ஜனப்பேரலை தேடும் ஓவியக்கால்

மேலாண்மை பொன்னுச்சாமி


எனக்குள் ஓவியர் புகழேந்தியின் ஓவியக்கண்காட்சி புதிய தாக்கத்தை நிகழ்த்தியது. மதுரையில் பார்த்தேன். ஓவியங்கள் அடுக்கப்பட்டிருந்த வரிசையில் ஒரு வரலாறு காட்சிப் பிம்பமாயிற்று.

ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்தேன். ஒவ்வொரு ஓவியமும் உறைந்து கிடந்த உணர்ச்சியைத் தட்டி உசுப்பியது. மனித சோகங்களும், மனித வதைகளும், மனித அவமதிப்புகளும் நிகழ்கிற பயங்கரத் தருணத்தை நமக்குள் காட்சிப்படுத்துகிறது.

பாரடா... மானுட அவலங்களை என்று கதறுகிற ஓவியங்கள், பார்த்த மனசுகளைக் கதறவைக்கிற ஓவியங்கள். உள்ளுறைந்து கிடக்கிற மானுட உணர்ச்சி கண்ணீராகவும், கனலாகவும் மாற்றம் பெறுகிறது.

ஓவியங்கள் என்றால் என்ன? சித்திரம். படம். அழகான இயற்கைக் காட்சிகளின் வர்ணக் கோலங்கள். அழகான பெண்களின் அங்க வளைவுகளை மன உணர்வின் மின்னல்களை, தூரிகையால் தீட்டிய அற்புதங்கள். காதல் பற்றிய படம். இயேசுநாதரின் கடைசிவிருந்து. ராமரையும் சீதையையும் நெஞ்சைப் பிளந்து காட்டுகிற அனுமார். கி.மு. காலத்து அரசன் நிர்வாண மங்கையர்களுக்குள் குளிக்கிற கோலம். வினோத மிருகங்களின் வித்தியாச அசைவுகள். வினோத கிரக மனிதர்களின் வடிவங்கள். பத்துத்தலை ராவணன். நான்முகக் கடவுள். ஆறுமுகத்தெய்வம். மயில்மீது சவாரி செய்கிற முருகதெய்வம். காளையை வருடுகிற சிவபெருமான் தலையில் நிலாப்பிறையும், கங்கையும் கள்ளக் காதலியும். முத்துக்கள் ததும்பி வழியும் ராட்சசக்கோப்பையில் நிர்வாண மங்கையின் மோகப் பார்வை.

இப்படியான ஓவியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஓவியர் புகழேந்தியிடம் இப்படியான ஓர் பேரழகு ஓவியத்தை மருந்துக்குக் கூட காணமுடியவில்லை.

வெள்ளைத்தோல் லட்சாதிபதிகளும், கோடீஸ்வரிகளும் ஆங்கிலத்திலேயே ஆச்சரியப்பட்டு, பிரமித்து, மாய்ந்து மாய்ந்து பாராட்டி, பல்லாயிரம் டாலருக்கு வாங்குகிற ஓவியங்களை உற்றுப் பார்த்தால் கண்டகண்ட கலர் மைகளை மானாவாரியாக அள்ளிப் பூசி கிறுக்கி வைத்த கேனத்தனத்து இருட்டுக் குழப்பமாக இருக்கும்.

புரியாமலேயே, புரிந்த மாதிரி பசப்பி மாய்கிற ரசிகப் போலித்தனத்தை உருவாக்கி வைக்கிற ஊற்றுக் கண்ணாக அந்தக் குழப்ப ஓவியங்களிலிருந்து ஆயிரத்தெட்டு நசிவு இசங்கள் பொங்கிப்பெருகும்.

அப்படியான உலகளாவிய, மொழி கடந்த உன்னத மேதைமை எதுவும் ஓவியர் புகழேந்தியிடம் தட்டுப்படவில்லை.

இந்த இரண்டு வகை ஓவியங்களை இவரிடம் காணமுடியாத போது இவர் ஓவியர்தானா? எந்தவகை ஓவியர்? இப்படியான ஏளனக்கேள்விகள் எழக்கூடும்.

கண்காட்சியைச் சுற்றிப் பார்த்த எந்தக் கல் நெஞ்சனுக்கும் ஏளனக் கேள்விகள் எழவே எழாது. மாறாகக் கல்நெஞ்சனும் கலங்கி ஈரம் கசிவான். ஐயகோ... இப்படியான நரக உலகிலா நாம் ஜீவிக்கிறோம் என்ற கேள்வி எழலாம். இந்தக் கொடூர நிகழ்வுகள் சரிதானா? சகிக்கலாமா என்ற கேள்வி எழலாம். இந்த ரக உலகைச் சொர்க்கமாக மாற்றுவதில் என் பங்கு என்ன? என்ற கேள்வி விரல் தன்னை நோக்கியே நீளலாம்.

'குஜராத் மதக்கலவரம்' என்று ஒற்றைவரியை உச்சரிக்கிறோம். அதன் வலியின் அதிர்வுகள் எத்தகையது? ஓவியர் புகழேந்தியின் தூரிகையில் எழுகின்ற ஓவியங்களில் அந்த வலியின் அதிர்வுகளை உணரமுடிகிறது.

அதிலும் 'அதிரும் கோடுகள்' என்ற நூலிலும் 'உறங்கா நிறங்கள்' என்ற நூலிலும் வலியதிரும் ரண ஓவியங்கள் நிறைய. திண்ணியத்தில் மனித மலத்தை மனிதர் வாயில் திணித்த மனித மிருகங்கள், கறுப்பு மனிதர்களை நெருப்பில் போட்டுஎரித்த கீழ்வெண்மணி, கட்டிவைத்துத் தோலுரித்துத் தண்டனை தருகிற கொடுமைகள்...

மதக் கலவரத்தின் போது இசுலாமியப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட அவலம். கூட்டம் கூட்டமாக பாலியல் வன்முறை நிகழ்த்திய காட்டுமிரண்டி மதவெறி ஆண் ராட்சஸர்கள். குழந்தைகள் வெட்டுப்பட்ட சம்பவம் இப்படியான மனசை அதிரவைக்கிற சமுதாயக் கொடுமைக் காட்சிகள் ஓவியமாக்கப்பட்டிருக்கின்றன.

நாசமிக்க போரின் கொடுமைகள், அணுயுத்த அபாயம், விஷவாயுக் கசிவினால் நிகழ்ந்த தலைமுறை நாசம் இப்படியான ஏகாதிபத்திய ராட்சஸத் தனங்களின் அரக்கத்தன நிகழ்வுகளும் காட்சியாக்கப்பட்டிருக்கின்றன.
ஓவியர் புகழேந்தியின் சமுதாயச் சாய்மானத்தை அவரது ஓவியங்கள் துணிச்சலாக முன்வைக்கின்றன.

புகழேந்தி, அழகின் உபாசகரல்ல; இன்பப்பரவசமூட்டும் காமக்களியாட்டங்களைக் காட்சிப்படுத்துவதில் வித்தை காட்டுகிறவரல்ல; ஆழ்மனப்பள்ளத்தாக்கு இருட்டு மிருகங்களை வரைந்து காட்டுகிற இருண்மை வாதியுமல்ல. மனிதக் கலைஞன். மனிதநேயக் கலைஞன். மானுடத் துயர்கண்டு மனம் பதைக்கிற மனிதநேய ஓவியக் கலைஞன்.

நடுநிலைவாதி என்கிற பம்மாத்து பண்ணுபவருமல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் வக்கீல். உலகின் இந்தியத் தேசத்தின் தமிழ்நாட்டின் ஆதிக்கச்சக்திகளை எதிர்த்து சமரமற்றுப் போராடுகிற மனிதநேயப் போராளி.

அவரது ஓவியநூல்களில் புதிய அனுபவம் பெற்றேன். புதிய ஞானம் பெற்றேன் என்றும்கூடத் தைரியமாகச் சொல்லலாம்.

புகழேந்தியின் ஓவிய மொழியை முதலில் நான் புரிந்து கொள்ளவில்லை. நேர்க்காட்சி ஓவியங்கள், இயற்கைவாத ஓவியங்கள், யதார்த்த வாத ஓவியங்கள் இவற்றுக்கான நுட்பமான வித்தியாசங்களை உணராதவனாக இருந்தேன்.

யதார்த்தவாத ஓவியங்களில் இயற்கைவாத ஓவியங்களைத் தேடிக் கொண்டிருந்த அறியாமையும் எனக்குள் இருந்தது.

வார இதழ்களுக்குள் பிரசுரமாகும் சிறுகதைகளுக்குப் போடுகிற பெரும்பாலான ஓவியங்கள் யதார்த்தவாத ஓவியங்களல்ல; இயற்கைவாத ஓவியங்கள்.

உதாரணமாக... ஆடுமேய்க்கிற சிறுமி. பார்க்கிற பார்வையில் எவ்வாறு தென்படுவாளோ... அப்படியே ஓவியமாக வரைந்துவிடுவது. அச்சுஅசலான ஓவியம்.

இது நகலெடுப்பு. ஜெராக்ஸ். கண்பார்த்ததை, கையால் செய்கிற ஜெராக்ஸ். இது இயற்கைவாதம். ஆனால் இவையே யதார்த்தவாத ஓவியங்கள் என்று நான் புரிந்திருந்தேன்.

அப்படியான ஓவியங்களை புகழேந்தியின் 'எரியும் வண்ணங்'களில் தேடிப்பார்த்துவிட்டு யதார்த்த வாதம் இல்லையே என்று நான் கடிதம் எழுதியிருந்தேன்.

இப்போதைய 'உறங்கா நிறங்கள்', 'அதிரும் கோடுகள்' என்ற நூலின் ஓவியங்களைப் பார்க்கிற மனவெளிச்சத்தில் எனது அறியாமை எனக்குத் தெரிகிறது.

புகழேந்தி ஜெராக்ஸ் செய்கிறவரல்ல; கண் பார்க்கிற காட்சிகளை ஓவியமாகத் தீட்டுகிறவரல்ல; கண்பார்க்கிற காட்சிகளுக்குள் மனம் காண்கிற உணர்வுகளை ஓவியமாகத் தீட்டுகிறவர். இதுவே முழுமை யதார்த்தவாதம் என்று இப்போது எனக்கு வெளிச்சமாகிறது.

இந்தக் கோட்பாடு எல்லாக் கலை இலக்கியங்களுக்கும் பொருந்தும். சிறுகதையில் கூடப் பார்த்ததை அப்படியே எழுதினால், ரிப்போர்ட். பார்த்ததில் மனம் உணர்ந்ததை லிபிகளாய் காட்சிப்படுத்தினால் அதுவே யதார்த்தவாதச் சிறுகதை. அதிலும் முற்போக்குச் சிந்தனையுள்ள மனத்தின் உணர்தலைக் காட்சிப்படுத்தினால்தான் அது துல்லியமான யதார்த்தம்.

புகழேந்தி ஓவியங்களில் பெண், பெண்ணாக இல்லை. கண், காது, மூக்கு, கழுத்து, கையளவு, காலளவு எல்லாம் கச்சிதமான கட்டமைப்புடன் பொருந்திய பெண்ணாக இருப்பதில்லை. மாறாக. வதைபடுகிற பெண்ணின் மனக் கொதிப்பும், மனப்புலம்பலுமே ஓவியவடிவம் பெற்றிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட அடிமை ஆண்களின் பவ்யமும், மனஎதிர்ப்பும் காட்சிப்படுத்தப்படுகிறார்கள். ஒருவரியில் சொல்லப்போனால், உணர்வோவியங்கள்தான் புகழேந்தியின் ஓவியமொழி.

ஓவியமொழிக்கு லிபிகள் தேவையில்லை. எழுத்துகள் தேவையில்லை. மொழிகடந்த புரிதல் வெளிச்சம் தரவல்ல ஓவியத்திற்கு லிபி தேவையில்லை. ஓவியத்திற்கான மொழி என்பது, கோடுகளும் வளைவுகளும் தான்.

எல்லா ஓவியர்களுக்கும் ஓவியமொழி, கோடுகளும், வளைவுகளும் என்றால்... புகழேந்தியின் ஓவிய மொழியோ, நிகழும் கொடுமைகளுக்கு எதிரான உணர்வுகள்தாம்.

கோடுகளும், கோடுகளின் நெளிவுகளும் அதற்குள் அப்பிய கறுப்பு மைகளுமேகூடப் பார்க்கும் மனசுகளுக்குள் அதிர்வுகளையும் கொதி உணர்வுகளையும் எழுப்புகின்றன.

கறுப்பு மைக்குப் பதிலாகக் காவிமையைப் பயன்படுத்துகிறபோது... அந்த மைமாற்றமே உள்ளடக்கமாற்றமாக நிகழ்கிற அபூர்வ நுட்பத்தைப் புகழேந்தியின் ஓவியத்தில் காணமுடிகிறது.

'அதிரும் கோடுகள்', 'உறங்கா நிறங்கள்' என்ற புகழேந்தியின் இரண்டு ஓவிய நூல்களைக் காண்கிறபோது சிலவருடங்களுக்கு முன்பு அவரது எரியும் வண்ணங்கள் என்ற நூலைப்பார்த்து கருத்து சொன்ன மேலாண்மை பொன்னுச்சாமியின் ஓவியம் குறித்த கருத்துலகம் தோலுரிந்து புதிய பரிணாமம் பெறுவதை உணர முடிகிறது. அறியாமை எனக்குள் இருந்ததை உணரமுடிகிறது. இயற்கைவாத ஓவியங்கள் வேறு, யதார்த்தவாத ஓவியங்கள் வேறு என்கிற புதிய ஞானம் மலர்ந்திருப்பதை உணரமுடிகிறது.

அவரது முகவரிகள் என்ற நூல் என்னை மிகவும் பிரமிக்க வைத்த நூல். மலைத்துப் போய்க் கிடந்த எனக்குள் யோசனை அலைகள் பல்கிப் பெருகி விரிவுபெற்றுப் பரந்ததை என்னால் உணரமுடிந்தது.

முகவரிகள் என்றால் விலாசங்களல்ல; முகத்தின் வரிகள். அகத்தின் பரிமாணத்தையும் இணைத்து உணர்த்துகிற முகக் கோடுகள்.

இருபத்தாறு வருடங்கள் இருட்டுச் சிறைச்சாலைக்குள் தேசத்துக்காக, மக்கள் விடுதலைக்காக, கிடந்த கறுப்புச் சூரியன் நெல்சன் மண்டேலா முகம் இருக்கிறது. ருஷ்யப் புரட்சி நிகழ்த்தி, சோசலிச சமூகச் சூரியனை எழுப்பியதன் மூலம் உலக முகத்தையே ஒளிப்படுத்திய லெனின் முகம் இருக்கிறது. வர்ணாசிரம சாதீய இருட்டைக் கிழித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முகம்... மனுதர்ம எதிர்ப்புப் போராளி அம்பேத்கர் முகம்.

காலில் கல் ஏற்றினால் கூட 'ஐயோ ஆத்தா' என்பது மனித இயல்பு. நெஞ்சில் குண்டு பாய்ந்த போதும் ஹேராம் என்றவர் மகாத்மா. அத்தனை பெரிய ராமபக்தர், அத்வானியைப் போல மதவெறியாட்டம் போடாமல்... மதநல்லிணக்கத்துக்காக உயிரையே தந்த காந்தியின் முகம். அண்ணா முகம், கலைஞர் முகம், புழுதுமொழியில் மக்கள் வாழ்க்கையைப் பாடிய கவிஞர் பட்டுக்கோட்டையின் முகம், ஜீவாவின் முகம், புதுமைப்பித்தன் முகம், அப்துல்கலாம் முகம்.

ஏகப்பட்ட  முகவரிகள். சர்வதேசப் பார்வை விசாலமுகம், இந்திய தேசிய ஒருமைப்பாட்டுப் பேருணர்வும் மொழிப் பற்றுமிக்க நாட்டுப்பற்றும் கொண்ட ஒரு கலைஞனின் மனசில் தென்படக்கூடிய சகலமுகங்களும் அதில் கோட்டோவியங்களாகப் பதிவாகியுள்ளன.

சமுதாய அரசியல் பொருளாதார கலை இலக்கிய அரங்குகளில் மக்களின் பக்கம் நின்று இயங்கிய முகங்கள். மக்களுக்காக இயங்கிய தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், கார்க்கியும் உண்டு. தாகூரும் உண்டு. ஜெயகாந்தனும் உண்டு.

ஜெயேந்திரர் இல்லை. வேறு அருள் பாலிக்கும் சுவாமிகளில்லை. பிரபலங்கள் எதுவுமில்லை. கசடுகள் எதுவுமில்லை.

முகவரிகளுக்காகத் தேர்வுசெய்த முகங்களே சொல்கின்றன. புகழேந்தி மக்கள் விடுதலைப் போராளி என்று.

மற்ற ஓவியர்களிடமிருந்து புகழேந்தி கூர்மையாக விலகி, தனித்துத் தென்படுகிற இடம், ஓவிய இயக்கம்.

ஓவியம் வரைந்தோம், கடமை முடிந்தோம் என்று ஒதுங்கிக் கொள்ளாமல், ஊர் ஊராக ஓவியங்களைச் சுமந்து சென்று, இடம்தேடி ஆதரவு தேடி ஓவியக்கண்காட்சி நடத்துகிறார். நாடு, நகரங்கள், ஊர்கள் தோறும் அலைகிறார். பிற நாடுகளுக்கும் சென்றிருக்கிறார்.

இது சுயதம்பட்டத்துக்காக அல்ல. சுயவிளம்பரத்துக்காக அல்ல. சமுதாயப் பிரச்சினைகளையும், தேசத்தில் நிகழ்கிற ஒடுக்குமுறைகளையும், சமூக அநீதிகளையும் அதை எதிர்த்து நடக்கிற மக்கள் எழுச்சிகளையும் ஓவியமாக்கி வைத்திருக்கிறார். அப்பேற்பட்ட ஓவியங்களை வரிசைப்படி அடுக்கி வைத்து, கண்காட்சி நடத்துதல் என்பது சுயவிளம்பரமல்ல. ஒரு கருத்துப் பிரச்சாரம். உறுதிமிக்க லட்சியப்போர். சமுதாய மாற்றத்துக்கான துணிச்சலான மக்கள் இயக்கம்.

ஓவியத்தையே ஒரு மக்கள் இயக்கமாக மக்களை நோக்கிய பயணமாக மாற்றுகிற புத்தம்புதிய தனித்த முயற்சி, புகழேந்தியின் கொள்கைப் பற்றுறுதிக்கான சாட்சி.