனவே படைப்பாளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக நமது கல்விமுறை மிகவும் பிற்போக்குத்தனமாக, பழைமை நிலையிலிருந்து மீளாத ஒன்றாக இருப்பதும் இன்னொரு காரணமாகும்.

ஆனால், உலக நாடுகளில் கலைத்துறையை முக்கியமான துறையாகக் கருதி அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்; ஓவியத்தை எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றியும் ஓவியக் கல்லூரிகளில் மட்டுமில்லாமல் பிற கல்வித் துறைகளிலும் சொல்லித் தருகிறார்கள். ஆனால் நம் நாட்டில் இப்படிப் பயிற்றுவிப்பது என்பது, குறிப்பாகத் தமிழகத்தில் அறவே கிடையாது. ஓவியக் கல்லூரிகளில் கூட இதுபற்றிக் கற்றுத்தரப்படுவது இல்லை. இவை எல்லாவற்றையும் கணக்கி லெடுத்துக் கொண்டுதான், புரிதல் என்பதையே நாம் அணுக வேண்டியிருக்கிறது. மேலும் இதுபோன்ற ஓவியக் கண்காட்சிகள் சாதாரண மக்கள் நெருங்க முடியாத நட்சத்திர ஓட்டல்கள் போன்ற மேட்டுக் குடியினர் மட்டுமே நெருங்கக்கூடிய இடங்களில் நடைபெறுவதால், சராசரி மக்களுக்குப் பார்க்கக் கூடிய வாய்ப்பும் புரிந்துக்கொள்ளக் கூடிய பயிற்சியும் கிடைக்காமல் போகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

நீங்கள் குறிப்பிடும் இதுபோன்ற உங்கள் நவீன பாணி ஓவியங்களை, சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல இதுவரை என்ன முயற்சி செய்திருக்கிறீர்கள்?
பலமுறை முயன்றிருக்கிறேன். உதாரணமாக, தமிழக மாவட்டத் தலைநகரங்களில், தஞ்சை திருவண்ணாமலை, மதுரை போன்ற இடங்களில் எனது ஓவியங்களைக் கண்காட்சியாக வைத்து நடத்தி இருக்கிறேன். அவை மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. கல்லூரிகளில்கூட மாணவர்கள் மத்தியில் இந்தக் கண்காட்சியை நடத்தினேன்; பெரும் வரவேற்பை அவை பெற்றன.

வல்லம் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் தி.க. மாணவரணியினர் ஏற்பாட்டிலும், தஞ்சை குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரியிலும் எனது ஓவியங்களை one man show கண்காட்சியாக நடத்தியிருக்கிறேன்.

மேலும் 1991இல் காவிரிப் பிரச்சினையால் கர்நாடகத்தில் ஏற்பட்ட தமிழருக்கெதிரான கலவரத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உடனடியாக, வன்முறைக்கெதிராக ஓரியக் கலைஞர்கள். (Artist Against Atrocites) என்ற தலைப்பில் தஞ்சையிலுள்ள ராஜராஜன் பூங்கா அருகில் வீதியிலேயே, கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவர்கள் சிலரின் ஒத்துழைப்போடு திறந்தவெளி ஓவிய அரங்கம், (பொதுமக்கள் முன்னிலையிலேயே அவர்கள் கண்ணுக்கெதிரேயே ஓவியம் வரைதல்) நடத்தினேன். போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருந்த அந்த ஓவிய அரங்கம் மக்கள் மனதில் ஒரு பெரிய எழுச்சியை உண்டாக்கியது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக நான் எனது ஓவியங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சியில் பலவிதங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளேன்.

நவீன ஓவியங்கள் பரவலாக்கப் படாததற்குக் காரணம்?
பத்திரிகைகள் என்று சொல்லலாம். உதாரணமாக சிறுகதைகளும், புதுக்கவிதைகளும், அவற்றின் வடிவங்கள் எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் experimental ஆக பத்திரிகைகளில் வெளியிடு கிறார்கள். ஆனால் நவீன பாணி ஓவியங்களை அப்படி வெளியிடுவதில்லை. அதேபோல் நமது நாட்டுத் தொலைக்காட்சிக்கு ஓவியத்துறை என்று ஒன்றிருப்பதே கண்ணுக்குத் தெரிவதில்லை. எனவே பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் ஓவியங்கள் பக்கம் கவனம் செலுத்தினால்தான் இவை மக்கள் மன்றத்தைச் சென்றடைய முடியும்.

தமிழக ஓவியச் சூழல் பற்றி...
தமிழக ஓவியர்களிடையே சமூகப் பொறுப்புணர்ச்சி இல்லாமை என்ற ஒன்றைத்தவிர, மற்றபடி திறமையானவர்கள்தான். அவர்களுக்கென்று ஒவ்வொருவருக்கும் தனிப்பாணி, தனித்துவம் இருப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

இப்படி நம்மிடையே வாழும் தனபால், சந்தனராஜ் போன்ற பெரிய ஓவியர்கள் எனக்குப் பிடித்த மானவர்கள். இவர்கள் ஆதிமூலம், அல்போன்சோ, பாஸ்கரன், மருது, சந்தானம், சந்துரு போன்ற தற்காலத் தலைசிறந்த ஓவியர்கள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் வியாபாரச் சிந்தனை மட்டுமே நமது தமிழ் ஓவியர்களிடையே மிதமிஞ்சி இருக்கிறது. இந்நிலை மாறும்போதுதான் தமிழக ஓவியச் சூழல் ஆரோக்கியமானதாக அமையும்.

நீங்கள் இத்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?
எனது குழந்தைப் பருவத்திலேயே எனக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டது எனலாம். எனது மூன்றாவது வயதிலிருந்தே இந்த வரைகின்ற பழக்கம் தோன்றியது. கண்ணால் பார்த்தவற்றை அப்படியே சுவரில், காகிதத்தில் கிறுக்குவது எனது பழக்கமாயிற்று. பின் மனிதர்கள், பறவைகள், வயல் வரப்பு, நாற்றுநடும் பெண்கள், இயற்கைக் காட்சிகள் என்று கண்ணால் கண்டதை எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது. உடனே அவற்றை அப்படியே வரைய ஆரம்பித்தேன். எனது அந்தப் பழக்கத்தை என் தந்தையார் தடுக்கவில்லை. அதுவும் எனக்கு உற்சாகம் தந்தது.

பள்ளியில் படிக்கும்போதுகூட ஒரு பக்கம் வரைந்து கொண்டே இருப்பேன். பரீட்சை எழுதும்போதுகூட என்னையறியாமல் வரைந்து கொண்டிருப்பேன். இப்படி 7 ஆம், 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே ஓவியனாகத்தான் ஆகவேண்டும் என்று தீர்மானித்தேன். தன்னைப் பாதித்த வற்றை ஒவ்வொருவரும் தமது விருப்பப்படி கதையாக, கவிதையாக வெளிப்படுத்துகிறார்கள். நானும் என்னைப் பாதித்தவற்றைப் பின்னர் சில கவிதைகளாக வெளிப்படுத்தி இருக்கிறேன். எனக்கு இவையெல்லாவற்றையும்விட ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துவதிலேயே ஆர்வம் ஏற்பட்டது. அதனாலேயே ஓவியனாக மாறிவிட்டேன்.

தங்களைக் கவர்ந்த ஓவியர்? ஓவியங்கள்?
மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து ஓவியங்களை வரைகின்ற சந்தானம். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆதிமூலம், மருது, அல்போன்சோ, சந்துரு ஆகியவர்களும் தமிழக ஓவியர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். உலக அளவில் பிக்காஸோ, இந்தியாவில் எம்.எஃப். உசேன், சமூகக் கொடுமைகளை எதிர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு வரைந்த, ஜெர்மன் ஓவியர்களான (German Experessionist) மாக்ஸ் பெர்க்மன், ஆட்டோடிக்ஸ், காண்டன்ஸ்கி போன்ற ஓவியர்கள் எனக்குப் பிடித்தவர்கள்.

ஓவியங்களைப் பொறுத்தவரை பல ஓவியங்கள் என்னைக் கவர்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிட முடியும். 20 ஆம் நூற்றாண்டின் வன்முறையை வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் பிக்காசோவின் குவர்னிக்கா, சந்தானத்தின் ஈழ வரிசை ஓவியங்கள், டாலியின் சர்ரியலிச ஓவியங்கள். இதுபோலப் பல ஓவியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஓவியக்கலைக்கென்று வழங்கப்படும் அகாடமி விருதுகள் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
ஓவியக் கலைஞர்களை ஊக்குவித்து, அவர்களை வளர்ப்பது என்ற நோக்கத்தில் நிறுவப்பட்டதுதான் 'லலித் கலா அகடாமி.' இதில் திறமை அடிப்படையில் இல்லாமல் வேண்டியவர், வேண்டாதவர் என்ற அடிப்படையிலேயே விருதுகள் வழங்கப்படுகின்றன. இதனால் விருதுகள் மேல் இருந்த மரியாதையே போய்விட்டது. எனவே, அகாடமி மீது என்போன்ற ஓவியர்களுக்கு இருந்த நம்பிக்கை அற்றுப்போய் விட்டது.

தற்போதைய உங்கள் ஓவியப் பணி பற்றி?
அண்மையில் பாபர் மசூதி தகர்க்கப்பட்டதைக் கருப்பொருளாக வைத்து கருப்பு ஞாயிறு (Black Sunday) என்ற தலைப்பிலும், சோமாலியாவின் வறுமை, ஓர் இனத்தையே அந்த இனத்துப் பெண்களைப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்குவதன் மூலம், கலாச்சாரச் சீரழிவிற்கு உள்ளாக்க முடிவெடுத்துச் செயல்படும் செர்பியர்களின் போஸ்னியர்கள் மீதான மூர்க்கத்தனமான ராணுவ வெறித்தாக்குதல் ஆகியவற்றையும் ஓவியமாக்குவதற்கான மனத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன்.