இருட்டைப் பொருட்படுத்தாமல் இயங்குபவர்

எம்.ஜி.சுரேஷ்


பன்முகம், தலையங்கம் ஏப்ரல் - ஜூன் 2004


'இருட்டைப் பழிப்பதைவிட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேலானது' என்பது ஷேக்ஸ்பியரின் ஆதங்கம். அதன்படி, இருண்டுபோன இன்றைய தமிழ்ச் சூழலில் மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிலரையாவது நாம் உற்சாகப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஒரு மெழுகுவர்த்தி புகழேந்தியினுடையது.

ஓவியர் புகழேந்தி கவனத்திற்குரிய இளைஞர். கலை வேறு வாழ்க்கை வேறு என்று எதிரும் புதிருமாக இயங்கிக்கொண்டிருக்கும் சக கலைஞர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு வேறாக இயங்கிக் கொண்டிருப்பவர். பிகாசோ, ஸார்த்ரே, மார்லன் பிராண்டோ போன்ற கலை ஆளுமைகள் கலையோடு நின்று விடாமல் சமூகப் பிரச்சினைகளிலும் பங்கெடுத்துக் கொள்ளும் மரபு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருந்து வந்தது. அருந்ததிராய்க்குப் பின் அந்த மரபு இந்தியாவிலும் கால்கோள் கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாகவே புகழேந்தியை நாம் பார்க்க வேண்டும்.

மதவாதம், பாசிசம், அடக்குமுறை போன்றவை எங்கே தலைதூக்கினாலும் புகழேந்தியின் தூரிகை நிலைகொள்ள மறுக்கிறது. நிமிண்டுகிறது.

தஞ்சை மாவட்டத்திலுள்ள தும்பத்திக்கோட்டை என்ற எளிய கிராமத்தில் பிறந்த இந்தக் கிராமவாசியின் தூரிகைகள் இந்தியா முழுக்க உலவ ஆரம்பித்து இப்போது இந்தியாவுக்கு வெளியேயும் உலவிக் கொண்டிருக்கின்றன என்பது நல்ல விஷயம்.

'எரியும் வண்ணங்கள்', 'உறங்கா நிறங்கள்', 'சிதைந்தகூடு', 'திசைமுகம்' போன்ற வித்தியாசமான தலைப்புகளில் ஓவியக் கண்காட்சிகளை நடத்தியிருக்கும் இவர் சமீபத்தில் புகைமூட்டம் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறார்.

இந்துத்வா பாசிஸ்ட்டுகளின் வெறியாட்டம், அரசின் அடக்குமுறைச் சட்டங்கள் அமெரிக்க அரசின் அசல் முகம் போன்றவற்றின் மீதான விமரிசனமாக இவரது ஓவியங்கள் புகைமூட்டம் என்ற தலைப்பில் பார்வையாளர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டன. குஜராத் படுகொலை, ஈராக் யுத்தம் போன்ற கோர நிகழ்வுகளை வெறும் செய்திகளாகப் பார்த்து மழுங்கிப்போயிருந்த தமிழ் மூளைகளுக்கு சுத்தியல் அடிகளாய் இந்த ஓவியங்கள் இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் ஒரு வியாதி தோன்றுவதுண்டு. அதாவது 'பாணி' என்ற பெயரில் ஒரே மாதிரியான சங்கதிகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் காட்டும் பழக்கம். உண்மையில் அதை பாணி என்று கூட சொல்லக்கூடாது. 'மேனரிசம்' என்று வேண்டுமானால் சொல்லலாம். கலைஞனின் பலவீனம் 'மேனரிசம்'தான். ஒவ்வொரு படைப்பும் தனித்தன்மையோடு 'மேனரிசம்' இல்லாமல் இருக்கவேண்டும். இதுதான் பரிணாம வளர்ச்சியும் கூட. புகழேந்தியின் கடந்த பத்தாண்டுக்கால ஓவியங்களைப் பார்க்கும்போது அவர் இந்த 'மேனரிச'ங்களில் சிக்கிக் கொள்ளாதவராக இருக்க முயல்வது தெரிகிறது. அது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்ச் சூழலில் இருட்டைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் இயங்கி வருவது பாராட்டுதலுக்குரியது.