எரியும் வண்ணங்களின் ஓவிய ஆளுமை

இந்திரன்


எரியும் வண்ணங்கள், 1994


சூன்யத்திலிருந்து எதையும் படைக்க முடியாது. ஓவியர் புகழேந்தி தன் ஓவியங்களுக்கான உணர்ச்சி, வடிவம், வண்ணம் ஆகிய அனைத்தையும் தன்னைச் சூழ்ந்திருப்பவைகளிலிருந்தே படைத்திருக்கிறார்.

இவரது ஓவியங்களை 1987 இல் மதுரையில் பல ஓவியர்கள் பங்கு கொண்ட ஓவியக்கண்காட்சி ஒன்றில்தான் முதன் முதலாகப் பார்த்தேன். அப்போது அவர் மிகவும் இளம்வயதினர். கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவர்.

அவரது ஓவியக் கித்தானில் மனித உடல்கள் அவற்றின் தோல், கரும் பழுப்பு நிறத்தவை. நரம்புகள் புடைத்த கால்களும், கரங்களும் பிரதானப்படுத்தப்பட்டிருந்தன. உழைத்து வற்றிய உடம்புகள் ஆதரவற்றுக் கிடந்தன.

அவரது துயரம் எனும் ஓவியத்தில் மனிதன் ஒருவன் ஆதரவற்று வீழ்ந்து கிடக்கிறான். கித்தானின் ஒரு மூலையில், ஒரு ஜோடி செருப்புகள், இந்த உடம்புகளைப் பகிரங்கமாக நெளிந்தோடும் ஓரிரு கோடுகள் வெட்டிப் பிரிக்கின்றன. இவை ஓவியக் கித்தானுக்குள் பல துண்டுப் பகுதிகளை ஏற்படுத்துகின்றன.

இதில் முகத்தின் உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் முக்கியப் பகுதியான முகம் நேரிடையாகத் தெரியும் வகையில் தீட்டப்படவில்லை. மூக்கு மட்டும் பிரதானமாகத் தெரிகிறது. அதுவும் முழு மூக்கும் அல்லாமல், அதன் மூச்சு வரும் இரு துளைகள் பெரிதாகத் தெரியுமாறு கீழிருந்து பார்க்கும் கோணத்தில் தீட்டப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் அபிநயங்களைக் காட்டும் கண்கள் தெரிவதே இல்லை.

இந்த ஓவியங்கள் மிகவும் தமிழ் அடையாளம் கொண்டவை என்று நான் கருதுகிறேன். பழுப்பு நிற உடம்பும், அரை நிர்வாணமும், தமிழ் இனத்திற்கே உரிய விரிந்து அகன்ற மூக்கும் இந்த ஓவியங்களில் இருக்கும் உடல், ஒரு தமிழனுடையது என்று நமக்குத் தெரிவிக்கின்றன.

இங்கே ஓவியக்கித்தானுக்குள் இருக்கும் வெளியை மிகத் திறமையாக வெட்டிப் பிரிக்கிறார் ஓவியர். ஓவியத்தையே குலைத்து விடுவதுபோல ஓவியத்தின் இடையில் நெளிந்தோடும் கோடுகள் உடலைத் தனித்தனித் துண்டங்களாக வெட்டிவிடுகின்றன. இதனால் ஓவியத்துக்குள் ஓர் அவலச் சுவை இயல்பாக வந்து மேலெழுந்து விடுகிறது. இதே தலைப்பில் இவர் தீட்டிய பல ஓவியங்களும் இதேபோன்ற அமைப்பில் இருப்பவைதான்.

மற்றொரு ஓவியத்தில் எலும்பும் தோலுமாக வீழ்ந்து கிடக்கிறான். ஒரு நிர்வாண மனிதன். இங்கேயும் பகிரங்கமாக நெளிந்தோடும் கோடுகள் கித்தானின் வெளியைத் துண்டு போடுகின்றன. இருபுறமும் துவண்டு கிடக்கும் கரங்களில் கைவிரல்களுடன் கூடிய உள்ளங்கை, நெளிந்தோடும் கோட்டினால் துண்டாடப்பட்டுள்ளது. துண்டாடப்பட்ட அந்த இரு கரங்களும் உடம்பின் இரு பக்கங்களில் தனித்தனியாகத் தீட்டப்பட்டுள்ளன. ஆனால், அவை மனித உடம்பு இருக்கும் அளவுக்குப் பொருத்தமற்றதாகப் பெரிதுபடுத்தப்பட்டவைகளாக, மேலும் ஓர் அருகாமைக் காட்சியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. புடைத்துத் தெரியும் நரம்புகளுடன் அந்தக் கரங்கள் சைகை மொழியால் நம்மிடம் ஏதோ தெரிவிக்க முயல்கின்றன. இந்த ஓவியத்தில் ஆண் உறுப்பு இருக்கும் பகுதி ஒரு வெற்றுப் பகுதியாகக் காட்டப்பட்டிருக்கிறது. அவலத்தை மனித உடம்பு சார்ந்த ஒரு மொழியினால் மிகச் சிறப்பாகச் சித்திரிக்கிறார் ஓவியர்.

ஓவியக் கித்தானில் நெளிந்தோடும் கோடுகள் மனித உடம்பில் அவர் சித்திரித்திருக்கும் நரம்புகளின் அருகாமைக் காட்சி போலத் தெரிகின்றன. இந்த வரிசை ஓவியங்கள் அனைத்திலும் பழுப்பு, வெளிர் நீலம், வெளிர் மஞ்சள் ஆகிய வண்ணங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பளிச்சிடும் வண்ணங்கள் ஏதும் காணப்படுவதில்லை.

இந்த ஓவியங்களின் வரிசைக்குப் பிறகு, புகழேந்தியின் ஓவியங்கள் சற்று மாற்ற மடைந்திருக்கின்றன. ஈழத்தில் சிங்கள் அரசினால் தமிழர் படுகொலை செய்யப்பட்டபோது துயருற்ற அவரது மனம் 'ஈழம்' எனும் வரிசை ஓவியங்களைச் செய்யத் தூண்டியது. இந்த ஓவியங்களிலும் புகழேந்தியின் பாணி மாறவில்லை. இந்த ஓவியங்களில் தமிழ்ப் பெண்களின் உடல்களைச் சிதைத்த கொடுஞ்செயல்கள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டு ஒரு மிகை நாடகத்தைச் செய்து காட்டத் தொடங்கி விடுகின்றன.

விழி மூடி மரணித்துக் கிடக்கும் பெண்ணின் முலைகள் சிதைக்கப்பட்டுள்ளன. கத்தியுடன் கூடிய இரண்டு வன்மையான கரங்களில் பெண்ணின் வெட்டப்பட்ட முலைகள். இந்த வரிசை ஓவியங்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட, தூக்கில் தொங்க விடப்பட்ட உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. இடையில் கோபத்தை உமிழும், ஒரு முகம். இந்த ஓவியங்கள் முந்தைய ஓவியங்களைப் போலன்றி, செய்தியைச் சற்று வெளிப்படையாகப் பேசுகின்றன. இவற்றிலும் அவரது வண்ணங்கள் முந்தைய ஓவியங்களின் தேர்ந்தெடுத்தலையே மேற்கொள்கின்றன.

புகழேந்தி, குடந்தை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு ஹைதராபாத் சென்று பிரபல ஓவியர் லக்ஷ்மா கௌட் என்பவரின் கீழ் முதுகலைப்பட்டத்திற்காக ஓவியம் பயிலத் தொடங்கினார். அவரது எல்லை விரிவடைந்தது. இந்தியா முழுவதும் சலகுருத்தி, அயோத்தி, சுண்டூர், கர்நாடகம் என்று மனசாட்சியைக் காயப்படுத்தும் மனிதத் தன்மையற்ற கொடுமைகள், மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், பணத்திமிரினாலும் இடம்பெற்ற போதெல்லாம் அவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.
1990 - 92 இல் தீட்டப்பட்ட இந்த ஓவியங்களின் பாணி மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. வெப்ப நாடுகளின் மரம், செடி, கொடிகளிலும், மலர்களிலும் காணப்படும் பளிச்சென்ற வண்ணங்கள் புகழேந்தியின் இன்றைய ஓவியங்களில் பங்கு கொள்கின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம், ஊதா, பச்சை போன்ற பளிச்சிடும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்தில் சலகுருத்தி என்னும் இடத்தில் மிராசுதாரர்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமையை விவரிக்கும் ஓவியத்தில் நிர்வாணமாக நிறுத்தப்பட்ட, கைகள் பிணைக்கப்பட்ட பெண்ணின் கூந்தலை வெள்ளை வெளேரென்று வெளுக்கப்பட்ட ஆடை அணிந்த மனிதன் ஒருவன் பற்றி நிற்கிறான். பின்புறத்தில் கண்ணை மூடிக் கொண்ட முகம், ஒட்டு பிளாஸ்திரியால் வாய் மூடப்பட்ட முகம், அதிர்ச்சி அடைந்த ஆண் முகம், பெண் முகம் ஆகியவை தீட்டப்பட்டுள்ளன. பின்னணியில் கனமான பூட்ஸ் கால் ஒன்றும் செருப்பணியாத கால் ஒன்றும், செருப்பணிந்த கால் ஒன்றும் தீட்டப்பட்டுள்ளன.

இந்த ஓவியத்தில் முந்தைய ஓவியங்களில் காணப்படும் ஓவியக்கலை ரீதியான நுட்பங்கள் குறைந்து, தட்டையாக வண்ணங்கள் பூசப்பட்டு செய்தி நேரிடையாகச் சொல்லப்படுகிறது. முந்தைய அவலம் என்ற ஓவியத்தில் காணப்படாத அரசியல் சார்பு இந்த ஓவியங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த எளிமைப்படுத்தப்பட்ட நேரிடையான ஓவியங்களோடு புகழேந்தி மக்களிடம் நவீன ஓவியத்தைக் கொண்டு செல்லும் பணியில் இறங்கி விடுகிறார்.

பாபர் மசூதியா, ராமர் கோயிலா என்கிற மதப்பிரச்சினை நாட்டைப் படுகளமாக்கயி காலகட்டத்தில் தீட்டிய ஓர் ஓவியத்தில், மதச்சின்னங்களாலோ, ஆடைகளின் வகைகளினாலோ இன்ன மதம் என்று இனம் காணமுடியாத இரு மனித உருவங்களில் ஒன்று. மற்றதைக் குருதி தோய்ந்த கத்தியால் தாக்குகிறது. பின்புலத்தில் கோயிலும், மசூதியும். இந்த ஓவியத்தில் ஒரு நேரடித்தன்மை வந்து விடுகிறது. குறிப்பிட்ட மொழியிலான புகழேந்தியின் ஆரம்பகால ஓவியமொழி இங்கே மாற்றமடைகிறது. பரந்துப்பட்ட மக்களைச் சென்று அடைய வேண்டும் எனும் ஓவியனின் அக்கறையே இந்த மாற்றத்துக்கு காரணம்.

பொதுவாகத் தமிழ் ஓவியக்கலை வரலாற்றைத் திரும்பி நோக்கினால், இங்கு தங்களின் சமூக அக்கறையைத் தங்கள் ஓவியங்களில் பிரதிபலித்தவர்கள் மிகவும் குறைவு. அரசியல் கலைக்கு விரோதமானது என்கிற பரவலான கருத்தும்கூட இங்கு உண்டு. அரசியல் ஓவியத்தின் மீதும், ஓவியனின் மீதும் தலையிடுகிறபோது, ஓவியனும் அவனது ஓவியமும் அரசியலில் தலையிடவே செய்யும்  என்ற பகிரங்கமான கருத்துள்ள ஓரியங்கள் மிகக் குறைவு.

1984இல் ஈழப்படுகொலைகள் குறித்த ஓவியங்களைத் தீட்டி அவற்றை ஒரு கண்காட்சியாக வைத்த ஓவியர்கள் வீர சந்தானமும், சாம் அடைக்கலசாமியும் இங்குக் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதே ஈழப் பிரச்சினையை அந்தோணிதாஸ், தோட்டாதரணி, எஸ்.ஜி. வாசுதேவ் போன்றவர்களும் தொட்டிருக்கிறார்கள் என்றபோதும் வீர சந்தானத்திற்கான அரசியல் நிலைப்பாடு அவர்களிடம் கிடையாது. தமிழ் ஓவிய உலகில் இதற்கென ஒரு தனி இடத்தை வீர. சந்தானம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் கலையை வெறும் விளையாட்டாகக் கருதும் மரபு கிடையாது. கலையின் மூலமாக உன்னதமான ஒரு கருத்தைச் சொல்லியே தீரவேண்டும் என்பது தமிழ் அழகியல்.

'இழும் எனும் மொழியால் விழுமியது நுவலல்' என்பது தமிழர்களின் ஆதி அழகியல்வாதியான தொல்காப்பியரின் வாக்கு. எனவேதான் தனது தூரிகையை சமூக விமர்சனம் செய்யும் நாவாக உயர்த்தியதில் புகழேந்தியின் ஓவியங்கள் மிகவும் தமிழ்த்தனமானவை. புகழேந்தியின் இன்றைய உலகம் நிம்மதியற்ற பிரச்சினைகளால் எரிந்து கொண்டிருக்கிறது. எனவேதான் புகழேந்தியின் வண்ணங்கள் எரியும் வண்ணங்களாக உயர்வு பெறுகின்றன.