உறங்கா நிறங்கள்


அ.ஜ. கான்


காலக்குறி, மே - ஜூலை 2000


20ஆம் நூற்றாண்டு சமூகத்தளத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது பல்வேறு பதிவுகளை ஆழமாகப் பதித்துள்ளது எனலாம். குறிப்பாக அறிவியல் துறையில் மிகச்சிறப்பான பதிவுகள். அரசியல், கலை, இலக்கியத்துறைகளிலும் தனது தடங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூக நிகழ்வுகளும் அதற்கான காரணகாரியங்களுடன் பதிந்து விட்டிருக்கிறது. இவைகளை ஓர் ஓவியன் எவ்வாறு உள்வாங்கிக் கொள்கிறான் என்பதை வெளிப்படுத்துவதே ஓவியர் புகழேந்தியின் உறங்கா நிறங்கள் என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சி. 20ஆம் நூற்றாண்டிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட நிகழ்வுகள் கொஞ்சமாயிருந்தாலும் ஏறக்குறைய 20ஆம் நூற்றாண்டை முழுவதையுமே பிரதிநிதித்துவம் செய்துவிட்ட மிக முக்கிய நிகழ்வுகளையும் வரலாறு படைத்த மனிதர்களையும் ஓவியமாக்கியிருந்தது. 21ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் ஒரு நம்பிக்கை புள்ளியாய்த் தெரிந்தது. ஒரு நூற்றாண்டின் நிகழ்வுகள் ஓவியங்களாகப் பதிவு செய்து பொதுமக்கள் பார்வைக்குக் காட்சியாக்கியிருப்பது தமிழகத்தில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பான விஷயம்.

எப்பொழுதுமே புகழேந்தியின் ஓவியங்களும் அதன் வண்ணங்களும் பொதுவாக சமூக நிறம் கொண்டவைகள். இவரின் எரியும் வண்ணங்கள் என்ற ஓவியத் தொகுப்பு 1994இல் வெளிவந்தபோது ஓர் ஓவியனுக்குச் சமூகத் தொடர்பு ஏன் அவசியமாகிறது என்பதை எல்லோருக்கும் புரியவைத்தது. சமூகத்திற்கு ஒரு கலைஞன் முக்கியமா? இல்லை, ஒரு கலைஞனுக்குச் சமூகம் முக்கியமா? என்கிற வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும், ஒரு கலைஞனுக்கு, ஒரு படைப்பிலக்கியப் படைப்பாளிக்கு சமூக உணர்வே முக்கியம் என்பதை, புகழேந்தி போன்ற பலரும் தங்களின் அமைதியான ஆரவாரமற்ற படைப்புகளால் அவ்வப்போது செய்துவருவது சமூக இருப்பிற்கான அர்த்தத்தை உணர்ந்துவிடுகிற ஒன்றாகும்.

வெற்றுக் காகிதத்தில் ஓவியன் கிழிக்கும் ஒருசில கோடுகள் கூட பார்வையாளனிடம் பேசிவிடக் கூடிய ஓவியங்களும் உண்டு. அது ஒருவகை. ஆனால், புகழேந்தியின் ஓவியங்களில் கோடுகளைவிட அதில் உள்ள வண்ணங்களே பார்வையாளனிடம் பேசும் சக்தி படைத்தவை. உடல் நரம்புகள் ஒளிக்கீற்றுக்களாய் மாறியிருப்பதை, புகழேந்தியின் வண்ணங்களில் பார்க்கமுடியும். சிவப்பும், மஞ்சளும் கலந்த கலவையில் மனித உணர்வுகளை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். ஏனெனில் இவ்விரு வண்ணங்கள் மட்டுமே கூடுதல் வெளிப்பாட்டுத் திறம் கொண்டவை. மற்ற நிறங்களைவிட இவ்விரு வண்ணங்களின் அற்புதமான வெளிப்பாடுகளை 17ஆம் நூற்றாண்டு உலகப்புகழ் பெற்ற டச்சு ஓவியர் ரெம்ப்ராந்த்தின் ஓவியங்களில் பார்க்க முடியும். இவரின் ஓவியங்கள் பார்வையாளனுக்குச் சொல்லவந்த விசயங்களை, அவரின் ஓவியங்களைவிட, வண்ணக் கலவை (Composition) சட்டென சொல்லிவிடும். லாவகம் புகழேந்தியின் வண்ணங்களுக்கு உண்டு என்பது சிறப்பம்சம். தன் வண்ணங்களின் மூலம் இன்னும் நிறைய சேதிகளை சொல்லக் காத்திருக்கும் நண்பர் புகழேந்தியின் தூரிகை இனி உறங்காது என்பது மட்டும் நிச்சயம்.

"ஒரு கலைப்படைப்பு சமூக மாற்றத்திற்குப் பயன்படும் கருவிகளில் ஒன்றாக இருக்கவேண்டும். இருக்க முடியும் என்பது என் திடமான நம்பிக்கை. பார்வையாளரான மக்களை அசைத்து சிறிதளவேனும் சிந்திக்க வைக்குமாயின் அது அந்தக் கலைப்படைப்பின் வெற்றியாகும். விதைக்கப்படும் விதைகளும், உரிக்கப்படும் வார்த்தைகளும் எப்படி சும்மா இருப்பதில்லையோ அதுபோலவே கிழிக்கப்படும் ஓவியக் கோடுகளும்" எனக் கூறும் ஓவியர் புகழேந்தி தஞ்சை தும்பத்திக்கோட்டையைச் சேர்ந்தவர். விவசாயி மகன். குடந்தை ஓவியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஓவியத்துறையில் தமிழகத்தின் முதல் முதுகலைப் பட்டதாரி என்ற சிறப்புப் பெருமையும் கொண்டவர்.

. . . . . * . . . . .