உறங்காத நினைவுகளுடன் ஓயாத தூரிகை...

அ. குமரேசன்

தீக்கதிர், வண்ணக்கதிர் 20.2.2000


சென்னையின் கலைக்கூடங்களில் ஓவியக் கண்காட்சிகள் நடப்பது புதிதல்ல என்ற போதிலும், லலித் கலா அகடமியில் பிப்ரவரி 7 முதல் 12 வரை நடைபெற்ற அந்தக் கண்காட்சி மூன்று அம்சங்களில் புதுமையாக அமைந்திருந்தது. ஒன்று - உறங்கா நிறங்கள் என்ற அதன் தலைப்பும்; அதற்கான படைப்புகளும், இரண்டு - ஓவியங்களில் இருந்த எவரையும் மிரட்சிப்படுத்தாத எளிமை; மூன்று - கண்காட்சிக்கு வந்த வழக்கத்துக்கு மாறான கூட்டம்.

இத்தனைக்கும் ஓவியர் கு. புகழேந்தி மரபு ஓவியங்கள் முதல் நவீன பாணி வரையில் ஓவிய மாணவர்களுக்குக் கற்று தருகிற ஒரு ஆசிரியர். குடந்தை ஓவியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரியும் புகழேந்தி, அதே கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர். ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்  கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தமிழகத்திலேயே முதல் முறையாக ஓவியத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

1987ம் ஆண்டு கல்கத்தாவில் இளைஞர்களுக்கான தேசிய ஓவியப்போட்டி நடந்தது. அதில் வெற்றி பெற்ற புகழேந்தியின் படைப்பைத் தேர்வு செய்தவர் எம்.எஃப். உசேன். அதே ஆண்டில் தமிழ்நாடு மாநில விருதும் இந்தியாவின் உலக விமானப் போக்குவரத்துக் குழுமத்தின் விருதும் பெற்ற இவரது ஓவியங்கள் சென்னை, ஹைதராபாத், லக்னோ, டில்லி, பெங்களூர், மும்பை முதலிய நகரங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான பல கண்காட்சிகளில் இடம் பெற்றுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட தனிக் கண்காட்சிகளும் நடத்தியுள்ளார்.

உறங்கா நிறங்கள் கண்காட்சி, இருபதாம் நூற்றாண்டு மனித சமூக வரலாற்றில் செய்துள்ள மிகப் பெரும் பதிவுகளைத் தூரிகை வாயிலாக நினைவூட்டுகிறது. உறக்கம் வரவிடாத போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்கள், சகல அடிமைத் தளைகளையும் அறுத்தெறிந்து அடுத்த கட்ட முன்னேற்றகரமான, வாழ்க்கைக்குப் பாயத் துடிக்கும் விடுதலை வேட்கைகள், தனி நபர்கள் மூலமாக வெளிப்பட்ட மனிதநேய இழையோட்டங்கள் இவைதான் கண்காட்சிப் படைப்புகளின் கரு.

சாமான்ய மக்களை மருட்டுகிற நவீனக் குழப்பங்கள் இல்லை என்றாலும் கூட, பல ஓவியங்கள் கற்பனைக்கு அதிகம் வேலை வைக்காத உருவப் படங்களாக (போர்ட்ரெய்ட்) இருந்தன. அது ஏன்? இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட புகழேந்தி, படைப்பாளி, பார்வையாளர் இருவரது கற்பனைகளும் சந்திப்பதுதான் முழுமை. அது ஒரு முடிவற்ற முழுமையும் கூட. ஆனால் இந்தக் குறிப்பிட்ட தலைப்புக்கான சில ஓவியங்களில் நேரடி உருவப் பதிவு, தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றார்.

எளிமையான வடிவத்திலேயே புதுமைகளைப் படைக்க முடியும் என மெய்ப்பிப்பதாகவும் ஓவியங்கள் உள்ளன. இன்றைய நவீன ஓவியச் சந்தையில் இத்தகைய, ஒரு சமுதாயச் செய்தியுடன் கூடிய எளிய படைப்புகள் வரவேற்கப்படுமா?

விற்பனை நோக்கம் எனக்கில்லை. யாரேனும் விரும்பிக் கேட்டால் தருவதற்குத் தயக்கமும் இல்லை. சொல்லப் போனால் கண்காட்சியைப் பார்த்த சிலர் குறிப்பிட்ட சில ஓவியங்கள் தங்களுக்குத் தேவை எனக் கேட்டுள்ளனர். என்னுடைய நோக்கம், இந்தச் செய்தியும் கலையும் பரவலாக மக்கள் பார்வைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான். அதற்கு இந்த வடிவம்தான் ஏற்றது என்று நான் நம்புகிறேன் என்றார் ஓவியர்.

விற்பனை நோக்கம் இல்லை என்கிறபோது மாத ஊதியத்தில் கணிசமான பகுதி ஓவியத் தயாரிப்புக்கே செலவிடப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுமே? ஆம். ஆயினும், குடும்பத்தினர் தனது முயற்சிக்கு முழு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளித்து வருவதாகத் தெரிவித்தார்.

லெனின், காந்தி, நெல்சன் மண்டேலா, விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இலக்கியவாதிகள் மார்க்சிம் கார்க்கி, பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், நிலவில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங், மனிதநேய சேவைக்கு அன்னை தெரசா எனப் பல கோணங்களில் இவரது தூரிகை வரலாற்றுப் பதிவஉகளைச் செய்துள்ளது. நிகழ்காலத்தையும் தொட்டுள்ள

தூரிகை எல்.டி.டி.ஈ. தலைவர் பிரபாகரனைக்கூட வரைந்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் இன்றைய அச்சுறுத்தலாக எழுந்துள்ள மதவெறி பூதம் பற்றி ஏனோ கண்டுகொள்ளவில்லை. இதைச் சுட்டிக் காட்டியபோது, "உண்மைதான். அடுத்த கட்டமாக இக்கண்காட்சியை வெளியே கொண்டு செல்கையில் அதையும் சேர்க்க முயல்வேன்" என்றார்.

இக்கண்காட்சிக்கான ஓவியப் பணிகளைத் துவங்கி மூன்று மாதங்களில் முடித்துள்ளார். கான்வாஸ் திரையில் எண்ணெய் வண்ணம் என்ற வழக்கமான உத்தியையே பயன்படுத்தி யிருப்பினும், அதனைக் கையாண்டவிதத்தில் (டிரீட்மென்ட்) தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றியுள்ளதாகக் கூறினார்.

ஏற்கனவே இவரது 'எரியும் வண்ணங்கள்' என்ற கண்காட்சி திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உதவியுடன் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஓவியங்களைத் தொகுத்து ஓர் ஓவிய நூலாகவும் வெளிவந்துள்ளது.

'உறங்கா நிறங்கள்' கண்காட்சியில் சிந்தனைக்கும் ரசனைக்கும் ஈர்ப்பாக அமைந்த மற்றொரு முக்கியமான அம்சம் ஒவ்வொரு ஓவியத்தின் அருகிலும் ஒட்டப்பட்டிருந்த கவிதை வரிகள். ஓவியரின் தூரிகையும் கவிஞரின் பேனாவும் அங்கே கை கோர்த்திருந்தது ஒரு தனி அனுபவம். கவிஞர்கள் இன்குலாப், காசி ஆனந்தன் ஆகியோர் அந்தக் கவிதை வரிகளைப் படைத்தளித்தனர்.

"இன்னும் இதுபோல் நிறைய விஷயங்களை வண்ணங்களில் வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து செயல்பட வேண்டும்" என்பதே தனது எதிர்காலத் திட்டம் எனக் கூறினார். அந்தத் திட்டம் நிறைவேற தமுஎச போன்ற மக்கள் கலைக்கான அமைப்புகளின் தேவை அவர்களின் தமது பகுதிகளில் நடைபாதைகளில் கூட, இக்கண்காட்சியை நடத்த முன்வந்தால் படைப்புகளை வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.