உறங்கா நிறங்கள்


ஏ.என். கிருஷ்ணவேணியாழ் பல்கலைக்கழகம், தாமரை, மார்ச் 2000


மனித சமூகப் பண்பாட்டு வரலாற்றில் கடந்த நூற்றாண்டு விட்டுச் சென்ற பதிவுகளை, மீட்டுப் பார்க்கும் வேளை, புகழேந்தியின் 'உறங்கா நிறங்கள்' என்ற ஓவியக் காட்சி முக்கியத்துவம் பெறுகிறது. 21 ஆம் நூற்றாண்டை உலகெங்கெனும் மக்கள் குதூகலமாகப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் எதிர்கொண்ட போதே, 21 ஆம் நூற்றாண்டு பற்றி மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. அதற்குக் களம் அமைந்தது போல் அண்மையில் லலித் கலா அகடமியில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் சிந்தனைக்கும் ரசனைக்கும் வழிவகுக்கின்றன. அச்சிந்தனைக்கு வித்திட்ட ஓவியர் புகழேந்தியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

அவர் தன் கலைப்படைப்பிற்குப் பொருளாக எடுத்துக்கொண்ட விடயங்கள், சம்பவங்கள் யாவுமே மனித செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனுக்குள்ளே உறங்கிக்கிடந்த ஆற்றல்களின் வெளிப்பாட்டைத் தன் 'உறங்கா நிறங்களாக, நெருப்பு வண்ணங்களில் வரைந்து, நெஞ்சை நெருடவும் நெகிழவும் வைத்தவர் ஓவியர் புகழேந்தி. சம்பவங்கள் இன்பமானவையோ, துன்பமானவையோ அவற்றை மீட்டுப் பார்த்து அனுபவிப்பது மனிதனின் இயல்பு. அதிலும் காதல், சோகம், வீர ரசங்கள் மனிதனை எளிதில் தன்வயமாக்குபவை. கலையுள்ளம் படைத்தவர்களின் பார்வைக்கும், அனுபவத்திற்கும் விடயமாகிப்போன சம்பவங்களும், நிகழ்ச்சிகளும், அவர் தம் அனுபவத்தோடு புதுவடிவம் பெற்றுவிடும் என்பதை, புகழேந்தி உறங்கா நிறங்களில் உண்மையாக்கிவிட்டார். 

அவர் வடித்துத்தந்த வண்ணங்கள் ஒவ்வொன்றும் எம்மை அந்நிகழ்ச்சிகள் இடம் பெற்ற நிலத்திற்கே அழைத்துச் செல்வதுடன் அச்சம்பவங்களுடன் எம்மை ஒன்றவும் வைத்துவிடுகின்றன.

உலகில் மக்கள் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளுக்கு உட்படும் போதெல்லாம் சுதந்திர வேட்கை கொண்டு, பலமான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திப் போராடிய வரலாறுகள் ரஷ்யா, க்யூபா, பாலஸ்தீனம் முதல் ஈழம் வரையான, இடையுறவு படாத, தொடர்ச்சியாக ஓவியங்களில் வெளிப்பட்டமை, 21 ஆம் நூற்றாண்டில் கால் பதிக்கும் வேளை மேலும் தொடரும் போராட்டங்களாக தீர்க்க தரிசனப் பதிவுகளாக, காட்சியளிக்கின்றன.

பார்வையாளர், ரசிகர்களைப் பொறுத்தமட்டில் கலை அனுபவம் என்பது கலைப் படைப்பைப் புரிந்து கொள்வதன் மூலம் ஏற்படுவது. கலையினால் வெளிப்படுத்தப்படும் பல்வேறு உத்திகள், கலை ரசனைக்குக் காரணமாகின்றன. ரசிகனும் கலைஞனை ஒத்த கலையுள்ளம் படைத்தவனாக இருக்கும் பட்சத்தில் 'ரசனை' எளிமையாகி விடுகிறது. அத்தகைய ரசிகர்கள் 'சுமனசர்', சஹ்ருதயர் போன்ற பெயர்களினால் அழகியல் சாஸ்திர நூல்களில் அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. கலைஞனும் (Artist) ஒரு வகையில் ரசிகனே. தான் பார்த்து ரசித்த அவனுள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள், கலை வெளிப்பாட்டிற்கு உந்துதலைப் கொடுப்பதுடன், ஆக்கத்திறன் மூலம் (creativity) அழகிய கட்டடங்களாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ, கவிதையாகவோ வடிவம் பெற்று விடுகின்றன.

இந்த வகையில் ஓவியர் புகழேந்தி தனக்கேயுரிய கலைப்பாணியில், மனிதப் போராட்டங்களையும், அதன் பல்வேறு கூறுகள், பரிமாணங்கள், அவற்றின் விளைவான அவலங்களையும் அவற்றுக்கேற்ற வண்ணங்களில் வடிவமைத்துள்ளார். பார்வையாளர் புரிந்து கொள்ளும் வகையிலும் (Familiarity) (புதுமை உணர்வுடனும்) (Novelty) ஓவியங்களை வெளிப்படுத்திய பாங்கு பாராட்டுக்குரியது.

களத்திற்கால் பதிக்காவிட்டாலும், போராளிக்குரிய வேகத்துடன் பேனா முனைகளும், தூரிகைகளும் துப்பாக்கிகளாய் முளைத்த வித்தையை அவர் ஓவியங்களில் காணலாம்.

21 ஆம் நூற்றாண்டில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் சந்தித்த நெருக்கடிகள், அவற்றிற்கு முகம் கொடுக்க அவை கையாண்ட அரசியல் யுக்திகள், இதன் விளைவாக அந்நாடுகள் அனுபவித்த அவலங்கள் நேற்று நடந்தது போன்று பசுமையாய்ப் பதிய வைத்த ஓவியக்காட்சி, சமகாலப் பிரச்சினைகளின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. விடுதலைப் போராட்டம், வீறு கொண்ட தலைவர்கள், வெற்றிப்பாதையை நோக்கிய அவர்களின் பயணம், மக்களின் சகிப்புத்தன்மை, வீடிழந்து, நாடிழந்து, வீதிகளில் அலைந்தாலும், இலட்சிய வேட்கையோடு, ஜீவ மரணப் போராட்டத்தை எதிர்கொண்ட தன்மை, அவல நிலைகளில் தம்மையே சேவைக்காய் அர்ப்பணித்துக் கொண்ட அன்னை திரேசா, இத்தனை சோகங்களிடையேயும் விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் வெளிப்பாடு, பெண்ணியம், பசி, பஞ்சம் பட்டினி, மரணம் என்று மனிதனைச் சூழவுள்ள சகல பிரச்சினைகளையும் தம் தூரிகைக்கு விஷயமாகியுள்ளார் புகழேந்தி.

உண்மையான கலைஞன், கொடூர சம்பவங்களைப் பார்த்து வாய் மூடி, மௌனியாய் இருப்பவன் அல்லன். மக்கள் பேசப்பயப்படும் விடயங்களையே துணிச்சலோடு வெளிப்படுத்துவான். அந்த வகையில் உறங்கா நிறங்கள், பேசும் ஓவியங்களாகப் பரிணமிப்பவை.

இளமைக் காலக் கனவுகளை எருவாய் மண்ணில் புதைத்த மாவீரர்கள், மரணிப்பதில்லை. அவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் அல்ல. விதைக்கப்பட்டவர்கள் என்ற தத்துவத்திற்கு வடிவம் கொடுத்த ஓவியம், அவரது சிந்தனையை சிதறாமல் வெளிப்படுத்துகிறது.

சுதந்திர தாகத்தைத் தூண்டி, மக்களை வீறு கொண்டெழச் செய்த வங்கத்துக் கவிஞர்களையும் அவர் மறக்கவில்லை. அத்தகைய சுதந்திர வேட்கையால், கொலைக் கயிறை முத்தமிட்ட வீரர்கள் அவரது ஓவியத்தில் அழியா இடம் பெற்றுவிட்டனர். மொழியுரிமை மறுக்கப்பட்டபோது மக்கள் தம் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, தம்மையே தீயின் நாக்குகளுக்கு இரையாக்கிய சம்பவம் மனதில் வேதனையைத் தூண்டுகிறது. அகிம்சை வழியில் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தையே அசைத்த மேதை மகாத்மா அவரது ஓவியத்தில் உயிர்ப்புப் பெறுகிறார்.

அண்டை நாடுகளில் இடம் பெற்றவன் செயல்களும், கொடூரங்களும் அவர் தூரிகைக்குத் தப்பவில்லை. மனிதனது அடிப்படைத் தேவைகள் உரிமைகள் மறுக்கப்பட்டுச் சொந்த மண்ணில் அகதியாகப் போனவர்கள், புகழேந்தியின் ஓவியத்தில் கதாநாயகர்களாகத் தோன்றும் காட்சி, மனதை உருக்குகிறது.

மண்ணில் உயிர்வாழ, ஒரு துளிபாலுக்கு ஏங்கும் ஒட்டிய உடல், காய்ந்து போன மார்பகங்களைச் சுவைக்கும் காட்சி உலகில் இடம்பெறும் கொடுமைகளின் எல்லையைத் தரிசிக்க வைக்கிறது.

எத்தனை புதிய நூற்றாண்டுகள் தோன்றினாலும், சந்திரனில் கால்பதித்ததாலும் 'பெண்' வெறும் போகப் பொருளே, அதட்டியும், அடக்கியும் அவளை அனுபவிக்க முடியும்' என்று என்னும் ஆணாதிக்கர்களுக்கு சவால்விடும் பெண்ணின் புரட்சித் தோற்றம், சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாய், வெளிப்பட்டுத் தோன்றுகிறது. பெண்கள் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் பெற்று வரும் வேளையிலும், அவர்கள் பாதுகாப்பற்றவர்களாய், ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் அடிமைப் படுத்தப்பட்டு, நடைபெறும் பாலியல் வல்லுறவுகள், படுகொலைகளை, எதிர்த்து தன்னிருப்புக்காகப் போராடும் ஆக்ரோஷம் சமூகப் பிரக்ஞையுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டங்கள், போர்க்காலச் சூழல்களிலும் பாதிக்கப்படுபவள் பெண்ணே. அதிகார வர்க்கத்தின் முன்னும், ஆயுத பாணிகளின் முன்னும் பெண்ணின் நிர்வாணக் காட்சிகள் ஆணின் வக்கிரத் தன்மையைப் பறைசாற்றுபவை.

அதிகார வெறியர்களின் வன்செயல்கள் மட்டுமல்ல, இயற்கையின் சீற்றங்களும் காலத்திற்குக் காலம் அழிவுப் பாதைக்கு வழிவகுக்கும் ஒரிசா மண்ணில் புயலின் கோர தாண்டவங்கள் பதித்த சுவடுகள் மனிதனைச் சூழ உள்ள பயங்கரங்களாய் மனதை உறுத்துகின்றன.

நவீன ஓவியத்தின் தந்தையை ஓவியமாக்கி, கலைஞர்களின் சமூகப் பங்களிப்பையும் மறக்காது வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மனிதனைச் சூழவுள்ள அத்தனை விடயங்களையும் தன் ஓவியத்திற்குக் கருவாக்கி, மனித அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தியாகிகளையும் நினைவு கூர்ந்து, அவர் தம் சுயத்தை உணர்த்தி, அவர்களைத் தலை நிமிர்ந்து வாழ வழிவகுத்த மேதைகளையும் ஓவியப் பதிவுகளாக்கி உயர்ந்து நிற்கும் புகழேந்தி அனைவரது பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் உரியவர் என்பதில் சந்தேகமில்லை.

சமூகப் பண்பாட்டு வரலாற்றில், சமூக உறவுகளுக்குக் காரணமான மொழி போன்று, கலையும் தொழிற்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளாகவும், ஆவணங்களாகவும் விளங்கும் கலை வடிவங்கள் மனிதப் பண்பாட்டை வெளிப்படுத்துபவை. எனவே மனித வரலாற்றில், மனித உருவாக்கமான கலை, பிரதான இடத்தை வகிப்பதுடன், கலைஞர்களும் போற்றுதலுக்குரியவர்கள். அந்த வகையில் 20ம் நூற்றாண்டில் இடம் பெற்ற சமூக, அரசியல், பொருளாதாரச் சம்பவங்களைப் பதிவு செய்ததன் மூலம் ஓவியர் புகழேந்தி தன்னிருப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

. . . . . * . . . . .