வண்ணப் பூச்சு அல்ல! வண்ண வீச்சு!

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்


தமிழர் கண்ணோட்டம், மார்ச் - ஏப்ரல் 2000


அன்று வாழ்ந்த ஓவியனைப் போல் இந்த உலகத்தில் சிலவற்றைத் தீட்ட, இன்றுள்ள ஓவியர்களுக்கு உரிமையில்லை. அழகான மலர்கள், பறவைகள், மரங்கள், அழகான இயற்கைக் காட்சிகள், ஆகியவற்றைக் கொண்ட உலகம் இன்று இல்லை. மரங்கள் எல்லாம் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. உட்கார கிளைகள் இல்லாமல் வானத்தை அண்ணாந்து பார்த்து ஏக்கத்தோடு வட்டமிடுகின்றன பறவைகள்.

நல்ல கொழுத்த சதைப்பிடிப்புள்ள மோனசலிசாவை அன்று லியானார்டோ டா வின்சி வரைந்து விட்டுப் போயிருக்கலாம். இன்று அப்படிக் கொழுத்த சதைப்பிடிப்புள்ள, பெண்ணை வரைய ஓவியனுக்கு உரிமையில்லை. இன்று பார்க்கறீர்கள், சோமாலியாவில் எலும்பும் தோலுமாக, பிள்ளைக்குப் பால் கொடுக்கக் கூட முடியாமல், வற்றிப்போன மார்போடு இருக்கிறாள் அந்தப்பெண். அவள் வாழுகின்ற காலத்தில் மோனலிசாவை வரைய ஓவியனுக்கு உரிமையில்லை. அப்படி வரைகிறவன் ஓவியனாக இருக்க முடியாது.

உலகத்தில் பெண்கள், வன்முறையாளர்களால், பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, வீதிகளில் வீசப்படுகின்ற, எரியூட்டப்படுகின்ற, காலத்தில் அருமையான அழகான பெண்களின் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருக்க முடியாது. அப்படிப்பட்ட அழகிய ஓவியங்களுக்கு இன்று தேவையில்லை.

இந்த அடிப்படையில்தான் நான் ஓவியர் புகழேந்தியைப் பார்க்கிறேன். அவரது தூரிகையில் வடிவெடுத்த இருபதாம் நூற்றாண்டைப் பார்க்கிறேன்.

ஒடுக்குமுறைகளின் நூற்றாண்டாக, ஒடுக்குமுறைகளை எதிர்த்து மிதிக்கின்ற நூற்றாண்டாக இருபதாம் நூற்றாண்டைப் புகழேந்தி பார்க்கிறார்.

வல்லாண்மை மிக்க நாடுகள் தங்களுக்குள் மோதிக்கொண்ட நிகழ்வுகள், அவை சின்னஞ்சிறு நாடுகள் மீது பாய்ந்து அந்த மக்களை ஒடுக்கிய நேரத்தில் வெடித்த உணர்வுகள், வியட்நாமின் மைலாய் காட்சிகள், புகழேந்தியின் மனத்திரையில் விரிகின்றன.

அடிமைப்படுத்தப்பட்ட நாட்டு மக்கள் விடுதலைக்காய் மூர்க்கமாய் எழுந்த காட்சியைக் காட்ட சுபாஸ் சந்திரபோஸ், காந்தி போன்றவர்களை அவர் படைத்திருக்கிறார். அதேபோன்று ஒரு தேசிய இனம், இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்கும்போது அதை எதிர்ததுப் போரிடுகின்ற குர்திஷ் மக்கள் போராட்டம், சிங்கள இனவெறியின் கொலை வெறியை எதிர்த்து, களத்தில் நிமிர்ந்து நின்று வீரநடை போடுகின்ற மாவீரன் தலைவர் பிரபாகரனின் ஓவியம், சிந்தையைக் கவர்கின்றன.

கருப்பன், வெள்ளையன் என்ற நிறஒடுக்குமுறை 20 ஆம் நூற்றாண்டில் தலை விரித்தாடிற்று. அதைக் காலடியில் போட்டு மிதித்து, அதை உடைத்து வெளியே வந்த கருப்பு வெளிச்சமாக நெல்சன் மண்டேலாவை வரைந்திருக்கிறார்.

அதேபோன்று, தனித்தனி நாடுகளில் அல்லாமல் உலகம் அனைத்திலும் ஒடுக்கப்பட்டு ஆண்களின் கால்களில் மிதிபட்ட பெண்களின் எழுச்சியை ஓர் ஓவியத்தில் காட்டியிருக்கிறார்.

ஓவியர் புகழேந்தியின் 20 ஆம் நூற்றாண்டு, ஒடுக்குமுறைகளை எதிர்த்து நிமிர்ந்த நூற்றாண்டு. இங்கே நாம் கலைஞனைப் பார்க்க முடிகிறது. ஒரு கலைஞன் அப்படித்தான் இருப்பான். இன்று இருக்கிற உலகத்தில் நிலவை ஓவியம் தீட்ட எந்த ஓவியனுக்கும் உரிமையில்லை. ஆம்ஸ்ட்ராங்கின் பாதச்சுவட்டை படமாக்குவதற்காக நிலவையும் பதிவு செய்ய நேர்ந்தது புகழேந்திக்கு. பூவை படமாக்க எந்த ஓவியனுக்கும் இன்று உரிமையில்லை. சிங்கள இனவெறிக்குப் பலியாகி, புதைக்கப்பட்ட மனிதர்கள் விதைக்கப்பட்ட விதையாக முளைத்து செடியாகிப் பூத்துள்ள மனிதப் பூக்களை வரைந்திருக்கிறார் புகழேந்தி.

போர்க்குணம் என்றைக்கும் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாகும். உலகம் தோன்றிய காலம் முதல் அறத்திற்கு எதிராக கயமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. அவற்றை எதிர்நோக்கும் போர்க்குணம் மாந்தனுக்கு தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஓவியர்கள் காலம்காலமாக, சங்க காலம் தொடங்கி இந்தப் போர்க்குணத்தை ஓவியங்களிலும், சிற்பங்களிலும் பாதுகாத்து வந்தார்கள். குறிஞ்சி நிலத்தெய்வமான முருகன் கையில் வேலைக் கொடுத்தார்கள். அது பின்னர் நடுத்தர மற்றும் மேல்மட்ட மக்களின் தெய்வமாயிற்று. ஆனால் கீழே கிடந்தானே, ஒடுக்கப்பட்டு மிதிக்கப்பட்டு ஒரு தமிழன், உண்மைத் தமிழன் பழைய தமிழன், அந்த வழிவழி வந்த பண்பாடு கெடாமல் அவனுடைய திருத்தெய்வங்கள் சினத்தைக் கொப்பளிக்கின்ற நீண்ட கண்களோடு காட்சியளிக்கின்றன. அவனுடைய பெண் தெய்வம் கோபக்கனல்  கக்கும் பெரிய கண்களுடன் முண்டகக்கண்ணி அம்மனாகக் காட்சியளிக்கிறாள். டாலி என்றும் பிக்காஸோ என்றும் நவீன ஓவியங்கள் குறித்து அவை அங்கே தோன்றியதாக பேசுகிறார்களே. அவை எல்லாம் நம்மிடம் தோன்றியவைதான்.

ஒன்றை மிகைப்படுத்துவது மிகையியல்பியல்(Surrealism). ஒரு விலங்குத் தலையோடு மனித உருவம், பத்து கைகளோடு காளி, என வரையப்பட்ட கடவுளர்களின் ஓவியங்கள் இந்த வகைப்பட்டவை. இத்தனை கைகள் எதற்கு என்று கேட்கலாம். கொடுமைகளை ஒழிக்க அத்தனை வலிமை 

தேவை என்பதற்கான குறியீடு அது. நான் இங்கு கடவுள் பற்றியும் சமயம் பற்றியும் பேச வரவில்லை. ஓர் ஓவியன் ஒரு கருவைக் கொடுக்கும்போது என்ன சிந்தித்தான் என்று சொல்ல வருகிறேன். ஒரு கருப்பனுக்கு சாமி வடிவம் கொடுத்து அவன் கையில் ஒரு கத்தியைக் கொடுத்து வைத்தார்கள். அந்தப் போர்க்குணம் காலம் காலமாக இந்த மண்ணில் இருந்து வருகிறது.

புகழேந்தியின் ஓவியங்களில் வேல் போன்ற ஆயுதங்களைப் பார்க்காவிட்டாலும் அவற்றில் போர்க்குணத்தைப் பார்க்கிறீர்கள். தஞ்சையில் உட்கார்ந்து கொண்டு தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் உற்றுப்பார்த்திருக்கிறார். பக்கத்தில் ஈழத்தில் 70,000 தமிழர்கள் சிங்களர் களால் கொல்லப்பட்டு, புதையுண்டு போயிருக்கிறார்கள். 2000 பெண்களுக்கு மேல் கற்பழிக்கப்பட்டு வீசி எறியப்பப்டிருக்கிறார்கள். தமிழர் இரத்தம் நீரோடையாகப் பாய்கிறது. புகழேந்தி, வெளியுலகக் கொடுமைகளைப் பார்த்து வரைந்ததைப்போல, வெளியுலகில் இருந்து ஈழக் கொடுமையைப் பார்த்து யாராவது வரைந்திருக்கிறார்களா? இதை நான் எண்ணிப் பார்த்ததுண்டு; பெருமூச்சு விட்டதுண்டு.

ஆனால் ஓர் ஆறுதல், அமெரிக்காவில் இருந்து வருகிற 'டைம்' இதழ் இன்று பிரபாகரன் அவர்களைப் போல்பாட் என்றும் காட்டுமிராண்டி என்றும் பயங்கரவாதி என்றும் வக்கிரமாக வர்ணித்து வருகின்ற 'இந்து'ப் பத்திரிக்கையைவிட, உலக செல்வாக்கில் குறையாத ஓர் இதழ். அந்த இதழை நான் ஆதரிக்கிறவன் அல்ல. அது அமெரிக்காவின் ஏடு. அதன் கொள்கைகள் வேறு என்பது எனக்குத் தெரியும்.

இருந்தாலும் அந்த 'டைம்' இதழ் 20 ஆம் நூற்றாண்டைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்து, கிழக்காசியாவின் தலைசிறந்த தலைவர்கள் வரிசையில் காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், ஹோசிமின், மாசேதுங் என்று அடுக்கிக் கொண்டே வந்து பிரபாகரன் பெயரையும் அவர்கள் வரிசையில் சேர்த்துக் கிழக்காசியாவின் மிகப் பெரும் தலைவன் என்று பிரபாரனை அறிவித்துள்ளது. உண்மையிலேயே நெஞ்சில் பெருமை பூக்கிறது.

அமெரிக்க நாடு விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் அமைப்பைத் தடை செய்துள்ளது. ஆனால் அந்த நாட்டில் இருந்து வரும் ஓர் இதழ், புலிகளின் தலைவரைக் கிழக்காசியாவின் மிகப்பெரிய தலைவர் என்று அறிவித்திருக்கிறது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழன் உலகத்தின் கண்களில் பட்டிருக்கிறான். அது நமக்குப் பெருமை. அந்தத் தலைவனை பிரபாகரனை ஓவியர் புகழேந்தி வரைந்திருக்கிறார். அவரை மனமாரப் பாராட்டுகிறேன்.

வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதில்கூட, ஒரு போர்க்குணம் தெரிகிறது புகழேந்தியிடம். பலரையும் கவரும் பச்சை வண்ணத்தை, மனோரம்மியமான நீல வண்ணத்தை அதிகம் பயன்படுத்தவில்லை அவர். சோகத்தை வெளிப்படுத்தும் கருப்பு, போர்க்குணத்தை வெளிப்படுத்தும் சிவப்பு ஆகிய வண்ணங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
எல்லோரும் வண்ணத்தைப் பூசுகிறார்கள். புகழேந்தி வண்ணத்தை வீசுகிறார்.