ஓவியங்கள் வரையாத ஓவியன்
பழமையின் வேர்களில் புதுமையின் தளிர்கள்


க.வே. பாலகுமரன்


ஈழநாதம் வெள்ளிநாதம், தமிழீழம். 17- 23.06.2005,

தமிழர் கண்ணோட்டம் சூலை 2005


ஓவியர் புகழேந்தி என்கிற தொடர், விடுதலையை யாசிக்கின்ற எமக்கு, புத்துணர்வின் புதிய வரவாகிவிட்டது. ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கான பரந்துபட்ட தார்மீக ஆதரவினை அவருடைய ஓவியங்கள் வழி அவர் வழங்குகின்றார் என்பதே இதன் பொருள். விடுதலைப் பயணத்தின் முக்கிய நிலையொன்றுக்குள் நாம் பிரவேசிக்க ஆயத்தமாகும் வேளையே இருபத்தியேழு ஓவியங்களோடு அவர் இங்கு வந்து சேர்ந்தார். அவரது ஓவியக் கண்காட்சி சொன்ன செய்திகள் மிகப்பல. எம் மக்களுக்குப் போராட்ட வரலாற்றை ஓவியமாக அவர் புகட்டினார்; வெற்றி உங்களுக்கே என நம்பிக்கையூட்டினார்; தோழமையின் நரம்புகளைச் சுண்டினார். எனவே ஓவியங்களோடு ஓவியமாகவே அவரும் தெரிந்தார். அவரையும் அவரது ஓவியத்தையும் பிரித்தறிய முடியாதென எனக்குப்பட்டது. போராட்டமே வாழ்வாக வாழும் எமக்கு, ஓவியமே வாழ்வாக வரித்தமை புரிந்தது. நாம் ஆயுதம் தாங்கியும் அவர் ஓவியம் தாங்கியும் போராடுகின்றோம். 20 ஆண்டுகளுக்கு மேலாக இடைவிடாத ஓயாத சலிப்பற்ற உழைப்பின் மூலம் அவர் ஓவிய அரசியல் சமூக இயக்கமாகிவிட்டார். ஒத்தக் கருத்துள்ள பல்வேறு தளங்களிலுள்ள அனைவரோடும் இணைந்து இயங்கும் ஒரு இயக்கமவர்.

"எனது தூரிகையை இருட்டின் பிரதிநிதியாக நியமித்திருக்கின்றேன்" என்கிற அவரது சொற்கள் சருவதேசப் பரிமாணம் கொண்டவை. இருளில்தான் ஒளியிருக்கின்றது; இருளையுணர்ந்தால்தான் ஒளியைத் தேடமுடியும். புகழேந்தியின் சிறிய ஆனால் கூர்மையான ஒளி மிகுந்த கண்களிலே வலியின் இருளை நான் கண்டேன். இவ்வலி தமிழ்நாட்டின் தமிழர் நிலைகண்டு மட்டும் வந்ததல்ல. தமிழ்ஈழத்தமிழர் படும் துயர் நொந்து மட்டும் வந்ததல்ல. இவ்வுலகில் மானுடம்படும் வலியாலும் வந்தது. அதேவேளை இம்முயற்சியால் அவர் பட்டிருக்கக்கூடிய வலியையும் நான் இணைத்துக் கொண்டேன். இதுவொரு மிக ஆரோக்கியமான அற்புதமான தமிழர் பண்பாட்டுக் கலைப் பின்புலத்திற் தோன்றும் ஓவியப் பரிமாணம். தமிழ் அடையாளங்களோடு சருவதேச அடையாளங்கள் பொருத்தப்பட்டு இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கும் வேளையை அவர் பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி அழகியற் கலாமன்றத்திலே மக்களோடு நின்று அவரது ஓவியங்களை அவதானித்தபோது மனதில் பலதரப்பட்ட உணர்வுகள் தோன்றின. வண்ணங்கள் மேலும் மேலும் அழுத்தம் பெற்று உக்கிரமடைந்தன; அவை தீப்பற்றி எரியும் நிலையிலிருப்பதுபோல் தோன்றியது; திடீரென ஓவியங்கள் மறைந்தன; அவற்றிலிருந்து ஆட்கள் வெளிக்கிளம்பினர். அவர்கள் எம்மோடு பேசத் தொடங்கினர்; பின்னணியில் வேட்டுச் சத்தங்கள், தாக்குதல்கள், வதைபடும் மனிதத்தின் மீது அது சிந்திய குருதியின் மணமும் கிளம்பியது. பார்வையாளர்கள் மனங்களிலேயே அதிர்ச்சியலைகள் பரவின; அவர்கள் வேகமாகப் புதையத் தொடங்கினர். பின்னர் மெதுவாக மேலே யெழுந்தனர். அமைதியடைந்தனர். மிகச் சிலர் உடனடியாக எதிர்வினை காட்டினர். நாம் கடந்துவந்த துயரத் பாதையை ஏன் நினைவுபடுத்தினீர்கள்? நம்பிக்கை தரும் ஓவியங்களை மட்டும் வரைந்திருக்கலாமே என முணுமுணுத்தனர். எல்லாவற்றிற்கும் சிரிப்பையே பதிலாகப் புகழேந்தி தந்தார்.

எனக்கொரு உண்மை அப்போது உறைத்தது. புகழேந்தியின் ஓவியங்கள் மனிதர் முகத்திலே அறைகின்றன. அவை வலியைக் கிளப்புகின்றன. வலி கிளம்பினால் நோவு கண்டால் என்ன செய்ய வேண்டும்? அதனை நீக்கவும் போக்கவும் வழி கண்டறிய வேண்டும். எனவே விடை இலகுவில் கிடைக்கின்றது. இருளைத் தரும் ஓவியங்களே ஒளியைப் பிறப்பிக்கின்றன. எனவே புகழேந்தி மக்கள் ஓவியராக மாற்றம் பெற்றுவிட்டார். வரலாற்றின் இயங்குவிதியினை ஓவியத்தின் வழி அவர் நிரூபிக்கும் வண்ணம் அலாதியானது. இன்னும் பலரோ எமது வாழ்வினை வாழாது நீங்கள் எவ்வாறு அவற்றினை வரைந்தீர்கள் என வியந்தனர். அவர்களும் பதில் சொல்லப்படாமலே பதிலையுணர்ந்தனர். வாழ்ந்தவராகிய நாம் பட்ட வலியை வாழாத அவரும் பட்டார். அவ்வலியை ஓவியம் வரையும்பொழுது அவர் வாழ்ந்துபட்டார். இதுவே அவரது ஓவிய வெளிப்பாடு. ஓவிய வெளிப்பாடு மட்டுமன்றி அவரது தோழமையின் வெளிப்பாடு. உலக மொழியாகிய ஓவியம் மூலம் எமது துயரம் வரையப்பட்டதால் அத்துயரம் மானுட விடுதலையின் மகத்தான பங்களிப்பாகவும் அதன்வழி சருவதேச அங்கீகாரத்தையும் புகழேந்தி எமக்குப் பெற்றுத் தந்துள்ளார். இதுவொரு விடுதலைப் போராட்ட தரமுயர்த்துகைச் செயற்பாடு. வெண்மணியோடு செம்மணியும் பகத்சிங்கோடு குட்டிமணியும் சந்திரபோசு, மாவோ, லெனின், சே, பிடலோடு பிரபாகரனும் திலீபனும் சாலியன் வாலாபாக் படுகொலையோடு வல்வைப் படுகொலையும் உறங்கா நிறங்களின் வெளிப்பாடாகும்போது அவை இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுப் படிமங்களாகி விடுகின்றன.

இதுவொரு அறிவுபூர்வமான கலைச் செயற்பாடு; சருவதேச அரசியல் வெளிப்பாடு. இக்கட்டத்திலே எம் மக்கள் ஓவியர் வீர சந்தானத்தினை நினைவிற்கொள்வர். எண்பதுகளில் கரும் தாடியும், ஆழமான கண்களும் தொலை நோக்கிய பார்வையும் கொண்ட அரிய இனிய நண்பர் வீரசந்தானத்தின் தமிழ்த்துயர் பேசிய துயர் களைய எமக்கு உரமூட்டிய அவரது ஓவியங்களை மனதிற்கொள்வர். நிழலாடும் சந்தானத்தின் ஓவிய முகத்தின் தொடர்ச்சியாக இப்போது ஓவியர் புகழேந்தி. எதுவும் வீணாகவில்லை. பகிரப்பட்ட தோழமை, சிந்தப்பட்ட குருதி, இழக்கப்பட்ட உயிர்கள், கொடுக்கப்பட்ட விலை எல்லாமே காலத்தால் அழிக்கப்பட முடியாத நிரந்தரப் படிமங்களாகிவிட்டன. அடுத்த சந்ததிக்குக் கடத்தப்பட ஆயத்தமாகிவிட்டன. எரியும் வண்ணங்கள் முன்னுரையில் எழுதப்பட்டிருப்பது போல் விதைக்கப்பட்ட விதைகள், உச்சரிக்கப்பட்ட சொற்கள் அதுபோல கிழிக்கப்பட்ட கோடுகள் போல எல்லாமே சும்மா இருப்பதில்லை. அவை தொடர்ந்து இயங்குகின்றன. அவை இயங்கி மெல்லவே "ஆமை குன்றேறல் போல" எமது இலக்கினை நோக்கி இடைவிடாது எம்மை நகர்த்துகின்றன.

ஓவியக்கலை பற்றி என்னைப் போலவே பலரும் பெரிதாக அறிந்தவர்களில்லை. ஆனால் அவற்றில் பல பேசும் வாழ்வு எம்முடையது என்பதை மட்டும் அறிந்தவர். ஆயினும் பொதுமக்களின் கவனம் ஓவியக் கலையின்பால் அதிகம் ஈர்க்கப்படவில்லை. அது தமக்கானது. தமது விடிவினை வேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதென்பதை உணரவில்லை. அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை. ஓவியமென்பது அரிதான நுண்கலையாக அன்னியப்பட்டதாக எட்டாத் தொலைவிலிருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்கின்றார்கள். இந்நிலைக்குப் பல காரணங்களிருக்கலாம். அரண்மனைகள், மடாலயங்கள், தேவாலயங்களில் தெய்வத்தன்மை சார்ந்ததும் அரசாள்கை சார்ந்ததும் வரையப்பட்ட ஓவியங்கள் பின்னர் அடக்குமுறைகள், சருவாதிகாரங்கள் என்பவற்றிற்கு எதிராகவும் குரலெழுப்பின. இன்று நவீனத்துவமும் புதுமையும் கொண்ட வித்தியாசமான ஓவியங்கள் வரவேற்பினைப் பெறும் நிலையைக் காண்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடாகக் கணினியில் வரைகலை வளர்வதையும் காண்கிறோம். அவை நுகர்வுலகின் உயர் இரசனைப் படைப்பாகவும் திரைப்படத்துறை சார்ந்ததும் அவற்றின் நீட்சியாக வெளிவருவதையும் பார்க்கின்றோம். ஆனால் இவற்றின் வழி ஓவியம் ஒரு புதுவழியை அடையும் வேளையில் மிகச் சிக்கலான பார்வையாளனை மிரட்டும் தன்மையால் சிலவேளை புரியாமையால் தாழ்வுணர்ச்சி கொள்ளச் செய்யும் நிலைக்கு ஆழமான தனிமனிதச் சிந்தனையின் வெளிப்பாடாகும்போது மீண்டும் அவை மக்களிடமிருந்து வேகமாக அன்னியமடைகின்றன.

இதுவொரு தேக்கநிலை. இவ்வாறாகப் பல நிலைகளிருப்பினும் ஓவியக்கலை தொடர்பான அடிப்படைக் கேள்வி ஒன்றுள்ளது. மிக நீண்ட காலமாகவே எழுப்பப்படும் கேள்வியிது. மக்கள் மொழியறிந்திருந்தபோது முதன் மொழியாகவிருந்த ஓவியம் எவ்வாறு மக்களிடமிருந்து அன்னியப்பட்டது? இதற்கு விடை காணாமல் ஓவியக் கலையின் மேம்பாடு பற்றிப் பேசுவதால் என்ன பயனென்பது சமூக நலன் சார்ந்த புகழேந்தியின் வினா. இங்கேதான் புகழேந்தி கவனிக்கப்பட வேண்டியவராகின்றார். புகழேந்தியின் ஓவியங்கள் தோன்றிய அரசியலையும் அவை பேசும் அரசியலையும் இங்கேதான் முக்கியப்படுத்தப்பட வேண்டியதாகின்றது. மக்களுக்குத் தேவையானதை ஓவியங்கள் பேசாமற் போனதால் அவர்கள் வரலாறு, ஓவியங்களில் பதியப்படாது போனதால் தனிமனித வெளிப்பாடுகளாக ஓவியங்கள் வெளிவருவதால் மக்களுக்கும் ஓவியங்களுக்குமான இடைவெளி நீண்டுவிட்டது. இதுவே புகழேந்தியின் விடை. விடையிலிருந்து அவரது பயணம் ஆரம்பமாகிறது. மிகச் சரியான தருக்கரீதியிலான அடிப்படையிலான விடையிது.

எனவே, இங்கேயொரு புத்தம் புதிய கோட்பாடு பழமையின் வேர்களிலிருந்து கிளம்புகின்றது. வரலாற்று வழிவந்த பகுத்தறிவின் அடிப்படையிலான அறிவியலைத் துணைகொண்ட கோட்பாடிது. பாரதி பாடியதுபோல, பூ மண்டலத்திலே அன்பும் பொறையும் விளங்க, துன்பமும் மிடிமையும் சாவும் நோவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெல்லாம் இன்புற்று வாழ ஓவியங்கள் பயனாக வேண்டும். விடிவை நோக்கி நகரும் மக்கள்; ஆக்கிரமிப்புகளை, அடக்கு முறைகளை உடைத்தெறிய முனையும் மக்கள் பற்றிய பதிவுகள், அதேவேளை இவர்களுக்குத் தேவைப்படும் மனவுரம், தார்மிக ஆதரவு ஆகிய இரு நிலைகளில் ஓவியங்கள் உதவிட வேண்டும். இதுவே மக்களுக்கும் ஓவியங்களுக்குமான இடைவெளியைக் குறுக்க ஒரேயொரு அற்புத வழி. இங்கேதான் புகழேந்தி வருகின்றார். அவர் தஞ்சையின் தும்பத்திக் கோட்டையில் பிறந்ததால் தமிழ்நாட்டுத் தமிழனாக விருப்பதோ, 1983 யூலை இனவழிப்புக் காலத்தின் பின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடெடுத்து ஓவியங்களை வரைந்தார் என்பதோ இங்கு முக்கியமில்லை. அவரது ஓவியமொழி எதுவென்பதே இங்கு கேள்வி. அந்த வகையில் எல்லா வட்டங்களையும் மீறி உடைத்துக்கொண்டு அவரது ("ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகவும் தென்னாப் பிரிக்க நிறவெறிக்கெதிராகவும் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும் இந்தியாவில் நடைபெற்ற சாதிய மத வன்முறைகள் எல்லாவற்றிக் கெதிராகவும் "ஒரு கவிதை சிறுகதை இலக்கியம் போன்றவை எப்படிச் சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல ஓவியமும் அதைச் செய்யமுடியும் என்கிற ஆழமான நம்பிக்கை எனக்குண்டு" "எனக்குத் தனித்துவம் மனிதன்தான். மனிதன் பக்கம் நின்று அவனது நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு அதனை ஓவியமாக மொழியாக்கம் செய்கிறேன். சமூக நோக்கில் மானுடச் சிக்கல்களை ஓவியங்களில் அணுகுவதுதான் எனது செயற்பாடு") ஓவியங்கள் வெளிவருகின்றன. எனவே அவர் "ஓவியப் புரட்சியாளனாக" "கலாபூர்வமான கலகக்காரனாக" மாறிவிட்டார்.

இங்கேதான் ஒரு செய்தி பீறிட்டு வெளிக்கிளம்புகின்றது. மனிதர்கள் இலக்குகளை அடைவதற்காக வழிகளைப் பிறப்பிக்கின்றார்கள். அவ்வழியில் செல்ல பல்வேறு கருவிகளைக் கையிலெடுக்கின்றார்கள். பொதுவில் மனிதர் விடுதலை இலக்கினை அடைய, புரட்சிகர வன்முறைப் பாதையில் ஆயுதங்களைக் கையிலெடுக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் ஆயுதங்களாலும் அது சார்ந்த ஆட்சியாளர் கருத்துக்களாலும் அடக்கப்படுகின்றார்கள். எனவே ஆயுதத்தினை கையிலெடுக்கும் அவர்களுக்குத் தளைகளை அறுத்தல் அடக்குமுறைச் சிந்தனையிலிருந்து விடுபடல் என்பது தொடர்பான கருத்துக் கருவிகளும் அவசியமாகின்றன. எனவே இங்கே அவ்வகையில் ஓவியத்தை ஒரு கருத்தாயுதமாகக் கோட்பாட்டுக் குறியாக புகழேந்தி கொள்கின்றார். ஆனால் அவர்கள் தமக்காக மட்டும் ஓவியங்களை முதன்மைப்படுத்துகின்றார்கள். அல்லது ஓவியத்தை நவீனமயப்படுத்துவதாக எண்ணிக் கொள்கின்றார்கள்.

இங்கேதான் புகழேந்தி பொருந்துகின்றார். அவரது போக்கு மிக வித்தியாசமானது. புரிவதற்கும் அறிவதற்கும் புரட்சிகரமானது. இடைவிடாது தொடரும் மனித அவலத்தின் எல்லையற்ற வலிகளின் நோவுக்கு வழிகாணும் மனித முயற்சியின் தொடரிழையவர். எத்தகைய மேன்மைப் பணியிது? அவரது ஓவியங்கள் 'தமிழ் அடையாளம்' கொண்டவை. அவரது மனிதர்கள் 'சருவதேச அடையாளம்' கொண்டவர்கள். அவரது தமிழ்த் துயரம் பேசும் ஓவியங்கள் சருவதேசத் துயரமும் பேசுகின்றன. அவரது பெண் வடிவங்கள் மிகவும் தமிழ் அடையாளம் கொண்டவை. காலம் காலமான தமிழ்ப் பெண்ணின் துயரம் கோடுகளின் வழி குருதி வழிகின்றது. இது எமது சமூக அடையாளம். சபிக்கப்பட்ட மக்களின் இருண்ட வாழ்வில் ஒளியைப் பிறப்பிக்க எடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களிலும் அவர் இருக்கின்றார்.  அவரது வளையும் கோடுகளும் அழுத்தமான வண்ணங்களும் சீற்றமடையும் மனிதர்களை இனம் காட்டுகின்றன. திலீபனின் கண்ணில் தெரியும் ஏக்கமும் பிரபாகரன் முகத்தின் துயர்தோய்ந்த சாந்தமும் எரிமலையின் கனன்று சிவக்கும் தீ முகங்களாக எமக்குள் மாற்றமடைகின்றன. புகழேந்தி என்னும் மானுடவியல் ஆய்வாளனின் வண்ணக் கலவையின் வேதியல் மாற்றமிது.

எம் மண்ணின் நன்றியையும் மதிப்பையும் அவருக்குத் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலேயே புகழேந்தி வெகு உக்கிரமாகவே கூறினார். ஓவியத்தில் புனிதமா புடலங்காய், கலை நேர்த்தியா கத்திரிக்காய் என்றார். வடிவத்திற்காக மனிதரா? மனிதருக்காக வடிவமா? வண்ணங்களும் கோடுகளும் எனக்குக் கருவிகளே என்றார். இங்கேதான் புகழேந்தி கலகக்காரனாக அடையாளம் காணப்படுகின்றார். புரட்சியாளன் எனப் போற்றப்படுகின்றார். ஏன்? தன் வடிவத் தெரிவை வண்ணக் குழைவை கலைநேர்த்தியை அவர் பல தடவைகளில் எல்லாவற்றையும்விட பெரிய இலக்கிற்காக விட்டுக் கொடுக்கின்றார். உண்மையில் மக்களுக்குச் சேவகம் செய்கின்றன. இதுவொரு இயங்கியல் பரிமாணம்; கலையின் தருக்கம்; ஓவியத்தின் விழுமியம். இங்கே பெர்னாட்சாவின் கூற்றொன்று தொடர்புறுகின்றது. "வாழ்வின் மிகப் பெரிய உண்மையான ஆனந்தம் எது தெரியுமா? உங்களால் தெரிவு செய்யப்பட்ட உன்னத இலட்சியத்திற்காக உங்களைப் பயன்படுத்த அனுமதித்தலாகும். சின்னஞ்சிறு கதைகள் பேசி வாழ்வதை விட மாற்றத்திற்கான இயற்கையின் விதியாக இருப்பதே மேல். நான் இதற்கு முன் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டவனாக இருத்தல் வேண்டும். வாழ்க்கை ஒரு சிறிய மெழுகுவர்த்தியல்ல; எனக்கு அதுவொரு அற்புத ஒளிவிளக்கு. அதனை அடுத்த தலைமுறைக்குப் பாரப்படுத்து முன்னர் என்னால் முடிந்தளவு அதனைப் பிரகாசமாக எரிக்க விரும்புகின்றேன்."

எனவே புகழேந்தி அழகியலை கலை நேர்த்தியைத் தூக்கி வீசிவிடுகின்றார். அவ்வாறு வீசுவதன் வழி அவர் ஓவியங்களை இல்லாது செய்துவிடுகின்றார். உண்மையிலேயே பார்வையாளர் ஒருவர் கூறினார். "ஓவியங்களைக் காணவந்தேன். ஆனால் அவற்றை காணவில்லை." இங்கே புகழேந்தி செய்த புரட்சி, ஓவியத்திற்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியைப் பூச்சியமளவில் சுருக்கி விட்டமைதான். உண்மையில் ஓவியங்கள் வரையாத ஓவியர் அவர். அழகியலிற்கு அவர் அடிமையாகவில்லை. அதனை அவர் அடிமைப்படுத்திவிட்டார்.

ஆனால், புகழேந்தி விரும்பினாலென்ன; விரும்பா விட்டாலென்ன; அவரது உக்கிர ஓவியங்களில் கூட கலை நேர்த்தியை வடிவமைதியைக் காண்கின்றோம். பழமையின் வேர்களில்  புதுமையின் தளிர்கள்; நவீன ஓவியத்தில் மிகப் பழமையான மனிதத்துயர்; நவீனத்துவ ஓவியத் தாக்கத்திற்கு அவர் உட்பட்டிருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு அவர் எடுக்கும் முயற்சி, மக்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகப் பரிசோதனைகளை அரூப வடிவங்களைத் தவிர்த்தாலும் அழகியலைத் தவிர்க்காத பண்பு இவை யாவும் அவர் ஓவிய மனதின் வெளிப்பாடு. செவ்வி யொன்றிலே அவர் சொல்கின்றார். "நமது பாரம்பரியத்தின் வடிவங்களை ஓவியத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை இருக்கின்றது. அந்த வேலை தொடங்கியும்விட்டது. எதிர்காலத்தில் என்ன வரைய வேண்டும் என்பதையும் நான் வாழுகின்ற சூழலும் காலமும்தான் நிர்ணயிக்க வேண்டும்." புகழேந்தியின் ஓவிய மனிதன் பேசியவை இவை.

எமது விடுதலையின் அரசியலை ஓவியம் வழிப் பேசும் அவருக்கு நாம் செய்யக் கூடியதென்ன? ஆக்கிரமிப்பாளர் கையில் சிக்கி வதைபடும் மனிதத்தை விடுவித்து அன்பாளர் கையில் கொடுத்தலே. இடைவிடாத இப்போராட்டத்தின் இருளகற்றி, உரமூட்டி, வளமூட்டி அவர் தன் ஓவியம் வழி என்றும் எம்மோடு வாழ்வார். இதுவே தமிழீழ நெஞ்சங்களின் உருகிக் கனிந்த தோழமையுணர்வின் வேண்டுகையும் நம்பிக்கையுமாகும்.

. . . . . * . . . . .