சிதையாத நேயத்துடன் ஒரு சிதைந்த கூடு

அ. குமரேசன்


தீக்கதிர் வண்ணக்கதிர், 4.3.2001


குஜராத் பூகம்பம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மனதை உலுக்கும் புகைப்படங்களும் தொலைக்காட்சிப் பதிவுகளும் உயிருடன் புதைந்தவர்களின் சோகங்களையும் மீண்டவர்களின் அவலங்களையும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இந்தச் செய்திகளும் காட்சிகளும் ஒரு கலைஞனின் மனதைக் குடைகிறபோது நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் உன்னதக் கலைப்படைப்பாகப் பரிணாமம் கொள்கின்றன.

ஓவியர் புகழேந்தி "சிதைந்த கூடு" என்ற தலைப்பில் உருவாக்கிய ஓவியக் கண்காட்சி அத்தகையதொரு பரிணாமம்தான்.

நீண்ட கால வடு என்பதன் வெளிப்பாடு போல ஒரே நீண்ட ஓவியமாக 150 அடி நீளத் திரையில் அந்தத்  தொடர் ஓவியம் படைக்கப்பட்டிருக்கிறது. பல பத்திரிகைகளின் வெளியான பூகம்பம் காட்சிகள் கூடப் பல வண்ணப்படங்களாக இருக்க புகழேந்தி கறுப்பு வெள்ளை வண்ணங்களை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார். அது ஓர் ஆழமான உணர்வை ஏற்படுத்துகிறது. குஜராத் பூகம்பம் குறித்து இவ்வாறு 150 அடி நீள ஓவியம் என்பது இந்தியாவில் இதுவே முதல்முறை.

யதார்த்த வடிவம், ஊக வடிவம் இரண்டும் கலந்துள்ள அந்த ஓவியம் புஜ் உள்ளிட்ட இடங்களின் கட்டிட இடிபாடுகள், உள்ளே சிக்கிச் சிதைந்த உடல்கள், மீட்புக்காக ஏங்கும் விழிகள், தப்பித்த பின் உதவிக்காக ஓடும் கால்கள் எனப் பல காட்சிகளை நினைவூட்டுகிறது. ஓரிடத்தில் இடுபாட்டுக் குவியலிலிருந்து ஒரு மாட்டின் கால்கள் மட்டும் வெளியே தெரியும் காட்சி அந்தத் துயர உணர்வுக்கு அழுத்தம் சேர்க்கிறது.

எனினும் ஒரு இடத்தில் கூட குழந்தைகள் நசுங்கிக் கிடந்த காட்சி இல்லை. "அவ்வாறு காட்டுவதைத் திட்டமிட்டே தவிர்த்தேன். மாறாகக் காப்பாற்றப்பட்ட குழந்தையைத்தான் ஓவியத்தில் கொண்டு வந்தேன்."

"இத்தனைத் தகர்விலும் மனிதம் துளிர்ப்பதன் குறியீடாகக் கடைசியில் நிமிர்ந்து நிற்கும் குழந்தையையும் அருகில் ஒரு செடியின் துளிர்ப்பையும் காட்டியிருக்கிறேன்" என்றார் புகழ்.
இந்த நீண்ட ஓவியத்துக்கான மாதிரிகளாக சிறிய தாள்களில் தனித்தனி காட்சிகளாக வரைந்து துண்டு ஓவியங்களையும் காட்சிக்கு வைத்திருக்கிறார். இவற்றை வரைய இரண்டு நாட்களும் முழு ஓவியத்தை முடிக்க மூன்று நாட்களும் எடுத்துக் கொண்டாராம்.
ஓவியத்துக்காக நீளமான காகிதம் வாங்கி, அதன்மேல் பெவிகால் பூசி, காகிதத்துக்கு கான்வாஸ் துணி போன்ற வலுவைச் சேர்த்து அதன் மீது கிரேயான் மற்றும் கரித்தூள் கொண்டு வரைந்திருக்கிறார்.

புகழேந்தியின் முந்தைய கண்காட்சிகளைப் போலவே இதிலும் ஆங்காங்கே கவிதைகள் வைக்கப்பட்டிருந்தன. ஓவியத்தில் உள்ள காட்சிக்கும் அப்பால் சென்று சிந்திக்க வைப்பதாக அந்தக் கவிதைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பாதிக்கப்பட்ட மற்ற அனைவருக்காகவும் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் தொழுகை நடத்துவதாக ஒரு காட்சி. அதையொட்டி வைக்கப்பட்டிருந்த கவிதை

"மீட்கப்பட்டவர்களின்

இதயங்கள் எல்லாம்

மீண்டும் துடித்தன

மதம் அறியாத மனித ரத்தத்தில்"

இன்குலாப்பின் இக்கவிதை அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பேதமின்றி ரத்ததானம் வழங்கிய செய்தியை நினைவு கூர்கிறது. அதேநேரத்தில் குஜராத் அரசு மற்றும் காவிப் பரிவாரத்தினர் நிவாரணப் பணிகளில் கூட மதப்பாகுபாட்டைப் புகுத்திய அநாகரீகமும் அந்த ஓவியத்திலோ, கவிதையிலோ சொல்லப்படாமலே நினைவுக்கு வந்தது. இவ்வாறு வரம்புக்கு அப்பால் சிந்தனையை விரிக்கச் செய்வதுதானே ஒரு நல்ல கதை. கவிதைப் படைப்பின் வெற்றி. இன்குலாப்புடன், காசி ஆனந்தன், பா. செயப்பிரகாசம் ஆகியோரும் கவிதைகளை வழங்கியிருந்தனர்.

பார்வையாளர்கள் தமது கருத்தை எழுத ஒரு நோட்டுப் புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அருகிலேயே குஜராத் மக்களுக்கு உதவ நிதிவேண்டி ஒரு உண்டியல் பெட்டியும், ஓவியத்தைப் பார்த்து முடித்தவர்கள் ஏற்கெனவே தமது பகுதிகளில் உதவி வழங்கியவர்களும்கூட, அதில் தம்மால் இயன்ற பணத்தை சந்தேகிக்காமல் போட்டனர்.

கும்பகோணம் அரசினர் கலைத்தொழில் கல்லூரியில் ஓவியப் பேராசியராகப் பணிப்புரியும் புகழேந்தி வரைந்த சிதைந்த கூட்டினைப் பார்த்தவர்கள் தமது மன உணர்வுகளை அந்த நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்திருந்தனர். பூகம்ப இடிபாட்டில் புதைந்துபோகாத மனித நேயத்தை அந்தக் கருத்துகள் அடையாளம் காட்டின. ஓர் விஸ்வ ஹிந்து பரிசத் உறுப்பினர் கூட, அந்த இடத்தில் தமது மதவெறியைக் காட்டி, முரண்பட்டு நிற்கமுடியாதவராக ஓவியத்தைப் பொதுவாகப் பாராட்டி எழுதியிருந்தார்.

ஏ ஹபீப் என்பவர் எழுதியிருந்தது: "தமிழக அரசு இந்த ஓவியத்தைத் தானே எடுத்துக் கொண்டு அரசு அருங்காட்சியத்தில் நிரந்தரக் காட்சியாக்க வேண்டும்."

பேராசிரியர் சரஸ்வதி எழுதியிருந்த வரிகளில் ஒரு  தாய்மையின் பதைப்பு வெளிப்பட்டது. "இதுபோன்ற ஓவியக் கண்காட்சிகளை எதிர்காலத்தில் நடத்துகின்ற வாய்ப்புகள் ஏற்படவே கூடாது."