நெஞ்சைச்சுடும் பொறிகள்

ஸ்டீபன்


தலித் முரசு, பிப்ரவரி 2004


கலை, இலக்கியப் படைப்பாளிகள் எந்த அளவுக்குச் சமூகம் சார்ந்து தங்கள் படைப்பில் வெளிப்படுகிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் படைப்பின் ஆயுளும் நீடித்திருக்கும். எழுத்தாளர்களாகட்டும் அல்லது ஓவியர்களாகட்டும் அல்லது இன்னபிற கலைஞர்களாகட்டும், மிக அரிதாகவே அவ்வாறு வெளிப்படுகிறார்கள். வெளிப்படுகிறவர்களும் மிக அரிதாகவே பார்வையாளனை உரிய எதிர்வினைக்கு உள்ளாக்குகிறார்கள். வெறும் கலை மட்டுமின்றி அல்லது வெறும் சமூக ஆவேசம் மட்டுமின்றி இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து கூர்மையாக வெளிப்படும்போதுதான் பார்வையாளர் மனத்தில் ஒரு படைப்பு தனது வெற்றியை அழுத்தமாக நிறுவ முடியும். ஏற்கெனவே பலமுறை அவ்வாறு நிறுவிக்காட்டிய ஓவியர் புகழேந்தி மறுபடியும் 'புகைமூட்டம்' மூலம் நிறுவியுள்ளார்.

மதவாதம், சாதியம், ஆதிக்க சக்திகளின் அடக்குமுறை, இனவெறி, மனித உரிமை அத்துமீறல், ஏகாதிபத்திய நாட்டாமையின் கோரமுகம்... இப்படி இன்றைய தேசிய சர்வதேசிய நடப்புகளின் மறுபக்கத்தை 'புகைமூட்ட' ஓவியங்களில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் புகழேந்தி.

பார்த்த மாத்திரத்திலேயே புகழேந்தியின் ஓவியங்கள் நமது மனதுக்குள் பன்முகச் சலனங்களை ஏற்படுத்துகின்றன. ஒரு ஓவியத்திலிருந்து இன்னொரு ஓவியத்துக்குப் பார்வை கடந்த பிறகும், முந்தைய ஓவியத்தின் கூர்மை, கூடவே நம்மைக் கீறிக்கொண்டு வருகிறது. அதிலிருந்து விடுபட்டு அடுத்த ஓவியத்திற்குள் கண்ணையும் கருத்தையும் செலுத்தினால், அதற்கடுத்த ஓவியத்தை நோக்கி நகரும்போது மீண்டும் இதே அவஸ்தை. மொத்தம் 26 ஓவியங்கள். எல்லாவற்றையும் ஒரு சுற்றுப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, குமுறலுடன் நமக்குள் முடங்கிக் கிடந்த சமூக ஆவேசத்தை தட்டி, எழுப்பி உசுப்பேற்றி விடுகிறார் புகழேந்தி.

ஓவியங்கள் அதே இடத்திலிருக்கின்றன. அவற்றைப் பார்த்த நமது மனம் மட்டும் 'முரட்டுக்காளை' போல எங்கெங்கோ ஓடித்திரிகிறது. சமூக யதார்த்தம் புரிந்தவர்களாகவும் நாம் இருப்பதால், திமிறித் திரியும் மனக் காளையை அடக்கி 'கொட்டிலில்' சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

ஒவ்வொரு ஓவியத்துடனும் இணைக்கப்பட்டுள்ள குறுங்கவிதை பார்வையாளனை இன்னும் சூடேற்றுகிறது. கவிஞர்கள் இன்குலாப்பும் காசி ஆனந்தனும் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.

'மிசாவில் முடக்கி... தடாவில் நெரித்து... பொடாவில் வளைத்து... முடக்கப்படுகிற மனித உரிமை' ஓவியமும் கவிதையும் ஒருசேர நமது மனதைப் பிசைகின்றன.

'அவர்கள் உறிஞ்சுவது எங்கள் மண்ணின் நீரை அல்ல...' என்ற கவிதைக்கான புகழேந்தியின் படம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதை அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது.

'எரிக்கப்படும்முன் அடுக்கப்பட்ட மனித விறகுகள்' என்ற கவிதையும் ஓவியமும் வாடிய பயிர்களுக்காக வாடிய வள்ளலார் பிறந்த மண்ணில் மனித உயிர்களுக்கு இருக்கும் 'மரியாதையை' உரக்கச் சொல்கிறது.

'குறிகளாய் விரைந்த சூலம்' என்ற இரண்டே வரிக் கவிதையும் அதற்கான புகழேந்தியின் ஓவியமும் சுருக்கென்று நெஞ்சில் இறங்குகிறது. 'பாரதப்போரில் வடவனுக்குச் சோறு போட்டதாக முழங்கினாய்... உன் சொந்த மண்ணில் தமிழனுக்கு நீ போட்டது என்ன?' என்ற வரிகளும் ஓவியமும் நெஞ்சைச் சுட்ட திண்ணியம் நிகழ்ச்சியை மறுபார்வைக்கு உட்படுத்துகின்றன. தமிழ் மற்றும் தமிழர்கள் சார்ந்த அடையாளங்களின் ஏகபோகப் பிரதிநிதிகளாகக் கடந்த காலங்களில் தங்களைக் காட்டிக் கொண்டவர்களின் முகமூடியைக் கிழித்தெறிகிறது புகழேந்தியின் தூரிகை.

'சாவூருக்குப் பயணம் போனது ஒரு தொடர்வண்டி' என்ற வரிகளுடனான ஓவியம் கோத்ரா நிகழ்வின் கோர முகத்தைச் சுடச்சுட நமக்குள் பாய்ச்சுகிறது.

விவசாயிகளின் வாழ்க்கையை வெறிச்சோட வைத்திருக்கும் வறண்ட நிலங்களையும் ஈராக் மீதான அமெரிக்காவின் அத்துமீறலையும் குமுறலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் புகழேந்தி.

பார்வையாளன் மனத்தில் இவ்வளவு சலனங்களை ஏற்படுத்திய புகழேந்தி நாளை குறித்த நம்பிக்கையை விதைக்கவும் தவறவில்லை. துப்பாக்கி முனையில் அமைதிப் புறாவைக் காட்சிப்படுத்தும் ஓவியம், அதுவரையில் பார்வையாளர் மனதில் எழுந்த அதிர்வுகளை சற்றே ஆற்றுப்படுத்துகிறது.

'எரியும் வண்ணங்கள்', 'உறங்காநிறங்கள்', 'சிதைந்த கூடு', 'திசை முகம்' ஆகிய தலைப்புகளில் ஏற்கெனவே நான்கு ஓவியக் கண்காட்சிகளை நடத்தியிருக்கிறார் புகழேந்தி. அந்த வரிசையில் 'புகைமூட்டம்' ஐந்தாவது.

சமூக உலக நடப்புகள் தன்னுள் ஏற்படுத்திய அழுத்தத்தை ஒரு கலைஞனாக ஓவியத்தில் பதிவு செய்திருக்கிறேன் என்று சொல்கிறார் புகழேந்தி.

சமூக அக்கறை மிகுந்த எல்லோருக்குள்ளும் இத்தகைய அழுத்தங்கள் உண்டு. ஆனால் எல்லோருக்குமே வெளிப்படுத்துவதற்கான ஊடகமும் திறமையும் வாய்த்துவிடுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் ஆதங்கத்துடன் மற்றவர்களின் வெளிப்பாடுகளுக்காக சிரத்தையுடன் காத்திருக்கிறார்கள். புகழேந்தி போன்ற ஒவ்வொரு கலைஞனின் வெளிப்பாட்டிலும் அவர்கள் தங்களை மேன்மேலும் கூர்மையாக்கிக் கொள்கிறார்கள். சமீபத்திய 'புகை மூட்டம்' அவர்களை இன்னும் கூர்மையாக்கியிருக்கிறது.

ஒருபுறம் சமூக உணர்வை மழுங்கடிப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். 'பிரபல', கலை இலக்கியவாதிகள். இன்னொரு புறம் சமூக நேயம் மிக்க படைப்பாளிகள் தங்கள் படைப்புகளால் ஊதி, ஊதி சமூகக் கனலை அணையாமல் பாதுகாக்கிறார்கள்.

புகழேந்தி ஒரு கனல் கலைஞன். தொடர்ந்து ஊதுவார். பொறி பறக்கும்.

பறக்கட்டும்.