புகழேந்தியின் ஓவியங்கள் போராடுகின்றன

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்


நந்தன் பிப் 2000


ஓவியர் புகழேந்தி வானத்தில் மிதப்பவர் அல்லர் மண்ணில் காலூன்றி நிற்பவர்.

சென்னை இன்கலையகத்தில் (லலித் கலா அகதமி) ஐந்து நாட்களாக அறிஞர்களையும் கலை ஆர்வலர்களையும், இதழாளர்களையும் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

'இருபதாம் நூற்றாண்டு ஒரு தூரிகையின் உறங்க நிறங்கள்' ஒடுக்குமுறைகளால் மிதிக்கப்பட்ட நூற்றாண்டாய், அதேவேளை ஒடுக்குமுறைகளை மிதித்து நிமிர்ந்த நூற்றாண்டாய் ஓவியர் புகழேந்தியின் 'இருபதாம் நூற்றாண்டு' வல்லாட்சியர் ஒடுக்கு முறையின் வெறியாட்டமாய் கிரோசிமா அணுகுண்டு வெடிப்பு - மாற்றார் அரசு ஒடுக்குமுறையின் உயிர் வேட்டையாய் 'சாலியன்வாலா' கொலைக் கூத்து, சாதி ஒடுக்குமுறையின் கொடு விளைச்சலாய் வெண்மணி உயிர் எரிப்பு, இனவெறி ஒடுக்கு முறையின் விலங்குப் பாய்ச்சலாய், குட்டிமணி கண்கள்...

இப்படிப்பல்வகை ஒடுக்குமுறைகளை ஓவியமாக்கியுள்ள புகழேந்தி, மாற்றார் வல்லரசு ஒடுக்குமுறையை மிதித்தெழுந்த காந்தியடிகள், நேதாஜி, முதலாளிய ஒடுக்குமுறையின் முதுகெலும்பை உடைந்தெறிந்த லெனின் - மாஓ – காஸ்ட்ரோ - சேகுவேரா நிற ஒடுக்கு முறையைக் குழிதோண்டிப் புதைத்த மண்டேலா, சாதி ஒடுக்கு முறைக்குச் சாவுமணி அடித்த பெரியார் அம்பேத்கர், இனவெறி ஒடுக்கு முறையின் ஆணிவேர் பிடுங்கிய பிரபாகரன் - திலீபன்... இப்படித் தலைசிறந்த விடுதலையாளர்களையும் தன் உயிர் வண்ணங்களால் பதிவு செய்திருக்கிறார். 

ஒடுக்கு முறைகளின் பக்கவிளைவாய் ஆங்காங்கே உலகில் தலைவிரித்தாடிய கொடிய வறுமையை - பசியை ஓவியர் புகழேந்தியின் நெஞ்சைப் பிழியும் 'சோமாலியா' ஓவியம் உரத்துப் பேசுகிறது.

ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்த தாகூரும் கார்க்கியும் பாரதியும் பாரதிதாசனும் புகழேந்தியின் தூரிகையில் ஒளிர்கிறார்கள். ஆண்கள் ஒடுக்குமுறையைக் கிழித்தெறிந்து பெண்ணொருத்தி புகழேந்தியின் வீறார்ந்த வண்ணத்திரையில் புயலாய் ஆர்த்தெழுகிறாள். இதுதான் புகழேந்தியின் வண்ணங்களில் இருபதாம் நூற்றாண்டு. என்னை மட்டுந்தான் புகழேந்தியின் 'உறங்கா நிறங்கள்' ஈர்த்தனவா? என் இனிய நண்பர் ஓவியர் வீரசந்தானத்தின் தொலைபேசி எண்களை அழுத்துகிறேன்.

இதோ பட்டத்தை ஒளிவு மறைவின்றிச் சொல்லும் ஓவியர் சந்தானத்தின் பளிச்சென்ற குரல். மனம் விட்டுப் பேசுகிறார்.

"இப்படியான வேளைகளில்தான் ஒரு கலைஞனை இனம் காண முடிகிறது. மேல்தட்டு மக்களின் உயர்ந்த மாளிகைச் சுவர்களுக்கு இவன் படம் வரையவில்லை. இந்த ஓவியங்கள் செருபபுக் கால்களின் கீழ் அழுந்திக்கிடக்கிறவனுக்கு உரியவை. ஒரு மிக உயர்ந்த ஓவியனை நான் புகழேந்தியில் பார்க்கிறேன். வழமையான அவர் படைப்புகளை மிஞ்சி, இம்முறை புகழேந்தியின் 'வண்ணப்பாணி' முதிர்ச்சி பெற்று, மேலும் வலிமை கொண்டு உயிர்ப்பான நிறங்களாய் வழிந்திருக்கிறது.

கண்களை மூடுவதற்கு ஒரு நொடிப்பொழுது முந்திய திலீபனின் ஓவியத்தைப் பார்த்தபொழுது நான் கண்களை மூடிக் கொண்டேன். என்னால் முடியவில்லை."

சந்தானம் கூறுவதுபோல் புகழேந்தி ஒரு புரட்சியாளர் என்பது சரியான மதிப்பீடே.

நிலவையும் பூவையும் வரையும் ஓவியனுக்கும் புகழேந்திக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது.

அவர் ஓவியங்கள் உள்ளே வெறும் வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகள் அல்ல. புகழேந்தியின் உள்ளே ஓர் எரிமலை புதைந்திருக்கிறது. அவ்வப்போது நெருப்புக் குழம்பு அவர் வண்ணங்களிலும் கோடுகளிலும் அலைபாய்தலைக் கண்டிருக்கிறேன்.

போராட்டங்கள் புகழேந்தியின் ஓவியங்கள் ஆகின்றன என்பதை விட, புகழேந்தியின் ஓவியங்கள் போராடுகின்றன என்பதே உண்மை.