இலக்கியம்போல் வரைகிறீர்கள்

திலகவதி


சிறப்பு மலர் - 2004


மொழிகளினூடான எனது பயணத்தில், ஓவியங்களின் குறுக்கீடு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. உணர்வுகளைக் கிளர்த்தாமல், எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் எத்தனையோ ஓவியங்கள் என்னைக் கடந்து போயுமிருக்கின்றன. சில ஓவியங்கள் மோனலிசாவின் புன்னகை மாதிரி உள்ளுக்குள்ளேயே உறைந்தும் போயிருக்கின்றன. அந்த ஓவியங்களின் தாக்கம் அப்படி. எந்த ஒரு படைப்பும் நேர்மையானதாக, உண்மையானதாக இருந்தால்தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். புகழேந்தியின் ஓவியங்கள் அதற்கும் ஒரு படிமேலே... உயிரோட்டத்துடன் இருக்கின்றன. அந்த உயிரோட்டம்தான் அவருடைய ஓவியங்களின் சிறப்பு.

உங்களது 'தூரிகைச் சிறகுகள்' நூலில், சிங்கப்பூரில் நடந்த ஒரு கலந்துரையாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். கலந்துரையாடலில் ஒரு கேள்விக்கு, "ஓவியங்கள் பூடகமாக இருக்கலாம், புரியாமல் இருக்கக்கூடாது. பார்ப்பவரைப் பல கோணங்களில் சிந்திக்க வைப்பதே ஓவியங்களின் வேலை. எப்படி ஒரு நல்ல கவிதை படிப்பவர்களை யோசிக்க வைக்கிற புதிய தளத்திற்கு இட்டுச் செல்கிறதோ, அதே வேலையை எனது ஓவியம் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறியிருந்தீர்கள்.

அந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. எந்தப் படைப்புமே பன்முகத்தன்மை கொண்டதாக மக்களின் ரசனையே மேம்படுத்துவதாக, ஒரு புதிய உணர்வுத் தளத்திற்கு இட்டுச் செல்வதாக இருக்க வேண்டும். 'உறங்கா நிறங்கள்' புத்தகத்தின் அட்டைப்பட ஓவியம் சோமாலியா நாட்டின் பஞ்சத்தையும் பசியையும் உணர்த்துவதோடு, உள்ளுக்குள் பெருந்துரயத்தைக் கிளர்ந்தெழச் செய்து விடுகிறது. அந்த ஓவியத்தின் உயிர்ப்புதான் படைப்பின் வெற்றி. அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் வியத்நாம் சிறுமி (மைலாய்), ஜாலியன் வாலாபாக், வெண்மணி, ஹிரோஷிமா, ஒரிசா புயல் ஆகிய சித்திரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் வருகிற நூற்றாண்டுகளிலும் எதிரொலிக்கும். மலேசியாவில் நடந்த உங்களது ஓவியக் கண்காட்சியில், வெண்மணி ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஒரு அமெரிக்கர் மிகுந்த துயரத்தை அனுபவித்து உங்களுடன் பேசியதைக் குறிப்பிட்டிருந்தீர்கள் (தூரிகைச் சிறகுகள்). அதில் வியப்பொன்றுமில்லை. உங்கள் தூரிகையிலிருந்து எழுந்த கோடுகளும், வண்ணங்களும் ஏற்படுத்தும் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல.

"கலையை ரசித்து மகிழ கலாரீதியாகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்" என்றார் காரல் மார்க்ஸ். நம் நாட்டில் அத்தகைய பயிற்சி எடுப்பவர்கள் குறைவு. அதற்கென மெனக்கிடுபவர்கள் கூட அதிகம் இல்லை. அதனால்தான் நீங்கள் குறிப்பிட்டதுபோல, ஓவியங்களில் 80 ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறோம். ஓவியங்களை நுனிப் புயல் மேய்வது மாதிரி பார்க்கிறோம். உங்களைப் போன்றவர்களின் படைப்புகள் வெளிப்படும்போதுதான் கலையைப் போற்றக் கற்றுக்கொள்கிறான் மனிதன். உங்களது 'பஞ்சம்' ஓவியத்தைப் பார்த்துவிட்டு, அந்த ஓவியம் ஏற்படுத்திய தாக்கத்தில் அதுவரை சோமாலிய நிவாரண நிதிக்காக ஒரு பைசாக் கூட செலவழிக்காத பெண்மணி (மோகனா), இப்பொழுதெல்லாம் தவறாமல் உண்டியலில் காசு போடுகிறார். இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் எந்த ஒரு கலையும் செய்ய வேண்டிய தலையாய பணி. நான் ஏற்கெனவே சொன்னது போல உங்கள் ஓவியங்களில் இழையோடும் உயிர்ப்பு அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து விடுகிறது.

பொதுவாக ஒருவர் எழுதும் பயணக் கட்டுரையோ, பயண அனுபவங்களோ வாசிப்பவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிற ஒன்று. வெவ்வேறு நாடுகளைப் பற்றியோ, இடங்களைப் பற்றி தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகவோ படிப்பவர்கள்தான் இங்கிருக்கிறார்கள். ஆனால், உங்களது பயண அனுபவங்கள் வாசிப்பவனுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களது தூரிகைச் சிறகுகள் நூலை 'ஒரு ஓவியன் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்குப் போய் வந்த அனுபவங்கள்' என்று சாதாரணமாய்ச் சொல்லிவிட முடியாது.

மிக எளிமையான நடையில் உங்களைப் பாதித்தவர்களையும், பாதித்த விஷயங்களையும் சொல்ல முற்பட்டிருக்கிறீர்கள். அதில் வெற்றியும் பெற்று விடுகிறீர்கள். சொல்லப்போனால் அந்த நூல் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க நாடுகள் சபையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது என்று கூறும் நீங்கள்தான், மனித உரிமை மீறல்களைப் பொறுக்காத, மனித உரிமைக்காகக்  குரல் கொடுக்கும் அமெரிக்க மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கிறீர்கள். இதுதான் படைப்பு நேர்மை.

அமெரிக்காவில் ஒரு கறுப்பின இளைஞனைத் தாக்கிய காவல் அதிகாரிகளுக்கு (தொலைக்காட்சிச் செய்தி) எதிராக மக்கள் குரல் கொடுக்க, சில மணிநேரங்களில் அந்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்படுகிறார். தமிழகத்தில், தஞ்சையில் 60 வயது மனநோயாளியான முதியவரை ரோட்டில் இழுத்துப்போட்டு அடிக்கையில் பொதுமக்கள் வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த இரு நிகழ்வுகளையும் உங்களது நூலில் மதிப்பீடு செய்கிறீர்கள். மனித உரிமை மீறலை உணர்த்துவதோடு மனித நேயம் மண்ணாகிப் போனதையும் முகத்திலறைந்தாற்போல் உணர்த்தி விடுகிறீர்கள். நம்நாட்டில் ரோட்டில் ஒரு நாய் அடிபட்டுக் கிடந்தால், அதன் தோல் தார்ச்சாலையில் சக்கையாக ஒட்டிக்கொள்ளும்வரை அதன் மீது ஏற்றிச் செல்பவர்கள்தான் அதிகம். மனிதன் அடிபட்டுக் கிடந்தால் சற்று விலகி, சுற்றிக்கொண்டு செல்வார்கள் அவ்வளவுதான். இதற்கெல்லாம் அடிப்படையான காரணம், சுயநலம் மட்டுமல்ல, போதிய சமூக விழிப்புணர்வு இல்லாதது மற்றும் சக மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்ளாதது.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் எந்திர வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். 'தமிழகத்தில் சமைக்கின்ற எந்திரமாக இருக்கின்ற பெண், அமெரிக்காவில் உழைக்கின்ற எதிரமாகி விட்டாள்' என்றும், அவர்களது வாழ்க்கை சதா ஓட்டம் நிறைந்ததாக இருப்பதையும், கணவன் மனைவி பெற்றோர் குழந்தைக்கான உறவுப் பாலமாக கைத்தொலைபேசி இருப்பதையும் எழுதியிருந்தீர்கள். இன்றைக்குத் தமிழ்நாட்டிலேயே பெருநகரங்களிலும் நகரங்களிலும் வேலைக்குப் போகிற பெண்களின் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது. உழைக்கும் பெண் வீட்டிலும், பணியிடத்திலும் ஷிப்டு முறையில் வேலை பார்க்கும் எந்திரமாகிப் போனாள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

தூரிகைச் சிறகுகள் நூலில் கலை குறித்த உங்களது எதிர்ப்பார்ப்புகள், ஏக்கங்கள், தாகம், தேடல், அத்தனையும் வெளிப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. "தூரிகைச் சிறகுகள்" நூலில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம் இருக்கிறது. உங்களை மலேசியாவிற்கு அழைத்துச்செல்லும் பொறுப்பேற்றிருந்த "மலேசிய நண்பன்" இதழின் ஆசிரியர் ஆதிகுமணன் துவங்கி பிராங்பர்ட்லிருந்து உங்களைச் சென்னைக்கு வழியனுப்பி வைத்த இராசன் வரை, ஒவ்வொரு இடத்திலும் உங்களுக்கு வழிகாட்டிய, உதவிய நண்பர்களையும் தோழர்களையும் நூல் முழுக்கப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். அந்தப் பட்டியல் தூரிகைச்சிறகுகள் நூலுக்கே ஒரு தனி அழகையும் மரியாதையையும் ஏற்படுத்திவிடுகிறது.

பல்வேறு பத்திரிக்கைகளுக்காகவும், பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு காலகட்டங்களில் நீங்கள் வரைந்த ஓவியங்களைத் தொகுத்து வெளிவந்திருக்கும் முகவரிகள் பார்த்தேன். பாரதி, பெரியார், புதுமைப்பித்தன், பாரதிராஜா, மு.வ., மார்க்ஸ், சுரதா, என வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பல்துறைப் பிரமுகர்களின் ஓவியங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இவை மட்டும் இடம் பெற்றிருந்தால் இத்தொகுப்பு முழுமை பெற்றிருக்காது. கண்களில் விடுதலைத் தாகத்தை தேக்கி, கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் அந்தக் கடைசி ஓவியமான போராளிப் பெண்ணின் ஓவியம், இயல்பாக, ஒரு நிறைவைக் கொண்டு வந்துவிடுகிறது. இதுதான் உங்களது தனித்துவம், அடையாளம். அந்த அடையாளம் நூலுக்கு தனி கம்பீரத்தை வரவழைத்து விடுகிறது.

"என்னைப் பொறுத்தவரை என்னுடைய வெளிப்பாடுகளுக்கு நிறங்கள் எப்படி வலிமை மிக்க ஒன்றாய்க் கருதுகின்றேனோ அதேபோல, கோடுகளையும் கூர்மையானதாக நம்புகிறேன். என்னுடைய உணர்வுகள், அக்கோடுகளில் அதிர்வுகளாக வெளிப்படுகின்றன என்னுடைய கோடுகள் அமைதியை அல்ல அதிர்வுகளையே பிரசவிக்கிறது" (அதிரும் கோடுகள் முன்னுரையில்) மேலே குறிப்பிட்டத்தை அதிரும் கோடுகள் நூலில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு ஓவியமும் உறுதிப்படுத்தி விடுகிறது. சமூக விடுதலைக்காக முஷ்டி உயர்த்தும் கைகள், கூண்டை உடைத்துக் கொண்டு வெளியேறும் பறவை, பட்டமரம், துளிர்க்கும் செடி, சிறகு முளைத்த பெண், பாம்புத் தலை மனிதன் என நீளும் ஒவ்வொரு ஓவியமும் ஒரு அதிர்வை ஏற்படுத்தி விடுகிறது. ஒன்றுமில்லை... உதாரணமாக விரியத் திறந்து கிடக்கும் ஜன்னல் மற்றும் பெண் (பக்.81) அந்த ஒரு படம் போதும். ஓவியங்களின் சிறப்பை உணர்த்த, பேனாவை ஆயுதமாக ஏந்திய மனிதன் முதலாக அத்தனை ஓவியங்களும் பார்வையாளனுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துவதோடு, சிந்திக்கவும், ரசனையை உயர்த்திக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கின்றன. கோடுகளால் உணர்வுகளைக் கிளற முடியும் என்ற சாத்தியத்தை உணர்த்தியிருக்கிறீர்கள். உங்கள் ஓவியங்கள் காற்று மாதிரி பார்வையாளனைக் கடந்து போய்விடாது. ஊர் விலக்கில் உயர்ந்து நிற்கும் சுமைதாங்கிக் கல்மாதிரி ஒரு நிரந்தர பிம்பத்தை மனதில் பதித்து விடும். இது உறுதி.

முன்னிரவுப் பொழுதில் மறுபடியும் ஒருமுறை உங்கள் ஓவியங்களை (உறங்கா நிறங்கள், அதிரும் கோடுகள், முகவரிகள்) ஒவ்வொன்றாய்ப் புரட்டுகிறேன். ஒவ்வொரு ஓவியத்தைப் பார்க்கும் போதும் பின்னணி இசை மாதிரி துரத்தும் நினைவுகள், மனசை இறுக்கமாக்கும், இளகச் செய்யும், பல்வேறு உணர்ச்சிகளைக் கிளப்பும் ஓவியங்கள். தான் தன் உலகம் என்று சுருங்கி விடாமல் உலகளாவிய பிரச்சினைகளையும் தூரிகையால் வடித்தெடுக்கும் உன்னதச் சித்திரங்கள். தனித்துவம் வாய்ந்த படைப்புகள். புகழேந்தி. ஓவியம் போல எழுதுகிறீர்கள். எழுதுங்கள் நிறைய. இலக்கியம் போல வரைகிறீர்கள். வரையுங்கள் நிறைய. நிறைய. நீங்கள் நிறைய வரைய வேண்டும் வளர வேண்டும். எதிர்கால ஓவிய வரலாற்றில் புகழேந்தியின் ஓவியங்களுக்கு ஒரு தனி இடம் நிச்சயம் உண்டு.