போர் முகங்கள் ஓவியக் காட்சி!
தமிழ்த் தேசிய கலை அரசியல் பார்வையில்!

ம.செந்தமிழன்
பொங்குதமிழ்.காம்

8 செப்டம்பர் 2010


வியங்கள் மீது எனக்கு வெறுப்புதான் அதிகம். முதல் காரணம், எனக்கு வரையத் தெரியாது. இரண்டாவது, என் சிறு வயது முதல் நான் பார்த்த பெரும்பாலான ஓவியங்கள் எனக்குப் புரிந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், எனக்கு எவையெல்லாம் புரியவில்லையோ அவை அனைத்துமே சிறந்த ஓவியங்கள் எனப் பாராட்டப்பட்டன. வண்ணங்களின் வினோதக் கலவை, குறுக்கும் நெடுக்குமான கோடுகள், வண்ணங்களை ஊற்றிவிட்டது மாதிரியான குத்துமதிப்பான உருவங்கள் உள்ளிட்ட பலவிதங்களை ’நவீன ஓவியங்கள்’ எனும் முத்திரையுடன் பார்த்து, ‘இவை நமக்குப் புரியவில்லையே’ என்ற தாழ்வுமனப்பான்மை கூட வந்ததுண்டு.

உலகமயம் தமிழகத்திற்குள் படையெடுக்கும் முன், தனக்கு ஆதரவான சில கருத்தியல்களைப் பரப்பிவிட்டது. உலகமயம் என்பது, ‘தேசிய இன அடையாளங்களை மறுப்பது, தனி மனித வக்கிரங்களை ஆதரிப்பது, வரம்பற்ற நுகர்வுப் பண்பாட்டை அதிகரிப்பது’ ஆகிய முக்கிய கூறுகளை உள்ளடக்கியது. இந்த மூன்றையும்  வலியுறுத்தும் விதமான கருத்தியல்கள் கடந்த 1990 களின் தொடக்கத்தில் அதிவேகமாகப் பரப்பப்பட்டன. ’பின்நவீனத்துவம்’ என்ற அரசியல் கோட்பாடு, இந்த மூன்றையும் ஒருங்கிணைத்தது. ’நுண் அரசியல்’ என்ற ஒரு சொல்லை வைத்துக் கொண்டு அது ஆடிய ஆட்டம், தமிழக வரலாற்றில் மறக்கப்படக் கூடாதது. இச் சொல்லை வைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய இன அடையாளத்தை இல்லாது செய்ய முயன்றது அது. இறுதியில் தோற்றோடியது வேறு கதை.

இதே காலத்தில், இதே பின்புலத்தில் கலைத் துறையிலும் உலகமயத்தின் தூதுவர்கள் ’இறங்கி’ வேலை செய்தனர். ’கலை கலைக்காகவே’ என்ற சொல்லாடல், ‘நுண் அரசியல்’ என்ற பின் நவீனத்துவ ஏமாற்று வித்தைக்கு இணையாக, கலைத் துறையில் செயல்பட்டது. இந்தப் பின்னணியில்தான், ஓவியங்கள் புரியாத வகையில் தீட்டப்பட்டு, அவ்வாறு புரியாத வகையில் இருப்பது நியாயப்படுத்தப்பட்டது.

உண்மையில், நடந்தது என்னவென்றால், உலகமயத்தின் வருகை தமிழ்த் தேசிய சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட இடது சாரி அமைப்புகளில் சிலவும் உலகமயத்தை எதிர்த்தன. இவை தவிர, சில மனித உரிமை ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்பாளர்களும் உலகமயத்திற்கு எதிரான பரப்புரை செய்தனர். இந்த எதிர்ப்புகளை மடைமாற்றவும் உலகமயத்துக்கு ஆதரவான கோட்பாடுகளைப் பரப்பவும் கலைத் துறையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ’சிறுபத்திரிகைகள்’ என்ற அடையாளத்துடன் வெளியான ‘நிறப்பிரிகை’, ’காலச்சுவடு’, ‘கணையாழி’ ஆகியவை, ’பெரும் பத்திரிகைகளை’யும் விட மோசமாக இந்தச் சீரழிவைத் தமிழகத்தில் பரப்பின. இந்த இதழ்களின் வழியாக பிரபலமான ஓவியர்கள் பலர், தனி மனித சீரழிவுகளையே இளைஞர்களுக்கான முன்மாதிரி தன்மைகள் போல் பேசினர். அவ்வாறு வாழ்ந்தும் காட்டினர்.

இவர்கள் வரைந்த ஓவியங்களுக்குக் கோட்பாட்டுப் பின்புலமாக ஏதோவொரு ’இசத்தை’க் கூறிக் கொண்டனர். ’சர்ரியலிசம்’ என்பது அவற்றில் ஒன்று. மனிதனின் உள்ளுணர்வுகளான மரண பயம் மற்றும் பாலுணர்வு ஆகியவற்றின் வெளிப்பாடுதான் சர்ரியலிச ஓவியமுறையின் துவக்கமாக அமைந்தது. ஏறத்தாழ பெரும்பாலான நவீன ஓவியங்கள் இந்த விதமான ’உள்ளுணர்வுகளை’யே பிரதிபலித்தன. அதாவது, உயிருக்கு அஞ்சுவது மற்றும் பாலுறவுக்கு ஏங்குவது ஆகியவையே இவற்றின் உள்ளடக்கங்கள்.

ஓவியம் என்ற கலை, சமூகத்திற்கானது; அதன் மொழி சமூகப் பயன்பாட்டுத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விவாதம் அப்போது எள்ளி நகையாடப்பட்டது. கலை கலைக்காகவே என்ற சுய நல வெறி பிடித்த போக்கை விமர்சித்தால், சிறு பத்திரிகைகள் என்ற பெயரில் செயல்பட்ட உலகமய ஊதுகுழல்கள், ‘ஐயோ பாசிசம்...கருத்துரிமைக்கு ஆபத்து’ என்று ஊளையிட்டன.

இந்தப் பின்னணியில் ஓவியத் துறையில், ’ஓவியங்கள் சமூகப் போராட்டங்களுக்கானவையே’ என்ற புரட்சிகர கருத்தியலுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் ஓவியர் புகழேந்தி. உலகமயம், இந்தியம் ஆகிய ஆதிக்கக் கருத்தியல்களுக்கு எதிராக, எவ்வித சமரசமும் இன்றிச் செயல்பட்டு வரும் புகழேந்தி, தமிழகக் கலை விமர்சகர்கள் பலரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் வருபவர்.
 
புகழ்பெற்ற தமிழக ஓவிய விமர்சகர்கள் பலர் புகழேந்தியின் ஓவியங்களைப் பற்றி எழுதியதே இல்லை. இதற்குக் காரணம், புகழேந்தி முன் வைத்த ஓவியக் கலையின் உள்ளடக்கமும் வடிவமும் மக்களுக்கானவை. மக்கள் போராட்டங்களைப் பதிவு செய்பவையாகவும், போராடும்படி மக்களைத் தூண்டுபவையாகவும் அமைகின்றன புகழேந்தியின் ஓவியங்கள்.

’போர் முகங்கள்’ எனும் தலைப்பிலான ஓவியக் காட்சியை அவர் கடந்த மாதம் (மே 2010) சென்னையில் நடத்தினார். அதில் இருந்த ஓவியங்களின் மொழி, ஈழப் போரின் அனைத்து உணர்வுகளையும் பார்வையாளருக்கு உணர்த்துவதாகவே இருந்தது. இந்த ஓவியங்கள், இன அழிப்பின் வலியை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகவும், கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல், ஈழ அவலத்தைக் காத்து நிற்கும் கலை வடிவ ஆவணப் பதிவாகவும் இருக்கின்றன.

ஓவியங்கள் பாமரர்களின் கலை வடிவம் என்பதே வரலாறு காட்டும் உண்மை. உலகமய ஊதுகுழல்களின் சுயநல வெறி பிடித்த பரப்புரைகளால், தமிழக ஓவியக் கலையின் கணிசமான ஆற்றல், மேட்டுக் குடியினரின் போலி மேதாவித்தனத்திற்குள் முடங்கிக்கிடக்கிறது.

கற்கால மனிதர்களின் குகைகளில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை, புலி, சிங்கம், காண்டா மிருகம்  உள்ளிட்ட மிருகங்களின் ஓவியங்கள். அவற்றைத் தீட்டியவர்கள் அக்கால சாமானியர்களே. இவ்வாறான ஓவியங்கள் தீட்டப்பட்டதற்கான காரணம் கவனிக்கத்தக்கது.

‘மனிதர்கள் எந்த விலங்குகளைக் கண்டு அஞ்சினார்களோ, அந்த விலங்குகளைத் தமது குழுவின் சின்னங்களாக வரைந்து கொண்டால், அவ் விலங்குகளால் ஆபத்து இருக்காது என நம்பினார்கள். அந்த விலங்குகளை இனி வேட்டையாடக் கூடாது; நாம் வேட்டையாடா விட்டால் அந்த விலங்குகளும் நம்மைத் தாக்காது என்ற நம்பிக்கை இருந்தது. இந்த நம்பிக்கையின் விளைவாகவே, அவற்றை குகைகளில் வரைந்து வைத்தனர்.

வளர்ச்சியடைந்த இனக் குழு மக்கள் கூட, குறிப்பிட்ட விலங்குகளைத் தமது குழுவின் சின்னமாக வரைந்துகொண்டனர். அதுவே அவர்களது குலக்குறி (totem) எனப்பட்டது’ என்ற மானிடவியல் வழிப்பட்ட ஆய்வு முடிவை பேரா.நா.வானமாமலை முன் வைத்துள்ளார்.( தமிழக பண்பாடும் தத்துவமும்- என்.சி.பி.எச் வெளியீடு )

ஓவியங்களின் பிறப்பு, சமூகப் பயன்பாட்டுக்கானதாகவே இருந்தது. அது, தனி மனித விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் கலை வடிவத்தையும் பின்னாட்களில் உள்ளடக்கியது. சமூக மாற்றத்தின் அங்கமாக, ஓவியக் கலையின் வளர்ச்சிப் போக்கில் இயல்பாக நிகழ்ந்தது இம்மாற்றம். ஆனால், தனி மனித அகம் சார்ந்தவையே ஓவியத்தின் உள்ளடக்கம் என வாதிடுதல் மானுட அறிவியலுக்கும், அறவியலுக்கும் எதிரானது.

மேற்கண்ட ஆய்வில், பேரா. நா.வானமாமலை குறிப்பிடத்தக்க வாதத்தை நிறுவியுள்ளார். ‘குகை ஓவியங்கள் அக்கால மனிதர்கள் கண்டு ரசித்த இயற்கைக் காட்சிகள் என்ற முடிவுக்கு வரமுடியாது’ என்பதே அவரது கருத்து. இதன் விரிவாக்கம் என்னவெனில், ’குகை ஓவியங்களின் அடிப்படை, தனி மனித உணர்ச்சிகள் தொடர்பானவை அல்ல; குழுவினருக்கான வாழ்வாதாரச் சிக்கல் தொடர்பானவைதான்’ என்பதே ஆகும்.

ஓவியர் புகழேந்தியின் ஓவியப் பயணம் 25 ஆண்டுகளை வெற்றிகரமாகவே நிறைவு செய்துள்ளது. அவரது ’போர் முகங்கள்’ ஓவியங்கள் இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய அரசியலுக்குக் கிடைத்துள்ள ஆயுதங்கள். இந்த ஆயுதங்களைச் சமூகத்தின் பெரும் திரளுக்குக் கிடைக்கச் செய்வது தமிழ்த் தேசியர்களின், மனித உரிமை ஆர்வலர்களின் கடமை.

புகழேந்தியின் எந்த ஓவியக் காட்சியும் தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரளை நோக்கி முன் நகர்த்தப்படவில்லை. அவ்வாறு முன் எடுத்துச் செல்வதற்கு, ஓவியக் கண்காட்சி மட்டும் அல்லாமல், மலிவு விலைப் பதிப்புகள் வெளியிடுவது, துண்டறிக்கைகளாக வழங்குவது, ஒளிப்பதிவு செய்தும் புகைப்படங்களாகவும் காட்சிப் படுத்தி குறுந்தகடுகளில் அடைத்து வழங்குவது எனப் பல வடிவங்களை முன்னெடுக்க வேண்டும்.

உலகமய ஊதுகுழல்களின் ஓரவஞ்சனைகளையும் அவமதிப்புகளையும் எதிர்ப் பரப்புரைகளையும் கடந்து, ஓவியர் புகழேந்தி களத்தில் நிற்பதே குறிக்கத்தக்க வெற்றிதான். இந்த வெற்றிக்குப் பின்னால், அவரை ஆதரித்து வளர்த்தெடுத்துள்ள தமிழ்த் தேசிய இயக்கங்களும் தலைவர்களும் ஆயிரக் கணக்கான உணர்வாளர்களும் உள்ளனர்.
தமிழ்த் தேசிய அரசியலின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றிகளில் ஒன்றாகவும் இதைப் பார்க்கலாம்.

ஓவியங்களின் மீது நாட்டமில்லாத எனக்கு, ஓவியர் புகழேந்தியின் ஓவியங்கள் புரியும்போதெல்லாம், ‘நமக்கே புரியும்படி வரைகிறாரே, இவர் எப்படி சிறந்த ஓவியர் ஆவார்?’ என்ற கேள்வி எழுந்தது உண்டு.

ஓவியக் கலை, மக்களின் பொது நலனுக்காகவே தோன்றியது. மக்கள் திரள்தான் ஓவியக் கலையை வளர்த்தது. ஓவியர்கள், மக்கள் நலனுக்கானவர்களே தவிர, மேட்டுக் குடியினரின் அந்தரங்கச் செயலாளர்கள் அல்லர். ஆகவே, தமிழகக் கலை வடிவங்களை மேம்படுத்துவோம். மக்களைச் சந்திப்போம்.

கலைத் துறையில் தமிழ்த் தேசிய அரசியலுக்குப் போதுமான கவனம் இல்லாத நிலையை மாற்ற வேண்டும். அம்மாற்றத்துக்கான படிப்பினைகளை ஓவியர் புகழேந்தியின் 25 ஆண்டு கால அனுபவங்களிலிருந்து நிறைய கற்கலாம். போர் முகங்கள் காட்சியில் உள்ள ஓவியங்களில் பெரும்பான்மை, இழப்பைப் பதிவு செய்பவையாக உள்ளன. அதேவேளை, நம்பிக்கையையும் அவை தரத் தவறவில்லை. ஓவியர் புகழேந்தியின் கலைப் போருக்குக் கிடைத்த வெற்றி இக் காட்சி. தமிழ்த் தேசிய அரசியலால், தமிழகத்தில் ஒரு கலைஞனைப் பாதுகாத்து வளர்க்க முடியும் என்பதன் சான்றும் இதுவேதான்.