எல்லா நூற்றாண்டையும் எழுதி நடக்கும் ஓவியங்கள்

சூரியதீபன்


கணையாழி, மார்ச் 2000


ஒரு பொட்டுத் தண்ணியைக்கூடத் தனக்கு வெளியே ஓடவிடாமல் தெறமான மழையைக் களிமண் பூமி உள்ளிழுத்துக் கொள்கிறது. மாதக்கணக்கில் ஈரப்பதத்தை எதுக்களித்துக் கொண்டே இருக்கும்.

ஓங்கி அடித்த ஒரு நூற்றாண்டு மழை, உணர்வுப் புலன்கள் வழியாக இறங்கி ஓர் ஓவியனின் தூரிகையில் எடுத்த பத்தாயிரத்தில் எதுக்களித்திருக்கிறது.

ஒரு கலைஞனின் படைப்பு அல்லது ஓவியனின் தூரிகைக்கு ஆதாரமானவை எவை? உடை, வசிப்பிடம், பிரபஞ்ச வாழ்வின் அடிப்படை ஆதாரங்கள். இவை ஆதாரங்கள் போல் தெரியும். ஆனால் இவை மீது எழுகிற மனித உறவுகள்தான் அடிப்படை. வாழ்தலுக்கான இயங்குதலின்போது மனிதர்களுக்கிடையே கொள்ளும் உறவுகள் ஆதாரமானவை. ஆதாரமான மனித உறவுகளின் சிதைவுகள், அசிங்கம், சந்தோசம். இவை இந்த ஓவியங்கள்.

பாரம்பரியமான மனித உறவுகளாகக் கடந்த கால ஓவியங்களில் நம்கண்முன் சில உருட்டித் திரட்டப்பட்டிருக்கின்றன.

ஓடைக்கரையில் ஆடு மேய்க்கும் சிறுமியையோ, உழவுக்காட்டில் ரெட்டைக் கலைப்பைப் பிடிக்கும் உழவனையோ, மேழி அழுத்தத்தால் அசையமுடியாமல் அசைந்து யானை போல் நடக்கும் உழவு மாடுகளையோ, பருவக் கோளாறால் பயிர் வெள்ளாமை காணாமல் போன புஞ்சைகளின் பாதரவையோ (துன்பத்தை) கணவன், குழந்தை என்று எந்த நிழலும் இல்லாமல் அலைகிற ஒத்தைப் பாரிப் பொம்பிளை பற்றியோ, வாழ்வின் பூமத்தியரேகை வெப்பத்தில் சுருண்டுகருகும் மனிதர்களையோ, விளிம்புநிலை ஆட்கள் கூட்டமோ, வாழ்க்கையோ, உறவுகளோ ஓவியங்களில் இறங்கியதில்லை. பாரம்பரிய ஓவியங்களில் இவை இல்லை. அந்த சனநாயகம் கடந்த நூற்றாண்டுகள் வரை ஓவியங்களுக்கு வழங்கப்படவில்லை.

சிற்பமும், ஓவியமும், கவிதையும் அன்றைக்குப் பிரதான கலை வடிவங்கள். எல்லாமும் பிரபுக்குல வாழ்க்கையையும் உயர்நிலை எண்ண ஓட்டங்களையும் சத்துப்பிடிப்பும் திரட்சியுமாகக் கொண்டவை.

இந்தப் பாரம்பரிய மரபுகளிலிருந்துதான் நிகழ்காலக் கலைஞன் உயிர்த்தெழ வேண்டியிருக்கிறது. அவனுடைய 'தான்' என்பது கடந்த காலம்; அதற்குள்ளிருந்து சமகால 'தான்' எழுந்து வரவேண்டியிருக்கிறது. இன்றையக் கலைஞன் உலகம் முழுவதையும் தன் நீண்ட கைகளால் அளவுகிறான். அடக்குமுறைகள் எதிர்த்தெழுகிற நெருப்பாய் எழுகிற மனிதர்களைக் காண்கிறான். உள்ளூர் ஒடுக்குமுறையிலிருந்து உலகளாவிய ஒடுக்குமுறை வரை அவன் முன் பீறிட்டடிக்கிறது. வியட்நாம் பூமியில் வானளாவிய குண்டுமழையில் வீறிட்டு ஓடுகிற நிர்வாணச் சிறுமியின் அலறல் கேட்கிறது. அந்த ஒற்றைச் சிறுமியின் அலறலை மட்டும் அல்ல; அதன் மூலம் உலகத்திற்கு முதன்முதலாக அந்தப் புகைப்படத்தைத் தந்தானே, அந்தப் புகைப்படக் கலைஞனையும் பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் ஓவியர் புகழேந்தி.

ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேனா எடுத்த கார்க்கி முதல் ஒடுக்குமுறைக்கு எதிராக இயந்திர நகங்கள் (துப்பாக்கி) ஏந்திய விடுதலை வீரர் வரை வருகிறார்கள். சமுதாயத்தைக் கூர்ந்து அலசும் கார்க்கியின் கண்களுக்கு எதிரே, பக்கவாட்டில் பேனாவே துப்பாக்கியாய் மாற்றப்பட்டிருக்கிறது. இலக்கியவாதிகளே, நீங்கள் எந்தப் பக்கம்? என்று கேட்டு பேனா ஏந்திய அந்த மாவீரனை அப்படியில்லாமல் வேறு எப்படி விளக்கப்படுவது? வலது பக்கம் கறுப்பு, இடது பக்கம் சிவப்பு வண்ணம், துல்லியமாகத் தூக்கிக் காட்டுகிறது.

மாறாய், தனது படைப்புகளைப் போலவே தானும் அமைதியாய் தாகூர் அவரது சோற்றில் (மூளையில்) புறப்படும் அமைதி, விழிகளில் நிறைந்து தாடி வழியாக வழிகிறது, கறுப்பு, சிவப்பு, வண்ணப் பின்னணி இல்லாமல் இயல்பான பிரவுன் வண்ணம்.

காந்தி ஒரு பக்கமாய் யோசனையுடன் கவிந்த முகம், மார்பளவு ஓவியம். மேலே கால்கள் எதிர்த்திசையில். பாபர் மசூதியில் விழுந்த சம்மட்டி ஒலியில் கவிழ்ந்த முகம். எதிர்த்திசையில் நடக்கின்றன கால்கள்.

பகத்சிங் தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டி முகம் மூடிய உருவம். வலது இடதுபுறங்களில் தூக்குக் கயிறு மேலும் கீழும் ஆடும் இருநிழல் உருவங்கள்; தூக்குக் கயிற்றின் நிழலில் இன்னும் நான்கு நிழல்கள் தொடரும் என, சமகாலத்தை எதிரே நிறுத்துகிறார்.

அம்பேத்கர் நெல்சன் மண்டேலா; ஐன்ஸ்டீன்:

இடது மூலையில் கால் பகுதிச் சூரியன்; புறப்படும் அறிவுச் சுடரின் குறியீடாய், பெரியார்.

புரட்சி, "மாலை நேர விருந்தல்ல" என்ற மாவோ, மாலை நேரக்குளிர்ச்சி முகத்தில் வாடிய அவர்.

உலகின் திசைகளைத் திருப்பிவைத்த மாவீரர்கள் மட்டுமல்ல. உலகைக் குலுக்கிய வரலாற்றி நிகழ்ச்சிகளும் உயிர்த்தெழ வைக்கப்பட்டிருக்கின்றன.

வெண்மணித் தீயில் துடிக்கும் உடல்கள். நெருப்புக் கொழுந்துகளுக்கும் மேலாகத் தாவ முயன்று, முடியாமல் தீக்கொழுந்துகளாக கைவிரல்கள் கருகியவர்களில் ஆண், பெண், குழந்தை அனைவரும் உண்டு என்ற யதார்த்தத்தைப் புரிய வைக்கும் உருவங்கள்.

1965 சனவரி இறுதிவாரம் வெடித்த இந்தி எதிர்ப்பின்போது, இந்தியின் இறுதி வேர்கள் இன்னும் தோண்டி எறியப்படாத இன்றைய அரசியல்சூழலில் இன்னும் சொன்னால் இந்தி என்ற மொழி வடிவில் அந்த ஆதிக்கம், சமஸ்கிருதம், இந்துத்துவா என்ற துணைகளோடு நடந்து வருகிற அரசியல் நிலைகளில் தேக்குமரத்திரேகத்தைத் தீக்கிரையாக்கிய கண்மணிகள் கருகும் காட்சி எதிரிகளைத் தேடச் சொல்கிறது. எதிரிகள் வெளியே மட்டுமல்ல; உள்ளேயும்தான் என்கிறது உறைக்கும் யதார்த்தம்.

நாஜிப் படுகொலை, நிர்வாணமான உடல்களுடன், பீதி நிறைந்த கண்களுடன் பெண்கள். அந்த அபலைகளின் பக்கத்தில் வாளைமீன் குவியல்போல் அடுக்கி வைக்கக்பட்ட பிணங்கள்.

வல்வைப் படுகொலை - பிணவாடையும் மரணவாடையும் வீசும் அந்த நேரத்திலும் நிர்வாணமாக்கப்பட்ட மனிதர்களில் வெளிப்படவில்லை பயம். மாறாய் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கண்கள்.

போராடக் கற்றுக் கொண்டவர்களின் நெஞ்ச நிமிர்ப்பும், போராடக் கற்றுக்கொடுக்கப்படாத சாதாரண மக்கள் நாஜிய படைகளை நோக்கும் மிரட்சியும் ஒரு நல்ல ஒப்பீடு. தனித்தனி ஓவியங்களாயிலும் இப்படித்தான் ஒப்பிடத் தோன்றுகிறது. வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்களுக்கு அப்படியொரு வரலாற்று ஒப்பீடு இல்லாமலும் ஓவியன் எழுதியிருக்க முடியாது.

ஓவியங்களில் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கோட்டமான செய்தி. ஒடுக்குமுறையாளர்கள் எல்லாரும் கறுப்பு உருவங்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். ஒடுக்குமுறையை எதிர்த்து உருக்குலைந்தவர்கள் இயல்பான வண்ணத்தில் மிளிர்கிறார்கள்.

யாழ் நூலகம் எரிப்பு சென்ற நூற்றாண்டின் கறுத்த சாபம். எரிந்த நூல்கள் கறுப்புக் குவியலாய்க் கிடக்க, பின்புலம் முழுவதும் ஒரே சிவப்பு. காலங்களின் அறிவுச் சேமிப்பை எரித்துவிட்டாலும் எஞ்சியிருக்கும் கங்கிலிருந்து அறிவின்கிழக்கு எழும் என்பதன் குறியீடு.

யாழ் வெளியேற்றம். நிறைய சிந்திப்புக் கிளைகளைப் படர வைப்பதும், நிறைய யோசிப்பு விழுதுகளை ஊன்ற வைப்பதுமான ஓவியம். யாழ்க்கோட்டையை விட்டு நீங்கிச் செல்லும் இரு கால்கள்; அதன் பின்னணியில் நிறைய முளைத்துப் பரவிய ஈரிலைகள்; அது வெளியேற்றம் அல்ல; மீண்டும் முளைத்தலுக்கான அடி வைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறது.

மினுக்குகிற சிறு நட்சத்திர வெளிச்சத்தில் ஈழப் போராளிகள் நடக்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்தது நட்சத்திரத்தையல்ல; சூரியனைத் தேர்வு செய்து நடக்கிறார்கள்.

குறிப்பிடப்படவேண்டியது. ஒவ்வொரு ஓவியத்திற்கும், ஓவியத்திற்கு ஈடான இன்குலாப் கவிதை வரிகள்:

ஹிரோசிமா ஓவியத்திற்கு

"இன்னும் ஆறஆத காயங்களோடு

இன்னும் பிறந்து கொண்டிருப்பது

நான்தான்"

பகத்சிங் ஓவியத்திற்கு

"இன்குலாப் ஜிந்தாபாத்

முழக்கத்தில் தோற்கும்

அரசின்

கொலைக் கயிறுகள்"

என்பதுபோல், ஆழ அர்த்தமுள்ளவை.

எரியும் வண்ணங்களில் தூரிகையைத் தொட்டவர் புகழேந்தி. எரியும் பிரச்சினைகளைத் தொட்டு உறங்கா நிறங்களாய் உலவ விட்டிருக்கிறார்.

20ஆம் நூற்றாண்டு வரலாறு ரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகள் கொண்டது. ஏகாதிபத்தியத்தி லிருந்து – விடுதலை - இனவிடுதலை - பெண் விடுதலை - சாதிய விடுதலை என்ற கொந்தளிப்பு களையும் எரிமலைகளையும் நமது கண்களுக்குள் புகுத்தி, தூங்காத கண்களை உலவ விட்டிருக்கிறார்.

உறங்கா நிறங்கள், தூங்காத கண்கள், விழிப்பான இதயம் தொடரவேண்டியவை.

"இனி வரும் நூற்றாண்டு அமெரிக்கர்களுடையதல்ல. சூப்பர் பவர் நாடாக இனியும் அமெரிக்க நாடு நீடிக்கும் என அமெரிக்கர்கள் கனவு காணவேண்டாம். அமெரிக்க மக்களாகிய நாம் உலகைக் கோலோச்சுவது என்பது இனி அவ்வளவு எளிதல்ல. வளர்ந்து வரும் ஆசிய ஆப்பிரிக்க நாட்டு மக்களின் போராட்டங்கள் உலக வரைபடத்தை மாற்றியமைக்கப்போகின்றன. இனிவரும் காலம் அவர்களுடையதே. அமெரிக்கர்கள் இந்தப் போக்கை, கணக்கில் எடுத்துக்கொண்டுதான் இனி செயல்பட வேண்டும்" என்று அமெரிக்க அதிபர் பில்களிண்டன் வெளிப்படையாகச் சொல்லி யிருக்கும் இந்தச் சூழலில் விழிப்பைத் தொடர வேண்டியது நிச்சயம். கிளிண்டன் என்ற ஒற்றைக் குரலாக இதனைக் கொள்ள வேண்டியதில்லை. அனைத்து ஆதிக்க புரியினரின் மொத்தக் குரலாகக் கொண்டு போராட்ட உணர்வை விழிப்போடு எடுத்துச் சென்றால் மட்டுமே அடுத்த ஆயிரம் ஆண்டை நம் கைவசம் வைத்திருக்க முடியும்.

ஓர் உண்மையான கலைஞன், தன் சமகாலப் பிரளயங்களை சரியாகப் பிடிக்கிறபோது, ஒரு நூற்றாண்டு எல்லா நூற்றாண்டையும் எழுதிப் போகும். எதிர்வரும் நூற்றாண்டுகளும் இதற்குள் அடங்கும்.