ஓவியத்தில் நவீனம் மரபுடன் வேண்டும்

பாரதிபுத்திரன்


தமிழர் கண்ணோட்டம், பிப்ரவரி 2004


எந்த ஒரு கலையாக இருந்தாலும், அதனுடைய வடிவத்தைப் பற்றிப் பேசவேண்டும், அதனுடைய உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசவேண்டும்.

இந்தக் கண்காட்சியில் ஓர் ஓவியத்தைப் பார்க்கும்போது, அந்த ஓவியத்தை விட்டு நகருகின்ற போது, நெஞ்சம் பாதி வெந்துபோகிறது. ஒவ்வொரு ஓவியமாகக் கடந்து வருகின்றபோது, ஏற்படுகின்ற உணர்வுகளும், கொந்தளிப்புகளும் மிகுதியாகிக் கொண்டே வருகின்றன. கடைசியில் நல்லவேளையாக ஒரு நம்பிக்கையையும், சமாதானத்தையும் அமைதியையும் நோக்கிய ஒரு வேண்டுதலையும் ஓவியர் வைத்திருக்கின்றார். என்னைப் பொறுத்தளவில் இந்த ஓவியங்களைப் பார்த்து முடிக்கின்றபோது ஏற்படுகின்ற பேருணர்ச்சி என்னவென்றால் அது ஒரு குற்ற உணர்ச்சி. நாம் வாழ்கின்ற ஒரு மண்ணைப் பற்றி, அது தமிழகமாகட்டும், இந்தியாவாகட்டும், உலகமாகட்டும், அதனுடைய இன்றைய நிலையைப் பற்றி நம் மனதில் ஏற்படுத்துகின்ற இந்த உணர்வுகள் எல்லாம் நம்மைக் குற்றவாளியாக்குகின்றன.

இதனை எல்லாம் ஒவ்வொரு நாளும், செய்தித்தாளிலும், வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டிருக்கின்ற நமக்கு இதிலிருக்கின்ற பொறுப்பு என்ன என்பதுதான் பெரிய வினாவாக எழுதுகிறது. எல்லாம் வெறும் தகவல்களாகக் கடந்துபோய்க் கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மரணங்களும் ஆயிரக்கணக்கான அவங்களும், உதிர்ந்து விழுகின்ற கண்ணீரும், தோண்டி எடுக்கமுடியாத உடல்களும், தகவல்களாகப் போய்க்கொண்டே இருக்கின்றன. இதனைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற எனக்கு அவமானமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை அவமானமாக இருக்கிறது. அந்த அவமானத்தை உணருகிறேன் என்பதைத்தான் இங்கே நான் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

மனிதனாக இருப்பதைப் பற்றியும், மனிதம் என்ன என்பதைப் பற்றியும் நமக்கு ஆயிரக்கணக்கான கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் கடந்து இத்தனை ஆயிரம் கொடூரங்களுக்கு எதிராக நம்மால் ஒரு சொல்லைச் சொல்ல முடிகிறதா? ஒரு செயலை நிகழ்த்த முடிகிறதா? யாராவது ஒருவருக்கு நாம் இதை எடுத்துச் சொல்லி விடமுடிகிறதா என்கின்ற ஓர் ஏக்கம். இவை நம்மைத் தூங்கவிட மறுக்கின்றன. பீஷ்மன் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதைப் போல, படுத்திருக்க வேண்டியிருக்கிறது.

ஒரு குழந்தையை ஒரு தாதியின் கையில் பார்க்கிறோம். அன்னை தெரசாவின் கையில் பார்க்கிறோம், ஓர் அன்னையின் கையில் பார்க்கிறோம். இங்கே ஒரு ஈட்டி முனையில் பார்க்கிறோம். நான் அந்தக் குழந்தையை என்னுடைய குழந்தையாக உணர்ந்து பார்க்கிறேன், பாண்டவர்கள் அய்ந்துபேரும் நிர்க்கதியாக நின்றது போல! பாரதி கொதித்துப் போய்க் கேட்டான். இந்த அய்ந்து பேருடைய மனநிலை என்னவோ, அந்த மனநிலை நமக்கும், இந்த வாழ்க்கையைப் பற்றிய கருத்துமாக இந்தக் கண்காட்சி தருமானால் அது ஓவியர் புகழேந்தியினுடைய வெற்றிதான்.

இதனைக் கடந்து, நான் இதனை ஓர் ஓவியமாக எப்படிப் பார்க்கிறேன் என்பதனைச் சிறு கருத்தாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பல ஓவியங்களுக்குத் தலைப்பு இருக்கிறது. எல்லா ஓவியங்களுக்கும் ஏறக்குறைய கவிதை வரிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் மறந்துவிட்டு நான் இந்த ஓவியத்தைப் பார்த்தால் எனக்கு அது என்ன தருகிறது என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் நான் இவற்றை இப்பொழுதெல்லாம் புகைப்படங்களாகப் பார்க்கிறேன். இந்தக் கொடுமைகள் புகைப் படங்களாக இருக்கின்றன. ஆயிரம் புகைப்படங்களை நான் பார்த்துவிட்டேன். இந்த குசராத்தைப் பற்றி ஆயிரம் செய்திகள் எனக்குத் தெரியும். அதனையும் கடந்து நான் இதனைப் பார்க்கின்றபோது அதற்கு மேலாக ஏதாவது எனக்குக் கிடைக்கிறதா? ஏனென்றால் இது ஒரு கலைவடிவம். ஒரு கலைஞனால் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு. ஆக, அந்தக் கலைஞன் இதனை என்னவாக எனக்குக் கொண்டுவந்து சேர்க்கிறான் என்பதில்தான் இங்கே இருக்கின்ற
இந்த கலை ஊடாட்டம் இருக்கிறது. சமுதாய நிகழ்ச்சியை, நான் பார்ப்பதற்கும் ஒரு கலைஞன் பார்ப்பதற்கும், கலைப்படைப்பாக நான் அதனை உணர்வதற்குமான ஒரு ஊடாட்டம் அதற்குள் இருக்கிறது. அது என்ன என்பதனையும் புரிந்து கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்த வரையில் மூன்று விசயங்கள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. ஒன்று புகழேந்தியின் வண்ணப் பயன்பாடு. மூன்று முதன்மை வண்ணங்களையே பயன்படுத்தியிருக்கிறார். ஒன்று சிவப்பு, இன்னொன்று மஞ்சள், இன்னொன்று கருப்பு. இந்த மூன்றையும் மிக அடிப்படையாக, அவர் எல்லா ஓவியங்களிலும் கூடப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் பயன்படுத்தியிருக்கின்ற முறையைக் கூர்ந்து பார்த்தால் ஒன்று புரிகிறது. இந்த மஞ்சள் என்பதெல்லாம், அப்பாவித் தன்மையைக் கொடுப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறது. பயந்து நடுங்குகின்ற நெஞ்சங்கள், அந்த அச்சத்தை வெளிப்படுத்துகின்ற அந்த முகங்களில் தேங்கி இருக்கின்ற அந்த மஞ்சள் எனக்குள் தருகின்ற அது மயக்கம். அதனைப் பார்க்கப் பார்க்க எனக்குள் வருகின்ற ஒரு சோகம், இப்படிப்பட்ட ஒன்றின் மீது நடக்கின்ற கொடுமை, என்று உணர்கின்ற அந்த உணர்ச்சி, அங்கேதான் புகைப்படத்தைத் தாண்டி புகழேந்தியினுடைய வண்ணப் பயன்பாடு எனக்கு ஓர் ஓவியமாக மனதுக்குள் வருகிறது.

அதற்கும் மேலாகக் குழந்தைகள் ஒரு குறியீட்டு மொழியாக அவர் பயன்படுத்தியிருப்பது. ஆயிரம் குழந்தைகளைப் போட்டு மேலிருந்து வருகின்ற ஓர் அணுகுண்டு. ஏன் இதைச் சாதாரணமாக மக்களைக் கூடக் காட்டியிருக்கலாம், நகரங்களாகக் கூடக் காட்டியிருக்கலாம். ஆனால் ஏன் இந்தக் குழந்தை என்கின்ற விஷயம் குறியீடாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் தலைமுறைகளைக் காட்டுகிறான் இந்தக்கலைஞன் என்கின்ற உணர்ச்சி, துளிர்க்கத் துளிர்க்க வெட்டப்படுகின்ற இந்த மனிதத்தைப் பற்றி எனக்கு இது அவ்வாறு ஒரு கத்தியாக என்னுடைய இதயத்திறகுள் பாய்கிறது.

அதற்கு அடுத்தபடியாக அவருடைய ஆழ்ந்த கோடுகள், அந்தக் கோடுகள் தருகின்ற உணர்ச்சி, இந்த உடல் மொழி, இந்தக் கோட்டினுடைய மொழி, இந்த வண்ணத்தினுடைய மொழி எல்லாம் மிக அழகாக, மிக நேர்த்தியாக, மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒரு முறையில் வெளிவந்திருக்கிறது. ஒவ்வொரு ஓவியத்திலும் இருக்கின்ற, அதை ஆங்கிலத்தில் சொன்னால் action அதில் இருக்கின்ற செயல்தன்மை, அதனுடைய இயக்கம். எனக்கு மாபெரும் நம்பிக்கையை இந்தக் கலைஞனின் மீது ஏற்படுத்துகிறது. என்ன காரணம் என்றால் எப்பொழுதும் நமக்குக் கலையில் இருக்கிற பிரச்சினை ஒன்றுதான், நமக்கு நவீனம் வேண்டும். நவீனம் மரபோடு வேண்டும். அது சமுதாயம் சார்ந்ததாக, மனிதனை உந்துவதாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையை எந்தக் கலைஞன் கையில் எடுக்கிறானோ அவனே எதிர்காலத்திற்குரிய கலைஞன். அவர் இன்னும்கூட குறியீட்டு மொழிகளுக்குப் போக வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

இன்னும் நேரடியாக விசயத்தைச் சொல்லுவதோடு, அதுவும் தேவை, அது ஒருவகையான தேவை. அதையும் தாண்டி, இன்னும் குறியீடுகளுக்கு, இன்னும் வண்ணத்தினுடைய பயன்பாடுகளுக்கு அவர் பயணம் செல்லச் செல்ல இந்த ஓவியம் எத்தகைய சமுதாய நிகழ்ச்சியாக மாறப்போகிறது என்பதை நான் உணர்ந்து கொள்கிறேன்.

. . . . . * . . . . .