'பொடோ' ஓவியம்!

இராம. அய்யப்பன்


இனிய உதயம், பிப்ரவரி 2004


ஜனநாயகம் என்பதற்கான பொருள் ஆட்சியாளர்களுக்கு மறந்துபோனதால் இங்கு வாழும் மக்கள் எப்படியெல்லாம் அதிகார வர்க்கத்தினரால் நசுக்கப்படுகின்றனர் என்பதை கண்காட்சியில், உணர்வு பூர்வமாக விளங்கியிருந்தார். "புகைமூட்டம்" ஓவியக் கண்காட்சியை நடத்திய ஓவியர் புகழேந்தி.

"புகைமூட்டம்" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சி நிச்சயம் அந்தப் பெயருக்குப் பொருத்தமானதே. ஓவியம் என்பது கலை. கவிதை என்பது இலக்கியம். இவை இரண்டையும் இணைத்து ஓவியர் புகழேந்தி கலை இலக்கியமாகக் கையாண்டு இருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. நம்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் நம்மை எப்படியெல்லாம் அடிமைப்படுத்தினார்கள் நமது எழுத்துரிமையும் பேச்சுரிமையும் எவ்வாறு முடக்கப்பட்டன என்பதை ஓவியங்கள் மூலமும் அவற்றில் இடம் பெற்ற கவிதைகள் மூலமும் உணர்வை உசுப்பும் வண்ணம் விளக்கியிருந்தார் புகழேந்தி.

விடுதலைக்கு முன்பும்

பின்பும் இந்தியா

"ரௌலட்டில் தளைத்து"

என்பது கவிதை.

இதற்கான ஓவியத்தில் குடிமகன் ஒருவன் முட்டிப்போட்டு அமர்ந்துள்ளான். அவனது வாய் கட்டப்பட்டுள்ளது. கைகள் இரண்டும் பின்புறமாக வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இது நாம் சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த நிலை.

"மிசாவில் முடக்கி..."

என்பது அடுத்த ஓவியத்திற்கான தலைப்பு. இந்தக் கவிதைக்கான ஓவியம் இந்தியக் குடிமக்கள் சுதந்திரத்திற்குப் பிறகு 'மிசா' சட்டத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை விளக்குகிறது. அப்படத்தில் இந்தியக் குடிமகனின் வாய் கட்டப்பட்டுள்ளது. கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு முதுகு வளைந்த நிலையில் அமர்ந்துள்ளான். 'மிசா' சட்டத்தால் நம் பேச்சுரிமையும் எழுத்துரிமையும் கருத்துரிமையும் நசுக்கப்பட்ட, ஜனநாயகம் சர்வாதிகாரமானதை உணர்வுபூர்வமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது அந்த ஓவியம்.

அடுத்த ஓவியத்தின் தலைப்பு.

"தடாவில் நெரித்து

மிசாவில் முடக்கி..."

அதிகாரவர்க்கம் தங்களுக்கு எதிரிகள் என்று கருதுவோரை முடக்குவதற்காக இந்தச் சட்டத்தை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கின்றனர் என்பதை நெற்றியடியாக விளக்கியுள்ளார். ஓவியத்தில் இடம் பெற்றுள்ள குடிமகனின் வாய், கைகள் கட்டப்பட்டதுடன், முதுகெலும்பும் வளைக்கப்பட்டு முட்டிப்போட்ட நிலையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ளான். இச்சட்டத்தால் தவறு செய்யாதவர்களும் பாதிக்கப்படுவதை உணர்த்தியுள்ளார் ஓவியர் புகழேந்தி.

அடுத்து,

"பொடாவில் வளைத்து...

முடக்கப்படுகிற மனித உரிமை"

சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை ஆகிய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நான்காவது தூணாக விளங்குவது பத்திரிகை. மேற்கண்ட மூன்று தூண்களையும் கண்காணிப்பதும் இதன் முக்கியப்பணி. தவறு நடந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டுவதோடு அவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வது பத்திரிகைத் துறையின் தலையாய கடமை. இக்கடமையைச் செய்வோர்க்கு ஆளுவோர் போடும் தடைதான் "பொடா" சட்டம்.

தீவிரவாதிகளுக்காகவும் சமூக விரோதிகளுக்காகவும் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் மனித உரிமையை எவ்வாறு நசுக்குகிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதற்கான ஓவியத்தின் மனித உரிமையைத் தூக்கிப் பிடிக்கிற இக்காலத்திலும் கூட மனித உரிமை பறிக்கப்படுவதை மிகத்தைரியமாகப் பதிவு செய்துள்ளார். முதுகெலும்பின்றி எவ்வாறு ஒரு மனிதனால் இயங்க முடியும்? ஆகவேதான் இந்த ஓவியத்தில் இடம்பெற்றுள்ள குடிமகனின் வாய். கைகள் கட்டப்பட்டதோடு, முதுகெலும்பும் முடக்கப்பட்டிருப்பதை வண்ணப் பயன்பாடு மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் ஓவியர் புகழேந்தி. மிசா, தடா, பொடா ஆகியவை அடக்குமுறைச் சட்டம் என்பதைப் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

இத்தகைய கொடூரச் செயல்களை எடுத்துரைக்கத் தயங்குகிற சூழ்நிலையில் இருக்கும் பலருக்கு மத்தியில் ஓவியங்கள் மூலமாக மிகத் தைரியமாக உருவாக்கப்பட்ட இந்தப் படைப்புகள் நிச்சயம் பாராட்டத்தக்கவை. சமுதாயச் சிந்தனை அதிகமுள்ள புகழேந்தி மானிடத்துயரங்களை ஓவியங்கள் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி உள்ளார்.

குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் மதவாதிகளின் கொடூரமான செயல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் பிணங்கள் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போல் இருக்கும் துயரமான காட்சியை ஓவியங்களாக்கி அனைவரது மனதிலும் மனிதத்தை வளர்க்க வழிவகை செய்துள்ளார். அதோடு குஜராத் சம்பவத்தை "சுடுகாடு" என்ற தலைப்பில் "எரிக்கப்படுமுன் அடுக்கப்பட்டன மனித விறுகள்" என கவிதையும் புனைந்துள்ளார்.

சாதி, மத, இன வேறுபாடின்றி அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தை முனைப்போடு முன்னிறுத்தி, தன்மானத் தமிழனாக உயர்ந்து நிற்கிறார் ஓவியர் புகழேந்தி. மனிதனின் அடிப்படை உரிமை ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளார். அவருக்குள்ள தீவிரம் நம்மையும் பற்றிக் கொள்கிறது.

புகைமூட்டம் விலக வேண்டும் என வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல், முட்டையில் இருந்து 'சிசு' ஒன்று வெளிவருவது போல் இதற்கெல்லாம் விடிவு உண்டு எனத் தன் ஓவியங்கள் மூலமாக நம்பிக்கை அளித்துள்ளார் ஓவியர் புகழேந்தி.

கலை எனும் ஆயுதத்தைத் தூரிகை மூலம் ஏந்தி தன் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழனான ஓவியர் புகழேந்தி, நம் நாட்டில் நடக்கும் அவல நிலைகளைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், உலக நாடுகளில் நடைபெறும் அவலங்களையும் வேதனையோடு ஓவியங்களாக்கியிருக்கிறார், மனிதநேயன் புகழேந்தி.