வன்முறையை எதிர்க்கும் கலைவெளிப்பாடு

சுப்ரபாரதி மணியன்


கணையாழி, பிப்ரவரி 1992


ஹைதராபாத்தில் சென்ற ஆண்டு மதக்கலவரம் பல நூற்றுக்கணக்கான மனித உயிர்களை அரசியல் லாபத்திற்காகப் பலி கொண்டபோது, உள்ளூர்க் கலைஞர்கள் தங்கள் எதிர்ப்பை Artist against Communalism என்ற நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஓவியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், நாடக சினிமாக் கலைஞர்கள் பங்கு கொண்டனர். கவிதைகளைப் படித்தனர். நாடகங்களை நடித்துக் காட்டினர். சுமார் பத்து ஓவியர்கள் மிகப்பெரிய கான்வாஸ் ஒன்றில் தங்களின் மதக்கலவரத்திற்கு எதிரான கருத்துக்களை ஓவியங்களாய் வரைந்தனர். அதில் தமிழகத்தைச் சார்ந்த கு.புகழேந்தி என்ற இளம் ஓவியரும் இருந்தார். பொதுவான பிரச்சினைகளை மையமாக்கி, ஓவியர்கள் கூட்டு ஓவிய முயற்சியில் ஈடுபடுவது அவ்வப்போது நடந்து வருகிறது.

சென்ற மாதம் தஞ்சையில் இதுபோன்ற ஒரு கூட்டு ஓவிய முயற்சியை ஹைதராபாத் சரோஜினி தேவி கலை நாடகக் கல்லூரியில் ஓவிய மாணவராய்ப் பயின்று வரும் அந்த இளைஞர் கு. புகழேந்தி, கும்பகோணம் கலைக் கல்லூரி மாணவர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் இதுபோன்ற கூட்டு ஓவிய முயற்சி முதன்முதலில் இதுதான் என்கிறார். இந்தக் கூட்டு ஓவியத்திற்கு எடுத்துக் கொண்ட தலைப்பு Artist against Atrocities.

நடுத்தர வர்க்கத்திற்கோ, மேல்தட்டு மக்களுக்கோ என்று ஓவியக் கலை அமைந்து விடாமல் சாதாரண மக்களையும் அதன் செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் 23 வயதான இளம் ஓவியர் கு. புகழேந்தி. ஓவியம் மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும். வர்ணங்கள், கோடுகள், காட்சி ரூபங்கள் பயன்பாட்டின் நேர்த்தியைப் பொறுத்த அளவில் சக்தி வாய்ந்தவை என்பதை நம்புகிறார்.

தஞ்சை பெரிய கோவில் அருகில் சோழன் சிலைக்கு முன்னால் இந்தக் கூட்டு ஓவிய முயற்சி நடந்துள்ளது. மாலை மூன்று மணியிலிருந்து இரவு பத்து மணி வரை சுமார் பத்து ஓவியங்கள் உலகம் முழுவதும் காணப்படும் இன்றைய காலகட்டத்தின் வன்முறைக் கொடுமைகளுக்கு எதிரான தங்கள் வெளிப்பாட்டை ஓவியங்களாய்ப் பெரிய கான்வாஸ் ஒன்றில் (9'ஜ்4') வரைந்திருக்கின்றனர். அப்போது புகழேந்தியின் வன்முறைக்கெதிரான பெரிய ஓவியமொன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

கூட்டு ஓவியம் பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. இனவாத வன்முறைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வன்முறையினால் அரசியல் ஆதாயம், காவல் நீதித்துறையினரின் முன்னாலேயே நடைபெறும் வன்முறைகள் போன்றவை ஓவியங்களாய்த் தீட்டப்பட்டிருக்கின்றன. குத்திக்கொல்லப்பட்டுக் கிடக்கிற மனிதனுக்குப் பக்கம், புறாவின் உடம்பில் கத்தி குத்தப்பட்ட காட்சியை கு.புகழேந்தி வரைந்திருக்கிறார். நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறவன், அவரின் தலைமேல் தொங்கும் கத்தி, கொல்லப்பட்டுக் கிடக்கிற மக்களின் பிம்பங்கள், நிர்வாண மாக்கப்பட்ட பெண்கள், பலிபீடத்தில் சாதாரண மக்கள் இவற்றை ஓவியர்கள் வரைந்திருக்கின்றனர்.

வன்முறை பற்றின புகழேந்தியின் தனி ஓவியமும் இதே கருத்தை வெளியிடுகிறது. "வன்முறை இன்று உலகம் முழுதும் நடைபெற்று வருகிறது. சிலரின் அரசியல், தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, இதற்கான எதிர்ப்பைக் கலை வெளிப்பாடு மூலம் தெரிவிப்பது கலைஞர்களின் கடமையாக இருக்கிறது. சாதாரண தனிமனிதனை விட ஓவியன் தன் வெளிப்பாட்டில் இதைச் சொல்லும்போது இன்னும் அழுத்தம் கிடைக்கிறது. மொழி உருவாவதற்கு முன்பே குறியீடுகள், சிறு ஓவியங்கள் மூலம் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நவீனக் கலைகளின் வளர்ச்சியில் இதைப் பெரிய அளவிலும் இன்றைக்குக் கலைஞர்கள் செய்கிறார்கள்" என்கிறார்.

"மனிதனை மனிதன் கொல்லும் நியாயமில்லாத வன்முறை. வன்முறையைக் காதலிக்கிறவர்கள் யாரும் கிடையாது. வன்முறை திணிக்கப்படுகிறபோது அதை வன்முறை மூலமே எதிர்க்க வேண்டிய அவல சூழல்கள் இன்றைக்கு உலகின் பல இடங்களில் ஏற்பட்டதற்கான சாட்சியங்கள் உள்ளன. அந்த வகையான வன்முறை நியாயமான போராட்டத்திற்காக, வன்முறையாக அமைகிறது. அரசு வன்முறைக்கெதிரான மக்கள் வன்முறை இன்று ஓரளவில் தேவையானது என்று உணர்கிற கட்டாயங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. ஜாதி ரீதியான வன்முறை இன்று வெகு சாதாரணமாகிவிட்டது. இதைக் கண்டிப்பது என்பது ஒவ்வொரு கலைஞனின் பொறுப்புணர்ச்சி மிக்க செயல். அந்த வகையில் இந்தக் கூட்டு முயற்சி, ஓவியங்கள் மூலம், ஓவியர்கள் தங்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த வெளிப்பாடுகள் மூலம் மக்களைச் சென்றடைவது முக்கியமான வேலையாக இருக்கிறது; அதன் மூலம் அவர்களை எழுச்சி பெறச் செய்வது, போராட்டங்களுக்குத் தூண்டுவது மிக முக்கியமான வேலையாக இருக்கிறது" என்கிறார்.

இவரின் சமீபத்திய ஓவியங்கள் வன்முறைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவை. ஆந்திராவின் சாதிய வன்முறைக்கு எதிரான பல ஓவியங்களைச் சமீபத்தில் தீட்டியுள்ளார். சுண்டூர் ஜாதிக் கலவரம், ஹரிஜனப் பெண்ணை நிர்வாணமாக்கியது போன்றவை சமீபத்தியவை.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தாவில் நடைபெற்ற அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்ற ஓவியப் போட்டியொன்றில் இவரின் "பலி" (Vicitim) என்ற ஓவியம் முக்கியப் பரிசொன்றைப் பெற்றதன் மூலம் தேசிய அளவிலான அங்கீகாரத்திற்கு உள்ளானார் புகழேந்தி. எம்.எஃப். உசேன், ஷப்னா ஆஸ்மி, மிருணால்சென் ஆகியோர் நடுவர்களாகவும், முக்கியஸ்தர்களாகவும் பங்கேற்ற சிறப்புடையது அப்போட்டி.

தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகன் புகழேந்தி. அகில இந்தியப் பரிசு, நுண்கலைக்குழு விருது, லலித்கலா அகாதமி விருது போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். ஆர்மீனிய பூகம்பம், நெல்சன் மண்டேலா போன்றவை குறிப்பிடத்தக்கன. ஈழப்படுகொலைகள் பற்றின அவரின் தொடர்ச்சியான ஓவியங்களைப் போன்று வன்முறைக்கு எதிரான தொடர் ஓவியங்களில் சமீபத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்.