சும்மா இராத எரியும் வண்ணங்கள்

ச. செந்தில்நாதன்


தீக்கதிர், வண்ணக்கதிர் 1996


கவிதை கதை போன்ற இலக்கிய வடிவங்கள், நாடகம் போன்ற கலைவடிவங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருப்பதுபோல ஓவியம் இருப்பது இல்லை. காரணம் அது மக்கள் பிரச்சினையைப் பொதுவாகப் பிரதிபலிப்பதில்லை.

ஓவியம் பத்திரிகைச் சம்பந்தப்பட்டதாக, புத்தக அட்டை சம்பந்தப்பட்டதாகவே நாட்டில் கருதப்படுகிறது. நவீன ஓவியம் என்பது கிண்டலுக்குரியதாகி, பத்திரிகைகளின் வேடிக்கைத் துணுக்குகளுக்குத் தீனி போடுபவதாக இருக்கிறது. பேர் பெற்ற ஓவியர்கள் என்பவர்கள் ஆங்கிலப் பத்திரிகைகளின் சிறுபான்மை வாசகர்களின் கவனத்திற்குரியவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

ஓவியக் கண்காட்சி என்பது மகாபலிபுரம் சிற்பத்தை மட்டும் பார்க்க வரும் வெளிநாட்டவர், பார்ப்பதற்குரியதாகவே அமைந்துவிட்டது. ஓவியன் என்பவன் தாடி வைத்துக் கொண்டு பைஜாமாவும், ஜிப்பாவும் போட்டுக்கொண்டு ஒரு அரைக் கிறுக்கன்போல இருப்பான் என்ற தோற்றத்தைச் சில நாடகங்கள் சினிமாக்கள் ஏற்படுத்திவிட்டன. இதுபோன்ற சூழ்நிலையில் ஓவியம் என்பது உருக்குலைந்து போயிருக்கும் காலகட்டத்தில், மாறிவரும் கலை இலக்கியக் கோட்பாடுகளின் வெளிப்பாடாக, புகழேந்தியின் ஓவியத் தொகுப்பு 'எரியும் வண்ணங்கள்' என்ற பெயர்தாங்கி வந்திருக்கின்றன.

1985 முதல் 1994 வரை வரைந்த ஓவியங்களின் தொகுப்பு இது. இதைப் படிக்கும் பார்க்கும் வாய்ப்பு எனக்குச் சமீபத்தில் கிட்டியது.

புகழேந்தியின் என்னுரை அவரையும் அவர் படைப்புக் கோட்பாட்டையும் புரிந்துகொள்ள உதவும்.

'என்னைப் பொறுத்தவரை ஒரு கலைப்படைப்பு ஒரு சமூக மாற்றத்திற்குப் பயன்படும் கருவிகளில் ஒன்றாக இருக்கவேண்டும். இருக்க முடியும் இருக்கும் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்.'

'என் ஓவியங்களிலும் அதையே செய்ய முயல்கின்றேன். பார்வையாளர்களை (மக்களை) அசைத்துச் சிறிதளவேனும் சிந்திக்க வைக்குமாயின் அதுவே எனக்கு வெற்றிதான். சிந்திக்க வைப்பதன் மூலம்தான் செயல்படத் தூண்டமுடியும்.'

'விதைக்கப்படுகின்ற விதைகளும், உச்சரிக்கப்படுகின்ற வார்த்தைகளும் எப்படி சும்மா இருப்பதில்லையோ, அதுபோல கிழிக்கப்படுகின்ற கோடுகளும் சும்மாயிருப்பதில்லை.'

எஸ்.வி. ராஜதுரை, நூலாசிரியர் புகழேந்திக்கு ஒரு அறிவுரை எழுதியிருக்கிறார். அது இவ்வாறு முடிகிறது.

'இதை நாம் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறவேண்டியுள்ளது. ஏனெனில், புகழேந்தியைப் போல சமூகப் பார்வை கொண்ட எந்தவொரு கலைஞனையும் தமது 'பொறி'க்குள் சிக்க வைக்கக்கூடிய சக்திகள் தமிழ்நாட்டில் நிறைய உண்டு. நமது சூழலில் ஒரு உண்மையான கலைஞர் மிக எச்சரிக்கையுடன்தான் தன் தூரிகையைத் தொடவேண்டும்.'

இந்த அறிவுரையின் பொறியில் புகழேந்தி சிக்காமல் இருந்தால் சரி. இனி புகழேந்தியின் ஓவியங்களுக்கு வருவோம்.

ஈழப் பிரச்சினை, ஓவியரைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அதன் அரசியல் பிரச்சினைகளில் நேரடியாகப் புகுந்து கார்ட்டூன் பாணியில் ஓவியம் எழுதாமல், அந்தப் பிரச்சினையின் இன்னொரு பகுதியான பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சை உருக்கும் நிர்க்கதியான நிலையை ஓவியமாக்கி இருக்கிறார். அதிக ஓவியங்கள் இவை சம்பந்தப்பட்டவையே.

பாபர் மசூதிப் பிரச்சினை, நிலப்பிரபுத்துவக் கொடுமை, இப்படிப் பல பிரச்சினைகளைத் தன் தூரிகையால் வடித்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில் ஒரு சமூகப் பார்வை கொண்ட ஒரு ஓவியனைத் தரிசிக்க முடிகிறது. வாழ்வின் எதார்த்தங்களை அழகிய உணர்வோடு கலந்து கண்ணுக்கும், காட்சிக்கும் ஒரு படையல் வைக்கிறார்.

புகழேந்தியின் ஓவியங்களில் இன்றைய நவீன ஓவியத்தின் தாக்கம் அழுத்தமாக இருக்கிறது. 'நவீன ஓவியம்' என்பது பொதுவாக மக்களுக்குத் தூரத்தில் இருக்கிறது.

புதுக்கவிதைகூட அது தோன்றிய காலத்தில் முற்போக்காளர்கள் கையில் இல்லை. ஆனால் காலம் செல்லச் செல்ல அதை முற்போக்காளர்கள் தங்கள் கை வாளாக்கிக் கொண்டார்கள். அதைப்போல புகழேந்தி போன்ற ஓவியர்களும், நவீன ஓவிய வடிவத்தைத் தன் வசமாக்கி முற்போக்குத் திசைவழி செலுத்த முன்வந்திருக்கிறார்கள்.

இது வரவேற்கப்பட வேண்டியதுதான். திறமை மிக்க புகழேந்தியின் திறம் நம்மை வியக்க வைக்கிறது. நரம்பையும் முறுக்கி விடுகிறது. ஆனால் புதுக்கவிதை போல் ஓவியம் அவ்வளவு எளிமையான வடிவம் அல்லவே? அதை ரசிக்க, புரிந்து கொள்ள சற்றுக் கூடுதலான பயிற்சி தேவை.

இந்தச் சூழ்நிலையில் புகழேந்தியின் ஓவியங்கள் உள்ளடக்கத்தில் மக்கள் பிரச்சினையைப் பிரதிபலிக்கின்றன. ஆனால் வடிவம்? அது மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்றதா, இல்லை அறிவுஜீவிகளுக்கு நெருக்கமாக இருக்கின்றதா? புகழேந்தியும் புகழேந்தி போன்றவர்களும்தான் இதற்குத் தீர்வு சொல்ல வேண்டும்.