கலைப்படைப்பு சமூக மாற்றத்திற்கான கருவி

விட்டல்ராவ்


சுபமங்களா, ஏப்ரல் 1995


சமூகத்தில் மாற்றம் விளைவிக்க வல்ல வீர்யத்தை நாடகம், சினிமா, புத்தகம் என்பவை தம்முள் கொண்டுள்ளவை. சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைப் படைப்புகளும் சலசலப்பை ஏற்படுத்த முடியும் என்பதும் ஏற்கெனவே நிலவி வரும் உண்மை. ஏற்கெனவே அக்காரியம் சாத்தியமாகியிருக்கிறது என்பது ஓவியக் கலை வரலாற்றிலிருந்து அறிய வரும் ஒன்று. மறுமலர்ச்சிக் காலத்திற்கு முன்பே கூட கிறிஸ்தவ மத ஓவியச் சித்தரிப்புகளில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறை, வன்முறைகளை மத்தியகால ஓவியங்களிலிருந்து பார்த்து அறிய முடிகிறது.

பிறகு நமக்கு வண்ணப்பூச்சு, கோடுகள் ஆகியவற்றின் தெளிவான தனித்தன்மையுடன் சமூகப் பார்வைபட்ட ஓவியங்கள் டாமியரிடமிருந்து (Daumier) கிடைக்கின்றன. டாமியர், சமுதாயத்தில், அரசியல் வட்டத்தில் நிகழ்வுகளை நையாண்டியுடன் ஓவியமாக்கியவர். அவரது வண்ணப்பூச்சு வெம்மை வகையிலான சிவப்பு, பழுப்பு, மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களாகவே இருக்கின்றன. கவிஞர் பாடேலேயர் டாமியர் பற்றி, "அவர் நகைக்கத்தக்க எல்லா துன்பங்களையும் அறிந்தவர். எல்லா அறிவீனத்தையும் அறிவார். குட்டி பூர்ஷ்வாக்களின் கர்வத்தையும் போலிப் பெருமைகளையும் அறிவார். ஏனெனில் அவர் எளிய மனித வாழ்வில் இணைந்து பொதுவிடங்களில் வாழ்ந்து சஞ்சரித்தவர்" என்று குறிப்பிடுகிறார். எனவே டாமியாரின் ஓவியங்கள் சமுதாய ஊழல்கள், அதிகார வர்க்கத்தின் அக்கிரமங்கள் ஆகியவற்றைக் கேலி செய்து தீட்டப்பட்ட நிலையில் வண்ணத் தேர்வைப் பொறுத்தளவு வெம்மையான சிவப்பு, பழுப்பு, ஆரஞ்சு என்றிருந்தாலும் இடையிடையே ப்ரஷ்ஷியன் (Prussian blue) நீலத்தைத் தாராளமாய்ச் செலுத்தியவர். இந்நீலம் வெம்மை நிறங்களின் தீவிரத்தைக் குறைக்கவல்லது.

எனவே டாமியரின் நகைச்சுயை உணர்வுமிக்க சமுதாயப் பார்வையின்பாற்பட்ட படைப்புகள் அவ்வழியில் சிறந்து நிற்கின்றன. அக்டோபர் புரட்சிக்குப் பின் சோவியத் யூனியனில் உருவான பெரும்பான்மை ஓவியங்கள் வெம்மையான வண்ணங்களாலேயே தீட்டப்பட்டவை. ஆனால் டாமியரின் சமூக உணர்வுமிக்க ஓவியங்களைச் சிலாகித்த மேனாட்டுக் கலை விமரிசகர்கள், சோவியத் ஓவியங்களைச் சிலாகித்ததில்லை. அந்த வெம்மை வண்ண ஓவியங்கள் அவர்களுக்கு ஒவ்வாமையாக இருந்திருக்க வேண்டும்.

மனிதத் துன்பங்கள், அடக்குமுறை, ஒடுக்கப்படுதல், பல்வேறு வன்முறைச் செயல்கள், போரின் விளைவுகள் என்பவனற்றை மட்டுமே தம் வாழ்நாள் முழுதும் ஓவியம், சிற்பம், கோட்டோவியம், பதிப்போவியம் என்று உருவாக்கிப் புகழ் பெற்றவர் ஜெர்மானியப் பெண் கலைஞரான கதே கால்விட்ஸ் (Kathe kollwits) மனிதனால் மனிதன் அடையும் உலகியல் துன்பத்தை இவரளவுக்கு உள்ளுணர்வுடன் ஒரு நேரிடை சொந்த அனுபவத்தோடு எவரும் தம் ஓவிய சிற்பங்களில் படைத்ததில்லை என்றே சொல்லலாம்.

தமிழக ஓவியர்களில் சமூகப் பார்வையும் உள்ளுணர்வும் மிக்க இளைஞர் புகழேந்தி தன்னைப் பொறுத்தவரை, ஒரு கலைப்படைப்பு சமூக மாற்றத்திற்குப் பயன்படும் கருவிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இருக்க முடியும் இருக்கும் என்பதில் திடமான நம்பிக்கையைத் தான் கொண்டுள்ளதாய்க் கூறுகிறார்.

கொடுமைகள், துன்பம், படுதுயர், மெய்வருத்தம், வன்முறை என்பன போன்ற கருத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களில் டாமியருக்கு முன்பிருந்தும், டாமியாராலும், அதன்பின் சோவியத் ஓவியங்களிலும் வெம்மையான வண்ணங்களே கையாளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். யார் எந்தக் காலகட்டத்தில் இத்தகைய ஓவியங்களைத் தீட்ட முற்பட்டாலும் சிவப்பு, ஆரஞ்சு, பழுப்பு, மஞ்சள், ஆக்கர் போன்ற வெம்மை வண்ணங்களைக் கொண்டுதான் தன் உணர்வை வெளிப்படுத்தியதாக வேண்டும் என்பதற்கு நிரூபணமாய் விளங்குபவை புகழேந்தியின் ஓவியங்களிலுள்ள வண்ணமுறை. அவர் அறிந்தோ அறியாமலோ சோவியத் ஓவியங்களின் தாக்கம் அவருடைய படைப்புகளில் இழைந்திருக்கிறது. அதேசமயம் அவரது படைப்புகள் ஒருவித அமைதியையும் கொண்டு விளங்குகின்றன.

நம்முடைய எதிர்விளைவை எதிர்நோக்கிய ஒரு மௌனம் அது. புகழேந்தியின் ஓவியங்களில் பொதிந்துள்ள இந்த அமைதி அவர் கையாளும் வெம்மையான வண்ணங்களின் தீவிரத்தினின்று ஒருவித Relif-ஐ பார்வையாளருக்குத் தருகிறது. இந்த அம்சம்தான் அவரது ஓவியங்களில் சொல்லப்படாத அழகியல் தன்மை; அல்போன்ஸா, சந்தானராஜ் ஆகியோரின் வண்ண ஓவியங்களின் வண்ணப் படங்களுடன் தேனுகாவின் கட்டுரைகள் தொகுக்கப்பட்ட, வண்ணங்கள் வடிவங்கள் (1987) நூலுக்குப் பின் புகழேந்தியின் ஓவியநூல் அதிகமான வண்ணப் படங்களுடன் வெளிவந்துள்ளது. இது அவரது எளிமையான, ஆர்வமிக்க நேரிடையான மனிதத் தன்மையின் வெளிப்பாடு.

உருவச் சிதைப்பு என்ற நுணுக்கக் கையாளல் நமது புரிதலுக்குக் குறுக்கே நிற்கவில்லை. அவர் கையாளும் உருவச் சிதைப்பும் சிக்கலற்ற ஆரம்பநிலை முயற்சியாகவே தோன்றுகிறது. உணர்தலும் படைத்தலும் உடனுக்குடனான பிரிக்க முடியா அம்சமாய் அவரது ஓவியங்களில் காண முடிகிறது. வன்முறை, கொடுமை, அடக்குமுறைகளுக்கான புகழேந்தியின் இரக்க உணர்வு தெளிவாக அவரது ஓவியங்களில் வெளியாகிறது. குறிப்பாகத் தமிழ் இனம் படும் துயரை அவரது ஓவியங்கள் மண்வாசனை கமழ சேதி ஓதுகின்றன.

'எரியும் வண்ணங்கள்' நூலில் ஓவியங்களின் படங்கள் நன்கு பதிப்பிக்கப்பட்டுள்ளன. நல்ல தயாரிப்பு. தமிழ் ஓவியக்கலை நூல்கள் வரிசையில் வந்துள்ளவற்றில் சிறந்த சிலதில் இதுவும் ஒன்று. இந்நூலில், 'கலையும் சமூக உணர்வும்' என்ற எஸ்.வி. இராஜ துரையின் கட்டுரை முக்கியமான அங்கம். புகழேந்தி தம் படைப்புக் கலைத் தொழிலில் இனி அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் நிச்சயம் எஸ்.வி. ராஜதுரையின் கட்டுரை ஏதாவது விளைவை ஏற்படுத்தக்கூடும். மாற்றத்தைக் கூடச் சிறிதேனும் ஏற்படுத்தலாம். அதனால் அவரது படைப்புகளில் வேறு திருப்பங்களும் ஏற்படலாம். கலா ரசிகர்களுக்கு எல்லாமே லாபகரமானதுதான். இந்திரனின் கட்டுரையும் தனித்தன்மையுடன் புகழேந்தியின் ஓவியங்களை நன்கு ஆய்ந்தறிந்து கூறுவதாக அமைந்துள்ளது. ஓவியரின் நேர்காணல் கவிஞர்களின் கவிதைகள் ஆகியவை நூலுக்கு வலு சேர்க்கின்றன.