புகழேந்தியின் - எரியும் வண்ணங்கள்

எரிமலை, பிரான்ஸ் ஆகஸ்டு 1995


புகழேந்தியின் 'எரியும் வண்ணங்கள்' என்னும் ஓவிய நூல் பார்த்தேன். தமிழில் ஓவிய நூல்கள் வெளிவருவது என்பது சாதாரண விடயமல்ல. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வெளி வந்திருக்கிறது என்பதை யாரும் விளங்கிக் கொள்ளாதிருக்க முடியாது. ஏனெனில் வணிக நோக்கின் அடிப்படையில் வெளியீட்டாளர்கள் முதல் முதலீட்டாளர்கள் வரை தயக்கம் காட்டுவார்கள்.

சமூகப் பிரக்ஞையும் உலகப் பார்வையும் உள்ளவர்களின் கூட்டுப் பிணைப்பால் இவ்வோவிய நூல் வெளிவந்திருக்கின்றது என்கிற செய்தி மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

'கோடுகள் சும்மாயிருப்பதில்லை' என்னும் தலைப்பில் எரிமலையில் வெளிவந்த புகழேந்தியின் ஓவியங்களை வாசகர்கள் அறிந்திருப்பார்கள். அது ஒரு சிறு அறிமுகமாகவே இருந்தது. ஆகவே புகழேந்தியின் 'எரியும் வண்ணங்கள்' எனும் அவரது ஓவிய நூல் வெளிவந்திருக்கும் இவ்வேளையில் அவர் பற்றியும், அவரது ஓவியங்கள் குறித்தும் மேலதிக விடயங்களை வாசகர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் இக்கட்டுரையை எழுதுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

புகழேந்தி சமூகப் பிரக்ஞை உள்ள ஓர் ஓவியக் கலைஞர். அடக்குமுறைகளால் மிதிபடும் மனிதர்களின் துடிப்பாக அவர் தூரிகை அசைகிறது. கொடிய துன்பங்களில் துவழும் மனிதர்களின் துயர இருளை அவரது தூரிகை வெளிச்சத்துக்குக் கொணரும் ஆயுதமாகத் திகழ்கிறது.

தன் அயலில், தன் கண்ணெதிரே காண்கின்ற கொடுமைகளைக் காண மறுத்து நிலவின் அழகை ரசித்துக் கொண்டிருக்கத் தன்னால் முடியாது என்கிறவர். அது அவரது கூற்றாக மட்டுமல்ல; செயலாக மிளிர்ந்தும் இருக்கிறது. தமிழ் ஈழத்தில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துயரே தன்னை ஓவியத்தின் பால் ஈடுபாடு கொள்ள வைத்தது என்கிறார். தமிழீழத்தில் நடந்த சிங்கள இராணுவக் கொடுமைகளையும் இந்தியா எனும் தேசத்துக்குள் எரிந்து கொண்டிருக்கும் சாதிக்கலவரங் களையும் மதக்கலவரங்களையும் பெண் அடக்குமுறைகளையும் அவர் தன் தூரிகையால் தீட்டியிருக்கிறார். சலக்குருத்தி, அயோத்தி, சுண்டூர் முதலானவற்றோடு தொடர்புடைய வன்முறைகளையும் அவர் தன் ஓவியத்தில் வரைந்துள்ளார்.

'கட்டறுப்பு' என்னும் ஓவியம் ஒரு பெண் ஒடுக்கப்படுவதைச் சித்தரிக்கிறது. ஒரு பொம்மையாக ஒரு சிலையாக, உயிரற்றவளாக இந்தியப் பெண்கள் சமூகம் இருக்கிறது என்பதைக் குறியீடாகக் காட்ட முனைகிறார். தன்னைப் பிணைத்த கட்டுகளோடும், நசிந்தும், நலிந்தும் கிடைக்கின்றதையும் அவ்வோவியம் பேசுகின்றது. அவள் அருகே ஒரு நூல் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடமுடியாது. அவள் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. நிர்வாகங்களிலும் அவள் தவிர்க்கப்படுகிறாள் என்பதைத் தனித்துக் கிடக்கும் கதிரையும் விளங்கிக் கொள்ளத் துணைபுரிகிறது.

மொத்தத்தில் பெண்கள் சமூகம் இருளில், தளைகளில் சிக்குண்டு கிடக்கின்றது என்பதை, புகழேந்தி வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார். ஆழமான சோகத்தை அவ்வாறு எம்முள் கிளரப்பண்ணுகிறார்.

இன்று எம்தேசத்தில் இத்தகைய கொடிய சமூக ஒடுக்கு முறைகளையும் இராணுவ ஒடுக்குமுறைகளையும் தகர்த்து, எழும் எம் தமிழீழத் தேசத்துப் பெண்களின் விடுதலைக்கான குரல்களும் அணிவகுப்புகளும், வீரம் செறிந்த போராட்டமும் அவர்களது முதுகெலும்பை நிமிர்த்தும் என்ற நம்பிக்கைத் தீ மூளுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

நிர்வாண ஊர்வலம், சலக்குருத்தி, சாதிக்கலவரங்கள் போன்று தலைவிரித்தாடும் ஒடுக்குமுறைகள் என்று தீருமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு பெண்ணை நிர்வாணமாகக் கூந்தலில் பிடித்து இழுத்து வரும் வெள்ளை வேட்டியும் சால்வையும் கட்டிய சாதித் திமிராளன் மீது கடுங்கோபக் கனலை வீசச் செய்கிறார். இந்த ஓவியத்தைப் பார்க்கிற ஒவ்வொருவரையும் "யாரடா இவன்?" என்ற கேள்வியை எழுப்பிவிடப் பண்ணுகிறதே! அதுவே ஓவியத்தின் வெற்றி.

அடக்குமுறையாளர்களின், காவல்துறைகளின் உதவிகளுடன் வெள்ளை வேட்டிக்காரன் நிற்பதும் பின்புறத்தில் காட்டப்படுகிறது.

இத்தகைய பெண் அடக்குமுறையாளர்களுக்குப் பின்பலமாக ஒரு இயந்திரம் துணையிருப்பதும் காட்டப்படுகின்றது. யாரடா இவன்? என்று குரல் எழுப்பி, அவசரப்பட்டு அவன் மீது முஸ்டியை உயர்த்திவிட எழும்புகிற ஒவ்வொருவனையும் உணர்வுத் தளத்துக்குக் கொணர்வதோடு நீண்ட போராட்டம் தொடர்பான உந்தலுக்கும் நெறிப்படுத்தலுக்கும் தயாராக்குகின்றது.

இந்தக் கொடுமைகளைக் கேட்கக்கூடாது; பார்க்கக்கூடாது; பேசக்கூடாது என்கிற விதமாய் ஓவியத்தின் மேற்புறத்தில் உள்ள மாந்தர்கள் காணப்படுகிறார்கள். அதன்மூலம் அந்தச் சமூகத்தில் இயலாமையை, போர்க்குணமற்ற தன்மையை, வீரியமின்மையை ஓவியம் கேலி செய்கின்றது. அந்தக் கேலிப் பண்புக்கூடாக அவர் மானுட நேயத்துக்கான சிந்தனையைத் திறந்து காட்டுகிறார்.

இந்தியாவில் மதவேறுபாடுகளாலும் மனிதன் கூறுபட்டு மோதிக்கொள்கிறான். அரசியல்வாதிகளால் திட்டமிட்டு மூட்டப்படும் மதக்கலவரங்களுள் மக்கள் மோதியழிந்து போகிறார்கள். பாபர் மசூதித் தகர்ப்பு உலகறிந்த விடயம். அந்த விடயத்தைப் பேசச் சிறந்த மொழியாக அவரது ஓவியம் அமைந்து விட்டிருக்கிறது.

பாபர் மசூதியா? இராமர் கோயிலா? என்கிற மதப் பிரச்சினை இந்தியாவைப் படுகளமாக்கிய காலகட்டத்தில் அந்த ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது.
மனிதர்களுக்கிடையில் பகைப்புலமாக பாபர் மசூதி, இராமர  கோயில் எழுந்து நிற்க, கடவுள்களின் பெயரால் கத்தியுடன் மூர்க்கத்தனமாக மனிதன் மிருகமாக மாறி நிற்கிறான்.

ஈழத்தில் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவ அடக்கு முறையாளர்களால் ஏற்படுத்தப்பட்ட காயங்களை வெளிப்படுத்தும் சித்திரவதை என்னும் ஓவியத்தில் பொதுமை இருக்கிறது.

அடக்குமுறைச் சக்திகள் மனிதனை அடக்கி ஒடுக்கும் வகையில் வேறுபாடு காணமுடியாது. அது இந்தியாவில் நிகழ்ந்தால் என்ன? ஈழத்தில் நிகழ்ந்தால் என்ன? எல்லாம் சித்திரவதைதான்.

இவ்வோவியத்தின் கீழ் இன்குலாப் எழுதிய கவிதை வரியே போதுமானது.

"திசைகளைக் கேட்டேன்

தேம்புகின்றன" என்றார்.

பல ஓவியங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக இருந்தாலும் இறுதியாக 'அகதிகள்' என்னும் அவரது ஓவியம் கொடுமைகளாலும் அடக்குமுறைகளாலும் இனவெறிகளாலும் அலைக்கழிக்கப் பட்டுத் திசைகள் கெட்டுத் திரியும் மனிதர்கள் பற்றிப் பேசுகிறது.

திசைகள் எங்கும் பரந்து நின்று வாழ்வைத் தேடுகிற அவலம் தொலைந்து நிர்மலமான வானத்தின் கீழிருந்து மகிழ்ச்சிப் பாடலை முணுமுணுக்கின்ற ஒரு நாளுக்காக ஏங்க வைத்துவிடுகிறார்.

அவரது ஓவியம், மொழிமாற்றம் அடைந்து வந்திருக்கின்றது. வளர்ந்து வருகிறது. வீச்சுக் கொள்வதற்கான கருக்கள் இருக்கின்றன.

மண்ணில் மாந்தர்படுகின்ற பாடுகளை பாட, எழுத, வரையவல்ல எல்லாக் கலைஞர்களுக்கும் உள்ள கோபமும், ஆவேசமும் அவருக்குள் இன்னும் அதிகமாகவே எரிகிறது.

உலகில் ஒரு நாள், புகழேந்தி என்னும் ஓவியக் கலைஞர் மிகவும் பேசப்படுபவராக விளங்குவார்.         

. . . . . * . . . . .