அற்புத நூல்

மேலாண்மை பொன்னுசாமி


நெஞ்சில் பதிந்த நிறங்கள் - 27.11.199


அன்புத் தோழர் புகழேந்தி, வணக்கமும், வாழ்த்துகளும்.

எரியும் வண்ணங்கள் தாங்கள் அன்புடன் தந்த அற்புத நூல்.

தங்களைப் பற்றியும் தங்கள் ஓவியம் பற்றியுமான சக படைப்பாளிகள் பதிவுகள். பத்திரிக்கை விமர்சனங்கள், தங்கள் பேட்டி... எல்லாவற்றிலும் சமூக விடுதலைக்கான அக்கறை மேலோங்கியிருப்பது தற்செயலானதல்ல... தங்களுக்குக் கிடைத்த வெற்றியே அதுதான்.

உங்கள் ஓவியம் பற்றிய குரல்கள் யாவும் ஒடுக்குமுறைக்கு எதிரான குமுறலாகவே இருப்பது, ஓவியநோக்கம் வெற்றி பெற்றுவிட்டதற்கான அடையாளம்.

தங்கள் ஓவியங்கள் யாவும் அர்த்த பூர்வமானவை. சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான கோபப்பதிவு. மனித மனம் கொடுமைகளுக்கு எதிரானவை. தங்கள் ஓவியமும்...

உருவழிந்த ஓவியங்கள் எனக்குப் பிடிக்காது. அது எத்தனை கற்பனை ஆகாயச் சிறகுகளை விரித்தாலும்... அர்த்த சமுத்திர ஆழமாக இருந்தாலும்... எனக்குப் பிடிக்காது. அதிலும்... பிரபஞ்ச அழகுகளுக்கெல்லாம் அழகின் அர்த்தம் வழங்குகிற மானுடத் தோற்றத்தைக் கோரமாக்கிக் காட்டுகிற உருவழிந்த ஓவியங்கள் எனக்கு ஒவ்வாது. பகையுடன் பார்க்கிறேன்.

மானுடத்தை உள்ளும் புறமுமாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு கசடு. 'மனுசப்பயலே அசிங்கம் பிடிச்சவன்' என்று கசந்து கொள்கிறபோது... அவனை எந்தளவுக்குப் பரிதாபமாகவும் வெறுப்பாகவும் பார்ப்பேனோ... அப்படியே உருவழிந்த ஓவியங்களையும் பார்ப்பேன்.

ஓவியமும் கவிதையும் ஏறக்குறைய... ஒன்றுதான்.

உணர்ச்சிச் செறிவுள்ள வார்த்தை வீச்சில் கவித்துவம் உட்கார்ந்திருக்கும். உயிருள்ள வார்த்தைகளின் ஒழுங்கான அணிவகுப்பில் கவிதை வரும். இசையோடு நட்பு கொண்டு, செவியும் அறிவும் உள்ள சகல மனிதருள்ளும் பாய்ந்து விளைவு நிகழ்த்தும்.

மக்களைக்கற்ற சமூகஞானமும், மக்கள்மொழியைக் கற்ற கவித்துவஞானமும், எழுத்துமொழியின் இலக்கணமும் கற்ற மொழிப்பயிற்சியும் உள்ளவனுக்கே முழுமையான கவிதை கைகூடும்.

ஒழுங்கான அணிவகுப்பு பெறாத உணர்ச்சிமிகு உயிரான வார்த்தைகளும், உயிரற்ற வார்த்தைகளின் ஒழுங்கான அணிவகுப்பும் முழுமையான கவிதையாகாது.

முன்னது மரபழிந்த கவிதையாகவும், பின்னது செய்யுளாகவும் இருக்கும்.

இரண்டும் மக்களிடம் சென்றடையும் வலிமையற்றது.

மக்களைச் சென்றடையும் சொந்தவலிமையற்ற கவிதைகள், பிறப்பே வீண். பயனற்றது.

உணர்ச்சி வெளிப்பாட்டில்தான் ஓவியத்தின் உயிர் இருக்கிறது.

உருவத்தோற்றத்தின் இயங்கும்தன்மையும், சலன பாவனையும் ஓவிய அழகைத் தீர்மானிக்கும். ஓவியத்தின் கண்ணில், சதைத் துடிப்பில்... ஒவ்வொரு அணுவிலும் வெளிப்பாடு கொள்கிற உணர்ச்சிக் கற்றையில் நுட்பத்தில் ஓவியத்தின் உயிர் துடிக்கும். இரண்டும் சேர்ந்த முழுமையே ஓவியமாகும்.


இந்த முழுமை கைவராத அளவிற்கேற்ப உணர்ச்சியின் உணர்த்துதலுக்காக உருவச் சிதைவு நிகழ்கிறது. உருவ அழிப்பும் நிகழ்கிறது.

உருவ நேர்த்தியில்லாமல் அதை முழுமையான கோரமாக்கி... குரூரமாக்கி... அதன் மூலம் எத்தனை ஆழமான விஷயம் உணர்த்தப்பட்டாலும்... அது முழுமையான ஓவியமாகாது.

ஓவியத்திற்கும் கார்ட்டூனுக்கும் அடிப்படையிலான வேறுபாடு உண்டு. கார்ட்டூன் ஒரு செய்தியை செய்தி சார்ந்த ஒரு விமர்சனத்தை, ஒரு எள்ளலோடு சொல்வதற்கான ஓவியம்தான். ஆயினும், அது ஓவிய முழுமையல்ல.

உணர்ச்சிகரமாக எழுதப்பட்ட ஒரு செய்திக் கட்டுரை எப்படி ஒரு சிறுகதையாக முடியாதோ... அதேபோல கார்ட்டூன்... முழுமையான ஓவியமாகி விடமுடியாது.

கார்ட்டூனையும் மகத்தான கலையாக ஆக்கிவிடுகிற மேதைகளும் உண்டு.
ஆயினும் கூட ஓவியம் வேறு. கார்டடூன் வேறு.

உருவழிந்த ஓவியங்கள் கார்ட்டூன் மாதிரியாகிவிடுகிறது. உருவநேர்த்திக்கு இடமேயில்லாமல் உணர்த்தல் மட்டுமே நிகழ்கிறது.
இந்த இடத்தில்தான் ஓவியர் அந்தோணிதாஸின் ஓவியங்களும், ஓவிய (நடிக)ர் சிவகுமாரின் ஓவியங்களும் மிகமுக்கிய இடம் பெறுகின்றன. அந்தோணிதாஸின் நேர்காட்சி ஓவியத்தில் ஒரு மழலையை மடியில் வைத்த கிழவியின் சித்திரம் எழுதப்பட்டிருந்தால்... அதுவும் நிறைய செய்தி சொல்லும்.

உடை, தோற்றம் இவற்றில் அவரது ஏழ்மையும் வெறுமையும்... முகச்சோக உணர்ச்சியில் வாழ்வின் சிதைவையும் மடியிலிருக்கும் மழலையின் மகிழ்ச்சியில் மிச்சமிருக்கும் வாழ்க்கை, கடமை, நம்பிக்கை ஆகியவற்றையும் உணர்த்திவிடலாம்.

இதே உணர்த்தலை ஒரு நவீன ஓவியனிடம் தந்தால்... தோலையும் இழந்துவிட்ட ஒரு எலும்புக் கூட்டுக் கிழவியைக் கோரமாக வரைந்து மடியில் ஒரு மழலையை வரைந்துவிடுவான்.

இதில் அதிர்ச்சியூட்டும் புதுமை இருக்கும். அழுத்தமான உணர்த்துதல் இருக்கும். குபீரெனப் பாய்கிற கற்பனை வித்தை பிரமிக்க வைக்கும்.

ஆனால் இதே உணர்த்துதலைச் செய்கிற நேர்காட்சி ஓவியத்தில் இன்னும் நுணுக்கமான வெளிப்பாடுகளைக் காணமுடியும். தோற்றம், சாயல், சேலைக்கட்டு, காது இவற்றை வைத்து... இவள் எந்த வட்டாரத்துப் பெண் என்பதையும் உணர்த்தலாம். மண்வாசத்தோடு ஓவியம் மனசுக்கு மிகவும் நெருக்கமாகும். காய்ந்து நரைத்த தலைமுடியின் சொரசொரப்பு, பொடிபோட்டு படிந்த பற்கறை, வாழ்ந்து முடித்த வாழ்வின் ரணங்களை வரிசைப்படுத்திக் காட்டுகிற தோல் சுருக்கங்கள் யாவற்றையும் தொட்டுணரத்தக்க யதார்த்தத்தில் சித்திரம் இருக்கும்.

இதெல்லாம் உருவநேர்த்தி ஓவியச் சிறப்பு. கலையின் முழுவீர்யத்துடன் பன்முகப்பட்ட உணர்தல் திகழும். அவரவர் அனுபவ வளத்திற்கேற்ப ஓவியம் அழகாகத் தோன்றும். பார்க்கும் மனசுக்குள் உணர்வலைகளை எழுப்பி, விளைவு நிகழ்த்தும்.

உருவநேர்த்தியை விடவும் உணர்த்துதலின் உக்கிரம் முக்கியமில்லையா? என்று கேள்வி கேட்கலாம். உருவ நேர்த்தியோடு கூடிய உணர்த்துதலே மிகச் சரியான ஓவியக் கோட்பாடாக இருக்க முடியும்.

உருவநேர்த்தி ஓவியத்தின் படைப்பாக்கத்திற்கு ஏராளமான உழைப்பு வேண்டும். பயிற்சி வேண்டும். பொறுமையும் நுட்பமுமான அணுகல் வேண்டும். கைத்திறனும், மனத்திறனும் கலந்து கரைய வேண்டும். கற்பனை நுட்பம் வேண்டும். கச்சிதம் வரவேண்டும்.

ஆனால் உருவழிந்த ஓவியத்திற்குப் படிமங்களை உருவாக்குகிற கற்பனைப் பாய்ச்சல் மட்டுமே வேண்டும். 'வாழ்வில் நசுங்கிப்போன கிழவன், முட்டையோடாக' என்ற வார்த்தைப் படிமத்தை அப்படியே காட்சிப் பிம்பமாக்கிவிட்டால்... யதார்த்தம் அழிந்த மந்திரவித்தை நிகழ்ந்துவிடும். பாறை - நசுங்கிப்போன முட்டையோடு. சப்பளித்துப் போன முட்டையோடுகளின் ஒரு நுனியில் நரைத்த ரோமங்களுடன் ஒரு கிழமுகம். பார்போரைத் திடுக்கிடவைத்து விடலாம். மலைக்கச் செய்துவிடலாம்.

உருவ ஓவியம் மரபழிந்த ஓவியம் போகாத உயரங்களுக்குச் செல்லும். தஞ்சை கோபுரத்தை அதற்குரிய நுட்பத்தோடு வரையலாம். சூரியோதயம், அஸ்தமனம் போன்ற இயற்கைக் காட்சிகளை உண்மைக்கும் மேலான அழகோடு வரையலாம்.

மனிதத் தோற்றக் காட்சிகளிலும் மனித முழுமையையும் சூழல் பின்புல நுட்பங்களையும் அதற்குரிய இயங்கு நிலையில் வரையமுடியும். அத்துடன் உணர்வின் ஆழங்களையும் கொண்டு வரலாம்.

அன்புத்தோழர் புகழ், தங்கள் ஓவியம் உருவநேர்த்தி ஓவியத்திலிருந்து ரொம்பத்தூரம் விலவிவிடவில்லை என்பது ஆறுதலான விஷயம். கோரமான உருச்சிதைவு நிகழ்ந்து விடவில்லை. கருத்தை உணர்த்துகிற உக்கிரத்தில் உருவச் சிதைவு நிகழ்ந்து விடவில்லை. குறிப்பாக அந்த அகதிகள் ஓவியம்.

ஆனால் அந்த ஓவிய முகங்களில் அபலைத் தனமும், சோகமும் இன்னும் அழுத்தமாக வந்திருக்கலாம். அதேபோல, பெண்ணை நிர்வாணப்படுத்திய நிலப்பிரபுக் கொடூரம். காட்சி உருச்சிதைவு வராமலேயே கருத்துருவு பெற்றிருப்பது பாராட்டத்தக்க விஷயம்.

ஓவிய உலகத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட சமுதாய லட்சியத்துடன் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பது ரொம்ப ரொம்பப் பாராட்டத்தக்க விஷயம்.

ஆனால் தங்களிடம் நான் இன்னும் எதிர் பார்க்கிறேன். உருவ நேர்த்தியோடு இப்படி சமூகக் கொடுமை எதிர்ப்புணர்வுகளை உணர்ச்சிமிகு ஓவியங்களாகத் தாங்கள் வரையலாம்.

ஓவியம் குறித்த எந்த முன்கருத்துமில்லாத சாதாரண மக்கள் கூடுகிற சந்தையில் வைத்தால் கூட... மக்களை நிற்கவைத்து கவனிக்கவைத்து, கருத்து ரீதியாகச் சிந்திக்கவும் விவாதிக்கவும் வைக்கிற மாதிரியான ஓவியங்களை வரையுங்கள்.

உருவ நேர்த்தியில் முதலில் அழகாலும் அப்புறம் கருத்தாலும் ஈர்க்கிற மாதிரியான ஓவியர்களே... மக்கள் ஓவியர்களாக மலரமுடியும்.
தாங்கள் விரும்பி முயன்றால்... அப்படி மக்கள் ஓவியராக மலரலாம் என்பது எனது நம்பிக்கை.

நெஞ்சு நிறைந்த வாழ்த்துகள்.