உண்மையை வெளிப்படுத்தும் 'புகைமூட்டம்'

அ. குமரேசன்


தீக்கதிர், வண்ணக்கதிர் 11.01.2004


ஆதி மனிதர்கள் குகைகளில் வாழ்ந்த காலத்தில் தமது கிரகிப்புகளையும் உணர்வுகளையும் பாறைகளில் ஓவியங்களாகப் பதிவு செய்தார்கள் என்பது வரலாறு. இன்று மதத்தின் பெயரால் வரலாற்றை மீண்டும் குகை மனிதர்களின் காலத்துக்கு விரட்டச் சிலர் கிளம்பியிருக்கிறபோது அதற்கு எதிரான உணர்வுகளும் கிரகிப்புகளும் ஓவியங்களாகப் பதிவு பெற்றுள்ளன. சங்பரிவாரங்களின் சூலாயுதங்களுக்கு எதிராகத் தூரிகை ஆயுதம் எடுத்திருப்பவர் கு. புகழேந்தி.

முன்னணி ஓவியக் கலைஞரும், குடந்தை ஓவியக் கல்லூரி ஆசிரியருமான புகழேந்தியின் புகை மூட்டம் ஓவியக் கண்காட்சி அண்மையில் சென்னையில் ஒரு வார காலம் நடந்தது. அந்த ஓவியங்கள் பொத்தாம் பொதுவாக நல்லிணக்கம், ரசனை என்றெல்லாம் சொல்லாமல், நேரடியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவை மீண்டும் உலக அரங்கில் தலைகுனிய வைத்த குஜராத் படுகொலைகள் பற்றிய ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இது ஒரு வழிபாட்டுச் சின்னம், அவ்வளவுதான். என்று சொல்லிக்கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., வானரப் படைகள் ஊருக்கு ஊர் திரிசூலங்களை விநியோகித்து வருகின்றன. உண்மையான திரிசூலங்கள் ஆளுயரத்துக்கும் மேலிருக்க, இவர்கள் விநியோகிப்பவை கையடக்க அளவுதான். "வீடுகளில் பூசை அறைகளில் வைத்து வணங்குவதற்குத் தோதாக" என்று அந்தச் சிறிய அளவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்ட கலவரங்களின்போது எடுத்துச் சென்று "எதிரிகள்" என்று காட்டப்படுபவர்களைக் குத்திக் கிழிப்பதற்கும் கொன்று குவிப்பதற்கும் வசதியாகவே கையடக்கச் சூலாயுதங்கள் விநியோகிக்கப்படுகின்றன. புகை மூட்டம் ஓவியங்கள் அந்தச் சிறிய திரிசூலங்களின் பக்தி மூட்டத்தைக் கலைத்து உண்மை நோக்கத்தை வெளிச்சப்படுத்துவதாகத் தொடங்குகின்றன.

மூட்டிவிடப்பட்ட மதவெறி நெருப்புக்கு மனிதர்கள் விறகுக் கட்டைகளாக மாற்றப்பட்டதையும் கர்ப்பிணியின் வயிறு கிழித்து கத்தியால் குத்தி எடுக்கப்பட்ட ஆப்பிள் பழம்போல் திரிசூலத்தில் குத்தி சிசு எடுக்கப்பட்டதையும், வாக்காளர் பட்டியல்களும் தொலைபேசி முகவரிப் புத்தகங்களும், சிறுபான்மையினர் வீடுகளைக் கண்டுபிடித்து குறிவைத்துத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதையும் காட்சிப்படுத்துகிற அந்த ஓவியங்கள் நெஞ்சம் பதறச் செய்கின்றன. சிறுபான்மையினப் பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட மூர்க்கத்தின் அடையாளமாகவும் திரிசூலத்தை ஓர் ஓவியம் சித்தரிக்கிறது.

ஒரு சோதனைக் கூடமாக குஜராத் மாற்றப்பட்டதன் நோக்கம் என்ன? மனு(அ) தர்மத்தையே மத தர்மமாக நிலைநாட்டுவது தானே? தமிழகத்தின் திண்ணியத்தில், அந்த மனுவால் சண்டாளர்களாக வக்கரிக்கப்பட்ட தலித்துக்கு மனித மலம் உணவாக்கப்பட்ட கொடுமையைச் சித்தரிக்கும் ஓர் ஓவியம் அந்த நவீன வர்ணாசிரம நோக்கத்தையும் இந்துத்துவாப் பிண்டங்களின் பாரதப் பரவலையும் உணர்த்துகிறது. சாதிய ஆதிக்கத் திமிர் தலித் மக்களை எழுந்திருக்கவே முடியாமல் அடிமை விலங்குபோல் விலங்கிடத் துடிப்பதை, அடுத்தடுத்த ஓவியங்கள் காட்டுகின்றன.

இதற்கெல்லாம் இன்னொரு பின்னணி உண்டே? அதுதான் போலிச் சுதேசிகளின் உண்மை எஜமானனாகிய அமெரிக்க ஏகாதிபத்தியம்! தனக்குக் கட்டுப்படவும், கப்பம் செலுத்தவும் மறுத்த இராக் மீது புஷ் நிர்வாகம் செலுத்திய ஏவுகணைக் குண்டுகள், பாக்தாத்தின் பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்களை அழித்ததோடு புதிய தலைமுறைத் தளிர்களையும் சின்னாபின்னப்படுத்தின. புகழேந்தியின் தூரிகைக் கணை அந்த ஏவுகணையின் மீதும் பாய்கிறது. திரிசூலம் ஏவுகணையாய், பொக்ரான் அணுகுண்டாய் மாறிய பரிணாம வளர்ச்சியை ஓவியங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு அடுத்த ஓவியங்கள் இந்திய நிலத்தடி நீரை கோக் பெப்சி பாட்டில்கள் உறிஞ்சிக்கொள்ள அனுமதித்த சரணாகதியையும் உள்ளூர் மக்களின் தாகம் தணிக்கத் தண்ணீர் கிடைக்காமல் நிலங்கள் வறண்டு வெடித்துக் கிடக்கும் அவலத்தையும் காட்டுகின்றன.

குஜராத் கொலைகள் முதல் பாக்தாத்தில் சிதைக்கப்பட்ட சிறுவர்களின் உடல்கள் வரையில் பத்திரிகைகளில் புகைப்படங்களாகப் பார்த்த காட்சிகள்தாம். ஆனால் அந்தப் புகைப்படங்கள் தகவல்களை மட்டுமே கூறின; இந்த ஓவியங்களோ தகவல்களின் ஆழம் சென்று செய்தி சொல்கின்றன. புகழேந்தி கையாண்டுள்ள வண்ணங்களும் தூரிகை நுட்பங்களும் அவ்வாறு செய்தி சொல்லப்பயன்பட்டிருக்கின்றன.

அவற்றின் கலைத்தன்மை எப்படி இருக்கிறது? அழகியல் கூறுகளால் இந்த ஓவியங்களின் உள்ளடக்கம் தெளிவாகிறதா அல்லது அந்த உள்ளடக்கத்தால் ஓவியங்கள் உயிர்ப்படைகின்றனவா என்ற பிரித்துக் காட்ட முடியாத அளவுக்கு அமைந்திருக்கின்றன. அதுதானே படைப்பாளியின் வெற்றி? யதார்த்த வடிவமும் வெளிப்பாட்டு வடிவமும் கலந்த ஓர் உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் புகழ். பாக்தாத்தின் வரலாற்றுச் சின்னங்கள் சூறையாடப்பட்டதைச் சித்தரிக்கும் ஓட்டோவிய (கொலாஜ்) உத்தி ஒரு சான்று.

"ஒரு பக்கம் செய்தி சொல்வது. அதேநேரத்தில் ஒரு கலைஞனாக பல்வேறு வடிவங்களிலும் முயற்சி செய்து பார்ப்பது என்றுதான் இந்தப் படைப்புகளில் ஈடுபட்டேன். உள்ளடக்கத்திற்கேற்ப மீடியங்களை எப்போதுமே பயன்படுத்தி வந்திருக்கிறேன். இந்தக் கண்காட்சியிலும் இதன் உள்ளடக்கத்திற்குப் பொருத்தமான வண்ணங்களையும் வடிவங்களையும் பயன்படுத்தி யிருக்கிறேன்" என்றார் புகழேந்தி. மனிதனின் போராட்டங்கள் பற்றி "எரியும் வண்ணங்கள்" என்ற இவரது முதல் கண்காட்சி ஓரளவு வெளிப்படையாகவும் ஓரளவு பூடகமாகவும் கருத்தை வெளிப்படுத்தியது. "உறங்கா நிறங்கள்" என்ற இரண்டாவது கண்காட்சி 20 ஆம் நூற்றாண்டு பற்றிய ஒரு பதிவு. பல்வேறு வண்ணங்களில் அது படைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்து இதே குஜராத்தில் ஒரு இயற்கைப் பேரழிவாக ஏற்பட்ட பூகம்பம் பற்றிய "சிதைந்த கூடு" இது பெரும்பாலும் கருப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. அதன்பின் தந்தை பெரியார் பற்றி "திசைமுகம்" கண்காட்சி கருப்புக் கோட்டோவியமாக ஆழமான ஓர் உணர்வை ஏற்படுத்தியது.

"கோத்ரா சம்பவத்தைக் காரணம் காட்டி குஜராத்தில் இனப்படுகொலை கட்டவிழித்து விடப்பட்ட அந்தத் தருணத்திலிருந்தே இந்த ஓவியங்களை உருவாக்குவதற்கான எண்ணம் விதையாக விழுந்துவிட்டது. அது ஏற்படுத்திய மன அழுத்தம்தான் என்னைச் செயல்படத் தூண்டியது" என்றும் அவர் தெரிவித்தார்.

புகை மூட்டம் வெறும் புலம்பலாக முடிந்துவிடவில்லை. இக்கொடுமைகளுக்கு எதிராகப் பேரலையாகத் திரளும் மக்களின் இயக்கத்தை நம்பிக்கைப் பசுமையோடு அடையாளப்படுத்தியே நிறைவடைகிறது. ஓவியங்களுக்கு கவிஞர்கள் இன்குலாப், காசி ஆனந்தன் ஆகியோர் வழங்கியுள்ள கவிதை வரிகள் கூடுதல் அழுத்தம் சேர்க்கின்றன. கண்காட்சியைப் பார்த்து முடித்து வெளியே வருகையில் கனத்துப்போய் மவுனமடைகிற மனிதநேய மனங்கள் அந்த மக்கள் இயக்கங்களோடு இணைந்து உரத்துக் குரல்கொடுக்க உறுதியேற்கும் என்பது உறுதி.

சென்னை, தியாகராயர் நகர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கானோரை ஈர்த்த "புகை மூட்டம்" கண்காட்சி ஊர்ஊராகக் கொண்டு செல்லப்படவேண்டியது. எளிய மக்களும் காணும் வகையில் சாலையோரங்களில் கண்காட்சிகளை அமைக்க முற்போக்கு அமைப்புகள் முன்வந்தால் மகிழ்ச்சியுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறார் புகழேந்தி.

அரசுக் கல்லூரியில் பணிபுரிகிற புகழேந்தி, இவ்வளவு வெளிப்படையாக சமுதாய விரோதிகளைச் சாடும் படைப்புகளை உருவாக்கியிருக்கிறாரே? அவர்களது அதிகார பலம், ஆள் பலம் ஆகியவற்றைக் கொண்டு வேலைக்கு இடைஞ்சல் செய்வது முதல் நேரடித் தாக்குதல் வரைக்கும் போகக் கூடுமே?  அதை எண்ணி அச்சப்படவில்லையா? இக்கேள்விக்கு ஓவியர் அளித்த பதில், "நிர்வாக ரீதியான நடவடிக்கை என்று வந்தால் சட்டரீதியாகச் சந்திப்பேன். வேறு மாதிரியான தாக்குதல்கள் வந்தால்... நான் தனிமனிதனல்ல." அவர்தான் புகழேந்தி.