"உறங்கா நிறங்கள்" மட்டுமல்ல, மறக்கமுடியாத நிறங்களும் கூட

ப. திருநாவுக்கரசு.


இலக்கியச் சாளரம். 2000


லெனின் தொடங்கி பிரபாகரன் வரை 37 ஓவியர்கள் கண்காட்சியில் அணிசெய்தன. கோட்டோவியம், வண்ண நெய் ஓவியம், வெட்டி ஒட்டு ஓவியம், முதலிய பலவிதப் பாணிகளில் தன் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார் புகழேந்தி.

சர்வதேச நிகழ்வுகளாக, ரஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி இரண்டாம் உலகப்போரில் நாஜிகளின் கொடுமைகளைச் சித்தரிக்கும் நிகழ்வுகள், ஐன்ஸ்டினின் அணு கண்டுபிடிப்பு, சோமாலியா பஞ்சம், ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது, குர்திஸ்தான், பெண்விடுதலை, நெல்சன் மண்டேலா, கம்ப்யூட்டர், வியட்நாமில் நாபாம் குண்டு, ஹிரோஷிமாவில் அணுகுண்டு, கார்கி, யாசர் அராபத், கியூபப் புரட்சியை வெளிப்படுத்தும் பிடல்காஸ்ட்ரோ; பிகாசோ போன்றவை சர்வதேச நிகழ்வுகளை விளக்குகின்றன. இந்நிகழ்வுகளை விளக்கும் ஜாலியன் வாலாபாக், காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகம், சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், தாகூர், பகத்சிங், ஒரிசா புயல், அன்னை தெரசா போன்றவை இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

தமிழகத்தை வெளிக்கொணரும் வண்ணம் பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், பெரியார், இந்திப் போராட்டம், வெண்மணிப் படுகொலை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஈழப்போராட்டத்தை விளக்கும் குட்டிமணியின் கண்கள், யாழ் நூலகம் எரிப்பு, செம்மணி, வல்வைப் படுகொலை, யாழ் வெளியேற்றம், பிரபாகரன் ஓவியங்கள் மூலம் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வைப் பதிவாக்கியுள்ளார்.

புகழேந்தியின் ஒவ்வொரு ஓவியத்திற்கும் கவிஞர்கள் காசிஆனந்தனும், இன்குலாப்பும் தங்கள் கவிதை வரிகள் மூலம் விளக்கம் அளித்துள்ளனர். புகழேந்தியின் முந்தைய ஓவியங்களின் வண்ணங்கள் இழையும் பழுப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் இருந்து தற்போதைய வண்ணங்கள் நிறைய மாறியுள்ளன. வண்ணத் தேர்விலும் வளர்ச்சியும் பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும். பாணியும் மாறியிருக்கிறது. பெரும்பாலான நிகழ்வுகளைத் தனிமனிதாகவே காட்ட வேண்டி இருப்பதால் அவர்களை முன்னிருத்தி நிகழ்வுகளை வெட்டு ஒட்டு ஓவிய முறையில் (கொலாஜ்) செய்திருக்கிறார். எ.கா. லெனின், மாவோ(ரஷ்ய, சீனப்புரட்சி), கியூபப் புரட்சியை விளக்க காஸ்ட்ரோவும், சேகுவேராவும் பேசிக்கொண்டிருக்கும் இளமைக்காலத் தோற்றமும், இருவருக்கும் மேலே செகுவேராவின் துப்பாக்கி; பின்புலத்தில் செவ்வண்ணம் புரட்சியை வெளிப்படுத்துகிறது. போராளிகளான பிரபாகரன், யாசர் அராபத், பெரியார் முதலியவர்களை வரையும் போது ஒரு பக்கம் இருட்டு (கருப்பு) அல்லது கருநீலமும், எதிர்ப்பக்கம் சூரியன்(பெரியார்) அல்லது சூரிய வெளிச்சம் மஞ்சள் நிறத்தில் விடியலைக் (விடுதலை) குறிப்பாக உணர்த்துகிறது.

இதுபோன்றே செவ்வணக்கம் செய்யும் பெண்ணின் முன்பும் மஞ்சள் வண்ணம் இடம் பெற்றுள்ளது. அம்பேத்கரை வடிக்கும் ஓவியத்தில் நீலத்தை அவர் விரும்பிய வண்ணம் ஓவியர் விடியலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.

ஐன்ஸ்டின், கார்க்கி, தாகூர் என்ற மூன்று ஓவியங்களில் கார்க்கி மட்டுமே காலாபூர்வமான வெற்றியை அடைந்திருக்கிறது. ஜாரின் நீலக்கொடியின் வண்ணத்தில் (காலத்தில்) முகிழ்த்த புரட்சி எழுத்தாளர் கார்க்கி என்பதற்கு ஏற்ப நீலத்திற்கும் சிவப்பிற்கும் இடையில் கார்க்கியின் முதிர்ந்த தோற்றம். மற்ற பக்கத்தில் துப்பாக்கியே பேனாவாகக் காட்சியளிக்கிறது.

அணு ஆயுதங்களின் கொடூரத்தை விளக்க வியட்நாம் நாட்டில் மைலாயில் நேபாம் குண்டு வீசப்பட்டவுடன் உடுத்தி இருந்த துணி எரிந்துவிட நிர்வாணமாக ஓடிவரும் சிறுமி பின்னணியில் நேபாம் குண்டின் விளைவை விளக்கும் நெருப்புப் பந்து காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இதேபோல ஹிரோஷிமா நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் கொடூரத்தை விளக்க முன்பகுதியில் அவரும் மனிதத்தின் சதைகள் கிழிந்து, ஒழுகவும், பின்பக்கம் குடைக்காளான் வடிவத்தில் அணுகுண்டு வெடித்துச் சிதறும் காட்சி மனதை நெருடுகிறது. சோமாலியாவின் பஞ்சத்தை சொல்ல வரும் ஓவியத்தில் எலும்புக்கூடான உடம்போடு தொற்றிக் கொண்டு பால்குடிக்கும் மற்றொரு எலும்புக் கூடாக குழந்தை ஓவியம்; இதைவிடப் பஞ்சத்தின் கோரத்தை விளக்க முடியாது. இங்கே பின்னணியில் காட்சி தரும். சூரியனின் வெப்பக் கொடுமை மஞ்சள் வண்ணமாகக் காட்சி தருகிறது. இங்கே காணும் மஞ்சள் நிறத்தின் பொருளும் வேறுபடுகிறது. தாயின் கையும் குழந்தையின் கையுமே பல செய்திகளைச் சொல்கின்றன.

இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளை விளக்கும் நிகழ்வுகளை கொலாஜ் ஓவியத்தில் மட்டும்தான் இயல்பாகக் காட்டமுடியும் என்பதற்கேற்ப வடிவமைத்துள்ளார். யூதப் பெண்களைக் கடும்பனியில் நிர்வாணமாக்கிக் கொன்ற நாஜிகளின் கொடூரத்தை ஓர் ஓவியம் சித்திரிக்கிறது. இதன் பின்னணியில் பனியைவிளக்க வெள்ளை  வண்ணமும் வெளிர்நீலமும் பயன்படுத்தப் பட்டுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த நிகழ்வைப் பாதி ஆம்ஸ்ட்ராங் முகமும், பாதி நிலவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. நிலவின் பகுதியில் மனிதனின் கால் தடம். படைப்பு நோக்கில் சிறப்பாக வரையப்பட்ட ஓவியங்களில் இதுவும் ஒன்று.

தலை கவிழ்ந்திருக்கும் காந்தி ஓவியத்தில் பின்புலத்தில் நீலவண்ணம் உப்பு சத்தியாகிரகத்தைக் குறிக்கிறது. காந்தியின் நீண்ட கால்கள் அதனை உணர்த்துகின்றன. முன்னே காணப்படும் காந்தியின் முகம், மற்றும் மார்புப் பகுதியில் மட்டும் ஒளியைப் பாய்ச்சியிருக்கிறார் ஓவியர். அந்த ஒளிதான் வாய்மையின் நிறமோ? மற்ற எந்த ஓவியத்திலும் இவ்வளவு ஒளியைப் பார்க்கமுடியவில்லை.

புகழேந்தியின் படைப்பு நேர்த்தியைக் குறிக்கும் பிக்காசோ ஓவியம் இந்தக் கண்காட்சியில் ஓர் மைல்கல் எனலாம். பிக்காசோவின் மார்பளவு குளோசப் ஓவியம். அதனருகில் பிகாசோவின் உலகப்புகழ்பெற்ற குவர்னிகா ஓவியம். மேலே பிக்காசோவுக்குப் பிடித்த இரட்டை கண், முகம், ஓவியம், சிகப்பு, பச்சை வண்ணங்கள் போன்றவை சிறப்பாக இந்த ஓவியத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாரதியின் வேறு வேறு பரிமாணங்கள்தான் பாரதிதாசனும், புதுமைப்பித்தனும் என்பதுபோல முப்பரிமாண ஓவியமாக பாரதியைச் சித்தரித்துள்ளது சரிதான் என்று தோன்றுகிறது.

ஈழவோவியங்களில் யாழ்ப்பாண நூலக எரிப்பு ஓவியத்தில் புத்தகங்கள் கருநீல நிறத்தில் வெந்து குவிந்து கிடக்கும் காட்சி, எல்லாவற்றையும் இழந்துவிட்டு விடுதலை உணர்வை மட்டும் கையேந்தி வெளியேறும் யாழ்ப்பாண வெளியேற்றம்; போராளிகள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள் என்று கூறும் விதைக்கப்பட்டவர்கள் ஓவியம், மண்டை ஓடுகளாய்க் காட்சி தரும் செம்மணி ஓவியம்; எல்லாவற்றையும்விட தீலிபனின் உண்ணாவிரதக் காட்சி நெஞ்சைப்பிழிகிறது. உடல்வாடி, கண்கள் சொக்கிப்போய், உள்ளம் மட்டும் வாடாமல் விடுதலை எதிர்நோக்கும் முகம் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. விடுதலையைக் குறிக்க சிவப்பு வண்ணத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். இக்கண்காட்சி ஓவியங்களில் உள்ள சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.

படைப்பு நேர்த்தியில் வீரியம் குறைந்தவையாக உள்ள ஒரு படைப்பு ஜாலியன் வாலாபாக் படுகொலை ஓவியம் மட்டுமே. இந்தியாவில் எந்த ஓர் ஓவியரும் செய்யாத எண்ணாத பெரும் நிகழ்ச்சி நிரலை சுமந்து 37 ஓவியங்களை, புகழேந்தி பிரசவித்திருக்கிறார். "புகழந்தி தேர்வு செய்து இருக்கும் இந்த ஓவியக் கரு பிற ஓவியர்கள் நினைக்க முடியாதவை, செய்ய முடியாதவை." முழு ஓவியரங்களையும் பார்த்துவிட்டு வெளிவந்தபோது இவருடைய ஓவியங்கள் இந்த நூற்றாண்டின் 'உறங்காத நிறங்கள்' மட்டுமல்ல. மறக்க முடியாத நிறங்களும்கூட.