பெருமூச்சை ஓவியமாக்குபவர்

கவிஞர் காசி ஆனந்தன்


எரியும் வண்ணங்கள், 1994


தலையை, தசையை கண்ணை கைகளை ஓவியமாக்கலாம். ஆற்றல் ஒன்றும் தேவையில்லை. பயிற்சியே போதும். ஆனால் பெருமூச்சை ஓவியமாக்குவது எப்படி? அதுதான் புகழேந்தியின் கலை.

பாதிக்கப்பட்டவர்களின் பெருமூச்சையே புகழேந்தி ஓவியங்களாய் விதைக்கிறார். பார்க்கிறவனோ பெருமூச்சை அல்ல, புயலை அவர் ஓவியங்களில் அறுவடை செய்கிறான்.

துன்பப்படுகிறவர்கள் தாழ்த்தப்படுகிறவர்கள் ஒடுக்கப்படுகிறவர்கள் மிதிக்கப்படுகிறவர்கள் கொல்லப்படுகிறவர்கள் பற்றியே அவர் ஓவியங்கள் துடிப்போடு பேசுகின்றன.

கத்தியோடு அலையும் மதவெறியர் குருதிக் குளிப்புக்கும் பெண்ணை ஆடையவிழ்த்து ஊர்வலம் கொண்டுபோகும் ஆண்மைத் திமிராளர் கொட்டத்துக்கும் பிஞ்சுக் குழந்தைகளைக்கூட நெருப்பில் போடும் இனப்படுகொலைஞர் உயிர் அழிப்புக்கும் நடுவில் புகழேந்தி ஓவியங்களாய் வெடிக்கிறார்.

தமிழீழப்போர் பற்றிய 'உயிராயும் பிணமாயும்' போன்ற புகழேந்தியின் ஓவியங்களில் கொடிய அடக்குமுறையாளர் காலின்கீழ் தள்ளப்பட்ட ஒரு தேசிய இனத்தின் உள்ளும் புறமுமாய் நின்று தளும்பும் உயிர் மூச்சைப் பார்க்கிறோம்.

வானில் முழுநிலவு. பால் காய்ச்சும் வெளிச்சம். தெருவில் கத்தியால் குத்திச் சாய்க்கப்பட்ட பேதை ஒருவன் செந்நீர் வெள்ளத்தில் துடிக்கிறான். ஓவியனாகட்டும் புலவனாகட்டும் சிற்பி ஆகட்டும். ஒரு கலைஞன் அந்நொடிப் பொழுதில் குருதியில் வீழ்ந்தவனை மறந்து நிலா வெளிச்சத்திலா திளைப்பான்?

இதனால்தான் நாலு பக்கமும் கொலைவெறியும் கொடுமைகளும் நிறைந்த உலகில் இன்று ஓவியர் புகழேந்தியின் தூரிகை, நிலாவாலும், பூக்களாலும் இழுக்கப்படுவதில்லை.

தப்பித் தவறி அவர் நிலாவை வரைந்திருந்தால் ஊன்றிக் கவனியுங்கள். அந்த நிலாவில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். எங்காவது அவர் பூக்களை வரைந்திருந்தால், நன்றாகப் பாருங்கள் அந்தப் பூக்களில் குருதி வடிந்து கொண்டிருக்கும்.

'நோக்கம் அற்றது கலை' என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இக்கருத்து வலிமையற்றது. கொடுமையைப் போற்றி எவனாவது ஓவியம் வரைந்திருக்கிறானா?

சிலுவையையும் இயேசுவையும் வரைந்தவன், அக்கொடுமையை அல்ல, அக்கொடுமையைச் செய்தவனைப் போற்றியா அதனை வரைந்தான்?

கொடுமையைக் கொடுமையாய்க் காட்டுவதும், கொடுமையால் பாதிக்கப்பட்டவனின் துயரத்தைக் காட்டுவதும், கொடுமைக்கு எதிரான போராட்டத்தைக் காட்டுவதுமே ஓவியமாக இருக்க முடியும்.

கலைக்கு நோக்கம் உண்டு.

பிக்காசோவின் கன வடிவப் பாணி (கியூபிசம்) ஆனாலும் சரி.. டாலியின் சர்ரியலிசம் ஆனாலும் சரி, அவை பழைய இலக்கணங்களை உடைத்த புதிய இலக்கணங்களே. ஓவியத்துக்கு இலக்கணங்களிலிருந்து கிடைத்த விடுதலை அவை என்று சொல்வது சரி அல்ல. இலக்கணம் சிறை அன்று. எல்லைக் கோடுகள் சிறை என்றால் ஒரு நாட்டின் எல்லைக் கோடுகள் கூட அந்நாட்டின் சிறை மதில்கள் ஆகிவிடும். எதற்கும் இலக்கணம் உண்டு. ஆனால் வெறும் இலக்கணமே ஓர் ஓவியனோ, ஒரு பாவலனோ ஆகிவிடுவதில்லை. பிக்காசோ டாலி பாணியில் புகழேந்தி வரையலாம். ஆனால் அந்தப் பாணியே புகழேந்தி அல்ல. பாணிகளுக்கெல்லாம் அப்பால் அவருடையதாய் ஏதோ ஒன்று அவர் ஓவியத்தில் இருக்கிறது. அதுதான் புகழேந்தி.

புகழேந்தியை அவரது ஓவியங்களில் நான் நிறைய பார்க்கிறேன்.

கண்ணைக் கிழிக்காத, கருத்தில் உறைக்கின்ற வண்ணங்களாய் மாந்தனின் இயல்பான விடுதலை உணர்வால் புடைத்து எழும் நரம்பாய் தசையாய் நாளமாய் வெறும் அப்பல்களாய் இல்லாத வலிமைமிக்க வீச்சுகளாய்,

அவர் ஓவியங்கள்.