புகழேந்தியின் ஓவிய இயக்கம்

கருணாகரன், தமிழீழம்


சிறப்பு மலர் - 2004


பிக்காசோவின் 'குவர்ணிகா'வை அதன் முழு அர்த்தத்தில் புரிந்தது குண்டுகள் எங்களின் மீது விழும்போதே. (அதற்காக குண்டுகள் விழுந்துதான் குவர்ணிகாவை விளங்க வேண்டுமென்றோ குவர்ணிகாவை விளங்குவதற்கு குண்டுகள் விழவேண்டுமென்றோ பொருள் அல்ல) எல்லாம் நொறுங்குண்டுபோன கணங்களில் குவர்ணிகா நினைவில் வந்தது. அப்போது குவர்ணிகாவை பிக்காஸோ எங்களுக்காகவே வரைந்திருந்தாரோ என்று கூடத் தோன்றியது. போரை, பிக்காஸோ உணர்ந்தவிதம்தான் குவர்ணிகாவை இன்று நாங்கள் எங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக உணரக்கூடியதாக்கியிருக்கிறது. பிக்காஸோவினுள் நிகழ்ந்தது மாதிரியான உணர்தளத்திலேதான் தன்னுடைய சிந்தனையாலும் ஓவிய வெளிப்பாடுகளாலும் சர்வதேச மயப்பட்டார்.

புகழேந்தியினுடைய ஓவியங்களின் மையம் விடுதலையிலேயே கருக்கொள்கிறது. அவருடைய எண்ணங்கள் முழுவதும் விடுதலைப் போரொளியை அவாவுகின்றன. அதனால் அவருடைய எல்லா ஓவியங்களும் இந்தப் போரொளிக்கானவையாகவே இருக்கின்றன. விடுதலை சர்வதேச மயப்பட்டது. அடிப்படை ஒன்று. மனிதமேம்பாட்டையும் இயல்பையும் நீதியையும் மையமாகக் கொண்டது.

பெண்விடுதலை, சாதி விடுதலை, இனவிடுதலை, வர்க்க விடுதலை என்று முழுமனித விடுதலையைக் கோருகின்றன புகழேந்தியின் ஓவியங்கள். இந்த விடுதலை எந்தக் குறுகிய பரப்பினுள்ளும் வரையறுக்கப்பட்டதல்ல. அது விரிந்த வெளிதழுவியது. மனித மேம்பாட்டை நோக்கியது; முழுமையானது.

ஒடுக்குமுறைக்கெதிரான போர்க்குணத்தை, புகழேந்தி தன் ஓவியங்களில் ஏற்றி விடுகிறார். அவர் முதலில் ஒடுக்குமுறையை, ஆக்கிரமிப்பை, அடக்குமுறையை, அநீதியை அம்பலப்படுத்துகிறார். மக்களிடையேயான விழிப்புக்கு, பரந்தளவிலுள்ள ஒடுக்கப்படும் மக்களை இணைப்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்துகிறார்.

உதாரணமாக, பெண்ணை இழிவுபடுத்தல், கொடுமைப்படுத்தல், புறக்கணித்தல், பயன்படுத்தல் என்பவற்றைப் பகிரங்கப்படுத்துகிறார் புகழேந்தி. இவ்வாறு பகிரங்கப்படுத்துதல் முதலில் பெண் மீதான வன்முறைக்கெதிரான அடையாளமாகவே அமைகிறது. இதைப் பெண் குறித்த ஓவியங்களில் மிகத்துலக்கமாகக் காணலாம். இதுமாதிரியே சகல அநீதிக்கெதிராகவும் நிகழும் வாழ்வின் கொடுமைப்பதிவுகளாக இருக்கின்றன அவருடைய எல்லா ஓவியங்களும்.

எல்லாவகையான போதனைகளின் பின்பும் யதார்த்தம் சிதைவுற்றதாகவே இருக்கின்றது என்பதற்கான சாட்சியங்களை இந்த ஓவியங்கள் மொழிகின்றன. புகழேந்தியின் கவனமும் இதுதான். எல்லாச் சட்டங்களிற்கும் அப்பால் சட்ட விலகலாக நடக்கின்ற கொடுமைகளையும் அநீதிகளையும் கேவலங்களையும் சாட்சி பூர்வமாக காட்சிப்படுத்துவது அவர் நோக்கம். எவ்வளவுதான் நாகரிகத்தைப் பற்றிப்பேசினாலும் உலகின் பெரும்பாதியும் நாகரிகக் கேட்டால் சிதைவுண்டிருக்கிறது என்பதுதான் புகழேந்தியின் வாதம். அதாவது உண்மை உரைத்தல் என்ற கோட்பாடு.

அமைதி, சமத்துவம், அரவணைப்பு, சனநாயகம், நீதி, மகிழ்ச்சி என்று புனையப்பட்ட மேலுறை உலகிற்கப்பால் எதிர்மறையான விடயங்களே புகழேந்தியை அதிகமாகப் பாதிக்கின்றன. பறிக்கப்பட்ட வாழ்க்கையைச் சீர்படுத்த வேண்டுமென்ற தவிப்பே புகழேந்தியின் சாரம்.

புகழந்திக்கு வரையறைகள் எதுவும் கிடையாது. எல்லைகள் எதுவும் இல்லை. தேசங்களைக் கடந்து காவல்களைக் கடந்து உணர்வில் ஒன்றாதல்தான் அவருடைய பாங்கு. ஆப்பிரிக்காவில் ஒடுக்குமுறை நிகழ்ந்தாலும் புகழேந்தியின் தூரிகை அதை எதிர்க்கும். அசாமில் கொடுமை நிகழ்ந்தால் அதற்கெதிராகவும் அவருடைய தூரிகை நிமிரும். ஈழத்தில் அநீதி நடந்தால் அதற்கெதிராகவும் அவருடைய தூரிகை பேசும்.

கொடுமைகளையும் நீதியின்மையையும் ஒடுக்குமுறையையும் அம்பலப்படுத்தல், பகிரங்கப்படுத்தல் என்ற சாட்சி வழிமுறையை ஒருவகையாகத் தொடரும் புகழேந்தி மறுபக்கத்தில் எழுச்சிகளையும் எழுச்சிக்குரிய ஆளுமைகளையும் இன்னொரு வகையாகப்பதிகிறார்.

புரட்சிக்கு வித்திட்ட கார்ல்மார்க்ஸ், லெனின், நெல்சன் மண்டேலா, மாவோ, பிரபாகரன், பெரியார், மாக்சிம் கார்க்கி என்பவரை ஓவியங்கள் ஆக்கி அவர்களுடைய ஆளுமைப் பதிவை துலக்கியுள்ளது கவனத்திற்குரியது.

இதுவரையிலும் வெளிவந்த உறங்கா நிறங்கள், எரியும் வண்ணங்கள், திசைமுகம், சிதைந்த கூடு, என்ற ஓவியத் தொகுப்புகளில் இதைக் காணலாம். தவிர, புகழேந்தியின் ஓவியக் காட்சிகளும் முக்கியமானவை என்று சொல்லப்படுகிறது. அவற்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை என்றபோதும் புகழேந்தியின் ஓவியக்காட்சி பற்றி வெவ்வேறு ஊடகங்கள் மூலமாகவும் நண்பர்கள் வாயிலாகவும் அறியும்போது அவற்றுக்குத் தனியிடம் உண்டென்பது தெரிகிறது. இப்பொழுது அதிரும் கோடுகள், தூரிகைச் சிறகுகள் என்று இரண்டு ஓவியத் தொகுப்புகள் வந்ததாகத் தெரிகிறது. எனினும் அவற்றை இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லை.

உலகம் முழுவதும் நடக்கின்ற சகல ஒடுக்குமுறைகளையும் சாட்சிப்படுத்தும் விரிந்த தளச்செயற்பாட்டில் மனிதகுலத்தின் மனச்சாட்சியை நோக்கிக் கேள்விகளை எழுப்புவது இன்றைய நாளில் சவால் நிறைந்தது. வணிகமயமான வாழ்க்கை முறையும் அபிலாசைகளும் நிறைந்துவரும் சூழலில் இலட்சியமயப்பட்டு நிற்றல் என்பது சவாலானதே. நடைமுறை வாழ்வில்தான் இந்த அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

புகழேந்தியின் ஓவியங்களில் கடுமை தொனிக்கிறது. வர்ணங்களிலும் உருவங்களிலும்கூட கடுமைத்தன்மையுண்டு. போராட்டம், எதிர்ப்படையாளம் என்று வரும்போது தவிர்க்க முடியாமல் அதில் கடுமைதொனிக்கும். எதிர்கொள்ளல் என்பது எப்போதும் இலகுவானதல்ல. அது சவால்கள் நிறைந்தது. எப்போதும் ஒடுக்குமுறை, வலிமையுள்ள தரப்பாலேயே பிரயோகிக்கப்படுகிறது. அதிகாரம், பொருளாதாரவளம், சமூக மேல்நிலை என்று பல நிலையிலும் இந்த வலிமை ஒடுக்குமுறையாளர்களுக்குண்டு. ஆனால் ஒடுக்கப்படும் தரப்புக்கு இந்த வளங்களும் அம்சங்களும் இருப்பதில்லை. இதனால் அது தன்னுடைய இருப்புக்கும் இருப்புக்குச் சவாலான விடயங்களுக்குமாகக் கடுமையாகவே தன்னை அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தக் கடுமையைப் பலரும் பலவிதமாக வியாக்கியானப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மாதிரியான போது தவிர்க்க முடியாமல் இதில் தீவிரத்தன்மை, கடுமை, சீரியஸ் என்பன வந்துவிடுகிடுகின்றன.

இரத்தமும் கண்ணீரும் வலியும் துயரும் பீறிடும் வாழ்வு கடுமையன்றி வேறென்ன? தீயும் புகையும் ஓலமும் அவலமும் சூழ்ந்த வாழ்க்கை கடுமையென்றில்லாமல் வேறெப்படியிருக்கும்.

கடுமைக்குரிய கோடுகளும் நிறங்களும் அவற்றுக்கேயுரிய இயல்போடு அமைந்திருக்கின்றன. செம்மஞ்சள், கருஞ்சிவப்பு, மண்ணின் நிறம் கலந்த ஒருவகை வெளிப்பாட்டை இவற்றில் பார்க்க முடியும்.

புகழேந்தியின் ஓவியங்களுடன் நெருக்கமாகக் கூடியவர்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பர். விடுதலைக்காகப் போராடும் சனங்களிடம் இந்த ஓவியங்கள் புரிந்துகொள்ளப்படும். புகழேந்தி, எப்போதும் இறுக்கமான தொனியோடுதான் ஓவியங்களை உருவாக்குகிறார், என்றொரு அபிப்பிராயத்தை நண்பரொருவர் ஒருதடவை சொன்னார். புகழேந்தி பயன்படுத்தும் வர்ணங்களிலும் இந்த மாதிரியான ஒரே இயல்பைத் தொடர்ந்தும் அவதானிக்கலாம் என்றுமவர் சொன்னார்.

வெளிப்பாட்டின் வடிவம் குறித்த அபிப்பிராயம் பற்றி மட்டுமே அவர் கூறியது. வெளிப்பாட்டு வடிவத்தைப் பொறுத்து ஓர் ஓவியர் தன் பாணியைத் தனி அடையாளமாக அவர் தொடர்ந்தும் ஒன்றை, அல்லது ஒரே வகையைப் பேணலாம். அல்லது வெவ்வேறு வடிவங்களாகப் புதிது புதிதாக வடிவப் பரிசோதனை செய்யலாம். வேறுவேறு வடிவங்களில் அவற்றின் பொருளுக்கேற்ப வரையலாம். இவையெல்லாம் ஓர் ஓவியனின் சுயாதீனத்தைப் பொறுத்தது. புகழேந்தியின் சுயாதீனத்தை அவருடைய ஓவியங்கள் சாதிக்கும் வெற்றியே நிரூபிக்கும்.

ஈழப்பிரச்சினை அல்லது ஈழப்போராட்டம் குறித்த அக்கறையோடு உணர்வுபூர்வமாகத் தமிழகத்திலுள்ள ஓவியர்கள் சிலர் செயற்பட்டிருக்கிறார்கள். வீர சந்தானம், ட்ராஸ்கி மருது, அரஸ், புகழேந்தி ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். வீரசந்தானம் எண்பதுகளில் ஈழப்போராட்டம் தொடர்பான ஓவியக்காட்சிகளைத் தமிழகத்தில் நிகழ்த்தியிருக்கிறார். அன்றைய நாளின் ஈழ நிலைமைகள் குறித்த பதிவுகளாக, முகில்களின்மீது நெருப்பு என்றொரு ஓவியத் தொகுப்பையும் அப்போது சந்தானம் வெளியிட்டிருந்தார். தவிர கோட்டோவியங்கள் மூலமாகப் பல புத்தகங்கள், நூல்களில் ஈழம் மீதான தன்னுணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார் சந்தானம்.

ட்ராஸ்கி மருதுவின் செயற்பாடுகளும் இன்னொரு தளத்தில் முக்கியமானவையாக இருக்கின்றன. மருதுவின் பதிவுகளும் வெளிப்பாடுகளும் நிறையவுண்டு. அவருடைய ஓவியங்களுடன் தமிழீழ மக்கள் நிறையப் பரிச்சயத்துடனிருக்கிறார்கள்.

அரஸ் குறைந்ததாகவே செய்திருந்தாலும் அவரையும் இந்தவகையில் அறிந்திருக்கிறார்கள் ஈழமக்கள்.

புகழேந்தி இந்தவகையில் கூடுதலும் தொடர்ச்சியுமுள்ள ஓவியர். ஓவியக்காட்சிகள் மூலமாக இந்தியாவிலும் பிறநாடுகளிலும் ஈழப்பிரச்சினையைப் பேசியவர். கவனத்தை ஏற்படுத்தியவர். போராட்டத்தின் நியாயத்தைச் சொல்லியவர் என்றவகையில் புகழேந்தி இன்னொரு படி மேலே நிற்கிறார். அவர் ஓவியம் படைத்தல், அவற்றைக் காட்சிப்படுத்தல், ஆவணப்படுத்தல், தொகுத்தல், நூலாக்குதல் என்று பரந்த தளத்தில் தொடர் செயற்பாட்டில் தீவிரமாக இயங்கிவருகிறார். இதைப் புகழேந்தியின் ஓவிய இயக்கம் என்று சொல்லலாமா என்றுகூடத் தோன்றுகிறது. புதிய இளையதலைமுறையினரை இந்த இயக்கத்துடன் இணைப்பதில்தான் அவருடைய இனிமேலான கவனம் இருக்கும் என நம்புகிறேன்.
புகழேந்தி எப்போதும் தொடரியக்கத்தை விரும்புபவர் என்பதால் இதுதான் இவருடைய வழிமுறையாகவும் இருக்கும். அது தவிர்க்கமுடியாததும் கூட.

அவருடைய ஓவியங்களுக்கும் எண்ணங்களுக்குமிடையில் இடைவெளியில்லை என்பதால் இதுதான் நியதியாகும்.